தோட்டக் கலை

கோழி அவரை செடி வளர்ப்பு

கோழி அவரை எனப்படும் கொடி அவரை அதிக சத்துக்கள் கொண்ட காய்கறிகளில் ஓன்றாகும்.இது கொடி வகையை சேர்ந்த தாவரமாகும். செழிப்பாக வளர்ந்து, படர்ந்து வளர கூடியது இந்த கோழி அவரை செடி. கொடி வகை தாவரங்களில் அவரை தான் மிக அடர்த்தியாக வளரும் மேலும் அதிகப்படியான காய்களை கொடுக்கும், வெகு நாட்களுக்கு அறுவடை செய்யலாம்.

கோழி அவரை செடி வளர்ப்பு முதல் அறுவடை வரை, மாடித்தோட்டத்தில் கோழி அவரை செடி வளர்ப்பது எப்படி, அவரை வகைகள் மற்றும் அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த கோழி அவரை பயன்கள் ஆகியவற்றைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.




மண்கலவை

கோழி அவரைக்கு அதிக ஊட்டச்சத்து தேவைப்படுகிறது, அதற்கு தகுந்தாற்போல மண்கலவை தயார் செய்வது சிறந்தது. செம்மண் மற்றும் மக்கிய தொழு உரத்தை சரிபாதி கலந்து மண்கலவை தயார் செய்யலாம். மண்புழு உரம் கிடைத்தால் மூன்றையும் கலந்து பயன் படுத்தினால் அதிக பலன் கிடைக்கும்.

கோழி அவரை நடவு

நேர்த்தியான விதைகளை தேர்ந்தெடுத்து கொள்ளவும், ஒரு நெகிழிப்பையில் தயார் செய்து வைத்துள்ள மண்கலவையை போட்டு நிரப்பவும். ஒரு பையில் நான்கு விதைகள் வரை விதைக்கலாம். சிறிய அளவில் பள்ளம் தோண்டி விதையை வைத்து சிறிது மண்கலவையை அதன் மேலே போட்டு மூடி, கொஞ்சமாக தண்ணீர் தெளித்தால் போதுமானது. கொடி வளர ஏதுவாக பந்தல் அமைக்க வேண்டும்.




வளர்ச்சி மற்றும் சாகுபடி

கோழி அவரை விதைத்த 3 நாட்களுக்குள் முளைப்பு வீற்றிருக்கும். 20 நாட்களில் கொடியின் வளர்ச்சியை காணமுடியும், 35 நாட்களில் கோழி அவரை கொடி பந்தலை தொடும் அளவிற்கு வளர்ந்திருக்கும். நட்டத்திலிருந்து 100 ஆம் நாள் பூ வைக்கத்தொடங்கும். 120 நாட்களில் அறுவடை செய்யலாம், அதிக காய்கள் காய்க்க கோழி அவரையை ஆடி பட்டத்தில் நடவு செய்ய வேண்டும்.

பூச்சி தாக்குதல் மற்றும் கோழி அவரை செடி பராமரிப்பு

காய்கறிகளில் அதிகமான பூச்சித் தாக்குதல் இந்த கொடி அவரையில் தான் வருகிறது. இது பொதுவாக வரும் பிரச்சனை தான், அசுவினி பூச்சி போல சாறு உறுஞ்சும் பூச்சிகள் கூட்டமாக கோழி அவரை செடியின் தளிர்கள் மற்றும் பூக்களில் இருந்து சாற்றை தனியே உறிஞ்சி எடுத்து அதை வாடிப்போக செய்து விடும். மேலும் காய் துளைப்பான் பூச்சி தொல்லையும் ஏற்படுகிறது, இது அவரையில் துளை இட்டு அதன் விதையை சாப்பிடும், இதனால் அவரையை சமையலுக்கு பயன்படுத்த முடியாமல் போக நேரிடும்.




இந்த பூச்சி தாக்குதலை சமாளிக்க, இரண்டு நாள் ஆன அடுப்பு சாம்பலை செடியின் மீது பரவலாக தூவுவதின் மூலம் அந்த பூச்சிகளை விரட்டலாம். இரண்டு நாள் ஆனா சாம்பலில் மீதமான சூடு இருக்கும், இதுவே அந்த பூச்சிகளை விரட்டும் காரணியாக அமையும். முக்கியமானதாக, அதிக சாம்பலை பயன்படுத்தினால் செடியின் வளர்ச்சி பாதிக்க வாய்ப்பு உண்டு, எனவே தேவையான அளவு பயன்படுத்தவும். இம்முறையை பயன்படுத்தினால் கோழி அவரை செடி வளர்ப்பு சிறக்கும்.

அவரை வகைகள்

கோழி அவரை, செடி அவரை, சப்பத்தவரை, சீனி அவரை, வெள்ளை அவரை, வாழவரை, காட்டவரை, பெயவரை, பூனைக்கால் அவரை, ஆட்டுக்கொம்பு அவரை.




கோழி அவரை பயன்கள்

  • கோழி அவரை சாப்பிடுவதால் இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பு குறையும், மேலும் இதயநோய் மற்றும் இரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

  • கோழி அவரைப் பிஞ்சில் அதிக துவர்ப்புச் சுவை இருக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த அவரை பிஞ்சை உணவில் சேர்த்துக்கொண்டால், நீரிழிவு நோயால் ஏற்படும் தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் போன்றவை குணமாகும்.

  • அவரைக்காய் சத்துக்கள் உடலுக்கு மிகுதியான நோய் எதிர்ப்பு சக்தியை தரவல்லது மற்றும் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்யும்.

  • இரவில் சரிவர தூங்க முடியாதவர்கள், இரவு உணவில் கோழி அவரையை எடுத்துக் கொண்டால் ஆழமான உறக்கம் பெறலாம்.

  • கர்ப்பிணி பெண்கள் இந்த கோழி அவரையை சாப்பிட்டால், வயிற்றில் உள்ள குழந்தையின் மூளை மற்றும் முதுகெலும்பு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

இயற்கை நமக்கு அளித்திருக்கும் இந்த அருமருந்தான கோழி அவரையை மேற்கண்ட வழிமுறைபடி வளர்த்து அதன் பலன்கள் அனைத்தையும் பெற்று உங்கள் ஆரோக்கியம் சிறக்க வாழ்த்துகிறோம்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!