Serial Stories பறக்கும்; பந்து பறக்கும்

பறக்கும்; பந்து பறக்கும்-9

“இளங்கோ! நாம் மோசம் போய்ட்டோமேடா!” அம்மாவின் ஓலம் இளங்கோவைக் கதிகலங்க வைத்தது.

“என்னம்மா ஆச்சு? குட்டிமா நல்லாயிருக்கா தானே?”

“அவளுக்கு ஒண்ணுமில்லை டா. ஆனா மாப்பிள்ளைக்கு தான் ஆக்ஸிடென்ட் ஆயிடுச்சு. கூடப்போயிருந்த ஃப்ரெண்ட் தான் ஃபோன் பண்ணி சொன்னார். நீ உடனே வாயேன். ஒத்த பொம்மனாட்டி புள்ளதாச்சியை வச்சுகிட்டு என்ன பண்ணுவேன். கையும் ஓடல காலும் ஓடல. நம்ம குடும்பத்தை ஏன் தான் தெய்வம் சுழட்டி அடிக்குதோ தெரியலையே! எல்லாம் நீ கூட்டி வந்தாயே ஒரு தரித்திரம் புடிச்சவளை. அவ வந்த நேரம் எங்கே போனாலும் என்னை அலைக்கழிக்குதே!”

“அம்மா! பதறாதே! நான் வர்றேன்.” ஆறுதலுக்காய் அம்மாவிடம் சொல்லி விட்டாலும் படபடப்பாய் இருந்தது அவனுக்கு.

மாப்பிள்ளை பரம சாது. தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கிற டைப். அநாவசியமாய் யார் விஷயத்திலும் தலையிட மாட்டார். தேவையில்லாமல் ஒரு வார்த்தை பேசியதுமில்லை. குட்டிமாவுக்கு அப்படியொன்றும் இவன் பெரிய சீர் செய்துவிடவில்லை. ஆனாலும் அவளை உள்ளங்கையில் வைத்து தாங்கிக் கொண்டுதான் இருக்கிறார். அப்படிபட்டவருக்கு ஆக்ஸிடென்ட் என்றால் தங்கை எப்படி தாங்குவாள்? அம்மா விபரமாக எதுவும் சொல்லாமல் நித்யாவை கரித்துக் கொட்டிக் கொண்டிருக்கிறாள். அதற்கு இதுவா‌ சமயம்?

ஆஸ்பிடலில் சேர்த்திருக்கிறார்களா? எந்த அளவுக்குக் காயமோ?

“அம்மா! நீ குட்டிமா கிட்டே ஃபோனை கொடும்மா!” என்றவன் “நீ கவலைப்படாதேடா. அண்ணன் இப்பவே வர்றேன்” என்றான்.

“அண்ணே! பயப்படாதே. அவர் போன பஸ் ஆக்ஸிடென்ட். நிறைய பேருக்கு அடியாம். பக்கத்து ஊர் கவர்மெண்ட் ஆஸ்பிடலில் தான் சேர்த்திருக்காங்க. நினைவோட தான் இருக்கார். காலில் தான் அடிபட்டிருக்கு போல. நானும் அம்மாவும் அங்கே போகப்போறோம். நீயும் அங்கேயே வந்திடு.”

தங்கை பேசியதும் கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது‌ இளங்கோவுக்கு. ஆனாலும் உடனே கிளம்பணுமே. ஆபீஸுக்கு லீவ் சொல்லணும். கையில் ஏதாவது பணம் கொண்டு போகணும். மாசக் கடைசி வேறு. வங்கியில் அங்கங்கே வைத்திருப்பதை திரட்டினாலும் பெரிதாக எதுவும் தேறாது. வழக்கம் போல் ஆபத்பாந்தவன் அசோக்கைத் தான் கேட்கணும். உயிர்த்தோழனாச்சே! எப்பாடுபட்டாவது புரட்டிக் கொடுத்துவிடுவான்.

ஒரு விதத்தில் அம்மா சொல்வது போல் என் வாழ்க்கை தான் வீணாகிவிட்டது. தங்கையாவது நன்றாக இருக்க வேண்டும். பக்கத்துத் தெரு பிள்ளையார் கோவிலில் நின்று மனதார வேண்டிவிட்டு அசோக்கைப் பார்க்கலாம். யோசித்தபடியே வண்டியைத் திருப்ப சட்டென அந்த குழந்தை ஓடி வந்தது. சடாரென வண்டியை திரும்பியவன் நிலைகுலைந்து கீழே விழுந்தான்.

“பார்த்து சார். ஏம்மா குழந்தையைப் பார்த்து அழைச்சிட்டு போகமாட்டியா?”

யாரோ அதட்ட…

“குழந்தைனா அப்படித்தான் இருக்கும் அந்தாளு விழுந்து வாரினதுக்கு எங்கிட்ட கத்தாதீங்க.”

பதிலுரைத்த குரல்!

சமாளித்து எழுந்தவன் திகைத்தான்.

அவன் குழந்தை பைரவியும் நித்யாவும்.

“ஒண்ணுமில்லைங்க. நான் பார்த்துக்கிறேன்” சுற்றிக் கூடியவர்களைச் சமாளித்து எழுந்தவனைச் சூழ்நிலை புரியாமல் முறைத்தாள் நித்யா.

போகிற போக்கில் ஒருவர் “குழந்தையைக் கையைப் பிடிச்சு அழைச்சிட்டு போம்மா” என்க…

“ம்க்கும்… கையைப் பிடிச்சவர் பாதியில் விட்டப்புறம் எல்லாம் இப்படித்தான்.”

“போதும் குழந்தைக்கு நேரா எதுவும் பேசாதே. தப்பு செஞ்சது நீ.”

“எதுக்கும் துப்பில்லாத நீங்க இதை பேச வேண்டாம்.”

“வேண்டாம் நித்யா, குழந்தைக்காகப் பார்க்கிறேன். வாயைத் திறக்காம போ.”

“ஓஹோ… அப்ப என்கிட்ட பேச பிடிக்கல. காதலிச்சப்ப மணிக்கணக்கா பேசினப்ப இனிச்சது… இப்ப…”

வழக்கம் போல் நித்யா குதர்க்கமாக ஆரம்பிக்க…

எரிச்சலானான் இளங்கோ. நிலைமை புரியாமல் என்ன பெண் இவள்? பைரவியைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தும் தூக்கிக் கொஞ்ச முடியவில்லை. “அப்பா” என்று அருகில் ஓடிவந்த குழந்தையைப் போகவிடாமல் அவள் பிடித்து இறுக்கிக் கொண்ட குரூரம் வலித்தது.

வெடுக்கென்று பேசும் நித்யாவின் சுபாவம் பிடித்துத்தான் அவளைக் காதலித்தான். ஆனால் இடம் பொருள் ஏவல் இன்றிக் கொஞ்சம் கூட பக்குவமற்று நடந்துகொள்வது எரிச்சலூட்டுகிறது. இப்போது வாக்குவாதம் செய்யும் சூழலிலும் அவனில்லை.

எதுவும் பேசாமல் அவன் வண்டியைக் கிளப்ப வழிமறித்தாள் நித்யா.

“ஏன் பயந்து ஓடறீங்க. பதில் பேச முடியலையோ!”

“நான் அவசர வேலையா போறேன். ஆளை விடு.”

“அப்படியென்ன தலைபோற அவசரம்? உங்கம்மா மண்டையைப் போட்டுட்டாங்களா?”

“நித்யா!” பொறுக்க முடியாமல் அவன் கையை ஓங்க… குழந்தை ஓவென அழத் தொடங்கியது.

அதற்குமேல் அங்கு நின்றால் ரசாபாசமாகி விடும். இளங்கோ நொந்து போனவனாய்க் கிளம்பினான். 

சே! குழந்தை என்ன நினைப்பாள்? 

விரக்தியுடன் அசோக் வீட்டில் நுழைந்தவன்‌ அதிர்ந்தான். அங்கே அதுல்யா நின்றிருந்தாள்.




“வா இளா! இப்ப தான் உன்னைப் பத்தி பேசிட்டிருந்தோம். அதுல்யா உங்க இரண்டு பேரையும் சேர்த்து வைக்க ஆசைப்படறாங்க!”

“போதும் அசோக். விடு. இதோ பாருங்க அதுல்யா! நீங்க வயசில் சின்னவங்களா இருந்தாலும் உங்க அக்காவை காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டதுக்கு உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன். இந்த பந்தம் இனிமே தொடராது. தேவையில்லாம முயற்சி பண்ணாதீங்க.”

முன்பு பார்த்ததை விட சற்று இளைத்து கறுத்து போயிருந்தான் இளங்கோ. அக்காவை இழுத்துக்கொண்டு போய்விட்டான்‌ என்ற கோபம் இருந்தாலும் மாமா என்கிற மரியாதையும் அவன் மீது உண்டு. இதுவரை அவன் யாரையும் எடுத்தெறிந்து பேசியதில்லை.

“என்னடா இளா! நேத்து வரைக்கும் நித்தி, குழந்தைனு உருகின. இப்ப ஏனிப்படி?”

“நானொரு முட்டாள். தெரியாம சொல்லிட்டேன். இனிமே ஒட்டோ உறவோ இல்லை. இதோ பார் அசோக் உங்கிட்ட பர்சனலா பேசணும்.நான் வெளியில் நிக்கிறேன். இவங்க போனதும் கூப்பிடு”

வெறுப்போடு நகர்ந்தவனை கையமர்த்தினாள் அதுல்யா.

“வேண்டாம் மாமா. உங்க இரண்டு பேருக்கும் வேண்டாம்னாலும் குழந்தையை நினைச்சாவது ஒண்ணு சேருவீங்கனு தான் நானும் அப்பாவும் மெனக்கிடறோம். பரவாயில்லை நான் போறேன். நீங்க உங்க ஃப்ரெண்ட் கிட்ட பேசுங்க” சட்டென வெளியில் வந்தவளுக்கு ஆத்திரம் பொங்கியது.

தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள். எது எப்படியோ அவளுடைய விளையாட்டு அவள் நிதானம் தவறாமல் இருக்க உதவுகிறது. திடீரென இளங்கோ ஏன் இப்படி பேசுகிறான்? நித்யா தன்னைச் சேர்ந்தவர்கள் எல்லோரையும் அவளை மாதிரி மூர்க்கமாக மாற்றிவிடுகிறாள். ஆரம்பத்தில் இளங்கோ பதமாக இருப்பான். இப்போது ஆளும் மாறி குணமும் கெட்டு…ம்ஹும்..

அவளுக்கு ஏனோ விஸ்வா நினைவுக்கு வந்தான்‌. விளையாட்டிலும் சரி மற்றவர்களிடம் பழகுவதிலும் சரி ரொம்ப பேலன்ஸ்டாக அவன் நடந்துகொள்ளும் விதமே தனி.

சே! எனக்கு என்ன ஆயிற்று? சம்பந்தமில்லாமல் அக்கா கணவனோடு யாரையோ ஒப்பீடு செய்யுமளவுக்கு மூளை கெட்டுவிட்டதா என்ன?

தன்னையே கடிந்து கொண்டவள் அடுத்து என்ன செய்வது எனக் குழம்பினாள்.

எப்படியாவது பணத்தைப் புரட்டி நித்யாவிடம் கொடுத்து விடலாம். அதற்கு முன்பு இளங்கோவிடம் பேசி‌ச் சரிசெய்யலாமென நினைத்தவளுக்கு இப்போது மண்டையிடியாய் ஆனது. நேற்றுவரை சேர்ந்து வாழ நினைத்தவனுக்கு இன்று என்ன ஆனது?

சாண் ஏறினால் முழம் சறுக்குதே!

யோசித்தபடி வந்தவளை சாலையோரம் கூடியிருந்த கூட்டம் கலைத்தது.

‘யாரோ பெரியவர் கீழே விழுந்து கிடக்கிறார்” சொல்லியபடியே தண்ணீர் பாட்டிலோடு ஒருத்தர் ஓடினார். வண்டியிலிருந்தபடியே தலைநீட்டிப் பார்த்தாள் அதுல்யா.

‘அடடா! இவரை எங்கேயோ பார்த்திருக்கிறோம்!’ இறங்கி அருகில் போனவள் திகைத்தாள். ‘இது விஸ்வாவோட பெரியண்ணன் ஆச்சே! இவர் எப்படி?’

வண்டியை ஓரங்கட்டிப் பூட்டியவள் “நகருங்க நகருங்க… இவர் எனக்குத் தெரிஞ்சவர் தான். யாராவது ஒரு கை பிடிங்க. ஆட்டோவில் ஏற்றிப் பக்கத்தில் இருக்கிற ஆஸ்பிடல் கொண்டு போறேன்.” என்றவள் அவரைக் கைத்தாங்கலாகப் பிடித்து ஏற்றி ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள்.

பெரியண்ணாவோ அரை மயக்கத்தில் இருந்தார். கையிலிருந்த போனிலிருந்து விஸ்வாவுக்குத் தகவல் தெரிவித்தவள் அவர் சட்டையில் ஏதேனும் ஐடி இருக்கிறதா எனத் தேடிப் பார்த்தாள். அம்மாவுக்கு பார்க்கிற ஆஸ்பிடல் என்பதால் பெரிதாக அவளிடம் கேள்வி ஏதும் கேட்கவில்லை.

டாக்டரும் சாதாரண மயக்கம் தான், ஏதோ அதிர்ச்சியினால் வந்திருக்கலாம் என்று கூறி ஊசி போட, அரை மணியில் எழுந்து விட்டார் பெரியண்ணன்.

அதற்குள் விஸ்வாவும் வந்துவிட இருவரையும் கூர்மையாகப் பார்த்த அதுல்யாவுக்குச் சங்கடமாக இருந்தது.

“ஏன் அண்ணே தனியா நடந்து இவ்வளவு தூரம் போனீங்க. அதுல்யா மட்டும் பார்க்கலைனா என்ன ஆயிருக்கும்?” கடிந்துகொண்டவனை‌ தவிர்த்து “ஸாரிம்மா. என்னால உனக்குச் சிரமம். பொம்பளைப் பிள்ளை‌ இத்தனை நேரம் காணோம்னு உன்னை வீட்ல தேட மாட்டாங்களா?” என்றார்.

அவர் பார்வையும் பேச்சும் அவளுக்கு வித்யாசமாகத் தெரிந்தது.

“ஒண்ணும் சிரமம் இல்லை சார். தெரிஞ்சவங்க மயங்கிக் ‌கிடக்கறப்ப‌ பார்க்காம போக முடியுமா? போதாக்குறைக்கு இந்த ஆஸ்பிடல் நான் ரெகுலரா வர்ற இடம் தான். அம்மாவுக்கு அடிக்கடி முடியாம போயிடும்‌, அதுதான்.”

தானறியாமல் கூறியவள் “ஒருத்தி உதவியிருக்காளேனு நினைக்காம சும்மா நோண்டுகிறாரே‌ இந்த மனுஷர். இவருக்கு வேலையத்துப் போய் நான் ஏன் விளக்கம் சொல்லணும்? இவரிடம் கெட்ட பெயர் எடுக்கக்கூடாதுனு ஏன் மனசு அடிச்சுக்குது? வர வர புத்தி மாறுது” என்று எண்ணினாள்.

அவள் யோசிக்கையில்..

பெரியண்ணனும் அவளைப் பற்றித்தான் தீவிரமாக சிந்தித்தார்.

‘என்ன தான் கூட விளையாடுபவள் என்றாலும் இவள் ஏன் அடிக்கடி தென்படுகிறாள்? விஸ்வா அவளைப் பார்க்கும் பார்வையில் ஏதோவொன்று தொந்தரவு செய்கிறதே. இதை இப்படியே விடக்கூடாது. தும்பை விட்டு வாலைப் பிடிப்பதில் என்ன பயன்? வேறு ஏற்பாடு செய்து காலாகாலத்தில் நடக்க வேண்டியதை செய்துவிட்டால் கவலைப்பட வேண்டியதில்லை.’

அதுல்யா வீட்டுக்கு வந்த அன்றே அவர் முடிவெடுத்து விட்டார். அதைச் செயல்படுத்துவதற்குள் இப்படியாகி விட்டது. யார் முகத்தில் விழிக்கவே கூடாதென நினைத்தாரோ அவள் ஒருத்தனோடு ஜோடி போட்டுக் கொண்டு அந்த சூப்பர் மார்க்கெட்டில்… சே… துரோகி… எத்தனை அசிங்கம்! சனியன் தொலைந்தது என்று ஒழிமானமாக இருக்க முடியாமல் எதிரே வந்து தொலைத்ததுமில்லாமல் என்ன பேச்சு!

“ஓல்டு மேன், கொஞ்சம் நகருங்க” – இவ பதினாறு வயசு குமரி! கேடு கெட்ட ஜென்மம்.

“சார்! டென்ஷனாகாதீங்க. பிபி எகிறுது பாருங்க!” நர்ஸ் அதட்டுப் போட… விஸ்வா கையைப் பிடித்துக் கொண்டான்.

“அண்ணா! ரிலாக்ஸ்டா இருங்க. நானிருக்கேன் உங்களுக்கு.”

அந்தப் பாசக்காட்சியைக் கலைக்க விரும்பாத அதுல்யாவுக்குக் கண்ணில் நீர் துளிர்த்தது.

எத்தனைப் பாசமான குடும்பம். மூத்தவராய் அவர் வழிகாட்ட பின்தொடரும் தம்பிகள். நம் வீட்டிலோ, அக்கா என்று பெயர் தான்! குடும்பத்தில் எப்போது குண்டு வைப்பாள் என அச்சத்தோடே சுற்ற வேணடியிருக்கிறது.

அவள் பயந்தமாதிரியே வீட்டை ரணகளம் ஆக்கிக் கொண்டிருந்தாள் நித்யா.

குழந்தை பைரவி கதறிக் கொண்டிருக்க அவள் முதுகில் கைவிரல் பதிய அடித்துவிட்டு தானும் தலையிலடித்துக் .கொண்டு ரகளை செய்து கொண்டிருந்தாள்.

“இப்ப என்னதான் உனக்கு பிரச்சினை? எதுக்குக் குழந்தையை அடிக்கிற?”

“ம்… அவ அப்பனை அடிக்க முடியலை, அதான்!”

“அதான் வாயடிக்கிறியே பத்தாதா?”

“ஓஹோ, நீயும் அவன் கட்சியா? கூடப் பிறந்தவளைவிட அவன் ஒசத்தியாயிட்டானோ?”

“லூசு மாதிரி பேசாதே. குணம் தெரிஞ்சுதானே காதலிச்சே. இப்ப அனுசரிக்காம இருந்தா…”

“ஓ… நான் சகிச்சுகிட்டு அங்கே கஷ்டப்படணும், நீ பாதாமும் பிஸ்தாவும் சாப்பிட்டு சொகுசா வாழணும், இல்லை?”

“என்ன உளர்றே?”

“அவ உளறலைடி, தெளிவா தான் இருக்கா‌. உனக்கு கொடுத்த பாக்கெட்டிலிருந்து அவளுக்கு மட்டுமில்லாம அவ பொண்ணுக்கும் உபசரணை பண்றோம் இல்ல… அப்படித்தான் பேசுவா!” அம்மா நடுவில் கத்த…

பைரவி ஓடிவந்து “இத்தி! அப்பா அடிக்க வந்தாங்க தெரியுமா?” என்றபடி அழுதது. 

“என்னது, அடிக்க வந்தானா? அதுக்கா பெண்ணை பெத்து வச்சிருக்கேன்? இப்படி சீரழிஞ்சு நின்னா அப்படித்தான்!” அம்மா ஆவேசப்பட்டாள்.

“நிச்சயம் நித்தி ஏதாவது ஏழரையைக் கூட்டியிருப்பாள். சும்மா சும்மா சீண்டினா பேசாம இருப்பாங்களா?”

“இவ சுபாவம் தெரிஞ்சுதானேடி காதலிச்சான்.” 

“இவளுந்தானே மா. சரி விடு. என்ன பிரச்சினையோ? இதை எப்படி சரி செய்வதுனு பார்ப்போம்.” – சொல்லிக் கொண்டிருக்கையில் அவள் செல் அடித்தது.

அசோக்!

இவன் எதுக்கு இப்ப ஃபோன் பண்றான்? இளங்கோவுக்கு ஏதாவது?




What’s your Reaction?
+1
6
+1
9
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!