Serial Stories கடல் காற்று

கடல் காற்று-2

(2)

இப்போது காற்றில் சிறிது கடலின் குளுமை சேர்ந்திருந்த்து.நாசியை இழுத்து முகர்ந்து கொண்டாள் .காற்றில் லேசான உப்பு வாடை போன்ற பிரமை தோன்றியது.

” எங்கூட என்வீட்ல வந்து தங்கிக்கோ தாயி. உன் வேலை முடியுற வரைக்கும் .அதுதான் உனக்கு பாதுகாப்பு ” என்றாள்
ரோசம்மா. அதுதான் அந்த பெண்ணின் பெயர் .

அந்த ஊரிலேயே சற்று அதிகம் படித்த பெண்களுள் அந்த பெண்ணும் ஒருத்தி. பத்தாவது வரை படித்துள்ளதாக பெருமையுடன் கூறினாள் .

ரோசம்மா சொன்னது போல் அவளுடன தங்குவதுதான் அவளுக்கு பாதுகாப்பாக இருக்க கூடும் .ஆனால் பாதுகாப்பாக இருந்து கொள்ள அவள் இங்கே வரவில்லையே.

அவள் எண்ணம் ஈடேற வேண்டுமாயின் அவள் அந்த சிங்கத்தின் குகைக்குள்ளேதான் தங்கியாக வேண்டும் .அதுதான் முடிவென்றாலும் அந்த முடிவு அவள் வயிற்றில் புளியை கரைத்தது.

முதன் முதலாக அந்த முரடனை சந்தித்த தினம் இதோ இப்போது சற்று முன்தான் போல் , மனத்திரையில் ஓடியது.

அன்று அவர்கள் பத்திரிக்கை க்காக ஒரு வெற்றி பெற்ற பெண் தொழிலதிபர் ஒருவரின் பேட்டிக்காக அந்த பெரிய ஹோட்டலுக்கு சென்றிருந்தாள்.அப்போது காலை ஏழு மணியிருக்கும்.அப்போதுதான் அவருக்கு நேரமிருப்பதாக அந்த தொழிலதிபர் அந்த நேரம் கொடுத்திருந்தார் .

லிப்ட்டில் ஏறி மூன்றாவது மாடியில் இறங்கினாள் .அந்நேரத்திற்கு அங்கே அதிக நடமாட்டமில்லை. லிப்ட்டிலிருந்து வெளியே வந்து அறை எண்ணை பார்த்தபடி இருந்த போது ,அரிகிலிருந்த அறைக்கதவு அவசரமாக திறக்கப்பட்டு அந்த பெண் வெளிப்பட்டாள் .

வேகமாக லிப்ட்டினுள் நுழைந்து கொள்ளும் நோக்கத்தில் நடந்தாள் அந்த பெண் ்இவளை எங்கேயோ பார்த்திருக்கிறோமே? யோசித்தாள் .

லிப்ட்டின் வாயிலில் இவளை பார்த்ததும் ஒரு கணம் தயங்கினாள் அவள் .அதற்குள் அவள் வெளியேறிய அறையிலிருந்து புயல் போல வெளி வந்தான் அவன் .

” எங்கேடி போகிறாய் ?” அவள் கைகளை பற்றி இழுத்தான்.

” என்னை விடு ..” அவனை தள்ள முயன்றாள் .

அவள் கைகளை அப்படியே பின்புறமாக மடக்கி இழுத்து பிடித்தான் .அவள் வலியில் முனகினாள் .

” ஏய. …என்ன இது ? விடுங்க அவளை …”

இப்போதுதான் அவளை திரும்பி பார்த்தான் .ஒரே நொடி அவளை முழுவதுமாக அளந்தவன் கண்கள் ஜொலித்தன.

” ம்…” என கேள்வியோடு இவளை பார்த்தவன் இடைப்பட்ட சிறு தடும1ற்றத்தில் அவனிடமிருந்து விடுபட முயன்றவளை மேலும் அழுத்தி பிடித்தான்.

ஷார்ட்ஸ் எனப்படும் முக்கால் பேன்ட்டிலும் , பனியனிலும் இருந்தவன வாயிலிருந்த சிகரெட்டை கைக்கு மாற்றினான் .




,” என்ன மிஸ்டர் ஒரு பப்ளிக் பிளேசில் ஒரு பொண்ணுகிட்ட இப்படியா நடந்துப்பீங்க ? விடுங்க அவளை ” கோபம் கொப்பளித்தது இவள் குரலில் .

” ஓ..ம்ஹீம் …” என கதை கேட்கும் பாணியில இவளிடம தலையசைத்தவன் கையிலிருந்த சிகரெட்டை சுட்டு விடுவான் போல் அந்த பெண்ணின் கையருகே கொண்டு சென்றான் .பார்வை இவள் முகத்தில் .

பதறி தன கைகளை அந்த பெண் லூசாக்க அவள் கையிலிருந்த எதையோ பிடுங்கி தன பாக்கெட்டினுள் போட்டுக்கொண்டு அவளை விடுவித்தான் .

அவள் அவசரமாக லிப்ட்டினுள் நுழைந்து கீழே போய்விட்டாள் .இரண்டே நிமிடங்களில் நடந்து விட்ட இந்த நிகழ்வுகளில் இவள் அதிர்ந்து நிற்கிறாள்.

சிறு பாதிப்புமற்று ஒரு கேலி புன்னகை யுடன் இவளை பார்த்தவன் நெற்றியில் ஸ்டைலாக ஒரு சல்யூட் இவளுக்கு வைத்து விட்டு , அறையினுள் சென்று கதவை மூடிக் கொண்டான் .

திடீரென பஸ்ஸில் பிரேக் போடப்பட முன் சீட்டில் மோதிக் கொண்டாள் .பழைய நிகழ்வுகளிலிருந்து மீண்டு வந்தாள்.அன்று அவனிடம் மாட்டிக் கொண்ட பெண் ஒரு கால்கேர்ள் .அவளை ஒரு பத்திரிக்கை பேட்டிக்காக முன்பே இவள் சந்தித்திருந்தாள் .

அப்போது அவசரத்தில் நினைவு வராது , பின்பு நினைவு வந்து அந்த பெண்ணின் போனில் தொடர்பு கொண்டு கேட்ட போது அவள் ஓவென அழுதாள் .

அவனுடன் ஒரு நாள் இரவை கழிக்க அழைத்ததாகவும் , வந்தவளிடம் இரவு முழுவதும் மிருகத்தனமாக நடந்து விட்டு அதனை போனில் வீடியோ வேறு எடுத்ததாகவும் , காலை அவன் உறங்கிக் கொண்டிருக்கையில் அந்த போனை தூக்கிக் கொண்டு தான் ஓடி வந்தபோது ,பின்னாலேயே வந்து அவன் போனை பிடுங்கி சென்று விட்டான் என புலம்பினாள் .

ச்சீயென்றானது இவளுக்கு ..இப்படி குரூர புத்தி படைத்த ஜென்மங்களும் இருக்கின்றனவே..

அப்படிப்பட்டவனுடன் அவன் வீட்டிலேயே தங்க வேண்டுமென நினைக்கும் போதே படபடத்து வேர்த்தது.

ஆனால்….மென்சிரிப்புடன் நினைவில் வந்தாள் லாவண்யா.கலங்கிய கண்களுடன் செண்பகமும் .

பஸ்ஸின் படிக்கட்டில் இறங்கி நிற்கும் போது  ” அந்த பெரிய மனிதர்கள் வீட்டிற்கு எப்படி போக வேண்டும் !” தான் இவ்வளவு சொன்ன பிறகும் தன்னிடம் விசாரிக்கும் பெண்ணை நம பாமல் வெறித்தாள் அந்த ரோசம்மா.

” தோப்பு வீட்டிற்கு இரவு  எட்டு  மணிக்கு வாங்க.அவரை பார்க்கலாம் ்” அந்த தோப்பு வீட்டு பெண் யாருக்கோ நேரம் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

திரும்பி பார்க்கையில் இடை தாண்டி நீண்டிருந்த அவளது இறுக்கமான பின்னலும் , இடையில் பளீரிட்ட வெண் இடையும் , வடிவான பின்புறங்களுமே கண்ணில் பட்டன. இவையே அவள் நல்ல அழகியென பறைசாற்றின.

இவளுடனே சென்றாலென்ன …? அந்த பெண்ணின் புறமாக நீளத் தொடங்கிவிட்ட பாதங்கள அந்த ரோசம்மாவால் பிடித்திழுக்க்ப்பட்டது.

” எங்கே போற ? அவளை பற்றி அவ்வளவு சொல்றேன்.திரும்ப அவள் பின்னால் போறீயே ? ,”
குறைபட்டாள் .

” நான் பத்திருக்கை நிருபர் அம்மா.எல்லா வகை பெண்களுடனும் நான் பழகத்தான் வேண்டும் “

” சரி விடு…நான் அந்த பெரிய விட்டையே காட்டுறேன் .இதுக்கு நீ அங்கேயே போயி இரு…”

இதோ அந்த பெரிய வீட்டு வாசலில் நிற்கிறாள் .ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்த பழவேற்காடு புலிகாட் ஆக இருக்கும் போது ஏதோ ஒரு ஆங்கிலேய பிரபு கட்டியதாக இந்த வீடு இருந்திருக்கும் .




பெரியதாக அரண்மனையை தோற்றத்தில் எட்ட முயன்றிருந்த்து. பரந்து கிடந்த முன்புற மைதானத்தில் ஏதேதோ காய்ந்து கொண்டிருக்க  , நிறைய பெண்கள் சுறுசுறுப்பாக அவற்றை கிளறவும்  , காய வைக்கவுமாக இருந்தனர் .

காற்றில் பரவிய சிறு நாற்றத்திற்கு அங்கே காய்ந்து கொண்டிருந்த மீன்கள்தான் காரணமென்று ஊகித்து கொண்டாள் ்அவை விதவிதமான வடிவங்களில் இருந்தன.

” யாரைங்க பார்க்கனும் ?,” கண்களை சுருக்கியபடி கேள்வி கேட்ட அந்த கரு நிற பெண் அங்கிருந்த பெண்களுக்கு தலைமை போல் தோற்றமளித்தாள் .

” ஐயாவை பார்க்கனும் “

” பெரிய ஐயாவையா ? சின்ன ஐயாவையா ?”

இவள் யோசிக்கையிலேயே…

” எக்கோவ் …நல்லா பளபளன்னு வெள்ளி சிலையாட்டம் மின்னுது பொண்ணு .நம்ம சின்னய்யாவைத்தான் பார்க்க வந்திருக்கும் ” சிறிய மீன்களை பிரித்து கூடையில் அள்ளி தூக்கி இடுப்பிலேற்றியபடி குரல் கொடுத்தாள் ஒரு குறும்புகார பெண் .

” ஆமாங்க்க்கா…பார்த்து பதனமா உள்ளாற உட்கார வைங்க .ம்…இப்படி பளபள பட்டாம்பூச்சிங்க சுத்தும்போது  , இந்த காஞ்ச கருவாடுங்க ஐயா கண்ணுல படுமா என்ன !” ஏக்க பெருமூச்சு விட்டாள் வேறொருத்தி.

தொடர்ந்து சில்வண்டின் ரீங்காரமாக சிரிப்பு சத்தம் 

.” சை ..பொம்பளைங்களாடி நீங்களெல்லாம் ? வெட்க கெட்ட ஜென்மங்களே ..வாயை மூடுங்கடி ” அந்த தலைமை பெண் அதட்டினாள் .

உடல கூச அவர்களை முறைத்தபடி ” நான் பெரிய்ய்யாவைத்தான் பார்க்க வந்திருக்கிறேன் ” என்றாள் .

” பெரிய்ய்யா இப்போ வர்ற நேரந்தாங்கோ .அதோ அங்கன கிடக்கிற பெஞ்சில உட்காருங்க ” சொன்ன கையோடு கருவாடை பிரிக்க போய்விட்டாள் அந்த தலைமை.




ஒரு வேளை வயிற்றுப்பாட்டிற்காக உயிர் கொடுத்து  உழைக்கும் பெண்கள் ்கொஞ்சம் மினுமினுவென கண்களில படுபவன் அவர்களுக்கு ஹீரோ .அவன் அவர்கள் முதலாளி என்பது கூடுதல் தகுதி.

அந்த பெண்களின் கேலி பேச்சிற்காக தனக்குள் சமாதானம உண்டாக்கி கொண்டு அமர்ந்தாள் அவள் .

பத்திரிக்கை விசயமாக வந்திருப்பதாக கூறி அந்த பெரிய்ய்யாவிடம் இங்கே தங்க அனுமதி வாங்கும் எண்ணத்தில் இருந்தாள் அவள் .

ஏனெனில் முன்பே இரண்டு முறை பார்த்திருந்தாலும் அந்த சின்ன ஐயாவிற்கு அவளை அடையாளம் தெரியாதென்றே எண்ணினாள் .

” பெரிய்ய்யா வருகிறார் ” சிறு பரபரப்பு.அங்கே வேலை பார்ப்பவர்களிடம் .வேலை சிறிது துரிதமாக்கப்பட்டது.

க்ரீய்ச் ்..என்ற சத்தத்தோடு சக்கரம் உருளும் ஓசை கேட்டு திரும்பி பார்த்தாள் .சக்கர நாற்காலியில பெரிய ஐயா. கை , கால்கள் சுவாதீனம் இல்லாததால் …

ஒரு கையும் , காலும் வெளிப்புறமாக வளைந்திருக்க வாயும் , கழுத்தும் கூட ஒரு பக்கமாக கோணியிருந்த்து.
கரேரென்ற நிறத்துடன் , மொட்டை தலையுடன்  , அந்த சக்கர நாற்காலி நிரம்பி வழிய அமர்ந்திருந்த அந்த ஐயா அடிவயிற்றில் குளிரூட்டினார் .

அவரை நாற்காலியில் வைத்து உருட்டியபடி வந்த்து அவர மனைவியாக இருக்க வேண்டும் .அப்படியே அவருக்கு எதிர்புறமாக மஞ்சள் கிழங்கை சீவி வைத்தது போன்ற நிறத்துடன் பளிச்சென்றிருந்தாள் .வாய் வெற்றிலை மென்றபடி செவேலென்றிருந்த்து.

” ஐயா இவுக சென்னையிலிருந்து உங்கள பாக்க வந்திருக்காக ,” இவளை கை காட்டினாள் அந்த தலைமை பெண் .

தனது மொட்டையை தடவியபடி திரும்பி இவளை அந்த பெரிய்யயா பார்த்த பார்வையில் கூர்மையான கத்தியொன்று அடிவயிற்றில் சொருகிய உணர்வடைந்தாள்.




What’s your Reaction?
+1
14
+1
13
+1
2
+1
1
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!