Serial Stories விநாடி நேர விபரீதங்கள்

விநாடி நேர விபரீதங்கள்-6

வினாடி..6

ஜனா விசிலடித்துக்கொண்டே  பைக்கைப் பறக்கவிட்டான்..”என்னையாடி சொன்னே.?  அடி விக்டோரியா மகாராணி .பாரு! பாரு பொறுத்திருந்து பாரு! இந்த ஜனாவோட. வேலையை! கிடுகிடுக்க வைக்கறேன் பாரு.நான் யாருன்னு காட்டறேன்”.

பைக்கிலிருந்து ஒருகணம் கையை எடுத்தவன் கழுத்திலிருந்த கலர் ஸ்கார்ப்பை இறுக்கிக் கொண்டான். கலரிங் செய்யப்பட்டிருந்த முடி சட்டிக் கவிழ்த்தாற் போல் கண்ணைத் தொட  காற்றில் அலைபாய்ந்தது.

எதையோ சாதித்துவிட்ட கர்வம். ஏளனமான சிரிப்பு. எதிரில் வருவோரைப் பற்றிக் கவலையே படாமல் நெளிந்து வளைந்து பறந்தது வாகனம்.

என்றோ நானும் அம்சமாக இருந்தேன் என்று சொல்லும் இத்துப்போன இரும்பு கேட்’ ஆ’ வெனத்திறந்து கிடக்க. ‘தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு என்ற பெயிண்டு உதிர்ந்த போர்டு ஒன்று அபாயகரமாகத் தொங்கிக் கொண்டிருக்க அதைப்பற்றியெல்லாம் கவலையே படாமல் அதன் கீழே வாண்டுகள் சில விளையாடிக் கொண்டிருந்தன.

காரை உதிர்ந்த சுவர்கள் கம்பியில்லா ஜன்னல்கள்  இப்படிக் காட்சி தந்த குடியிருப்பில் ஒன்றிரண்டு புதுப்பெண்ணைப்போல வண்ணம் பூசிக் கொண்டு கெத்து காட்டியும் நின்றன.

ஒரே இரைச்சல்  கும்மாளம். டிவி சத்தம். குடியிருப்பையொட்டிய மைதானத்தில் விளையாடுவோரின் கூச்சல்.

வண்டியை அங்கிருந்த தூங்குமூஞ்சி மரத்தினடியில் நிறுத்தியவன் சாவியைத் தூக்கிப்போட்டுப் பிடித்தபடி நாலாவது மாடியில் உள்ள தன் வீட்டின் முன்னே நின்றான்.

கதவில் பூட்டு தொங்கியது.

சற்றும் யோசிக்காமல் அதை ஒரு இழு இழுக்க வாயைப்பிளந்து கொண்டு உயிரை விட்டது அது . கதவை எட்டி உதைத்தான். 

சின்னதாய் ஹால் ஒரு அறை கிச்சன் என்று சிக்கனமாய் வாரியம் கட்டித் தந்த வீடு.

மேஜை மீது திறந்து கிடந்த பாத்திரத்தில்  குழம்பு சாதம் இருக்க அந்த சின்ன டேபிளிலில் உணவு ஏராளமாய் சிந்திக் கிடந்தது. அதைப் பார்க்கவே அருவருப்பாயிருந்தது.

சுவரோரமாய் இரும்புக் கட்டிலொன்று  எண்ணெய் பிசுக்கேறிய தலையணையுடன் சாயம்போய் கிழிந்த போர்வையோடு  கீழேயும் கட்டில் மேலேயுமாய் தொங்கிக் கொண்டிருந்தது. 

ஜனாவின் முகமே மாறி விட்டது. 

” ச்சே! என்ன வீடுடா இது? “

கட்டிலில்  உட்கார்ந்து தலையை கைளில் தாங்கிக் கொண்டான்.

ஜனாவின் அப்பா ஒரு குடிகாரர் சூதாடியும் கூட. தினமும் சம்பாதிப்பது குடிக்கும் சூதாடுவதற்குமே போதாது.




எப்போதும் சண்டைதான் சச்சரவுதான். அம்மா அழகாக இருப்பதும் அப்பாவுக்கு சண்டைக்கான காரணம்.  விவரம் புரிந்தும் புரியாத சிறுவன் ஜனா திக்குமுக்காடிப் போனான். அப்பாவின் வசைச்சொற்களும் அதற்கு இணையாக நின்று கத்திப்பேசும் அம்மாவும் எரிச்சல் தந்தனர். 

அங்கே வீட்டுக்கு வீடு வாசற்படி .

கோபமும் தாபமும் ஏக்கமும் வழிசலும் கொஞ்சலும் குலாவலும் காமமும் மோகமும் எந்தத்திரையுமின்றி வெளிச்சத்திலேயே அரங்கேறும்.  பிள்ளைகள் பலருமே குழந்தைமையைத் தொலைத்த மேதைமைகள் தாம்.

இன்று முடியைப் பிடித்து சண்டை போட்டுக்கொண்டு அவரவர் ஒழுக்கத்தை ஏலம் போட்டவர்கள் “எக்கா இந்தா நெத்திலி மீன் கொளம்பு மாங்கா போட்டு வச்சேன். மாசமாருக்கியே வாய்க்கு ஒணக்கையாயிருக்கும் சாப்புடு”

என்பார்கள்.

“இன்னிக்கு உன்னை பொலி போட்டுட்டுத்தாண்டி மறுவேலை” என்று பெண்டாட்டியை பாய்ந்து பாய்ந்து அடிப்பவன் இரவு நேரத்தில்”இந்தாமே! சால்னாவும் சிலோன் பரோட்டாவும் வாங்கியாந்தேன் துண்ணுமே! “என்று ஊட்டி விடுவான்

அடித்துக் கொள்வதில் ஆணும் பெண்ணும் இங்கு சமமே. 

ஜனாவின் குடும்பமும் அதில் ஒன்றுதான்.

ஆனால் இப்போதெல்லாம் நிலைமை மாறிவிட்டது.

 ஜனாவுக்கு பதின் மூன்று வயது நடக்கும் போது ஒருநாள் அடிக்க வந்த கணவனை முரட்டுத்தனமாய் தள்ளி விட்ட அவனுடைய அம்மா முடியை தூக்கி முடிந்து கொண்டாள் அன்று மாலையே யாரோ ஒருவனோடு வீடு வந்தாள்

ஜனாவுக்கு புரிந்தும் புரியாத வயசு.  அப்பா வாயடைத்துப் போனார்.ஒருநாள் காணாமலே போனார்..

அம்மா விதவிதமாய் உணவு வாங்கித் தந்தாள். கை நிறைய காசு தந்தாள். வந்தவனோ கண்கள் மின்ன பார்க்கும் சிறுவனுக்கும் கிளாசில் ஊற்றித் தந்தான் அந்தப் பொன்னிற திரவத்தை.. 

முதலில் அந்தச் சுவை பிடிக்கவில்லைதான். கசப்பும் எரிப்புமாய்த் தொண்டையைக் காந்தியது. அதன் பின்னே உடலே லேசாகி ஜிவ்வென்று பறப்பது போல் தோன்றியது. அந்த மனிதன் பிடித்துப் போட்ட சிகரெட்டை ஊதிப் பார்த்தான். சொர்க்கமாய்த் தெரிந்தது.

குடியிருப்பே பேசிப்பேசி களைத்தது. பல சாலமன் பாப்பையாக்கள் திடீர் நடுவராகி தீர்ப்பு சொல்லினர்.

கூடிக்கூடிப் பேசியே ஓய்ந்தனர்.

 அம்மாவையும் அப்பாவையும் விளாசினர்.

 

அம்மா  எதையுமே சட்டை பண்ணவில்லை. ரொம்பவே சுதந்திரமாகி விட்டாள். யாரையுமே லட்சியம் செய்யவில்லை

அரசல் புரசல் பேச்சு ஜனாவுக்கும்  புரிய ஆரம்பிக்க அவன் மனது குழம்பியது. ஆனால் அம்மா செலவுக்கு  தந்த பணமும் நல்ல ஆடைகளும், உயர்ரக ஸ்மார்ட் போனும், பைக்கும் அவனுடைய குழப்பங்ளைத் தள்ளி வைக்க அவன் மனதளவில் சிதைந்து போன முரட்டுப் பையனாய் உருவெடுத்தான்.

அவன் அம்மாவும் நடையுடை பாவனைகளில் பெரிதும் மாறிப் போயிருந்தாள்.

ஒருநாள் 

யாரோ ஏதோ சொன்னார்கள் என்று  சொன்னவனை இதோ இந்தத் தூங்குமூஞ்சி மரத்தின் கீழேயே  துவைத்துப் போட. ஜனாவின் மீது சின்னதாய் பயம் வந்தது அங்குள்ளோருக்கு. 

பெண்கள் வாய் மீது கை வைத்து மூடிக் கொள்ள வாலைக்குமரிகள் ஆர்வமாய் பார்க்க.. இளவட்டங்கள் ஹீரோவாகக் கொண்டாட   அந்த  மாலைநேரம் எதிர்பாராத விதமாய் அவனை மாற்றிப் போட்டது.

“தல”தல”என்று கொண்டாட ஜனா கெத்தாக சுற்றிலும் பார்த்தான்.

தட்டுத்தடுமாறி கல்லூரியில் அடியெடுத்து வைத்த ஜனா 

அந்தப்பகுதியின் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக மாறி விட்டான் அவனறியாமலே!

பள்ளியிலும் கல்லூரியிலும் அவன் தீராத தலைவலியாக உருவாகினான்.




ஜனா ஒரு அசுரனாகவும் மனம் சிதைந்து போன குழந்தையாகவும்   மாறியிருந்தான். அதை யாருமே ஏன் அவனுமே உணரவில்லை.

மது, மாது, போதை எல்லாமே அந்த சின்ன வயதிற்குள் கற்றுத் தேர்ந்திருந்தான்.

சமூகத்தின் புரையோடிப்போன புண்ணாகத் தயாராகியிருந்தான்  ஜனா.

அப்படிப்பட்டவனிடம் தான் இந்தச் சிறுவர்கள் தானாகவே சிக்கியிருந்தனர். 

பார்த்தி, கண்ணன் ,கோபி, கார்த்திக்  நால்வருமே வாழ்க்கையின் எந்தவொரு இருட்டையுமே பார்க்காத பாலகர்கள் தாம். பதின்ம வயதை தொட்டிருந்தாலும் குழந்தைகள் தாம் இன்னும்.

இவனோ அனைத்திலுமே அரக்கனாய் வளர்ந்து நிற்பவன்.

நிறைய விபரீதமான டாஸ்க்குகளை யோசித்து செய்ய அவர்களை தயார் செய்தான்.

கண்ணனைத் தவிர மூவருமே குழுமியிருந்தனர்.   கண்ணன் மீது  கடுங்கோபமாயிருந்தனர்.

பின்னே….

இன்று  அரையாண்டுத் தேர்வின்  ரிசல்ட்!

மூவருமே எல்லாவற்றிலுமே மோசமாக மதிப்பெண் எடுத்து ஃபெயிலாகியிருந்தனர்.

ஆனால்

கண்ணன் மட்டும் எல்லாவற்றிலுமே பார்டர் மார்க்கில் கோடு தாண்டியிருந்தான் ஒவ்வொரு சப்ஜெக்ட்  ஆசிரியர்களும்  நால்வரையும் அவரவர் பங்குக்கு வறுத்தெடுத்திருந்தனர். கண்ணனுக்கு சேதாரம் கம்மி அவ்வளவே! 

கண்ணன் வந்ததுமே பாய்ந்து குதறப் போனவர்களை ஜனாவின்   போன் அழைப்பு நிறுத்தியது.

உடனே 

நால்வரும் சுற்றும்முற்றும் பார்த்து விட்டு தனியானதொரு இடத்திற்கு  வந்தனர். 

“அண்ணாடா”

“பேசுடா”

“அண்ணா!  சொல்லுங்கண்ணா”

“சாயந்திரமா ஏழு மணிக்கு  நான் சொல்ற இடத்துக்கு வாங்கடா. ஆளுக்கொரு டாஸ்க் வச்சிருக்கேன்டா.  ஒவ்வொண்ணா ப்ளே பண்ணி அழகா அப்லோட் பண்ணனும். ஓக்கேவாடா.  வந்திடுங்க நானும் வந்திடுறேன்.”

“என்னடா சொல்லுவாரு”

“தெரியலையேடா “

“ரொம்ப த்ரில்லிங்கா ஃபீலாகுதுடா”

“சரி! நீங்கள்ளாம் எங்க வீட்டுக்கு வரீங்களா?  இல்லே தனித்தனியே புறப்பட்டு போயிடலாமா? “

“இல்லைடா கார்த்தி தனித்தனியாவே போவோம். அது தான் நல்லது. “

“ஏண்டா பார்த்தா அப்படி சொல்றே! “

“நாலுபேரும் ஒண்ணா போனோம்னா நோட்டட் ஆகிடுவோம்டா.? தெரிஞ்சவங்க பார்த்துட்டா ப்ரச்னை ஆகிடும். அதான்.”

“ம் சரிடா! இதுவும் சரிதான்”

எல்லாமும் மறந்து போக நான்கு பறவைகளும் நான்கு திசையில் பறந்தன.

என்னாகுமோ? ஏதாகுமோ?

“டேய்! எனக்கு பயமாயிருக்குடா “

‘எதுக்குடா பயம்.? சீட்டு போட்டுத்தானே எடுத்தோம். அப்புறம் என்னடா “

“ஜாலியா பண்ணுடா. ரொம்பவும் ஈஸி.”

“அதில்லேடா! யாருக்காவது தெரிஞ்சுட்டா பயமாயிருக்குடா “

கண்ணன் தயங்க,

“என்னடா வெளையாடுறியா? அடிச்சுக் கொன்னுடுவேன் ராஸ்கல்..கார்த்தியை யோசிச்சுப் பாருடா. கார்த்தியும் கோபியும் வீடியோ எடுக்கப் போறாங்க அதை விட ரிஸ்க்கா உனக்கு குடுத்த வேலை.. வெறும் ப்ளான் போடவே பயந்து நடுங்கற”

“இல்லைடா?  உங்க கிளாஸ் ரூமையொட்டித்தான் மாடிப் படிக்கட்டு  ஸ்டார்ட் ஆகுதுடா.  தடுமாறி படிக்கட்டுலே…”

“இன்னும் சூப்பர் ஆபர்ச்சூனிட்டிடா அது. எவ்ளோ த்ரில்லிங்காருக்கும் வ்யூஸ் அள்ளும்டா.” கனவு மிதந்தது  கார்த்தியின் கண்ணில்.

அன்று 

சனிக்கிழமை. ஸ்பெஷல் கிளாஸ் உண்டு. கண்ணனைத் தவிர மூவரும் தங்கள் வகுப்பிற்கு வந்திருந்தனர். மனமெல்லாம் பரபரத்தது..

வீடியோ எடுக்கத் தோதாக மறைவாக இருவர் இருக்க 

வகுப்பு எடுப்பதற்காக வகுப்பறையின் வாசலில் இருந்த மிதியடியில் காலை வைத்தாள் வனிதா டீச்சர்.

வைத்ததுதான் தாமதம்! கால் பாவாமல் எதுவோ தடுக்கியதோ வழுக்கியதோ சுழன்றதோ ஒன்றுமே புரியாது தலை கீழே விழுந்தவள் படிக்கட்டில் உருண்டாள். 

அலறலும், ஓலமும், கூச்சலும் எழுந்து இடமே களேபரமானது. வனிதா வின் தலையிலிருந்தும் நெற்றியிலிருந்தும் சிவப்புகோடுகள் புறப்பட்டு படிக்கட்டை நனைத்து ரத்தக் கோலமிட்டன.

(விபரீதங்கள் தொடரும்)




What’s your Reaction?
+1
3
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!