Serial Stories வா எந்தன் வண்ணநிலவே…

வா எந்தன் வண்ணநிலவே-4

4

 செமஸ்டர் விடுமுறைக்காக மஞ்சுளாவின் தங்கை மைனாவதி தனது ஊரான கொடைக்கானலுக்கு எழில்நிலாவை அழைத்தாள் .

அரை மனதோடு ஆயிரம் பத்திரங்கள் சொல்லி எழில்நிலாவை அனுப்பி வைத்தனர் அவள் தாயும் ,தந்தையும் . சீசன் நேரமானதால் களை கட்டியிருந்த  கொடைக்கானல் எழில்நிலாவை மிக கவர்ந்தது . மதுரை வெயிலுக்கு பழகியிருந்த அவள் தேகம் கொடைக்கானல் குளிரில் சிவந்து நடுங்கியது . ஆழ்ந்து மூச்செடுத்து அந்த குளிரை அனுபவித்தாள் எழில்நிலா . 

அதிகாலை, குடும்பத்தினர் அனைவரும் கம்பளிக்குள் இருக்க , புது சூழ்நிலையால் தூக்கம் வராத எழில்நிலா ஒரு ஸ்வெட்டரை அணிந்து கொண்டு வீட்டிற்கு வெளியே வந்தாள் . ஆறுமணிக்கு நடு இரவை நினைவு படுத்தியது கொடைக்கானல்.கைகளை தேய்த்து கன்னத்தில் வைத்தபடி இயற்கைக்குள் அமிழ்ந்தவள் , அவளை கண்டதும் ஓடி வந்த டிரைவரிடம் “கொஞ்சம் வெளியே போலாமா? “எனக் கேட்டாள் .

இந்த காலைக்குளிரிலா எனக் கேட்க நினைத்து விட்டு அதிகாலை மலர்ந்த புத்தம் புது மலராக வாசம் வீசி நின்றுகொண்டு  காரெடுக்க சொல்லும் அந்த அழகு விருந்தாளியை தவிர்க்க முடியாது உடனே தலையாட்டினான் டிரைவர் . 

“அதிக தூரம் வேணாம்மா ,நம்ம எஸ்டேட் எல்லைக்குள்ளேயே போய் விட்டு வந்திடுவோம்” என்றான் பணிவுடன் . 

சரி என தலையாட்டியபடி காரில் ஏறினாள் எழில்நிலா .மிக மிக லேசாக வெளிச்சம் வானின் ஏதோ ஒரு மூலையிலிருந்து கசிந்து கொண்டிருந்தது . அரைகுறை வெளிச்சத்தில் வகைவகையாய் வண்ணம் காட்டிக்கொண்டிருந்த மரம் செடிகளை கண்கள் விரிய விழுங்கியபடி பயணமானாள் எழில்நிலா . 

“இதுக்கப்புறம் பக்கத்து எஸ்டேட்மா.போதும் இதுக்கு மேல போறதானால் எல்லாரும் எந்திரிச்சதும் நல்ல வெளிச்சம் வந்ததும் போவோம் “

மெல்ல மெல்ல வானம் நிறமிழக்க ஆரம்பித்திருக்க,கங்குல் இருட்டில் வானமிருக்க,தேவலோகம் போல் இருந்தது அச்சூழல்.” இங்கே கொஞ்ச நேரம் கீழே இறங்கி நிற்கிறேன்” காரிலிருந்து  இறங்கினாள் எழில்நிலா .

அந்த இயற்கையிலேயே பிறந்து வளர்ந்தவர்களுக்கு அதனை அனுபவிக்க தெரியாது .அது சாதாரணமாகத்தான் தோன்றும் . ஆனால் மதுரை வெயிலில் வளர்ந்தவளுக்கு கொடைக்கானல் தாகத்திற்கு கிடைத்த தேவாமிர்தம் 

கைகளை உரசி கன்னங்களில் பதித்தபடி தூரத்தில் இரு மலைகள் ஒன்றுடன் ஒன்று இணையும் அழகை ரசித்துக்கொண்டிருந்தாள் எழில்நிலா .

 டக்டக்கென குதிரையின் குளம்பொலி அவள் செவிகளில் கேட்டது .என்ன இது குதிரை ஓசை …நாமென்ன சரித்திர காலத்திலா இருக்கிறோம் என எண்ணியவளின் மனதுக்குள் ஏனோ ஓர் குதூகலம் குமிழிகளாய் நுரைத்து எழுந்தது.ஓரமாக ஒதுங்கி நின்று கவனித்த போது ,கம்பீரமாக தாவி வந்தது அந்த குதிரை . 

அட எவ்வளவு அழகான குதிரை! சிலாகித்தபடி பார்வையை உயர்த்தியவளின் கண்கள் உறைந்தது , கண்டிப்பாக பனியினால் அல்ல…அந்த குதிரையின் மீது ராஜ கம்பீரத்துடன் அமர்ந்து வந்த அந்த யவ்வனனை கண்டு. 

யார் இவன்?  என்ன உயரம் ,என்ன அழகு ,என்ன கம்பீரம் …எல்லாவற்றிற்கும் மேல் என்ன நிறம் ! இந்த இருளில் கூட வெள்ளையாய் தெரிகிறானே! ஆண்களில் இத்தனை அழகும் நிறமும் சாத்தியமா! நிலவிலிருந்து நேரடியாக இறங்கி வந்திருக்கிறானோ? இல்லையெனில் இவ்வளவு பிரகாசம் எப்படி சாத்தியம் ? புகை பரவிக் கிடந்த அந்த அதிகாலை பனிப்புகையினூடே ஊர்ந்து வந்து கொண்டிருந்தவன் ஏதேதோ மயக்க எண்ணங்களை அவள் மனதிற்குள் விதைத்தான்.

நிதானமான வேகத்துடன் அவன் அவளைக் கடந்தான். எழில்நிலா அவனைக்கண்டது அதிகபட்சமாக ஒரு நிமிடம்தான் இருக்கும் . அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டாள் . 

“போகலாமாம்மா ?”என்ற டிரைவரின் கேள்வியில் திடுக்கிட்டு திரும்பினாள் . 




அவள் பார்வை சென்ற திசையை பார்த்தவன் “அது நம்ம பக்கத்து எஸ்டேட் முதலாளிம்மா …இந்த பக்கம் அவுகளுக்கு நிறைய சொத்துக்கள் இருக்கு . ராசாகெனக்கன்னு வச்சுக்கோங்களேன். இப்படித்தான் அடிக்கடி குதிரையில பவனி வருவாரு ” கேட்காமலேயே விவரங்கள் தந்தான் .

எழில் நிலாவின் மனப் பெட்டகம் தாகத்துடன் அவன் விவரங்களை விழுங்கிக் கொண்டது. அன்றைய இயற்கை சூழலில் வித்தியாசமான முறையில் குதிரை மேல் அவனை கண்ட போது எழுந்த அதே பிரமிப்பு, இதோ இப்போது  அலுவலக உடையில் அழகாக சிரித்தபடி வந்து நிற்பவனிடமும்.

 அவனோ அன்று போலவே இன்றும் இவள் பக்கமே திரும்பாமல் தாய் தங்கையிடம் பேசிக் கொண்டிருந்தான்.பண்ற போன்களை எடுப்பதில்லை…செய்திகளை கவனிப்பதில்லை. இவனுக்கு நான் ஒரு பொருட்டே இல்லை, மனதிற்குள் நலிந்தாள்.

“அசையவே முடியாத அளவுக்கு வேலைன்னு சொன்னியேடா! இப்போ திடீர்னு வந்து நிற்கிறாயே?”சந்திராவதி லேசான முறைப்புடன் மகனிடம் கேட்க, கட்டை விரலையும் ஆட்காட்டி விரலையும் சிறியதாக தாயிடம் காட்டினான்.

” குட்டியா ஒரு பிரேக் கிடைத்ததும்மா. பிளைட் பிடித்து வந்து விட்டேன்”

” கிடைக்கத்தானே செய்யும், பார்த்தீங்களாமா 420 கிலோமீட்டர், உங்க பையன் ரெக்க கட்டி ஒன்னரை மணி நேரத்துல பறந்து வந்திருக்கிறார். என்றாவது ஒரு நாள் உங்களுக்காக இப்படி வந்திருக்கிறாரா?” கேட்ட தங்கையின் பின் தலையில் செல்லமாய் தட்டினான்.

“ஏய் இப்பவே நாத்தனார் வேலையை ஆரம்பிச்சிட்டியா? அம்மாவுக்கும் எனக்கும் இடையில் இருக்கிற நல்லுறவை கெடுக்க பார்க்காதே”

” ஆஹா மிசஸ் சந்திராவதி அவர்களே! உங்கள் மகனுடன் எப்போது உங்களுக்கு நல்லுறவு இருந்தது?”

 “இவ்வளவு நாட்களாக கொஞ்சமாக இருந்தது. இனிமேல் சந்தேகம்தான்” சந்திராவதி வில்லி பார்வை மகனை பார்த்து வைக்க, “என் செல்ல அம்மா அப்படியெல்லாம் சொல்லக்கூடாது” தாயின் தோள் அணைத்து கொஞ்சினான் மகன்.

” அம்மா ஐஸ்! ஐஸ்! மயங்கிடாதீங்க” கத்திய தங்கையின் தோளிலும் கை போட்டுக் கொண்டவன், “கத்தாதடி ராங்கி,எக்ஸ்ட்ரா நாலு பட்டுச்சேலை எடுத்துக்கோ”

“ம்ஹூம் அம்பதாயிரம் ருபாய் பட்டுசேலையில் சமாளிச்சுடலாம்னு பார்த்தாயா?எனக்கு வைர நெக்லஸ் வேணும்” சித்ரா மோவாய் உயர்த்த, “டன்…டன்” என்றான் நித்யவாணன்.

 கவிதை போன்ற இந்த பாசக் கொஞ்சல்களை நெகிழ்வாய் பார்த்திருந்தாள் எழில்நிலா. இதோ இந்த அன்பான குடும்பத்தில் தானும் இணைந்து கொண்டால்… அவள் மனது ஏங்க ஆரம்பித்தது. தாய் தங்கையை சமாதானம் செய்து நிமிர்ந்தவன் இவளது பார்வையை கண்டதும் கண்களை சிமிட்டினான். 

பிரமையில் இருந்து வெளியில் வந்தாள் எழில்நிலா.இவன் இப்படித்தானே,எல்லோரையும் பேசியே சமாளித்து விடுவானே! இதெல்லாம் அவளுக்கும் தெரியும்தானே! அவளுக்கு மட்டும் என்ன 28 வருடங்களாக உடன் இருக்கும் இந்த தாய்க்கும் தங்கைக்குமே தெரியும். 

ஆனாலும் இவனது இந்த சாகச பேச்சுகளில் மயங்கித்தானே நிற்கின்றனர்.நாளை நானும் இப்படித்தான் இதோ இந்த இரண்டு பெண்களுக்கும் அடுத்து மூன்றாவதாக இவனை அண்ணாந்து பார்த்து நிற்பேன்…

 ஏதேதோ குழப்பமான நினைவுகளில் தலை வலிக்க நெற்றிப் பொட்டை அழுத்திவிட்டுக் கொண்டாள். “என்ன தலைவலியா?” புடவையில் பார்வையை பதித்தபடி அவளிடம் கேட்டான்.

” ஆமாம் நீங்கள் வந்ததிலிருந்து…” வெடுக்கென பதில் சொன்னாள். 

“ஆஹா இது கதை!நீதான் வரச் சொன்னாய், வந்து விட்டேன்”

வரச் சொன்னேன்? அவளுக்கு நன்றாக நினைவிருந்தது. மெசேஜ் அனுப்ப நினைத்து போனை எடுத்த போது போன் தவறி கீழே விழுந்தது.அனுப்பாமலேயே தான் விட்டிருந்தாள். இவன் வழக்கம் போல் ஏதோ பிராடுத்தனம் செய்கிறான்.

” நான் இல்லை” தலை நிமிர்ந்து அறிவித்தாள். 




“நீயேதான்” பெரிதாய் ‘டாட்’ என ஒற்றை விரலாட்டி காற்றில் புள்ளி குத்தினான்.

 எழில்நிலா அவசரமாக தன் போனை எடுத்துப் பார்க்க, போன் கையில் இருந்து தவறியதில் மற்ற எழுத்துக்கள் அழிந்து கடைசியாக அவள் வைத்த புள்ளி மட்டும் அவனுக்கு மெசேஜ் ஆக சென்றிருந்தது. “அப்படி புள்ளி வைத்து நிறுத்த விடமாட்டேனே, அதுதான் வந்து விட்டேன்”அவன் மந்தகாசமாக புன்னகைக்க,அவள் திகைத்தாள்.

இவன் என்ன  சொல்ல வருகிறான்? அவளை விட மாட்டேனென்றா? திருமணத்தை நடத்தியே தீருவேனென்றா? “போன் செய்தால் எடுப்பதில்லை” முணுமுணுத்தாள்.

” நான் ரொம்ப பிசி, எல்லா நேரமும் போனை அட்டென்ட் செய்ய முடியாது”

 அதாவது இவனுக்கு தேவையான நேரம் மட்டும் போனை எடுப்பான். இன்று இவனிடம் நேரிடையாகவே கேட்டு விட வேண்டும். இந்த திருமணத்தின் காரணம் என்ன? உனக்கு பிடிக்காத திருமணத்தை நடத்த ஏன் இப்படி தவித்துக் கொண்டிருக்கிறாய்? போன்ற கேள்விகளை நாக்கு நுனியில் தயாராக வைத்துக் கொண்டு அவனிடம் கேட்க  தயாரான போது அவனோ அதற்கான சந்தர்ப்பங்களை அவளுக்கு தரவில்லை.

 மணப்பெண்ணிற்கான புடவைகளோடு சந்திராவதி சித்ரா மற்றும் அவர்கள் உறவு பெண்களுக்கான புடவைகளும் எடுக்க வேண்டியதிருக்க மள மளவென்று புடவைகளை செலக்ட் செய்ய துவங்கினான் நித்யவாணன். அவனது துரிதம் எல்லோருக்கும் பரவி விட அனைவருமே புடவைகளில் ஆழ்ந்து போயினர்.

“அடுத்து நகை கடைதானே அண்ணா? எனக்கு வைர நெக்லஸ்…” நினைவூட்டியபடி அண்ணன் அருகிலேயே அமர்ந்திருந்தாள் சித்ரா.எழில்நிலா அவர்களை விட்டு சற்றே நகர்ந்தாள்.

 என்னால் கண்களை நகர்த்தவே முடியவில்லை… கடையில் இருக்கும் எல்லா புடவைகளையும் அவர்கள் முன் போடுங்கள், இன்னும் கொஞ்ச நேரம் அவர் இங்கே இருப்பார் இல்லையா…ரோகிணியையும்,எஸ்தரையும் இந்தப் பக்கம் வரச் சொல்,அடுத்து நாம் மூன்று பேரும் புடவை எடுத்து போட போகலாம்…

 ஓரமாக நின்று தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்த சேல்ஸ் பெண்களை வெறுப்பாய் பார்த்தாள் எழில்நிலா. அந்த பெண்களின் பார்வைகள் நித்யவாணனின் மேலேயே அப்பிக் கிடந்தன.

நமது கடைக்கு புதிதாக ஒளி வந்தது போல் தெரிகிறதில்லையா? இவர்கள் பேச்சுக்களில் எழில்நிலாவிற்கு எந்த மறுப்பும் இல்லை.இதோ இங்கு சற்று தள்ளி இருந்து பார்க்கும்போது அவளுக்குமே அவன் அப்படித்தான்… ஒரு பிரமிப்பை கொடுத்துக் கொண்டிருந்தான். முதல் நாள் அவனை பார்த்த போது இருந்த அதே பிரமிப்பு, இன்னமும் வளர்ந்ததே தவிர குறையவில்லை.

பெண்களிடமிருந்து இது போன்ற வழிசல்களை முன்பும் அவள் சந்தித்திருக்கிறாள்.நேரில் மட்டுமல்ல ட்விட்டர்,இன்ஸ்டாகிராம்,பேஸ்புக் என சமூக வலைதளங்களிலும் அவன் மிக பிரபலம் என்பதை அறிவாள்.இதெல்லாம் பிடிக்காமல்தான் அவனை சோசியல் மீடியாக்களில் பின் தொடர்வதில்லை.  

பெண்களின் இது போன்ற அதீத ஆர்வங்களின் போதெல்லாம் அவனை தனது உள்ளங்கைக்குள் இறுக்க மூடிக்கொள்ளும் வேகம் பிறக்கும். இப்போதும் அப்படியே தோன்ற, மெல்ல அவன் அருகில் சென்று நின்றாள்.

” நான்தான் மாப்பிள்ளை” அவன் பெருமையாக அங்கிருந்தோரிடம் அறிவித்துக் கொண்டிருக்க, உடன் புடவைகளை எடுத்து காட்டிக் கொண்டிருந்தவர்களின் முகம் சுருங்கியதை கவனித்தாள்.

” இப்படி சொல்லி எங்கள் இதயத்தை உடைத்து விட்டீர்களே சார்” சற்றே தைரியமான சேல்ஸ் பெண் ஒருத்தி சொல்ல, எழில்நிலாவிற்கு உடம்பெல்லாம் எரிந்தது.

 அந்தப் பெண்ணின் மறைமுக பாராட்டை தலையசைத்து ஏற்றுக் கொண்டவன்,  அருகில் நின்ற எழில்நிலாவின் தோளை தன் கரத்தால் வளைத்துக் கொண்டான். “இவர்கள்தான் மணப்பெண்” 

 உடன் அந்தப் பெண்களின் முகத்தில் ஆச்சரியத்துடன் சிறு கிண்டலும் தோன்றியதை மனதில் வலியுடன் பார்த்தாள் எழில்நிலா.




What’s your Reaction?
+1
42
+1
20
+1
3
+1
2
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!