Serial Stories யுகம் யுகமாய்..! 

யுகம் யுகமாய்..!-14

14

“ராஜ்! நாம் நாளைக்கே இண்டியா கிளம்பறோம்.”

“இப்படி திடீர்னு சொன்னா எப்படி?நீ மட்டும் தானே போறதா சொன்னே?எனக்கு ஆபீஸ்ல வேலை இருக்கு.”

“நம்மோட வேலை பணம் பதவி இதெல்லாம் விட இப்ப வர்ஷா தான் முக்கியம் ராஜ்!”

“சர்ட்டன்லி.! இப்ப அவளுக்கென்ன? மேகமலைக்கு ப்ராஜெக்ட்டுக்கு தானே போயிருக்கா?என்னோட கஸின் 

பேமிலி நல்லாவே பார்த்துப்பாங்க.நம்ம பொண்ணும் ஒண்ணும் தெரியாதவளல்ல.”

“ஐயோ ராஜ்! நம்ம பொண்ணை கெட்டிக்காரத்தனமாத்தான் வளர்த்தியிருக்கோம்.ஆனா சமீபமாக அவளுக்குள்ளே ஒரு குழப்பம் இருக்கு”.

“ஹே! குழப்பம் உனக்கா அவளுக்கா?”

“அவ சைக்ரியாஸிஸ்ட்டை போய் பார்த்திருக்கா.”

சட்டென திகைத்தார் ராஜசேகர்.

“நிஜமாவா சொல்ற?”

“ஆமாம் ராஜ். ஏதேதோ பேசறா.மயங்கி மயங்கி விழறா.

எனக்கு மனக்கலக்கமா இருக்கு.அம்மாகிட்டே  நினைச்சு படுக்க சொன்னேன். 

“நினைச்சு படுக்கறதுன்னா?”

காரைக்குடி பக்கமுல்ல எங்கம்மா. அப்படித்தான் அங்க ஏதாச்சும் ஒரு பிரச்சனைன்னா ராத்திரி நினைச்சு படுத்தாங்கன்னா காலையில வழி கிடைச்சிடுமாம்.

அவங்க தான் நம்ம ரெண்டுபேரையும் உடனே மேகமலைக்கு போகச் சொன்னாங்க.ஒரு வார காலம் அவளோடேயே இருக்க சொன்னாங்க.”

அதற்குமேல் ராஜசேகர் எதுவும் பேசவில்லை.துரிதமாக பயண ஏற்பாடுகளைச் செய்து இதோ விமானத்திலும் ஏறியாகிவிடடது.

விமானம் போய்ச்சேரும் வரை ராஜசேகருக்கு இருப்பு கொள்ளவில்லை.இதுவரை நடந்ததையெல்லாம் வந்தனாவிடம் துருவி துருவி விசாரித்து ப்ருத்வி வரை தெரிந்து கொண்டார்.

“ப்ருத்வி எப்படி வந்தனா?

நம்ம வர்ஷாவுக்கு ஏற்ற ஜோடியா? அவளை நல்லா பார்த்துப்பானா!”

ப்ருத்வி அந்த பதக்கச் சங்கிலியை மீண்டும் எடுத்துப் பார்த்தான்.முன் பக்கம் இதய வடிவிலும், பின்பக்கம் பூ வடிவிலும்  இருந்த அந்த ரத்ன பதக்கத்தில் இரு இலைகளையும் வடிவமைத்திருத்தனர்.இலையைப் பிடித்து மெலிதாய் வருட சட்டென பதக்கத்தின் மறுபுறமும் திறந்து கொண்டது.

அட…உள்ளே எழில் ஓவியமாய் ஒரு இளவரசியின் சித்திரம்.விரித்துப் பார்த்தவன் திகைத்தான்.அந்தக் கண்கள்!!!

அவனை காந்தம் போல் இழுக்க

ராஜ் கம்பீரத்துடன் கூடிய அவள் தோற்றம்…இது…இவள்…

குழலி” அவன் இதழ்கள் முணுமுணுத்தது.

இன்னும் இரண்டொரு நாட்கள் தான்! பொறுத்திரு கண்ணே!சந்திரகிரகணம் முடிந்த இருநாட்களில் நாம் மணமேடையில் சந்திப்போம்.எமது ராஜ்ய தூதர்கள் உன் தந்தையிடம் பெண் கேட்டு அவரும் ஒப்புக்கொண்டு….இதோ…நம் மனங்கவர்ந்தவளை யாம் உடைமையாக்கிக் கொள்ளப் போகிறோம்.”

அஃது அத்தனை எளிதல்ல அரசே!.முதலில் என்னைப் பிடியுங்கள் பார்க்கலாம்.

துள்ளி ஓடியவளை கைநீட்டி பிடிக்க எம்பியவன் கையில் படாமல் அவள் காற்றில் மறைந்தாள்.

தேவி! போகாதே!.எமை விட்டு நீ நீங்கினால் யாம் உயிரற்ற உடல் ஆவோம். எப்பிறவிக்குமிரு மாதரை யாம் சிந்தையாலும் தொடோம்.நில்..

ப்ருத்வி!என்னப்பா இது! பகல்‌கனவா?

ஊரிலிருந்து வந்த களைப்பு தீர குளித்து முடித்து வழக்கம் போல் பூஜை முடித்து தாத்தா நின்றிருந்தார்.




தாத்து !இதைப் பாருங்களேன் மலையில் கிடைத்தது.

பதக்கத்தை கையில் வாங்கியவர் ராணியின் சித்திரத்தை பார்த்து திகைத்து நின்றார்.

“அம்மா! உன் விளையாட்டை ஆரம்பித்து விட்டாய்.உன் கையில் ஆடும் பொம்மைகள் நாங்கள்.நீ நடத்தும் நாடகத்தில் மீண்டும் என்னை பார்வையாளனாய் வைத்து தண்டனை கொடுத்துவிடாதே தாயே!”

“என்ன தாத்து! பிரமிச்சிட்டீங்களா? இந்த ராணியை எங்கேயோ பார்த்த மாதிரியில்லை.?”

மௌனமாகத் தலையசைத்தவர் எல்லாம் முடிவுக்கு வரும் நேரம் வந்துவிட்டது போலும். எதையும் சொல்லமுடியாமல் வாய்க்கட்டு போட்டிருக்கிறாளே அந்த மாயக்காரி மனதுள் மறுகினார்..

“ஒரு நிமிஷம் தாத்தா. இதே மாதிரி அந்த வர்ஷா பொண்ணோட செயினும் எ ன்கிட்ட கிடைச்சிருக்கு. அந்த லாக்கெட்டைத் திறக்க முடியலை.இந்த பீரியட் எனக்கு ஸ்வர்ண யோகம் ஏதேனும் உண்டா? தங்கமும் ரத்னமுமாக கிடைக்குது!”

“ப்ருத்வி நாளையிலிருந்து ஒருவார காலத்துக்கு நீ குளிச்சு முடிச்சதும் நான் சொல்லி கொடுத்த மகாமந்திரத்தை 11 முறை உச்சாடனம் பண்ணனும்.”

“அதெல்லாம் முடியாது ..” .என் சொல்ல வந்தவன் தாத்தாவின் சீரியஸான முகத்தைப் பார்த்ததும் நிறுத்திக் கொண்டு தலையசைத்தான்.

“அந்த வர்ஷா பொண்ணை நான் பார்க்கணும் பா.”

“இதோ வந்துட்டேன் தாத்தா.நீங்க வர்றீங்கனு ப்ருத்வி சொன்னதுமே உங்களைப் பார்க்க ஓடி வந்திட்டேன்.

ஹை..இது என்ன பதக்கத்தை வெச்சு ஆராய்ச்சி? உள்ளே‌ என்ன இருக்குது ப்ருத்வி?

சர்வசாதாரணமாக அந்த பதக்கத்தை திறந்தவள்  ..

அட… என்னோட ஓவியத்தை இதில் யார் வச்சது?

என்று கேட்க

தாத்தாவும் ப்ருத்வியும் ஜெர்க் ஆனார்கள்.

“ஹா ஹா பயந்திட்டீங்களா டெக்ஸாஸ் ல தமிழ்ச்சங்கத்தில நடந்த கல்ச்சுரல்ஸ்ல நான் க்வீன் மாதிரி மேக்கப் போட்டு நடிச்சேன்.இன்‌ஃபேக்ட் ‌அந்த ஃபோட்டோ வை என் லாக்கெட்ல கூட வச்சிருந்தேன்.பட் செயின் காணா போச்சு.”

“இது தானே அந்த செயின்.ஸாரி வர்ஷா வாஷிங் மெஷின்ல போட்டதில் லாக்கெட் கொஞ்சம் ஜாம் ஆயிடுச்சு”.

சைடில் இரண்டு தட்டு தட்டி அவள் லாக்கெட்டைத் திறக்க ப்ருத்வி அதிர்ச்சியானான்.

ஃபோட்டோவைப் பார்த்த தாத்தாவும் தடுமாறவே செய்தார்.

இரண்டு படத்துக்கும் ஆறு வித்யாசங்கூட இல்லை.

“குழந்தை! நான் ஒண்ணு சொன்னா நீ கேட்பியா?

இன்றிலிருந்து ஆறு நாட்களுக்கு நான் சொல்லிக் கொடுக்கிற மந்திரத்தை நீ ஜபிக்கணும்.செய்வியா?”

—————-

“நிச்சயம் குருவே. தாங்கள் சித்தம் என் பாக்யம்.”

பவ்யமாக கைகட்டி நின்றிருந்தாள் குழலி.

ராஜகுரு பரிகார பூஜைகளை முடித்து பின் அரசர் அரசியாரிடம் கன்னிப்பெண்களுக்கு மங்கலப் பொருட்களை தானம் வழங்கச் சொன்னார்.மிகப் பிரம்மாண்டமான அந்த பூஜை முடிந்ததும் குழலியின் கையில் ரக்ஷையொன்றை கட்டியவர் மந்திர உச்சாடனத்தை அவள் செவிகளில் ஓதினார். 

“இளவரசியாரே! தொடர்ந்து நீங்கள் ஜெபித்து வாருங்கள்.சந்திரகிரகணத்தன்று எக்காரணத்தைக் கொண்டும் வெளியில் வரக்கூடாது.”

குருவை நமஸ்கரித்து அந்தப்புரம் விரைந்தாள் குழலி.

எல்லாம் செவிலித்தாய் செய்த வேலை.பன்னகப்பிடாதியை நினைத்து நாம் வருந்த அவள் வேறு ஏதோவென கதை புனைந்து விட்டாள்.இது ராஜகுரு வரை போய் அரசரும் அரசியாரும் விசனப்படுமளவுக்கு வந்துவிட்டது.

சந்திரகிரகணத்தன்று யாரும் வெளியில் வரக்கூடாதாமே. ஆஹா..யாருமற்ற அத்தனிமையில் பூபாலரை சந்தித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அடியே யௌவனா இரக்கமற்றவள் நீ.எப்போதும் நிழல் போல் உடனிருப்பேன் என்றவள் நொடியில் உயிர்விட்டாயே. அரச குடும்பத்தினரின் வாழ்வு அநித்தியம் என்பது போல் நீயும் மறைந்துவிட்டாயே. என் உளக்கிடக்கையைப் பகிரக் கூட ஆள் இல்லையே.

யௌவனாவின் நினைவு தீயாய்ச் சுட…தவித்து நின்றாள்.

அதேநேரம் பன்னகப்பிடாதியும் அங்கே தவித்துக் கொண்டிருந்தான்.

“முட்டாளே! என்ன காரியம் செய்திருக்கிறீர்கள்.நான் சொன்ன இடத்தை விட்டு அரையடி தள்ளி குழியை வெட்டியிருக்கிறீர்கள் அந்த பேதைப்பெண் பலியாகிவிட்டாள்.இனி இளவரசி உஷாராகி விடுவாள்.

இம்முறையாவது சரியாகச் செய்யுங்கள்.”




 கர்ஜித்தவன்‌ அடுத்த திட்டத்தை தீட்டலானான்.சந்திரகிரகணத்தன்று இளவரசியாரை அருவிக்கரைக்கு எப்படியாவது வரவழைத்து விட வேண்டும். இளவரசர் அனுப்புவது போல் ஓலை அனுப்புவோம்.அங்கே நம் திட்டத்தை நிறைவேற்றுவோம்.

“பன்னகப்பிடாதி! உன்னை விடமாட்டேன்.என்னுயிர்த் தோழி யௌவனாவின் பலிக்கு நீ ஈடு செய்தாக வேண்டும்.இது இளவரசரின் ஓலையன்று..அதை நானறிவேன்.உன்னை வீழ்த்த இதோ வருகிறேன்.இதோ என் இடையிலுள்ள குறுவாள் உன்னுயிர் குடிக்கும்.துரோகி!”

“வர்ஷா! இங்கே பார். ஏன் மயக்கம் ?” 

வந்தனா, ராஜசேகர், டாக்டர் எல்லோரும் சுற்றி நிற்க…

வர்ஷா மலங்க மலங்க விழித்தாள்.

எதிரே அவன் அதே வெட்டுத்தழும்போடு…

“அடேய் அற்பனே! இன்னுமா நீ உயிரோடிருக்கிறாய்?”

வீறிட்ட அவள் குரலில் எல்லோருக்கும் அச்சம் வந்தது.

“தாத்தா என்ன இது? நீங்க மஞ்சள் கிழங்கெல்லாம் கொடுத்தீங்க..”

“ப்ருத்வி! நோயின் தீவிரத்தை குறைக்கலாம்.நோய் தீர்ந்த பின் தானே சுகம்? கொஞ்சம் பொறு .எல்லாம் சரியாகிவிடும்.”

“டாக்டர் நீங்க ஏதாவது செய்யுங்க.என் மகளை இந்த கோலத்தில் பார்க்கவா நாங்க இங்கே வந்தோம்?”

ராஜசேகர் உணர்ச்சிவசப்பட்டு கதற..

வந்தனா செய்வதறியாது நின்றாள்.

“கொஞ்சம் பொறுமையா இருங்க.எல்லாம் சரியாயிடும்.”

தாத்தாவின் ஆறுதல் வார்த்தைகள் அவர்களைத் தேற்றவில்லை.

“நோ..எனக்கு ஜோஸியத்தில நம்பிக்கை கிடையாது.டாக்டர் நீங்க ட்ரீட்மெண்ட் ஆரம்பிங்க.என் பொண்ணை காப்பாத்துங்க ப்ளீஸ்.”

“ப்ளீஸ் காம் டவுன் ராஜசேகர்.நத்திங் சீரியஸ்.வர்ஷா மனசில் ஏதோ இருக்கு.அவளை ஹிப்னடைஸ் 

செஞ்சு பார்த்தா தான் அதைக் கண்டுபிடிக்க முடியும்.அதுக்கு உங்க பர்மிஷனும் அவளோட கன்சென்ட்டும் வேணும்.”

டாக்டர் லைலா அன்சாரி தீர்மானமாகத் கூற எல்லோருக்கும் சற்று கலக்கமா கலே இருந்தது.

ராஜசேகர் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு.

” யூ கோ அஹெட் டாக்டர்” என்றார்.

“வா ப்ருத்வி.நாம் வீட்டுக்குப் போகலாம்.”

“நீங்கள் ஏதும் தவறாக எடுத்துக்கொண்டீர்களா?”

“இல்லை மா.உங்க கணவருக்கு நம்பிக்கையில்லை.ஆனாலூம் விதிப்படியே எல்லாம் நடக்கும்.வர்ஷாவுக்கு ஏதுமாகாது பயம் வேண்டாம்.”

அவர் பேரனோடு நகர…

குழலி குலகுருவின் பேச்சையும் மீறி அருவிக்கரை நோக்கி பயணிக்கலானாள்.

அங்கே பன்னகப்பிடாதி தன் ஆட்களோடு வன்மத்தோடு காத்திருந்தான்.

சோணைக்குழலி தப்பு வாளா?

(தொடரும்)




What’s your Reaction?
+1
7
+1
9
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!