Serial Stories வா எந்தன் வண்ணநிலவே…

வா எந்தன் வண்ணநிலவே-5

5

கொடைக்கானலில் தினம் ஒரு இடத்திற்கு எழில்நிலாவை ஊர் சுற்ற அழைத்து சென்றனர் சித்தி மைனாவதி குடும்பத்தினர் . எழில்நிலாவும் இந்த வகை ஊர் சுற்றல்களில் மிகுந்த ஈடுபாட்டுடனே இருந்தாள். அதன் காரணம் ஏதாவது ஒரு இடத்தில் எங்காவது தனது குதிரை நாயகன் கண்ணில் படுகிறானா என்ற தேடுதல்தான்.

ம்ஹூம் …நான்கு நாட்களாகி விட்டன .அவனை சந்திக்கவே இல்லை.அன்று பிரையன்ட் பூங்காவில் இருந்தனர்.சூடாக சுட்டுக்கொண்டிருந்த சோளத்தை வாங்கி வரச் சென்றார் சித்தப்பா சாருகேசி . வண்ண மலர்படுக்கையாக பரந்து படர்ந்திருந்த மலர்க்கூட்டத்துடன் தன்னையும் சேர்த்து செல்பி எடுக்கும் முயற்சியில் இருந்தாள் மானசி.

“இன்ஸ்டால லைக் அள்ளப் போகுது” குதூகலித்தவளை அப்படி என்னதான் கிடைக்குதோ இந்த லைக்கில் என அலட்சியமாக பார்த்திருந்தாள்.இன்று பூங்காவிற்கு அவர்கள் மூவரும்தான் வந்திருந்தனர் .வருணுக்கு ஏதோ பரீட்சை இருப்பதால் அவனும் ,மைனாவதியும் வரவில்லை .

எழில்நிலா கண்களை பூங்காவை சுற்றி சுழற்றி ஓட விட்டு சலித்தாள்.ஒருவேளை அன்று தான் கண்டது கனவோ? முதல் நாள் இரவு ஒடிடி யில் பார்த்த ஆங்கில வெப் சீரிஸின் கதாநாயகனின் தாக்கத்தால் வந்த ஹலூசினேசனோ? பனிப்புகை ராஜகுமாரனை  போலொரு கந்தர்வன் பூமியில் வாழ்வது சாத்தியமில்லைதானே?

காதல் கொண்ட மனது ஏதேதோ பிதற்றியது.கொத்தாய்  பூத்திருத்த மலர்களை வெறித்தபடி நின்றிருந்தாள் .அப்போது சுரீரென அவள் முதுகில் ஓர் வலி.பட்டது பந்துதான் என்றாலும் சற்று விசையுடன் எறியப்பட்டதால் அவள் முதுகில் பட்டவுடன் சிறிது வலிக்கத்தான் செய்தது .

ஏற்கனவே எரிச்சலில் இருந்தவள் பந்தெறிந்தவனை ஒரு வழி பண்ணிவிடும் நோக்கத்தில் திரும்பினாள் ,”ஐயோ வெரி சாரிக்கா தெரியாம பட்டுடுச்சி சாரி சாரி “என்றபடி வந்து அவள் கைபற்றிய மழலைகளை கண்டதும் எரிச்சல் மறைந்தது .

மென்மையாய் புன்னகைத்து “இட்ஸ் ஆல்ரைட் “எனக்கூறி சிறுவனின் கன்னத்தில் தட்டினாள் .

“வலிக்குதாக்கா ..” அவள் முதுகை  தடவி விட குதித்து எக்கினாள் பெண்குழந்தை .அச்செய்கையில் மனம் குளிர்ந்துவிட மண்டியிட்டு அமர்ந்து அக்குழந்தையை அணைத்து முத்தமிட்டு “இல்லடா ..”என்றாள் எழில்நிலா .

அதற்குள் “வல்லா.. ,கனி ..”என அழைக்கும் குரலை கேட்டு “அம்மா கூப்பிடுறாங்க ..வர்றோம்கா” என ஓடி விட்டார்கள் குழந்தைகள் .

சித்தப்பா வாங்கி வந்த சோளத்தை ஒரு கை பார்த்து விட்டு ஓய்வாக தரையில் போர்வை விரித்தமர்ந்தனர் மூவரும். சாருகேசி அப்படியே சிறிது கண்ணயர்ந்து விட ,அந்தப் பக்கம் வந்த அவளது  தோழியுடன் ஓரமாக நின்று பேசிக்கொண்டிருந்தாள் மானசி.தான் எடுத்த போட்டோக்ளை காட்டிக் கொண்டிருந்தாள்.

சிறு சலசலப்பு அருகில் கேட்க,என்னவென பார்த்த எழில்நிலா அதிர்ந்து போனாள்.எப்படி இது சாத்தியம்? இத்தனை பேர் வந்து போகும் இடத்தில்…அவளால் நம்பவே முடியவில்லை .ஓரமாக ஒரு புதர் போன்று அடர்ந்திருந்த செடியினருகே உறைந்த நிலையில் அந்த சிறுபெண் …எழில்நிலா மேல் பந்து எறிந்தவள் ,வல்லா அல்லது கனி .அவள் முன் படமெடுத்தபடி ஒரு நல்ல பாம்பு .

 உறவினர்கள் பதட்டத்துடன் தள்ளி நின்றிருந்தனர் .அருகில் வரத் துடித்த சிறுமியின் தாயை கட்டுப்படுத்தி இழுத்துக் கொண்டிருந்தனர் இரு பெண் பூங்கா ஊழியர்கள் .

பார்வையை சுழற்றினாள் எழில்நிலா .அவள்தான் சிறுமிக்கு  சற்று அருகே இருந்தாள்.சத்தமின்றி குழந்தையின் பின்புறமாக அணுகி குழந்தையை அணைத்து தூக்கி வந்துவிடலாமென முடிவெடுத்தாள் .

மெதுவாக நகர்ந்தாள் .இன்னும் நாலே எட்டுகள்தான் ,குழந்தையை தூக்கி விடும் தூரம் வந்து விட்ட போது அந்த பாம்பு திடீரென தலையை திருப்பி எழில்நிலாவை பார்த்து சீறத் துவங்கியது .




கை கால் நடுங்க தொடங்கியது அவளுக்கு .அவ்வளவுதான் தனது வாழ்க்கை கணக்கு இங்கே முடிந்து விட்டது என முடிவே செய்து விட்டாள்.அந்த நிலையிலும் தன் மனங்கவர்ந்த மன்னவனை சந்திக்காமலேயே போகிறோமே என்பதுதான் அவள் முதல் மனக் குறையாயிருந்தது.

தனது சிறு அசைவும் அந்த பாம்பின் கவனத்தை சிதறடித்து குழந்தையையோ அல்லது தன்னையோ  கொத்தி விடுவதற்கான வாய்ப்பை தரும் என்று புரிந்தவள் உடலில் சிறு அசைவை ஏற்படுத்தி பாம்பின் பார்வையை தன் பக்கமே நிறுத்தியபடி, கண்களை இறுகமூடி வருவதை எதிர்கொள்ள துணிந்தாள்.

அப்போது அவளது தோள்பட்டை அழுத்தமாக பற்றப்பட்டது ,தொடர்ந்து புல் தரையில் அவள் தனியே உருட்டி விடப் பட்டாள் .அதே நேரம் குழந்தையும் ஒரு கையில் அள்ளப்பட்டது .பாம்பு மீண்டும் அந்த புதருக்குள்ளேயே பதுங்கி விட்டது .

கண்ணிமைக்கும் நேரத்திற்குள் இத்தனை சம்பவங்களும் நடந்துவிட்டன .தனியாக போய் விழுந்த எழில்நிலா தள்ளியது யாரென நிமிர்ந்து பார்த்தாள் .குழந்தையுடன் மற்றொருபுறம் உருண்டிருந்த அவன் ,எழுந்து குழந்தையை அதன் தாயிடம் ஒப்படைத்துக்கொண்டிருந்தான் .

மீண்டும் கண்களை கசக்கி விட்டு  பார்த்தாள் எழில்நிலா .அவனேதான் அந்த குதிரை தேவன்  .அவள் கனவு நாயகன் .எப்படி திடீரென வந்தான்? அந்தக் குதிரைக்கு இறக்கை முளைத்திருக்குமோ? ஜிவ்வென்று இங்கே வந்து இறங்கி விட்டானோ? என்னை காப்பாற்றத் தான் வந்தானோ?விழுந்த அதிர்ச்சியும்,அவனைக் கண்ட போதையுமாக ஏதேதோ எண்ணவோட்டங்கள் அவளுள்.

எழ வேண்டுமென்ற எண்ணமின்றி மண்ணிலேயே விழுந்தபடியே கிடந்தாள் .அவளிருந்த இடத்தை திரும்பி பார்த்தவன் ,அவளை நோக்கி வரத் துவங்கினான் .அவன் என்னை பார்த்தா வருகிறான்! ,மெல்ல மெல்ல பெரிதாகி அவன் உருவம் தன்னை நெருங்குவதை பிரமை பிடித்தாற்போல் பார்த்துக்கொண்டிருந்தாள் எழில்நிலா .

அருகில் வந்தவன் சிறிது குனிந்து “என்னம்மா ..என்ன ஆச்சு?” விசாரித்தான் .மலங்க மலங்க விழித்தபடி அவள் அவனை பார்த்தாள் .குரலை மேலும் மென்மையாக்கி “வாம்மா ,என் கையை பிடித்துக் கொண்டு எழ முடிகிறதா பார்” கை நீட்டினான் .

மிகச் சிறிய தயக்கத்துடன் தன் கரத்தை அவன் கையில் வைத்தாள் எழில்நிலா .பூவால் வருடுவது போல் அவள் கையை பற்றியவன் மிருதுவாக அவளை தூக்கி நிறுத்தினான் .

மானசி ” அக்கா ” என்று கத்தியபடி அவளருகே ஓடி வர, அந்த சத்தத்தில் எழுந்த சாருகேசியும் பதட்டத்துடன் வந்தார்.

மானசி ஓடி வந்து அவள் மேல் விழுந்து  கை கால்களை ஆராய்ந்து “அடி ஒண்ணும் படலியே? “விசாரித்தாள் .

“அவுங்களுக்கு அதிர்ச்சிதான்னு நினைக்கிறேன் . அடிபடெல்லாம் வாய்ப்புகள் இல்லை “குரல் கொடுத்த நித்யவாணனை பார்த்த சாருகேசி “ஹலோ நித்யன்! நீங்களா ?இங்க எங்கே ?”என்றபடி கை குலுக்கினார் .

“நான் நண்பர்களுடன் வந்தேன் .இவர்கள் உங்க மகளா?”

“மகள் மாதிரிதான் .என் மனைவியின் அக்கா மகள் .லீவுக்கு வந்திருக்கிறாள்” என்றவர்.”அப்புறம் நித்யன் போன தடவை எனக்கு காபி விளைச்சல்…” என தொழில் சம்பந்தமாக பேசியபடியே சற்று தள்ளி அழைத்து சென்றார் .

அலட்டலற்ற அவனது நேர் நடையை பின்னிருந்து ரசித்துக் கொண்டிருந்தவளை முழங்கையால் இடித்தாள் மானசி .”ஏய் அக்கா ..அப்பா நல்லா தூங்கிட்டாரு .அவருக்கு நடந்தது எதுவும் தெரியாது .சும்மா கீழ விழுந்திட்டன்னு நினைத்துக் கொண்டிருக்கிறார் .நீ இன்னைக்கு பாம்பு முன்னால் போய் விழ இருந்தது  மட்டும் என் அம்மாவுக்கு தெரிஞ்சது ,உடனே உன் அம்மாவுக்கு போன் பறக்கும் .நீ நாளைக்கே ஊருக்கு பேக்கிங்தான்” என்றாள்.

திக்கென்றது எழில்நிலாவுக்கு உடனே ஊருக்கு போய் விட்டால் மீண்டும் அவனை பார்ப்பதெப்படி?.

“மானு ..மானு ..ப்ளீஸ்டி சித்திகிட்ட சொல்லாதேடி ..என் செல்லமில்ல”  சித்தி மகளை கெஞ்ச தொடங்கினாள்.

“அம்மாடி வாங்கடாம்மா போய் ஒரு காபி சாப்பிட்டு வரலாம் ” அங்கிருந்தபடி அழைத்தார் சாருகேசி .எழில்நிலா நித்யவாணனை நோக்கினாள் .கையில் இருந்த செல்போனை நோண்டிக்கொண்டிருந்தான் அவன்.

அவனது அந்த பாராமுகம் எழில்நிலாவின் மனதில் இப்போதும் தோன்றி வருத்தியது. பெருமூச்சுடன் படுக்கையில் எழுந்து அமர்ந்தாள். அறையை சுற்றி பார்த்தாள். ஆங்காங்கு உறவினர்கள் கிடைத்த இடத்தில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.விடிந்தால் திருமணம்.

நித்யவாணனின் பாராமுகத்தை சின கண்களை வஞ்சினம் உரைத்த இதழ்களை நினைத்தபடி புரண்டு கொண்டிருந்தவளுக்கு தூக்கம் வருவதாய் இல்லை.மெல்ல எழுந்து மணமகள் அறையை விட்டு வெளியே வந்தாள். மாடியில் இருந்து பார்க்க கீழே மணமேடை அலங்காரம் நடந்து கொண்டிருந்தது.

முழுக்க முழுக்க வாசனை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மனதை கிறக்கும் நறுமணத்துடன் நின்றிருந்த மணமேடையை பிரமிப்புடன் பார்த்தாள். இந்த வகை அலங்காரம் முன்னொரு முறை பேச்சுவாக்கில் நித்யவாணனிடம் அவள் சொன்னதுதான்.

 செயற்கை காகிதங்களிலும் மலர்களிலும் தனக்கு ஆர்வம் இல்லை, அலங்காரம் என்பது இயற்கை பொருளோடு வாசம் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்று ஆர்வம் பொங்க கூறியவளின் முகத்தை ரசனையோடு பார்த்திருந்தான் அவன்.

“ஏன் அப்படி பார்க்கிறீர்கள்?” மெலிதான வெட்கம் வந்துவிட்டது அவளுக்கு.

” உன்னைப் போலவே உன் விருப்பங்களும் ரொம்ப அழகு” சொல்லிவிட்டு ஏரி தண்ணீரை கொஞ்சம் கையில் எடுத்து அவள் மேல் சிதற விட்டான்.

 செல்லக் கோபத்துடன் எழில்நிலாவும் கைநிறைய நீரள்ளி அவன் மேல் விசிற, இதமான குளிரில் இயற்கையான அந்த ஏரி மேலான படகு பயணத்தில் ஓர் குழந்தை விளையாட்டு இருவருக்குள்ளும்.

“ப்ச் போங்க நித்தி, டிரஸ்ஸெல்லாம் நனைந்து விட்டது”அவளுடைய செல்ல சிணுக்கத்தின் பின்பே, அவளை கவனித்தவனின் கண்களில் மின்னலின் ஊர்வலங்கள். ஈர உடை வெளிப்படுத்திய அங்கங்களின் வளைவுகள் அவனுள் உண்டாக்கிய ரசவாதங்களை கண்கள் மறைக்காமல் வெளிப்படுத்தின.




அந்த பார்வையை உணர்ந்த எழில்நிலா கூசி தன் கைகளை மேனிக்கு மறைப்பாக்க முயல,அவனது நீள் கைகள் நீண்டு அவளது கைகளை பற்றி ஒதுக்கின.

” உன் பெயருக்கேற்றாற் போலவே நீ அழகு நிலா”அவன் விழிகள் அவளை விழுங்கின.

” எழில்…அக்கா…” தோள் பற்றி உலுக்கப்பட நினைவுகள் கலைந்து திரும்பி பார்த்த எழில்நிலா மலர்ந்தாள்.தோளில் பேக்குடன் மானசி நின்றிருந்தாள்.

” மானு..வந்துட்டியாடி நல்ல வேளை கல்யாணத்திற்கு முன்னால் வந்துவிட்டாய்”

குதூகலித்தவளை  ஒரு மாதிரி கீழான பார்வை பார்த்தாள் மானசி. “ஆக கடைசியில் நீயுமா அக்கா?”

 அவளுடைய கேள்வியில் தவறு செய்தவளாக  தலை குனிந்தாள் எழில்நிலா.




What’s your Reaction?
+1
38
+1
18
+1
3
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!