mayanginen mannan inke Serial Stories

மயங்கினேன் மன்னன் இங்கே-20

20

இந்த தெருவில்தானே சொன்னாள் …? சஷ்டி யோசனையுடன் அந்த தெருவிற்குள் நுழைந்தாள் .யாரும் தன்னை கண்காணிக்கிறார்களா …என சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டாள் .வீடுகளின் கதவு எண்களை பார்த்தபடி மெல்ல நடந்தாள் .அதோ இருபதாம் எண். இந்த வீடுதானே .உள்ளே நுழைந்தாள் .

” யாருங்கம்மா வேணும் …? ” கேட்டபடி வந்த பெண்ணிடம் ஒரு நிமிடம் தயங்கி நின்று பின் சொன்னாள் .

” எனக்கு மூக்கு குத்திக்கனும் “

” அட நம்ம ராயரம்மா …வாங்கம்மா …வாங்க …” வரவேற்றபடி உள்ளிருந்து வேகமாக வந்தார் அந்த தங்க நகை ஆசாரி .” நீங்கெல்லாம் எங்க வீடு தேடி வந்த்தில் ரொம்ப சந்தோசங்கம்மா . ஒரு வார்த்தை சொல்லி விட்டிருந்தால் நம்ம அரண்மனைக்கே ஓடி வந்திருப்பேனுங்களேம்மா …”




” பரவாயில்லை .எனக்கு இப்போவே குத்தி விட்டுடுங்க ” தான் கொண்டு வந்திருந்த பையிலிருந்து தேங்காய் ,பழங்களோடு தட்சணையையும் எடுத்து வைத்தாள் .

ஆசாரி அவளை பாய் விரித்து அமர வைத்து எதிரே அமர்ந்து அவள் முகத்தை தூக்கி மூக்கை ஆராய்ந்தார் .சஷ்டியின் மனது படபடத்தது .ரொம்ப வலிக்குமோ ….? ஏதோ ஒரு ஙேகத்தில் வந்துவிட்டோமோ …? வலி மறக்க தன் மனதை வேறு நினைப்புகளில் செலுத்தினாள் .

நேற்று பாட்டி பேரனை பற்றி தனக்குள்ளேயே பேசிக் கொண்டதும் அவள் மிகவும் அதிர்ந்து போனாள் .பரிதாபமாக பாட்டியை பார்த்தாள் .

” ஒரேடியாக ஊர் …ஊர் ஜனங்கள் என்று பேசி என் பேரனின் ஆசையை நான் கவனிக்காமல் விட்டு விட்டேனோ …? இப்போது என்ன செய்யலாம் மலர் ..? “

இதை ஏன் என்னிடம் கேட்கிறார் …? சஷ்டி திணறினாள் .

” அவன் ஆசைப்படியே அவன் அந்த சந்திராம்பிகையையே கல்யாணம் செய்யட்டும்.நான் தாண்டவராயரிடமே போய் பேசுகிறேன் .சரிதானே …? “

சஷ்டி கொஞ்சம் அசைந்தாலும் தலை சம்மதென ஆடி விடுமோ …எனப் பயந்து அசையாமல் நின்றாள் .

” நீயும் என்னுடன் வருகிறாயா மலர் …? நீதான் வந்து அவர்கள் காதலை தாண்டவராயனிடம் சொல்லி அவர்கள் கல்யாணத்தை நடத்தச் சொல்லி கேட்கவேண்டும் .அதுதான் சரியாக இருக்கும “

சஷ்டிக்கு வந்த்தே கோபம் .” என்னை  யாரென்று நினைத்தீர்கள் பாட்டி .நான் ராயரின் மனைவி .ராயரம்மா .என் புருசனுக்கு நானே இன்னொருத்தியுடன் கல்யாணம் பேச வேண்டுமா …? என்னை பார்த்தால் உங்களுக்கு இளித்தவாய் மாதிரி நெரிகிறதா ….? ” ஆவேசமாக நின்றாள் .

உர்ரென்ற பார்வையுடன் அவளை நிமிர்ந்து பார்த்தபடி இருந்த பாட்டியின் முகத்தில் மெல்ல மெல்ல புன்னகை வந்த்து .

” அடிக் கழுதை இத்தனை உரிமை உணர்வை உள்ளுக்குள்ள வச்சிக்கிட்டு என்னத்துக்கடி உன் புருசன் அவளை காதலிச்சான்னு பேசினாய் …? “

” அ …அது அப்படித்தான் .வ …வந்து நான் அப்படித்தான் நினைத்தேன் …,”

” கிழித்தாய் …கட்டின் புருசன் மனசை புரிஞ்சுக்க முடியலை .அவன்  மூஞ்சுக்கு நேரேயே இன்னொரு பெண்ணை காதலித்தாயேன்னு பேசுகிறாயே …நீயெல்லாம் என்னத்தடி படிச்சு கிழிச்சு தைச்ச …? “

” பா …பாட்டி …”

” நான் உன்னைப் போல் கூறு கெட்டவ இல்லைடி .எனக்கு என் பேரன் மனசு தெரியும் .தாண்டவன் கல்யாணப் பேச்சு எடுத்ததுமே அவன் என்கிட்டதான் வந்து சொன்னான் .நீ அந்த பொண்ணை மனசுல வச்சிருக்கியா சாமின்னுதான் நான் முதல் கேள்வி கேட்டேன் .ஏன்னா அவ அழகானவள் .வசதியானவள்.என் பேரனை போலவே வெளிநாடெல்லாம் போய் படித்தவள் .அவளை இவன் மனதில் நினைச்சிருந்தான்னா …அதுதான் நேரடியாகவே கேட்டேன் .என் பேரன் ஆமாம்னு சொல்லியிருந்தான்னா …ஊராவது ஒண்ணாவதுன்னு அன்னைக்கே அவங்க கல.யாணத்தை முடிச்சிருப்பேன் .ஆனால் அவன் என்ன சொன்னான்னா …”

வேண்டுமென்றே இந்த இடத்தில் பேச்சை நிறுத்தி சஷ்டியை உற்றுப் பார்த்தார் .சஷ்டி தவித்தாள் .சொல.லுங்களேன் …இறைஞ்சலாய் பாட்டியை பார்க்க , அவர் கண் சிமிட்டினார்.

இந்த சிமிட்டல் சஷ்டியினுள் திருமலைராயனின் கண் சிமிட்டலை நினைவுக்கு கொண்டு வர சுரீரென பூ மின்னலொன்று அவள் தேகம் முழுவதும் ஊடுறுவியது .ஏதோ புரிந்தாற் போலிருந்த்து .

“அன்னைக்கு எத்தனை தடவை என் பேரன் கண்ணாலேயே உனக்கு விசயம் சொன்னான் .உன் மர மண்டையில ஏறலையாடி …? “




” பா …பாட்டி …”  ஆக பாட்டியும் , பேரனும் என் விசயத்திலும் சேர்ந்து திட்டமிட்டனரா …? இதென்ன கண் சிமிட்டல் இருவருக்கும் ஒன்று போல் …

” அ..அன்னைக்கு அவர்  என்ன சொன்னார் பாட்டி …? “

” என்னைக்கு …? எவர் …? ”  பாட்டி புரியாத்து போல் தலை சாய்த்து யோசிக்க…

” பாட்டி …ப்ளீஸ் …” சஷ்டி பாட்டியின் நாடியை பற்றி கொஞ்சலாய் கெஞ்சினாள் .” சொல்லுங்க பாட்டி …ப்ளீஸ் …”

” நான் ஏன்டி சொல்லனும் …? நீயே உன் புருசன்கிட்ட போய் கேளேன் …”

” நா …நானா …ம்ஹூம் .எனக்கு பயமாக இருக்கிறது பாட்டி .நீங்களே சொல்லுங்க “

” ஏன்டி புருசன்கிட்டேயே பயமா …? “

பயம் புருசனிடம் இல்லை . அவனின் வார்த்தைகளில் …இதனை பாட்டியிடம் எப்படி சொல்வது …திணறலுடன் பாட்டியை பார்க்க , பாட்டி கிண்டல் புன்னகை புரிந்தார் .

” அடிச்சு வச்ச சிலை மாதிரி இருக்கிறாள் .  அவள் அப்பா நில் என்றாள் நிற்பாள் .உட்கார் என்றால் உட்காருவாள் போல .இந்த கற்சிலை எனக்கு வேண்டாம் பாட்டி .என் மனைவி உரிமையும் , உணர்வும் நிரம்பியவளாக இருக்க வேண்டும் .என் மனதில் நான் வரித்து வைத்திருக்கும் பெண் வேறு .அதற்கு இவள் கொஞ்சமும் ஒத்து வரமாட்டாள் .அப்படி ஒரு பெண்ணை பார்த்ததும் உங்களிடம் சொல்கிறேன் .அவளை எனக்கு கல்யாணம் பண்ணி வையுங்கள் என்றான் “

கூடை கூடையாய் பூக்கள் தலை மேல் சொறிந்த்து போலிருந!தது சஷ்டிக்கு .

” அ…அப்படி எப்போது சொன்னார் பாட்டி ..? “

” எப்படி …? ” கண்ணை சுருக்கி கேட்ட பாட்டியின் தலையில் கொட்ட வேண்டும் போல் தோன்றியது சஷ்டிக்கு .

” அ …அதுதான் கல்யாணம் பண்ணி வையுங்கள் என்று ….”

” ஏன்டி உனக்கென்ன திக்கு வாயா …? இது தெரியாமல் உன்னை என் பேரனுக்கு கல்யாணம் செய்து வைத்துவிட்டேனே…”

” பாட்டீ …”

” சூ …ஏன்டி கத்துற …? என்னால் இவ்வளவுதான் சொல்ல முடியும் .மீதியை நீயே கேட்டுக்கோ. இப்போ வெளியே போ .எனக்கு தூக்கம் வருது.இது நான் தூங்குற நேரம்  …” பாட்டி புறங்கையை அசைத்தார்.

சஷ்டி  டென்சனுடன் நகத்தை கடிக்க ஆரம்பிக்க , ” இப்போ போகப் போறியா இல்லை அடித்து விரட்டவா …?போடி போய் உன் புரசனுக்கு என்ன பிடிக்குமோ அதை செய்து அவனிடம் நல்ல பெயர் வாங்கு போ ..” விரட்டினார் .

என் புருசனுக்கு என்ன பிடிக்கும் …யோசனையின் முடிவில் சஷ்டிக்கு வந்த்துதான் இந்த மூக்கு குத்தும் ஐடியா .கல்யாண நாளன்று திருமலைராயன் எனக்கு மூக்குத்தி பிடிக்குமென சொன்னது நினைவில் வர , சொப்னாவிடம் வேறு ஏதோ காரணம் சொல்லி   மூக்கு குத்தும் ஆசாரி அட்ரஸ் கேட்டு இங்கே வந்துவிட்டாள் .

இதோ …இப்போதும் சஷ்டியின் மனது ஊஞ்சலாடிக் கொண்டுதான் இருக்கிறது .திருமலைராயன் நிஜமாகவே அவளைக் காதலிக்கிறானா …? அவன் அவளிடம் அன்பாய் , ஆதரவாய் ,காதலாய் நடந்து கொண்ட சந்தர்ப்பங்கள் அவள் நினைவில் வந்தன .என் தந்தையை …என் தாயைப் பற்றிய கவலைஇவனுக்கு ஏன் வர வேண்டும் …?என் பொருட்டுதானே …, .நேற்று கூட எவ்வளவு ஆதரவாக ஆறுதல்கள் சொன்னான்…? சாய்ந்து அழ அவனது தோள்கள் மட்டும் இல்லாது போயிருந்தால் நான் இந்நேரம் என்னவாகியிருப்பேன் .நானும் அலறி …அம்மாவையும் வேதனைப்படுத்தி ….ஐயோ , சஷ்டியின் மனதில் திருமலைராயனின் மேல் காதல் பொங்கியது .




ஆனால் ….அன்று சந்திராம்பிகையும் , அவனும் அணைத்து நின்றனரே …அதன் பெயர் என்ன …?

சஷ்டியின் மூக்கில் சுருக்கென்றோர் வலி .விரைவிலேயே அந்த வலி அவள் கன்னம் , தாடையென பரவியது .கண்களை இறுக்கி மூடிக்கொண்டு அந்த வலியை ஜீரணித்தாள் .

” முடிந்த்தும்மா …” ஆசாரி சொல்ல தன் மூக்கை தடவிப் பார்த்தாள் .இமயமலையை பெயர்த்து எடுத்து மூக்கின் மேல் வைத்தது போன்றதோர் பார உணர்வு இருந்த்து .

சஷ்டி வீட்டிற்கு போகாமல் ஆயிரம் காளியம்மன் கோவிலிலுக்கு வந்தாள் .அவள் புதிதாக தான் குத்திக் கொண்டிருக்கும் இந்த மூக்குத்தியை முதன் முதலாக தன் கணவனுக்கு மட்டுமே காட்ட விரும்பினாள் .எனவே இருட்டும் வரை அங்குமிங்கும் இருந்து விட்டு , இருட்டியதும் வீட்டினர் யார் கண்ணிலும் படாமல் மாடியேறி போய் விடலாமென முடிவெடுத்தாள் .

ஆயிரம் காளியம்மன் கோவில் திருவிழாவிற்கு தயாராகிக் கொண்மிருந்த்து .ஐந்து வருடத்திற்கு ஒரு முறைதான் அந்த கோவிலில் திருவிழா நடக்கும் .காளியம்மன் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறைதான் பக்தர்களுக்கு காட்சி தருவாள் .அப்போது அம்மனுக்கு படைக்கும் நைவேத்தியங்கள் பூ , பழம் , பலகாரம் போன்றவை ஆயிரம் எண்ணிக்கையில் இருக்க வேண்டிமென்பது ஐதீகம் .

அம்மா மூலமாக முன்பு கேள்விப்பட்ட கோவில் திருவிழாவை அடுத்த வாரம் நேரிலேயே பார்க்கும் சந்தோசத்துடன் கோவிலை மெல்ல வலம் வந்தபடி இருந்தாள் சஷ்டி..கோவிலுக்கு வெளியே இருந்த பெரிய ஆலமரத்தை பார்த்ததும் அங்கே சிறிது நேரம அமர்ந்திருக்கலாமென தோன்ற அந்த மரத்தை நோக்கி நடந்தாள்.

அங்கிருந்து கோபுரத்தை அண்ணாந்து பார்த்து ,.கணவனின் அன்பும் , காதலும் எனக்கு கிடைத்தால் ஆயிரம் தாமரைகளால் உன்னை அர்ச்சிக்கிறேன் தாயே மனதார வேண்டிக் கொண்டபடி திரும்பி பார்த்தவள் திடுக்கிட்டாள. .

அதோ அங்கே நிற்பது  அவன் …அவளது கணவன் திருமலைராயன்தானே …? அவனுடன் யார் அது …சந்திராம்பிகை போல் தெரிகிறதே …சஷ்டி பரபரப்புடன் இன்னும் சற்று அருகே போய் பார்க்க , அவர்கள் திருமலைராயனும் , சந்திராம்பிகையுமேதான்.




ஆலமரத்தின் பின்புறம் சற்று மறைவான இடத்தில் ஒருவரோடொருவர் மிக நெருக்கமாக நின்றிருந்தனர்.ஏதோ பேசியபடி இருந்தனர் .திடுமென திருமலைராயன் கையுயர்த்தி ஆதரவாக சந்திராம்பிகையின் தலையை வருடினான் .அவள் தலையை திருப்பி வருடிய கையில் முகம் புதைத்திக் கொண்டாள் .

சஷ்டி அதிர்ந்து நின்றாள் .என்ன கொடுமை இது …?உடனே அவர்கள் முன் போய் நின்று நியாயம் கேட்க நினைத்து நடந்தவளின் கால்கள் திடுமென துவண்டன.ஏதோ அவள் மூச்சையடைத்தது போலிருக்க , கண்கள் மங்கலாயின .கடைசி நொடியில் திருமலைராயனும் , சந்திராம்பிகையும் காரில் ஏறிப் போவதை  பார்த்தபடி அப்படியே அந்த மரத்தடியிலேயே ஸ்தம்பித்து அமர்ந்து விட்டாள் .

What’s your Reaction?
+1
23
+1
17
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!