Serial Stories யுகம் யுகமாய்..! 

யுகம் யுகமாய்..! -3

3

“அப்ரிஸியேஷன்ஸ், வர்ஷா! விதின் அ வீக் யூ ஸால்வ்ட் அ நாட்டி இஷ்யூ” என்றார் ப்ராஜக்ட் ஹெட்.

“தாங்க் யூ வில்லியம்ஸ்” என்றாள் வர்ஷா.

“இன்றைக்கு மீட் முடிஞ்சு ப்ருத்வி வந்திருவான். க்ளையண்ட் ஆஃபீஸில் அவனுக்குத் தாமதமாகிவிட்டது. உங்கள் கெட்டிக்காரத்தனமான சொல்யூஷனை அவனும் சிலாகித்தான். நாளையிலிருந்து நீங்க அவனுக்குத்தான் ரிப்போர்ட் பண்ணணும்” என்றதும் வர்ஷாவின் மனத்தில் இருள் சூழ்ந்தது. 

அது முகத்திலும் பிரதிபலித்துவிட்டதோ? 

“எனி ப்ராப்ளம், வர்ஷா? ப்ருத்வி இஸ் அ குட் ஹெட். அதோடு, நல்ல டீம் ப்ளேயர். பொறாமை எல்லாம் அறவே கிடையாது” என்றார் வில்லியம்ஸ், அவளை உற்று நோக்கியவாறே.

“இட் இஸ் நாட் தட்” என்றாள் வர்ஷா.

“ஒரு வாரமாய் இரவு-பகல் பாராமல் வேலை செய்திருக்கிறாய். பெர்ஹாப்ஸ் யூ ஆர் டயர்ட். இன்று மாலை முழுக்க ஓய்வெடுத்துக் கொள். ஸான் ஜோஸைச் சுற்றிப் பார். யூ கான் டேக் டெய்ஸி வித் யூ இஃப் யூ லைக்.”

“யெஸ், ஐ வுட் லைக் தட் வெரி மச். தாங்க்ஸ் அ லாட் ஃபார் ஸ்பேரிங் ஹர்” என்றாள் வர்ஷா நன்றியுடன்.

“கொஞ்சநாளாய் உன்னைக் கண்ணிலேயே காணும், ஐ மிஸ்ட் யூ” என்றாள் டெய்ஸி.

“நானும்தான், டெய்ஸி” என்றாள் வர்ஷா. 

டெய்ஸி “கம் ஆன். உன்னால் எனக்கும் எதிர்பாராதவிதமா ஆஃப் கிடைச்சிருக்கு. லெட் அஸ் எஞ்சாய் த ஈவினிங்” என்று அழைத்துப் போனாள்.

“இது உன்னுடைய உழைப்புக்கு கிடைத்த பரிசு இல்லையா?” என்றாள் வர்ஷா.

பலநாள் தோழிகள் போல் இருவரும் கைகோத்துக் கொண்டு ஸான் ஜோஸைச் சுற்றினார்கள். ஸாம்ஸங், பேபால் முதலிய பன்னாட்டு நிறுவனங்களின் தலைமையகங்களைப் பார்த்தார்கள். ஜப்பான் டவுனில் நிதானமாக நடந்தார்கள். சான் ஃப்ரான்ஸிஸ்கோ பே கடற்கரையில் நின்று அஸ்தமனத்தை வேடிக்கை பார்த்தார்கள். இரவு கவிந்ததும் ஒரு ஹோட்டலின் முப்பதாவது மாடி ரூஃப்டாப் ரெஸ்டாரண்ட்டிலிருந்து “ஸ்கை-லைன்” எனப்படும் நகரக் கட்டிடங்களின் நிழலுருவை ரசித்தார்கள்.

சூப்பை அருந்தியதும் வர்ஷாவின் கைபேசி மணியடித்தது. “வில்லியம்ஸ் ஏதோ வாட்ஸ்-அப் அனுப்பியிருக்கார்” என்று கைபேசியை வருடித் திறந்தாள். “ஓ! என்னைப் புதிய ப்ராஜக்டுக்கு மாற்றியிருக்காங்க” என்றவள் தொடர்ந்து செய்தியை உரக்கப் படித்தாள். 

“இந்தியாவில் இருக்கற ஒரு மலைமீது அமையப்படவிருக்கிறது இண்டோ-யூ எஸ் கொலாப்ரேஷன் ரோபாட்ஸ் மானுஃபாக்சரிங் யூனிட். கலர் ஐடெண்ட்டிஃபிகேஷன் அண்ட் அஸிஸ்டென்ஸ் ஃபார் ப்ளைண்ட்னெஸ். உலகம் எத்தனை முன்னேறியிருக்கிறது, பார்த்தாயா டெய்ஸி? இனி பிறவிக் குருடர்களுக்கும் அஸிஸ்டென்ஸ் கிடைத்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தைப் பெருமளவு உயர்த்தலாமே…” 




பரவசமாய்ச் சொன்ன வர்ஷாவின் பேச்சுத் தடைப்பட்டது. அவள் மனக்கண்ணில் கண்ணில் வெட்டு விழுந்த ஒரு குரூர முகம் தெரிந்ததுதான் காரணம்.

“அவ்வளவு சந்தோஷமா உனக்கு, சமூக அக்கறையுள்ள வேலைகளைச் செய்வதில்?” டெய்ஸியின் பேச்சில் சட்டென்று சுயநினைவுக்கு வந்து 

“கண்டிப்பாய். நான் ஏ ஐ தேர்ந்தெடுத்ததே அதற்குத்தானே!” என்றாள் வர்ஷா.

தொடர்ந்து ஃபாக்டரி அமையவிருந்த மலைப்பகுதியின் வீடியோவை இயக்கினாள் வர்ஷா. அதைக் காணக் காண மீண்டும் அவளுக்குத் தலைசுற்றியது. மயக்கம் வரும்போலிருந்தது. டெய்ஸியும் அவளும்… அந்த ரெஸ்டாரண்ட்டில் இல்லாமல் அந்த மலைப்பகுதியில் உலாவுவதுபோல் பிரமை உண்டானது.

‘இந்தப் பகுதி முழுவதையுமே பார்த்திருக்கிறேன். அதோ, அந்த அருவியில் குளித்திருக்கிறேன். இங்கேதானே, பட்டாம்பூச்சியைப் பிடிக்காதே என்று டெய்ஸியிடம் சொன்னேன்? சே, டெய்ஸியிடம் எப்படிச் சொல்லியிருக்க முடியும்? பட்டாம்பூச்சி… பாம்பு… பாம்பு! நல்லவேளை, செத்துக் கிடக்கிறது! அதோ, அம்பெய்தவன் கூடத் தெரிகிறானே!’

இரு ஆட்டக்காரர்களுக்கிடையில் பந்து போய் வருவதுபோல, கடந்தகாலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையில் திண்டாடினாள் வர்ஷா.

“டெ… டெய்ஸி! என்னைப் பிடிச்சுக்கயேன்! மயக்கம் வருது!” என்றவளைத் தாங்கிய டெய்ஸி வர்ஷா பார்த்த திசைப்பக்கம் திரும்பினாள்.

டின்னருக்காக அதே ரெஸ்டாரண்ட்டின் உள்ளே நுழைந்துகொண்டிருந்தான் ப்ருத்வி.

—————————-

சோணைக் குழலியின் ஜாதகத்தைக் கண்டதும் குருவின் முகம் ஏன் சட்டென்று வாட வேண்டும்? ஒருநொடியில் சமாளித்துக் கொண்டுவிட்டாராயினும் இதை யௌவனகாந்தி கவனித்துவிட்டாள்.

“குழந்தைக்குப் பெரிய தேசத்தின் சக்ரவர்த்தினியாக அமரும் பாக்கியம் இருக்கிறது. மணாளனோ, அவள் மனங்கவர்ந்த மன்மதனே! இந்தப் பூமியையே பாலிக்கும் வீரமும் விவேகமும் உள்ளவன். எனினும், திருமணம் விக்னமின்றி நடைபெற அடுத்து வரும் சந்திர க்ரஹணத்தன்று துர்க்கைக்கு ஒரு சாந்தி ஹோமம் நடத்திவிடலாம். அதன்பின் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்வோம்” என்றார் குருநாதர்.

“அப்படியே, ஸ்வாமி! முதலில் வரனை முடிவுசெய்து கொள்ளலாம் அல்லவா?” – செங்கண்ணார் பணிவுடன் கேட்டார்.

“அது தேவர்களால் ஏற்கெனவே முடிவுசெய்யப்பட்டுவிட்டது. வரனே உன்னிடம் வந்து பெண்ணைக் கேட்பான். ஆனால், சந்திர க்ரஹணத்திற்குப் பிறகு திருமணம்  செய்ய வேண்டும். அதை மறந்துவிடாதே” என்று எச்சரித்தார் குருநாதர்.

எல்லோரும் அவரை வணங்கி வெளியே வந்தார்கள்.

“அப்பாடா, இப்போதுதான் நிம்மதியாயிற்று” என்றாள் பங்கயக்கண்ணி.

“இன்னும் சந்திர க்ரஹணத்திற்கு அறுபது நாட்களே உள்ளன. அதற்குள் திருமணம் முடிவாகி நடத்திவிட முடியுமா என்ன? இராஜகுடும்பங்கள் சேரும் வைபவம், இருநாடுகள் திரண்டு வரும் திருவிழா! எத்தனை ஏற்பாடுகள் செய்ய வேண்டும்?” என்று ஆனந்தமாய் மீசையை முறுக்கினார் செங்கண்ணார்.

‘பூமியைப் பாலிப்பவராமே? யார் அவர்? பூ…பா…’ பெயரை எண்ணவும் தயங்கி வெட்கத்தில் முகம் சிவந்தது சோணைக் குழலிக்கு. மனத்தில் ஒரு சந்திரமுகம் உதயமாகி ஒளிவீசியது.

யௌவனகாந்திக்கு மட்டுமே எதிர்காலமெனும் வானின் நிலவைப் பீடிக்க ராகு நெருங்குவதுபோல் தோன்றியது.

ஆசிரமத்திற்கு வெளியே அடர்ந்திருந்த புதரின் பின்னால் குதிரையில் அமர்ந்திருந்தான் பூபாலன். காகம் வலம் போயாயிற்று, கரிக்குருவி இடம் போயாயிற்று, நிறைகுடத்துடன் ஆதிவாசிப் பெண்ணொருத்தி கடந்து போயாயிற்று. நேரமாகிறது என்று அவன் மதி உணர்த்திற்று. பூபாலன் குதிரையிலிருந்து இறங்கி, அருகிலிருந்த பாறையை நோக்கிச் சென்றான்.

மேகமலைக் குன்றின் அரச குடும்பத்தினர் ஆசிரமத்திலிருந்து வெளிவந்துவிட்டார்கள். சோணைக் குழலியின் உடலில் ஒரு சிலிர்ப்பு உண்டாயிற்று. தன்னையறியாமல் பாறையிருந்த திசையில் திரும்பினாள். 

இருவர் விழிகளும் சந்தித்தன. பூபாலன் முகம் மலர்ந்தது. கரம் பாறையைச் சுட்டிக் காட்டியது. சோணைக் குழலி தலையசைத்தாள். 

அவ்வளவுதான்! குதிரையை அடைந்து, ஆரோகணித்து, பாய்ந்து சென்றுவிட்டான்.

“குழலி!” தந்தை அழைத்தார்.

“இதோ வந்துவிட்டேன் தந்தையே!” என்றாளானாலும், கால் தானாகப் பாறையை நோக்கி நடந்தது. அதில் ஒரு சித்திரம் வரைப்பட்டிருந்தது. ஒரு அருவி. அதனருகில் ஒரு வாள். அதைச் சந்திக்க வருவதைப் போல் வானில் விரைந்துவரும் மேகம்.

புன்னகையில் குழலியின் கன்னங்கள் குழிந்தன.

—————–




  “ஹாய், தாத்தா!” என்று உற்சாகமாய் அழைத்தவாறே தன் அபார்ட்மெண்ட்டினுள் நுழைந்தான் ப்ருத்வி.

“ஹாய்! வேலையெல்லாம் சரியா முடிஞ்சுதா? இப்போ உங்க ஆஃபிஸ் போயிட்டு வரியா?” என்று கேட்டார் தாத்தா.

“இல்ல தாத்தா! நேரம் ஆகிடுச்சேன்னு ஹோட்டல்ல டின்னர் முடிச்சுட்டு வந்துட்டேன். ஆச்சரியம் பாருங்க, அங்கே டெய்ஸியும் எங்க ஆஃபிஸில் புதுசா ஜாயின் பண்ணிய பெண்ணும் இருந்தாங்க. அவங்களோடு சேர்ந்துதான் சாப்பிட்டேன்” என்றான் ப்ருத்வி.

“அப்படியா? யாருப்பா அந்தப் புதுப் பெண்?”

“தமிழ்தான் தாத்தா! இங்கே பிறந்து வளர்ந்தவ. வர்ஷான்னு பேரு. ஏ ஐ ல எக்ஸ்பர்ட்! ஆனா நேச்சுரல் இண்டலிஜன்ஸ் அவ்வளவு கிடையாது! இந்தியாவில் எங்க புதிய ஃபாக்டரி அமைவிடத்தைப் பார்த்துக்கிட்டிருந்தாங்க. என்னைப் பார்த்ததும் கைகால் எல்லாம் நடுங்குது! செந்தமிழ்ல புரியாம உளர்றா! அப்புறம் சமாளிச்சுக்கிட்டா. கொஞ்சநாளா அவ இராஜா-இராணிப் படமா பார்த்திருக்கா போல!” என்று சிரித்தான் ப்ருத்வி.

. “ஆனா, பளிச்சுன்னு அழகா இருக்கா. மனதில் மின்னல் வெட்டற மாதிரி” என்றான் வெளிப்படையாக. தாத்தா அவனுக்கு நண்பனைப் போல.

“அதுக்குள்ளயா லவ் வந்திருச்சு உனக்கு? பார்த்துடா, ஏதாவது அரை லூசை லவ் பண்ணி வைக்கப் போறே!” என்று சிரித்தார் திருமுருக பாண்டியன்.

“அப்படியெல்லாம் இருக்க வாய்ப்பு இல்லை தாத்தா! இப்போ டெவலப்மெண்ட்ல இருக்கற ஒரு ஆப்ல ஒரு மாட்யூல் டிசைன் பண்ணியிருக்கா பாருங்க, கண்ணில் ஒத்திக்கற மாதிரி! வேலை அழுத்தம் அதிகமாயிருச்சோ என்னவோ, பாவம்” என்றான் ப்ருத்வீ.

“நம்ம ஊரு பொண்ணு, நீ கொஞ்சம் பார்த்துக்கடா! சரி, இந்தியாவில் எங்கே அமையப் போகுது உங்க ஃபாக்டரி?” என்று கேட்டார் திருமுருக பாண்டியன்.

“ஏதோ மேகமலையாம்!”

“மேகமலையா? மே…க…” தடுமாறிக் குழறினார் திருமுருக பாண்டியன். விரல்கள் நடுங்கி, அவர் கையில் வைத்திருந்த சுவடிக்கட்டு கீழே விழுந்தது.

(தொடரும்)




What’s your Reaction?
+1
10
+1
9
+1
1
+1
1
+1
2
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
Kantha
Kantha
5 months ago

அருமை…கதையும் மொழிநடையும்

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!