Serial Stories எனக்கென ஒரு வானம் 

எனக்கென ஒரு வானம்-8

8

“இரவு இங்கே எந்த ஏற்பாடும் செய்யாதீர்கள் அம்மா. எங்கள் வீட்டு ஆட்கள் இங்கெல்லாம் தங்க மாட்டார்கள்,தெரியும் தானே?” கேட்ட பெரிய மகளை வெறித்துப் பார்த்தாள் தேவகி.

“ஆனால் சாந்தி முகூர்த்தம் பெண் வீட்டில் வைத்து என்பதுதான் நம் பக்கத்து பழக்கம்,மறந்து விட்டாயா சுமா?”

” எங்கள் திருமணத்தின் போதே மாமா அதெல்லாம் எங்கள் வீட்டிலேயே நடக்கட்டும் என்று சொல்லிவிட்டார் தானேம்மா?

இப்போது மட்டும் எப்படி சம்மதிப்பார்? அத்தோடு இவ்வளவு சிறிய வீட்டில் எங்கள் வீட்டு ஆண்களை தங்கச் சொன்னால்…ப்ச் பாவம் தானே அவர்களும்?” நகைச்சுவையாய் பேசி விட்டதாக நினைத்து சிரித்துக்கொண்டாள் சுமலதா.

அவள் பேச்சை கேட்டபடி அறைக்குள் நுழைந்த வைசாலி ” ஏசி டிவி ஹீட்டரென்று நம் வீட்டிலும்தான் என்ன வசதி குறை அக்கா?”என்றாள்.

 “தீப்பெட்டி சைசில் ஒரு ரூம். கட்டிலை விட்டு கீழே காலை வைக்க மட்டும் தான் இடம் இருக்கும். டிவியும் ஏசியும் இருந்தால் மட்டும் போதுமா?” 

“இங்கேதான் நீ பிறந்து வளர்ந்தாய் அக்கா” நினைவு படுத்தினாள் வைசாலி.

” இருக்கட்டும் அதற்காக காலம் முழுவதும் கஷ்டப்பட வேண்டும் என்று என்ன தலையெழுத்து? எனக்கே வேண்டாம் எனும் போது என் புகுந்த வீட்டினரையும் அதே கஷ்டத்திற்குள் இழுப்பதா?”

” அவர்களே சரி என்றாலும் நீ விட மாட்டாய் போலவே?” தேவகி குறைப்பட்டாள்.

” ஆமாம் அம்மா ஐந்து வருடங்களாக அவர்கள் வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறேனே! அந்த வசதிகளை பார்த்து எனக்கே ஒரு நியாய புத்தி இருக்கும் தானே?”

 எப்படித்தான் இப்படி பிறந்த வீட்டை பேச முடிகிறதோ வைசாலி எரிச்சலாக கமலதாவை பார்க்க, “வைசாலி” அறைக்கு வெளியே நின்று அழைத்தான் சித்தார்த்தன்.

“இதோ வரேன்” வைசாலி வெளியே போகும் முன்பே அவன் அறைக்குள் வந்திருந்தான். “நம்முடைய ரூம் எது வைசாலி? இதுவா?” கண்களால் அந்த அறையை சுற்றி பார்த்தபடி கேட்டான்.




” இது அப்பா அம்மா ரூம், வைசாலி ரூம் அங்கே ,ஆனால் நீங்கள் இங்கெல்லாம் தங்கி கஷ்டப்பட வேண்டாம் தம்பி” சுமலதா பரிவாய் சொல்ல,

” இதில் என்ன கஷ்டம் அண்ணி? நம் வீட்டில் நாம் தங்கப் போகிறோம். வைசாலி நீ நம்முடைய ரூமை காட்டு.வா…” வைசாலி முகம் மலர்ந்தது. சுமலதாவின் முகம் சுருங்கியது.

“அத்தை இன்று அதிகாலையிலேயே எழுந்தது தலைவலி மண்டையை பிளக்கிறது. சூடாக ஒரு கப் காபி தருகிறீர்களா?” மாமியாரிடம் கேட்டான் சித்தார்த்தன்.

 வாயெல்லாம் பல்லானது தேவகிக்கு. “இதோ ஐந்தே நிமிடத்தில் கொண்டு வருகிறேன் தம்பி, நீங்க ரூமில் ரெஸ்ட் எடுங்க “

திரும்பி செல்லும் கொழுந்தனின் முதுகை நம்ப முடியாமல் பார்த்திருந்தாள் சுமலதா. அவர்கள் திருமணம் முடிந்த அன்று சந்திரகுமார்  ஒரு மணி நேரம் இங்கே இருப்பதற்கே எவ்வாறு முகத்தை சுளித்திருந்தான்? அந்த அண்ணனுடைய தம்பி தானா இவன்?

” நைஸ் ரூம் “அறையை பாராட்டிய படி கட்டிலில் அமர்ந்தான் சித்தார்த்தன்.

” நீங்கள் இன்று இங்கே தான் தங்கப் போகிறீர்களா? “வைசாலி இன்னமும் நம்ப முடியாமல் கேட்டாள்.

“இல்லையே இன்னமும் ஒரு வாரத்திற்கு இங்கேதான் ஸ்டே” சொன்னபடி கைகளை தலைக்கு பின்னால் வைத்துக் கொண்டு கட்டிலில் மல்லாந்தான். “மாப்பிள்ளை விருந்தெல்லாம் உங்க வீட்டில் கொடுக்க மாட்டீர்களா? என்னடா இது அநியாயமாக இருக்கிறது?” சித்தார்த்தன் கேட்ட விதத்தில் வைசாலிக்கு புன்னகை வந்தது.

“ஐயோ இப்படி விருந்திற்கு ஆளாய் பறப்பவரை ஒரு வாரம் வீட்டில் வைத்துக் கொண்டு எப்படித்தான் சமாளிக்க போகிறோமோ?”கிண்டல் பேசியபடி அவனுக்கு ஏசியை ஆன் செய்துவிட்டு அறையை விட்டு வெளியேறினாள்.

தூரத்து சொந்தங்கள் ஹோட்டலில் சாப்பிட்டு முடித்ததுமே விடை பெற நெருங்கிய சொந்தங்கள் வீடு வரை வந்து விட்டு ஒவ்வொருவராக கிளம்பி கொண்டிருந்தனர்.

“நீயும் காலில் வெந்நீரை ஊற்றிக் கொண்டு இப்போதே கிளம்பினால் எப்படி சுமா? வைசாலிக்கு செய்ய வேண்டிய சடங்குகள் இருக்கிறதே?” அம்மா அடுப்படிக்குள் சுமலதாவிடம் கேட்டுக் கொண்டிருந்தாள்.

“இரண்டு நாட்கள் இருந்து விட்டுப் போயேன் சுமா” அக்காவிடம் சொன்ன வைசாலி “என்ன சடங்குகள் அம்மா?” என்றாள் அம்மாவிடம்.

தேவகி திணறலாய் பார்க்க சுமலதா தங்கையை மேலும் கீழும் பார்த்தாள் “உனக்குத் தெரியாதாக்கும்?”

“ஏய் அவள் சின்ன பொண்ணுடி, அவளுக்கு என்ன தெரியும்?” தேவகி பரிந்து வர, “மக்கு அம்மா இந்த காலத்தில் யாருமே சின்னவர்கள் கிடையாது. ஒரு ஸ்மார்ட்போன் போதும் அவர்கள் சிறுபிள்ளைத்தனத்தை துடைத்தெடுக்க… ஏய் வைஷு உன்னுடைய ஃபர்ஸ்ட் நைட் பத்தி அம்மா பேசுறாங்க” சுமலதா பளிச்சென போட்டு உடைக்க வைசாலியின் முகம் சிவந்தது.

 இதையா பேசிக் கொண்டிருந்தார்கள்? இப்போது அவளுள் ஒருவித பதட்ட உணர்வு. இல்லையே… இது இப்போது வேண்டாமே… மன ஓட்டத்திற்கு இதழ் தானாக அசைந்து விட்டது போலும். 

“என்னடி வேண்டாமா?” சுமலதா தங்கையின் தோளை தன் தோளால் இடித்தாள். வைஷாலி திணறினாள்.

” சித்தார்த்தை விருப்பப்பட்டு தானே கல்யாணம் பண்ணிக் கொண்டாய்?” சுமலதாவின் கண்கள் வைசாலியை ஊடுருவ முயன்றன.

அக்காவிற்காக, அப்பாவிற்காக… இரு குடும்பங்களுக்குமாக என ஏதேதோ காரணங்களுக்காக இந்த திருமணத்திற்கு சம்மதித்திருந்தாலும் இவர்கள் இருவருக்குமான குடும்ப வாழ்வு என்று வரும்போது வைசாலியின் மனம் பின்னடையவே செய்தது. இதைப்பற்றி சித்தார்த்திடம் பேச வேண்டும் என்று எண்ணிக் கொண்டே இருந்தவள் எப்படி பேசுவது என்ற தயக்கத்துடன் தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தாள்.

இன்று காலை தானே அவன் கையால் தாலி கட்டிக் கொண்டு மனைவியானேன்! இரவிலேயே இதெல்லாம் எப்படி? வைசாலிக்கு இந்த சடங்கு சம்பிரதாயங்களின் மீது மிகுந்த கோபம் வந்தது.

இப்போதெல்லாம் வருடக் கணக்கில் காதலித்து விட்டு ஒத்துவரவில்லை என்று பிரிந்து விடுகிறார்கள், ஆனால் இன்னமும்  இது போன்ற சில பழமையான குடும்பங்கள்  அறிமுகமற்ற இருவருக்கு காலை திருமணம் இரவு தாம்பத்தியம் என்ற அர்த்தமற்ற ஏற்றுக்கொள்ள முடியாத சட்டங்களை ஏன் தான் வைத்துக் கொண்டுள்ளனரோ?




 வைசாலியின் மனது அந்நேரத்தில் பெண்ணியம் புரட்சிகரமாக பேசியது. ஆனால் இதனை தாயின் முன்பு சொல்ல முடியாமல் விழித்திருந்தாள். முன்பே அம்மாவும் அப்பாவும் மகளுக்கு பொருத்தமான வாழ்வு தானா இது என்ற குழப்பத்தில் ஏற்கனவே இருப்பவர்கள். இப்போது போய் இந்த சடங்கு வேண்டாம் என்றால்…?

“என்ன சுமா இப்படி பட்டென்று போட்டு உடைக்கிறாய்? பாவம் வைசு விழிக்கிறாள் பார்!” தேவகி மகளின் கன்னத்தை பரிவுடன் வருட, தங்கையின் விழித்தலை நம்ப தயாராக இல்லை தமக்கை.

 “நீங்கள் போய் பூக்காரரிடம் பேசுங்கள் அம்மா” தாயை அனுப்பிவிட்டு வைசாலியின் கைப்பற்றி இழுத்து அமர்ந்தாள்  சுமலதா.

” என்ன வைசு உனக்கும் சித்தார்த்துக்கும் இடையே எதுவும் பிரச்சனையா?” பரிவாகக் கேட்ட அக்காவின் குரலுக்கு பின்னால் பெருத்த ஆர்வம் இருப்பதை உணர்ந்து கொண்ட வைசாலி  தன் கையை விடுவித்துக் கொண்டாள்.

” அதெல்லாம் ஒன்றும் இல்லை அக்கா. அதிகாலையில் எழுந்தது, திருமணம், உறவினர்களோடு இருந்தது என்று உடம்பு மிகவும் டயர்டாக இருந்தது. சித்தார்த் கூட அப்படித்தான் சொல்லிக் கொண்டிருந்தார். அதனால் தான் இதையெல்லாம் நாளை பார்க்கலாம் என்று நினைத்தேன்”

 சுமலதாவின் கண்கள் இன்னமும் தங்கள் ஆராய்ச்சியை நிறுத்தவில்லை. “இன்று ஒரு நாளாவது தங்கிப் போகலாமே அக்கா”  பேச்சை மாற்றினாள் வைசாலி.

“இங்கெல்லாம் எங்களுக்கு  சரிப்பட்டு வராது. அவர் என்னை ரொம்பவே தேடிக் கொண்டிருக்கிறார்”

” யார் அத்தானா?”

ஆமாமென்று தலையசைத்த சுமலதா அனாவசியமாக சுண்டுவிரல் நகத்தை கடித்து துப்பிக் கொண்டிருந்தாள்.

” அத்தான் எதற்கு உன்னை தேடுகிறார்?”

” போடி இதையெல்லாம் கேட்டுக் கொண்டு…”தங்கையின் கன்னத்தில் குத்திய சுமலதா “அதற்குத்தான்” என்றாள் கண்களை கொஞ்சம் சொருகவிட்டு…

வைசாலிக்கு புரியவில்லை “என்னடி விழிக்கிறாய்? உங்கள் திருமண பிரச்சனையில் நான் கொஞ்ச நாட்கள் இங்கேயே தங்கி விட்டேன். பிறகும் இந்த திருமண வேலை அலைச்சல்கள் என்று ஒரு இடத்தில் நிற்க முடியாமல் அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் வரை ஆகிவிட்டது. அதனால்தான் அவர் இன்று இரவு நம் வீட்டிற்கு வந்தே ஆக வேண்டும் என்று சொல்லிவிட்டார்”

 அக்காவின் கிசு கிசு பேச்சுக்கு வைசாலி வேகமாக எழுந்து விட்டாள். அடக் கடவுளே இதைத்தான் இவ்வளவு நேரம் கொஞ்சி கொஞ்சி சொல்லிக் கொண்டிருந்தாளா? தலையில அடித்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது  அவளுக்கு.

“அம்மா தாயே நீ கிளம்பு, இங்கே இருக்காதே” ஒரு மாதிரி அசூசையுடன் அக்காவை பிடித்து அறைக்கு வெளியே தள்ளிய பிறகுதான் அவளுக்கு ஆசுவாச மூச்சு வந்தது. என்ன பெண்ணோ இதெல்லாமா வெளியே பேசிக் கொண்டிருப்பாள்!

“இந்த சுமா எதற்காக இப்படி வீட்டிற்கு போக பறக்கிறாள்?” என்ற தாய் தந்தையின் பேச்சுக்கு மனதிற்குள் “அவள் கிளம்பிய பிறகு தான் இங்கே காத்து நன்றாக வருகிறது” என்று சொல்லிக் கொண்டாள் வைசாலி.

 ஆனால் அன்று இரவு சித்தார்த்தன் இதே கேள்வியை அவளைப் பார்த்து கேட்டபோது பதில் சொல்ல முடியாது ஒரு மாதிரி விழித்து நின்றாள். 




What’s your Reaction?
+1
50
+1
25
+1
3
+1
3
+1
1
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!