Serial Stories விநாடி நேர விபரீதங்கள்

விநாடி நேர விபரீதங்கள்-5

வினாடி..5

“ஹாய் ப்யூட்டி! ஹவ் அபௌட் அ ட்ரீட்டி?” என்று பாடி விசிலடித்தான் அவன்.

“இப்போ உனக்கு என்ன வேணும்?” தைரியமாக அவன் முன்னால் நின்று கேட்டாள் அந்த ஜீன்ஸ் பேண்ட் சிட்டு.

“விக்டோரியா! உனக்குத் தெரியாது எனக்கு என்ன வேணும்னு? ஐ லவ் யூ!” என்றான் அவன்.

“பட் ஐ டோண்ட் லவ் யூ!”

“ஏன்? எனக்கு என்ன குறைச்சல்?”

“என்ன குறைச்சல்னு நீ கேட்கற. நீ என்ன ஸ்பெஷல்னு நான் கேட்கறேன்.”

திகைத்து நின்றான் அவன்.

“நம்ம க்ளாஸில் படிக்கற விஷ்ணுகுமார் தண்ணீரில் ஓடுகிற புதிய கார் கண்டுபிடிச்சிருக்கான். நம்ம சீனியர்ஸ் ஒரு சாட்டிலைட் டிஸைன் பண்ணிட்டிருக்காங்க…”

“ஆக, உனக்கு சயின்ஸ் தான் பெரிசா? அப்துல் கலாமுக்கு அடுத்த வீடா நீ?”

“லுக், க்ளியரா சொல்லிடறேன். உன்னோட இந்த ஹேர் கலரிங், முள்ளம்பன்றி ஹேர்ஸ்டைல், காதில் கடுக்கன், கையில் காப்பு, போகவர ஜூனியர்ஸை,  எல்லாம் மிரட்டறது, இதெல்லாம் உனக்கு ஒரு ரௌடி ஸ்டேட்டஸ் கொடுக்கும்,பெருமை கொடுக்கும், பெண்கள் உன்னைப் பார்த்து மயங்குவாங்கன்னு நீ நினைக்கற. ஆனா இது எண்பதுகள் இல்லை. ரௌடியைப் பார்த்துப் பெண்கள் மயங்கற காலம் எல்லாம் மலையேறிப் போச்சு.

“இன்றைக்கு நாங்க வீக்கர் செக்ஸ் இல்லை. நாங்களும் உங்களுக்கு ஈக்வலா படிக்கறோம், உங்களைவிட அதிகமாகச் சம்பாதிக்கறோம். எங்களை நீங்க காப்பாற்ற வேண்டிய அவசியம் எல்லாம் கிடையாது. எங்களுக்கு நிகரானவங்கதான் எங்களுக்கு ஃப்ரெண்ட்ஸ். எங்களைவிட மேலானவங்களைத்தான் நாங்க அட்மைர் பண்ணுவோம்.

“இந்த காம்படெடிவ் உலகத்தில் நீ யார்? உன்னால் படிச்சு யுனிவர்ஸிட்டி ஃபர்ஸ்ட் வர முடியுமா? சயின்ஸில் வேண்டாம், ஏதாவ்து ஒரு துறையில் பெரிதா சாதிச்சுக் காட்ட முடியுமா? அட் லீஸ்ட் உன் பெயர், அல்லது உன் போஸ்ட், என்றைக்காவது சோஷியல் மீடியால வைரல் ஆகியிருக்கா? என்ன தகுதி இருக்குன்னு என் பின்னால் சுத்தற? ஏதாவது சாதிச்சுட்டு வா, அப்போ நான் உன் பின்னால் சுத்தறேன்” 

என்று சொல்லிவிட்டு அலட்சியமாக நடந்து சென்றாள் விக்டோரியா.

அவள் முகத்தில் ஆசிட்டைக் கொட்டலாமா என்று ஒரு ஆத்திரம் எழுந்தது அவனுக்கு. 

‘என்ன பயன்? அவளுடைய திமிர் அழகால் வந்ததில்லையே! படிக்கறாளாம், சம்பாதிக்கறாளாம்! ‘உனக்கு என்ன தகுதி இருக்கு?’ன்னு பொட்டுலே அடிச்சாப்போலே கேக்குறா? ‘




‘இருக்குடி! நான் கண் இமைச்சா ஆயிரம் பேரை இந்த இடத்தில் கூட்ட முடியும்! காலேஜில் மார்க் எடுக்க முடியுமான்னா கேட்ட? இந்தக் காலேஜையே ஸ்தம்பிக்க வைக்க என்னால் முடியும்! ‘’

மனம் கறுவியது.

அவனைச் சுற்றி நின்ற அடிப்பொடிகள் அவனைத் தேற்ற என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தனர். விக்டோரியாவுக்கு எதிராகப் பேசினால் “என் ஆளைப் பத்திப் பேச நீ யாரு?” என்று அரை பிளேடை வைத்து முகத்தில் கோடிழுப்பான் என்ற பயம்தான்!

கையாலாகாத கோபத்தில் கொந்தளித்து, நகம் கடித்துத் துப்பிக் கொண்டிருந்த அவனை “ஜனா அண்ணா” என்ற மெல்லிய, பயந்த குரல் இழுத்தது.

“செத்தாண்டா சேகரு!” என்று எண்ணிக் கொண்டார்கள் அடிப்பொடிகள். ஏனென்றால் அழைத்தது அவர்கள் குடியிருப்பைச் சேர்ந்த பையன் தான். காய்கறி கடைக்கார  கனகத்தின் மகன். மிக நன்றாகப் படிக்கிறவன் என்ற பெயர் வாங்கியவன். அமைதியானவன். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவன்.

இந்த மாதிரியான பிள்ளைப் பூச்சிகளை அடிப்பது என்றால் ஜனாவுக்கு அல்வா சாப்பிடுகிற மாதிரி. இதில் வலிய வந்து சிக்கியிருக்கிறானே, இவனை என்ன சொல்ல?

ஜனாவுக்கும் கை துறுதுறுத்தது. ‘இவனை மாதிரிப் பசங்களைப் பார்த்துத்தான் விக்டோரியா என்னை அவமானப்படுத்திட்டுப் போகிறா. இவனுங்களை எல்லாம் கட்டையால் வெளுத்தா தெரிஞ்சிரும், இவங்க படிப்போட பவிசு!’

“ஜனா அண்ணா, எங்களுக்கு ஒரு ஹெல்ப் பண்றீங்களா?”

“ஹெல்ப் தானே, பண்றேன். நீ கேட்கறதுக்கு மேலயே பண்றேன்.’’’

கேலியாக அவனைப் பார்த்தவாறே “நீ கண்ணன் தானே, பெரிய பணக்காரப் பசங்களோட தானே சுத்துவ? உனக்கு எங்கிட்ட என்ன ஹெல்ப் வேணும்?” என்று கேட்டான்.

“அண்ணா! எங்க எல்லாருக்கும்தான் ஹெல்ப் வேணும்” என்று ஆரம்பித்த கண்ணன் தங்கள்  சேனல் பற்றியும், அதற்கு வ்யூவர்ஸ், சப்ஸ்க்ரைபர்ஸ் கூட வேண்டும் என்பதால் ஜனா அதை ஷேர் செய்து அவனுக்குத் தெரிந்தவர்களை சப்ஸ்க்ரைப் செய்ய வைத்து உதவ வேண்டும் என்று தயங்கித் தயங்கிக் கூறினான்.

‘வாடா! படிப்புச் சேனலா ஆரம்பிச்சிருக்கீங்க? உனக்கு நான் படிப்புச் சொல்லிக் கொடுக்கிறேன். அதை வீடியோவா எடுத்துப் போடு!’ என்று சொல்லவந்த ஜனா சட்டென்று நின்றுவிட்டான். அவ்னுக்குள் ஒரு குரல் ஸ்பீக்கர் வைத்ததுபோல் அலறியது.

‘அட்லீஸ்ட் உன் பெயர், அல்லது உன் போஸ்ட், என்றைக்காவது சோஷியல் மீடியால வைரல் ஆகியிருக்கா?’

விக்டோரியா! உன் ஆணவத்தை அடக்க ஒரு வழி கிடைத்திருக்கிறதே!




===============

“ஹலோ! ஐ அம் ஜனா!” என்று அவர்களைத் தேடி வந்தவனைப் பார்த்து ஒரு இனிப்பான பயம் உண்டாயிற்று.

“விஜய் மாதிரி இருக்காருல்ல?” என்று கிசுகிசுத்தான் கார்த்திக்.

“இல்லடா! சமுத்திரக்கனி மாதிரித் தோணுது” என்றான் பார்த்தா.

எல்லோருமாக ஒரு ரெஸ்டாரண்ட்டைத் தேடிச் சென்று தனியறையில் அமர்ந்தார்கள். பதினைந்து நிமிடம் அவர்கள் பிரச்சனை அலசப்பட்டது.

“ம்… உங்க சேனலுக்கு சப்ஸ்க்ரைபர் பிடிச்சா எனக்குக் கமிஷன். லைக்ஸ் கூடினாலும் பேமெண்ட் உண்டு. இல்லையா?” என்றான் ஜனா.

“எக்ஸாக்ட்லி” என்றான் கார்த்திக்.

“அதுக்கு உன் சேனல் எல்லாருக்கும் பிடிக்கற மாதிரி இருக்க வேணாமா? உன் க்ளாஸ் பசங்க வேணும்னா பார்ப்பாங்களாயிருக்கும்! உண்மையைச் சொல்லு, உங்க வீடியோவை நீங்க எத்தனைதரம் பார்த்தீங்க?”

அவர்கள் தலை கவிழ்ந்தார்கள்.

“வீடியோன்னா, எல்லாருக்கும் பிடிக்கணும். பல முறை பார்க்கணும். அந்த மாதிரி எடுக்கணும்” என்றான் ஜனா.

“நான் நினைச்சதையே சொல்றீங்க!” என்று வியந்த பார்த்தா, தான் பார்த்த ஆக்ஸிடெண்ட் காட்சியை விளக்கினான்.

“ம்… இதிலிருந்து என்ன தெரியுதுன்னா, வீடியோ எடுக்கற விஷயம்… அப்படிச் சொல்லக் கூடாது இப்போ! அதுக்கு என்ன பேரு? கன்டெண்ட்! கரெக்ட், கன்டெண்ட்! அது எல்லோருக்கும் ஒரு த்ரில்லை ஏற்படுத்தணும். அப்போதான் நிறைய வ்யூஸ் வரும். நம்ம அடுத்த வீடியோ எப்போ வரும்னு எல்லாரும் இண்டரஸ்ட்டா எதிர்பார்ப்பாங்க!”

ஜனாவின் வார்த்தைகள் அவர்களுக்குள் ஒரு தீயை மூட்ட, எல்லோரும் யோசிக்க ஆரம்பித்தார்கள்.

“என்ன மாதிரி கன்டெண்ட்?” என்று கேட்டான் கண்ணன். “பாடங்களை வெறுமே சொல்லிக் கொடுக்காம, ப்ராக்டிகலா அவங்களுக்குக் கான்செப்டைப் புரியும்படி சொல்லலாமா?”

“டேய்! நீ பாடத்தைவிட்டு வெளியே வரப் போறியா இல்லையா?” 

என்று உறுமினான் கார்த்திக். “அது நம்ம க்ளாஸ் பசங்க மட்டும்தான் பார்ப்பாங்கன்னு அண்ணா சொல்றாங்க இல்ல?”

“அப்போ என்ன பண்ணனுங்கற? நானும் காமிராவோட மலை உச்சிக்குப் போய்க் கீழே விழட்டுமா?” என்று காட்டமாய்க் கேட்டான் கண்ணன்.

“அது ஆக்ஸிடெண்ட்” என்றான் பார்த்தா.

“ஆக்ஸிடெண்ட்! அதுதான் தீம்” என்றான் கோபி. எல்லோரும் அவனைத் திரும்பிப் பார்த்தார்கள்.

“என்ன சொல்ற நீ?” என்று வியப்புடன் கேட்டான் பார்த்தா.

“ஸிம்ப்பிளா சொல்றேன். வாழ்க்கையில் தன்னையறியாம எத்தனையோ ஆக்ஸிடெண்ட் நடக்குது. சில விஷயங்களைச் சமாளிச்சு வெளியே வரோம். சிலது அப்படி முடியாம போகுது. சின்னச் சின்ன ஆக்ஸிடெண்ட்ஸ் எத்தனையோ வீட்டுக்குள்ளேயே நடக்குது. ஃபார் எக்ஸாம்பிள், கிச்சன்னு எடுத்துக்குங்க. காய்கறி நறுக்கும்போது கையில் படுது, பால் திரியுது, தோசை கருகுது, இப்படி… ஸ்டூடண்ட்ஸ்னா, இங்க் கொட்டறது, புத்தகம் சரியான நேரத்தில் தொலைஞ்சு போகறது இந்த மாதிரி நடக்க சான்ஸ் இருக்கு. ஒவ்வொரு வீடியோக்கும் ஒவ்வொரு சூழ்நிலை எடுத்துக்கறோம். அதில் நடக்கற ஆக்ஸிடென்ட்களை காண்டிட் காமிரா மூலம் வீடியோ எடுத்து, எடிட் பண்ணி ஒரு வீடியோவா பண்ணி, சுவையான கமெண்டரி சேர்த்து ப்ரஸண்ட் பண்றோம்! எப்படி?”

“பிரமாதம்! அதிலிருந்து நிறைய ஷார்ட்ஸும் எடுத்துப் போடலாம்!” என்றான் கார்த்திக்.

“ஐடியா நல்லாயிருக்கு! நானும் இதுமாதிரி சிச்சுவேஷன்ஸ் உங்களுக்குக் கண்டுபிடிச்சுச் சொல்றேன். இது நிச்சயம் பார்க்கச் சுவையா இருக்கும். ஆனா நாம வீடியோ எடுக்கறது யாருக்கும் தெரியக் கூடாது” என்றான் ஜனா.

“நாமதான் ப்ரஸண்ட் பண்றோம்னும் யாருக்கும் தெரியக் கூடாது! அப்புறம் படிக்கற நேரத்தை வீணாக்கறீங்களான்னு வீட்டில் வெளுத்துடுவாங்க” என்றான் பார்த்தா பயமாய்.

“அப்போ ஒண்ணு பண்ணுங்க. என் பெயரில் ஒரு சேனல் ஆரம்பியுங்க. கன்டெண்ட் நாம எல்லோருமா தயார் பண்ணுவோம். அதனால் பணம் ஏதாவது கிடைச்சா நாம எல்லோரும் பங்கு போட்டுப்போம்” என்றான் ஜனா, உள்ளுக்குள் மகிழ்ந்தவாறே. 

“ஆமா. ஃபேமஸ் ஆகிட்டா, அப்புறம் யாரும் எதுவும் சொல்ல முடியாது. அதுவரைக்கும் இப்படித்தான் பண்ணணும்” என்றான் கார்த்திக்.

“நம்ம சேனலுக்கு என்ன பெயர்?”

“விநாடி விபரீதங்கள்!”

(விபரீதங்கள் தொடரும்)




What’s your Reaction?
+1
5
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!