Serial Stories யுகம் யுகமாய்..! 

யுகம் யுகமாய்..! -5

 5

“கமான் தாத்து!  என்னை விடச் சின்னவன்னு சொல்வீங்க. எங்க வேகத்தைக் காணோம்?”

ப்ருத்வி சிரித்துக் கொண்டே திருமுருக பாண்டியனை உசுப்பி விட்டான்.

இரண்டு நாள் அவுட்டிங் என்றவன் சட்டென முடிவெடுத்து ரெட்வுட் தேசியப் பூங்காவுக்கு தாத்தாவுடன் வந்திருந்தான்.

“தாத்து..!”

“வரேன் ப்ருத்வி. என்னவோ  கால் எட்டலை. ஸாரி! உன் ஹைகிங்கை கெடுத்துட்டேன்!” 

“ஓ! தாத்து.. இட்ஸ் ஓகே! நாம திரும்பலாம். உங்களுக்கு உடம்புக்கு ஏதானும்?”

“நோ! நோ! ஐ அம் பெர்பெக்ட்லி ஆல்ரைட்! யூ கோ அஹெட் மை டியர்!” 

ப்ருத்வி அவரையே கவலையாகப் பார்த்தான். அருகில் உள்ள விடுதியில் அறையெடுத்து அவரைத் தங்க வைத்து விட்டு பூங்காவின் ஆரம்பப் பகுதிக்கு வந்தவனை டெய்ஸியின் “ஹாய்” என்ற உற்சாகக் குரல் வரவேற்றது. 

“வாவ் டெய்ஸி! வீக் எண்ட் ட்ரிப்பா?”

“யா! மீட் மை பாய் ப்ரெண்ட் சாலமன்” 

“ஹாய் டியூட்! தென்.. போலாமா?” 

நண்பர்கள் வந்து விட்ட உற்சாகத்தில் நடக்கக் கேட்டான் ப்ருத்வி.

“ஹோ! வெயிட் யா. இந்த வர்ஷா வரேன்னா. இன்னும் காணோம். 

டேய்.. இருடா. வரேன்!” 

வார்த்தையை ப்ருத்வியில் ஆரம்பித்துத் தன் கையைப் பிடித்து இழுத்த சாலமனில் முடித்தாள்.

“யார் அந்த மயங்கும் பொண்ணா?”

“ஹா! ஹா! கூடிய சீக்கிரம் மயக்கும் பொண்ணான்னு கேட்கப் போற பாரு!” டெய்ஸி பகபகவெனச் சிரித்தாள்.

“ஹேய்.. கமான் டெய்ஸி! இட்ஸ் கெட்டிங் லேட்!” 

சாலமன் அவசரப் படுத்த ப்ருத்வியைப் பார்த்தவள்..

“ஸாரி ப்ருத்வி! வர்ஷாவோட நீ ஜாயின் பண்ணிக்கோ! அதோ வர்ஷா வந்தாச்சே! ஹே.. வர்ஷ்!  ஐ அம் கோயிங் வித் மை பாய் ஃப்ரெண்ட். யூ என்ஞ்ஜாய் யுவர் வாக் வித் ப்ருத்வி!” 

அழகாய்க் கோத்து விட்டுச் சென்று விட்டாள்.

வர்ஷாவுக்கு உடல் படபடத்தது. ப்ருத்வி குரல் கேட்டதற்கே மயங்கியவள் இவ்வளவு பக்கத்தில் அதுவும் அவனுடன் ஒன்றாக நடந்து செல்வதை நினைத்துப் பார்த்தே அதிர்ந்தாள்.

ப்ருத்வி அவள் முகத்தையே ஊன்றிப் பார்த்துக் கொண்டிருந்தான். பையில் இருந்த வாட்டர் பாட்டில் அவன் கையில் முளைத்திருந்தது.

“என்ன?” வர்ஷாவின் விழிகள் கதை பேசின.

“என் அழகைப் பார்த்த போதெல்லாம் நீங்க மயங்கி மயங்கி விழுகிறீங்களே! அதான் முன்னேற்பாடா தண்ணீர் பாட்டில்!”

“ஓஹ்..நோ! ஐ அம் ஓகே நவ்!” 

“அப்ப போகலாமா மேடம்?”

“மேடம்லாம் ஏன்? நான் வர்ஷா. எதுக்கு மரியாதையெல்லாம்?”

“அப்படின்னா வா வர்ஷா!” 

இயல்பாய் ஒருமைக்குத் தாவின ப்ருத்வியை அவள் கண்கள் மறைமுகமாய் ரசித்தன. நெஞ்சப் படபடப்பை மறைத்துக் கொண்டாள்.

அடர்ந்த காட்டில் இயற்கை தன் இருள் போர்வையை பிரம்மாண்டமாய் விரித்திருக்க அங்கொன்றும் இங்கொன்றுமாய் சூரியனின் வெளிச்சச் சிதறல்கள் இவர்களின் வருகைக்குக் கோலமிட்டது போல் இருக்க சிற்றோடைப் பகுதியைச் சுற்றிலும் வண்ண பவுண்டைன்கள் வெளிச்ச நீரை வாரி அடித்தன.




சில்லென்ற காற்றும், சிதறும் நீர்த் திவலையும், மரத்தின் மணமும், மண்ணின் மணமுமாய் மனதை மயக்க ப்ருத்வி அருகில் அமர்ந்திருக்கும் மயக்கம் வேறு அவளைப் பாடாய் படுத்திக் கொண்டிருந்தது. தயக்கத்துடன்

“என்னுடன் வரேன்னு சொன்ன டெய்ஸி இப்படி நட்டாத்துல விட்டுட்டு..” என்றாள்.

“ஃபீல் ஃப்ரீ வர்ஷா. என்னுடன் வந்த என் தாத்தாவும் நடக்க முடியலைன்னு ஹோட்டல்ல தங்கிட்டார். இப்ப எனக்கு நீ! உனக்கு நான்!”

“எனக்கு நீ! உனக்கு நான்! ஹான்.. இதைத் தானே அவரும் சொன்னார். வந்தேன் வந்தேனென்று மயக்கம் வந்தே விட்டது. அப்படியே மடியில் தாங்கிக் கொண்டான் ப்ருத்வி.

“என்னடா இது வம்பாப் போச்சு! வர்ஷா! வர்ஷ்! மேடம்! எழுந்திருங்க!” பாட்டிலைத் திறந்து தண்ணீரைத் தெளித்தவன் உற்று அவள் பேசுவதைக் கவனித்தான்.

“தாங்களே என் நாதர். இனி ஒருகணமும் பிரியேன்!” முணுமுணுத்து அவனின் இடையணைத்த  வர்ஷாவின் மனமோ அருவிக்கரைக்குப் போய்விட்டது.

“அடியேய் யவனா! யௌவனகாந்தி! நீ தானடி என் அணுக்கத் தோழி. இடவலம் தெரியாது ஈங்கெவரும் அறியாது என்னவருடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து விட்டாயே! அருவிக்கரை பேறு பெற்றது உன்னால். இனி இது யௌவனக்கரை என்றே அழைக்கப் படட்டும்.” 

பேருருவகை கொண்டவள் தன் கழுத்தில் இருந்த முத்தாரத்தைப் பேரன்புடன் தோழியின் கழுத்தில் இட்டாள்.

“இளவரசியாரே! தங்கள் அன்பு என் பாக்கியம். ஏழேழு ஜன்மத்திலும் தங்களுக்காக! தங்களுடன்! ” வினயமாகக் குனிந்து கை குவித்தாள் யௌவனகாந்தி.

“ஏழு ஜென்மமா? ஏழிலும் என்னவரே என்னைக் கைபிடிக்க வேண்டுமடி!” 

“ஓஹோ! இளவரசியாருக்கு இப்போது பசலை படர்ந்து விட்டதோ? அங்கம் உருக்குலைந்து அவனியும் பொய்யாகி நெஞ்சம் படர்ந்தவர் நினைவிலே பித்தாகி உற்றவர் அவரென ஊர்க்காவல் விட்டகர்ந்து உன்மத்தம் கொண்டிங்கு உருக்குலைக்கும் பசலை நோய்! தங்களுக்கும் அந்நோவு கண்டு விட்டது இளவரசியாரே!”

கன்னங்கள் செங்குழம்பெனச் சிவந்தன சோணைக்குழலிக்கு. 

“அதரம் சிவந்தனவோ அங்கமும் சிவந்தனவோ?” என்றபடி ரசனையோடு வந்து நின்றான் பூபாலன்.

யௌவனகாந்தி சட்டென்று காவலுறத் தனித்து நின்ற சோணைக்குழலிக்கோ தன்னவனைத் தனிமையில்  கண்டதும் உதரவிதானம் சொல்லத் தெரியாத படபடப்பில் குழைந்தது. செங்கொழுந்தென முகம் சிவக்க முன்னெட்டும் பின்னெட்டுமாய்ச் சிக்கித் தவித்தது செம்பாதங்கள்.

“வாருங்கள் நாதா! தங்கள் வருகையால் சிவந்தது என் மனமும் தான்!”

“ஓஹோ! அத்துணை கனமோ நான்!”

“மனம் புகுந்தபின் மயிலறகானீர்” கலகலவென்று சிரித்த குழலியின் கன்னக் குழியைக் குனிந்து ஒரு கை விரலால் தொட்ட பூபாலன் மெல்ல அவளை ஆலிங்கனம் செய்தான்.

“சர்ப்பம் வளைத்ததாமே! நாகபஞ்சமிக்கென  மக்கள் போட்ட அதிர்வேட்டில் தடுமாறித் தடம் புரண்டு உன்னைக் கண்டதும் பயந்து வந்த வழியே போய்விட்டது பாவம்!” பரிகசித்தான்.

“ஆம்..இப்போது தாங்கள் வளைத்து இருப்பதைப் போல!”

“ஓஹோ!” இன்னும் இறுக்கினான்.

“தேவி!”

“நாதா!”

“கிரகணம் முடிந்தவுடன் நம் பாணிக்கிரகணம் நடக்க வேண்டுமாம்!அரசியார் உரையாடியதை அறிந்து வந்து யவனா கூறினாள்.”

“கைப்பிடித்துத் தந்தால் களவாட மாட்டோம் யாம்!” குணமலைக் குன்று கர்ஜித்தது. 

சோணைக்குழலி அவ்வார்த்தை வனப்பில் தன்னை இழந்தாள். ஒன்று கல்யாணம். மற்றொன்று களவு. பாதைகள் வேறாயினும் பதி இவர் தான். 

“எது நடப்பினும் என்னை..?”

“பிரிகிலேன் தேவி! கண்டநாள் முதல் கொண்ட காதலைக் கைவிடுபவன் அல்ல இந்த பூபாலன்.”

பேச்சற்று மெய்மறந்து பார்வைகள் கவ்வி நின்ற  ஏகாந்தத்தைக் குலைப்பது போல் எழுந்தது அந்த சீழ்க்கையொலி.

ஆலிங்கனம் அஸ்தமித்தது.  அவசரமாய்ப் பிரிந்தனர் இருவரும்.

“யவனா தான்! யாரோ வருகிறார்களெனத் தகவல் தருகிறாள்.”

“காவலுக்குத் தோழி அமர்த்திக் காதல் செய்பவள் நீ தான்!” பெருங்குரலெடுத்து நகைத்த பூபாலனின் இதழைத் தன் மலர்க்கரத்தால் சிறையிட்டாள் குழலி.

“சத்தம் போட்டு நகைக்காதீர்கள். சங்கடம் வந்து சேரும்!”

“சங்கடமேனோ? நானுன் பிரிய நாதனல்லவா? பிரியேன் என்றேனல்லவா?”

“இருந்தாலும் முதல் தனிமையின் முத்துச் சரங்களை முழுமையாய் மனமேந்திச் சுவைக்க வேண்டும் நான். அந்தகாரம் சூழ்ந்தாற்போல் யாரேனும் வந்து குலைத்து விடக் கூடாதென அச்சப் படுகின்றேன்.”




“அச்சமா? மேகமலை இளவரசிக்கா?”

“வாளும் வேலுமேந்தியது கைகள் மட்டும் தான் அன்பரே. விழிகள் இல்லை. அவையும் அவையறிந்து போரிடேனென உள்ளத்தின் காதலோடு உறவாடப் போய் விட்டது.”

“ஆஹா.. விழிக்குத் தான் விருந்தென்றால் வார்த்தைக் கோப்பிலும் விருந்து சமைக்கிறாயே! பரவசம் கொண்டோம் யாம்! இதுவென் அச்சாரம்!” 

தன் கழுத்துப் பொன்னைக் கழட்டி அவளுக்கிட்டவன் அச்சார முத்தமாய் இதழொற்றி மறைந்தான்.

———————–

“வர்ஷா! ஆர் யூ ஓகே! ஹேய்.. பொண்ணு!” ப்ருத்வி இன்னும் உலுக்கிக் கொண்டிருந்தான். 

“ஹெல்ப்!” கத்தினான்.

இவளைத் தூக்கிச் செல்ல நானென்ன விக்கிரமாதித்தனா? என்றெண்ணும் போதே.. ப்ருத்வியின் மனம் தடுமாறியது.

சே! சே! இவள் வேதாளமில்லை!  தேவதை!

அவனின் சிந்தனையைச் சிதைத்தாற்போல் வந்து நின்றான் அங்கத். தாமஸ் க்ரூப் ஆஃப் கம்பெனிகளின் டைரக்டர்.

“ஹாய் ட்யூட். எனி ஃப்ராப்ளம்?”

அவன் கண்கள் ப்ருத்வி மடியேந்திய மாமயிலை மொய்த்தது.

வர்ஷாவின் விழிகள் உருண்டன. 

பூபாலன் நகர்ந்ததும் குழலி தன்னைக் கூர்ந்த அந்த வெட்டு விழுந்த குரூர முகத்தால் அச்சமுற்றாள்.

“நீ?”

“அறியமாட்டாயா? நான் பன்னகப் பிடாதி! உன்னை ஆளவந்த யமன்!”

குரூரச் சிரிப்பிடை வெடித்த சொற்களின் கனத்தில் படபடத்து எழுந்தவள் ப்ருத்வியின் தடுப்பையும் மீறித் தன்னைக் கூர்ந்தபடி நின்றிருந்த  அங்கத்தை ஓங்கி அறைந்தாள்.

“யூ! பாஸ்டர்ட்!”

(தொடரும்)




What’s your Reaction?
+1
10
+1
9
+1
0
+1
1
+1
1
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!