காதல் சகுனி

காதல் சகுனி-1

1

அவன் கன்னங்கள் துடித்தன. இதழ்கள் குவிந்தன. கண்களில் காதல் வழிந்தது.குவிந்த இதழ்கள் அருகிலிருந்த பெண்ணின் முகத்தை நெருங்கியதும் மிக லேசாக விரிந்து கொள்ள, அந்தப் பெண்ணின் முகத்தில் தயக்கமும்,தடுமாற்றமும் அவற்றை மீறிய ஆர்வமும் தெரிந்தது. இரு உதடுகளும் ஒன்றை ஒன்று நெருங்கி கவ்விக் கொண்டன. எலியை கவ்வும் பூனையின் வேகத்துடன் இருந்தது அந்த இதழணைவு.

பார்த்துக் கொண்டிருந்த துளசிக்கு வாந்தி வருவது போல் ஒரு உணர்வு உண்டானது. தலையை திருப்பி பக்கம் பார்க்க அவளுக்கு இருபுறமும் அமர்ந்திருந்த ரஞ்சனியும், பிரியாவும் கண்களை சிமிட்ட கூட மனமின்றி விரிந்த விழிகளுடன் பார்த்தபடி இருந்தனர். துளசி தனது இரண்டு கைகளாலும் இரு பக்கமும் அமர்ந்திருந்தவர்களின் தொடையில் ஓங்கி அறைந்தாள். 

“என்ன கண்றாவிடி இது? இதை போய் இப்படி பார்த்து கொண்டிருக்கிறீர்கள்?” 

பிரியா அவசரமாக ரிமோட்டை எடுத்து டிவியில் ஓடிக் கொண்டிருந்த காட்சியை உறைய வைத்தாள். “அறிவு கெட்டவளே! எவ்வளவு நல்ல சீன்! சரியான நேரத்தில் கெடுத்தாயே!”

ரஞ்சனி அவள் கையிலிருந்த ரிமோட்டை பிடுங்கினாள்.” எதற்காகடி நிறுத்தினாய்? கொஞ்சம் ஃபார்வேர்ட் பண்ணி திரும்ப ஓட விடு”

“என்ன திரும்பவும் முதலில் இருந்தா? என்னால முடியாதுடி! நான் கிளம்புறேன்” 

எழுந்த துளசியை இரண்டு பக்கமும் கைகளைப் பிடித்து இழுத்து மீண்டும் உட்கார வைத்தனர். “இந்த படத்தை முடிச்சிட்டு தாண்டி நீ போகணும்”

” படமா இது? எப்படி இந்த மாதிரி வல்கராலாம் படம் எடுக்குறாங்க! அதையும் நீங்க இப்படி உட்கார்ந்து பாக்குறீங்களே!”

” சரிதான் கூன் பாட்டிக்கு திருவருட்செல்வர் போட்டு விடலாம்”

“ஏய் தண்டட்டி போட்டுக்கிட்டு கம்பை ஊனிட்டு படம் பாக்குற கிழவின்னு நினைச்சியா என்னை?”

“ஆமாம், ஒரு நாள் ஜீன்ஸ் போட சொன்னா ஆயிரம் தடவை யோசிப்பவளாயிற்றே நீ! எப்பொழுது பார்த்தாலும் இந்த சுடிதார். உனக்கெல்லாம் இது போன்ற உணர்ச்சி மயமான காதல் படம் பிடிக்கும் என்று எதிர்பார்த்தது எங்கள் தப்பு”

” என்ன இதில் காட்டுவதற்கு பெயர் காதலா?காதல் என்றால் கண்ணியமாக இருக்க வேண்டும். கண்கள்தான் பேச வேண்டும், இதயம் மட்டுமே துடிக்க வேண்டும், இதயத்தின் துடிப்பை கண்கள் பேச வேண்டும். இதில் காட்டுவது போல் உடல் துடித்து கைகள் பேசக்கூடாது”




“ஏய் என்னடி இவ இன்னும் 50-சிலிருந்து வெளியில் வரவே இல்ல!”

“ஏய் கே பி சுந்தராம்பாள் காலத்து சினிமாதான் உனக்கெல்லாம் லாயக்கு” 

“சரிதான் நிறுத்துங்கடி. அப்படி ஒன்றும் நான் காதல் படங்களுக்கோ காதலுக்கோ எதிரி இல்லை. காதல் என்பது ஒரு கட்டுப்பாடோடு இருக்க வேண்டும் என்றுதான் சொல்கிறேன்”

” ஒரே ஒரு லிப் கிஸ்ஸால்  இந்த காதலில் கட்டுப்பாடு எங்கே இல்லாமல் போய்விட்டது?”

 வாதிட்ட தோழியை உஸ் என்று பார்த்தாள் துளசி. “இதெல்லாம் வியாபார தந்திரம்டி. இது போன்ற சீன்கள் வைத்தால் தான் உங்களைப் போன்ற இளைஞர்கள் படம் பார்க்க தியேட்டருக்கு வருவார்கள்”

” துளசி தியேட்டர்ல படத்துல இந்த சீன் கிடையாது தெரியுமா? இப்போ ஓடிடில மட்டும்தான் வந்திருக்கிறது”

” சரிதான் இதிலேயே தெரிந்து கொள்ளுங்களேன் இந்த படத்தின் இலட்சணத்தை”

” என்னடி லட்சணம்! இந்த சீனை பார்ப்பதற்காகத்தான் நாங்கள் படத்தையே பார்க்க ஆரம்பித்து இருக்கிறோம். இது மட்டும் இல்லை இன்னமும் ரெண்டு மூணு சீன்…” சொன்ன தோழியின் வாயை மூடினாள்.

” போதும்டி அதுதான் படத்தோட லட்சணம் தெரிஞ்சிடுச்சே! இன்னும் எந்த சீனையும் பார்க்க நான் தயார் இல்லை”

“நீ கிளம்பு தாயே, நாங்களாவது நிம்மதியா மீதி படத்தை பார்க்கிறோம்” ரஞ்சனி கையெடுத்து கும்பிட்டு அவளை தள்ள, பிரியா உறைந்திருந்த காட்சியை மீண்டும் கொஞ்சம் முன்னால் தள்ளி ஓடவிட்டு விழிகளை வட்டமாக திறந்து கொண்டு டிவிக்குள் தலையை நுழைத்துக் கொள்வாள் போல் அமர்ந்து கொண்டாள்.

 டிவி ஓடவும் ரஞ்சனியும் அவள் அருகே போய் அமர்ந்து கொள்ள துளசி லேசாக தலையில் அடித்துக் கொண்டு வெளியேறினாள்.

” நாளை ஆபீஸ்ல பாக்கலாமடி” விடைபெற்ற துளசிக்கு ‘ம்’  கொட்ட  கூட  தோழிகளுக்கு நேரம் இருக்கவில்லை. திரையில் மீண்டும் அந்த கதாநாயகன் இதழ் பிளக்க கதாநாயகியை நெருங்க துளசி வேகமாக பார்வையை திருப்பிக் கொண்டு வெளியே வந்து விட்டாள்.

 இது போன்ற  திரைப்படங்களை எடுப்பவர்களை நிற்க வைத்து சுட வேண்டும் என்ற வேகம் அப்போது அவளுள் வந்தது. மிருகம் போல் என்ன காதல் இது! ஆரம்பத்தில் அழகான கவிதை போல் காதலை சொல்லிக் கொண்டிருந்த படம்தான். திடீரென்று இப்படி எல்லை மீறிய காட்சிகள். ஸ்கூட்டியை ஓட்டிக் கொண்டிருந்தவளின் முகம் கோபத்தில் சிவந்திருந்தது.

 முக்கால் மணி நேர பயணத்திற்கு பின் தன் இருப்பிடத்தை அடைந்தவள் வீட்டின் கீழ்ப்பகுதி விளக்குகள் அணைக்கப்பட்டு இருளாக இருக்க,ஆன்ட்டி தூங்கிட்டாங்க போலவே நினைத்தபடி தான் குடியிருக்கும் மாடிப்பகுதிக்கு பக்கவாட்டு படிகள் மூலம் ஏறினாள்.

 கதவை திறந்ததும் பெரிய ஹாலும் அதன் இருபுறமும் இரு அறைகளும். தனது வலது பக்க அறையை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள். சின்னதாய் ஒரு ஹால்,பெட்ரூம், கிச்சன் என கச்சிதமாக இருந்தது அந்த போர்ஷன். சென்னையில் இது போன்ற இடம் தங்குவதற்கு கிடைத்தது பெரிய விஷயம்.

 சென்னைக்கு வேலை கிடைத்து வந்தபோது லேடிஸ் ஹாஸ்டலில் தங்கி இருக்க துளசி மிகவுமே சிரமப்பட்டாள். அந்த நேரத்தில்தான் சுஜாதாவை ஒரு கோவிலில் சந்தித்தாள். கண்களை மூடி தூணில் சாய்ந்து அமர்ந்திருந்தவரை தோள் தொட்டு அசைத்து “என்ன ஆன்ட்டி உடம்புக்கு ஏதாவது செய்கிறதா?” என்று பரிவுடன் கேட்க, பேச முடியாமல் தண்ணீர் என ஜாடை செய்தார் அவர்.

 உடனே எதிரில் இருக்கும் கடைக்கு போய் ஒரு தண்ணீர் பாட்டில் வாங்கி வந்து கொடுக்கவும், தனது பர்சில் இருந்த மாத்திரையை எடுக்க அவர் சிரமப்படுவதை கண்டு தானே பிரஷர் மாத்திரையை எடுத்து அவர் போட்டுக் கொள்ள உதவினாள்.




 பத்து நிமிடங்கள் கழித்து ஆசுவாசமடைந்த அவர் நன்றி சொல்ல இருவருக்குள்ளும் வயது வித்தியாசத்தை தாண்டி ஒரு தோழமை மலர்ந்தது. பேச்சுப் போக்கில் தான் தங்க இடம் தேடிக் கொண்டிருப்பதை துளசி சொல்ல தனது வீட்டு மாடியில் தங்கிக் கொள்ள சுஜாதா அழைத்தார். மகனும் மகளும் வெளிநாட்டில் செட்டில் ஆகி விட கணவர் இறந்தபின் தனியாகவே தான் இருப்பதை தெரிவித்தார் சுஜாதா.

அவர்  இருக்கும் இடம் அவளது அலுவலகத்திற்கு பக்கம் என்பதால் துளசி உடனடியாக சம்மதித்து விட்டாள். எப்போதோ வந்து போகும் மகன் மகளுக்கு என்று வசதியாக அவர் கட்டி வைத்திருக்கும் மாடி போர்சன் இது. கடந்த மூன்று வருடங்களாக மகனோ மகளோ வருவதில்லை, அங்கிருந்து போனில் பேசுவதோடு சரி, வருத்தத்தோடு சுஜாதா சொன்னபோது துளசிக்குமே வருத்தம் தான்.

” கவலைப்படாதீர்கள் ஆன்ட்டி நாம் ஒருவருக்கொருவர் துணை” என்று தோள் அணைத்துக்கொண்டாள். சில நாட்களிலேயே நட்பை தாண்டி இருவருக்குள்ளும் ஒரு வித பாசம் உருவானது.

அடுப்பில் தோசை கல்லை வைத்து தோசை ஊற்றிய துளசி ஆன்ட்டி சாப்பிட்டார்களா என்று தெரியவில்லை, இந்த ரஞ்சனியும் பிரியாவும் நல்ல படம் பார்க்க வா! என்று தொல்லை செய்ததில் அவர்கள் வீட்டிற்கு போய் படம் பார்த்ததில் நேரம் போய்விட்டது,நினைத்தபடி  சாப்பிட்டு முடித்தவள் சிறிது நேரம் அலுவலக வேலைகளை பார்த்துவிட்டு பத்தரை மணிக்கு விளக்கணைத்து படுத்து விட்டாள்.

எவ்வளவு நேரம் தூங்கினாளோ தெரியவில்லை, திடீரென்று கதவை யாரோ தட்டும் சத்தம்.. இல்லை இடிப்பது போல் ஒரு மாதிரி சத்தம் கேட்க,யாரது வீட்டிற்குள் வந்தது யோசித்தபடி போய் கதவை திறந்தவள் அதிர்ந்தாள். முழுவதும் குடிபோதையில் தள்ளாடியபடி வாசலில் நின்றிருந்தான் ஒருவன். 

பூட்டியிருந்த வீட்டிற்குள் இவன் எப்படி வந்து நிற்கிறான்! துளசியின் மூளை வேலை செய்ய மறுத்தது.

அவன்  முகம் முழுவதும் கொசமுசவென தாடி மண்டிக் கிடக்க, தலை மயிரும் கலைந்து முகத்தை மறைத்திருந்தது. கதவை திறந்தவளை பார்த்ததும் இரு கைகளையும் விரித்து “ஹாய் டார்லிங்” என்றபடி நெருங்கினான்.

‘வீல்’ என்ற அலறலுடன் பின் வாங்கிய துளசியின் மனதிற்குள் அந்த நேரத்திலும் சற்று முன் தோழிகளுடன் பார்த்த படத்தின் ஹீரோ நினைவிற்கு வந்தான். ஏனென்றால் அந்த படத்தில்  ஹீரோவின் மேனரிசங்கள் அப்படியே இதோ இவனைப் போன்றேதான் இருந்தது.

 அதாவது இந்த இவன் அந்த படத்தை பார்த்துவிட்டு அந்த ஹீரோவை போல தன்னை உருவகப்படுத்திக் கொள்கிறான்.

ஆக, நான் நினைத்தது சரியாகப் போற்று.இவனைப் போன்ற இளைஞர்களை கெடுக்க வென்றே அது போன்ற படங்கள் எல்லாம் எடுக்கப்படுகின்றன நினைத்தவள் ஆன்ட்டி என்ற அலறலுடன் அவனைத் தாண்டி கீழே ஓடத் துவங்கினாள்.




What’s your Reaction?
+1
41
+1
25
+1
4
+1
3
+1
1
+1
1
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!