Serial Stories எனக்கென ஒரு வானம் 

எனக்கென ஒரு வானம்-7

7

வைசாலி சித்தார்த்தை திருமணம் செய்யும் முடிவிற்கு வந்துவிட்டாள். முதல் காரணம் அக்கா சுமலதாவின் வாழ்க்கை.

“உன்னை மணம் முடிப்பதில் இருக்கக்கூடிய நன்மைகளை வீட்டினருடன் பகிர்ந்து கொண்டேன். அவர்களுக்கு அது மிகச் சரியாக பட உன்னையே மருமகளாக கொண்டு வந்து விட வேண்டும் என்ற வேகத்தில் அம்மா அப்பா அண்ணன் உன் அக்காவை நிர்பந்தித்திருக்கலாம். இது பெரிய பிரச்சனை அல்ல, நான் அவர்களிடம் பேசிக் கொள்கிறேன். உன் அக்காவிற்காக என நீ இந்த திருமணத்திற்கு சம்மதிக்க வேண்டிய அவசியம் இல்லை” அக்காவை பிணைக்கைதி ஆக்கியிருக்கிறீர்களே என்ற வைசாலியின் குற்றச்சாட்டிற்கு சித்தார்த் பதில் அளித்து விட்டான்.

அவன் எளிதாக சொல்லிவிட்டாலும் சுமலதாவின் வாழ்வு மிகக் கடினமானதாகவே வைசாலிக்கு தோன்றியது. அவர்கள் இருவரும் பேசி முடித்து கீழே இறங்கி வரவும் ஆவலோடு பார்த்தவர்களுக்கு  “எனக்கு கொஞ்சம் நேரம் கொடுங்கள். நான் யோசித்துச் சொல்கிறேன்” என்றாள் வைசாலி.

 அவ்வளவு நேரமாக மாடிக்கு அவர்கள் ஏறி சென்ற போது அங்கே இருந்த இறுக்கமான நிலைமை மாறி ஓரளவு இயல்பாகவே பேசிக் கொண்டிருந்தனர் அனைவரும். ஆனால் வைசாலியின் பேச்சை கேட்டதும் சட்டென எழுந்து விட்டனர். பாக்கியலட்சுமியும், கந்தவேலனும்.

” நீ யோசித்தே சொல்லும்மா, நாங்கள் பிறகு வருகிறோம்”கந்தவேலன் சொல்லிவிட்டு வெளியேற அவர்கள் பின்னாலேயே செல்லப் போன சுமலதாவை நிறுத்தினான் சந்திரகுமார்.

” நீ இங்கே இருந்து உன் தங்கையின் முடிவை தெரிந்து கொண்டு பிறகு வா சுமா” சாதாரணம் போல் சொல்லிவிட்டு போய் விட்டான். சுமலதா குற்றம் சாட்டும் பார்வையுடன் வைசாலியை பார்த்து நின்றாள்.

 

சித்தார்த்தே சொன்னாலும் அவன் குடும்பத்தினர் சுமலதாவை கிடைக்கும் நேரமெல்லாம்  வார்த்தைகளால் காயப்படுத்திக் கொண்டே இருப்பார்கள் என்று வைசாலிக்கு தோன்றியது. அவர்கள் சுமலதாவிற்கு கொடுக்கும் ஒவ்வொரு காயத்தின் பிரதிபலிப்பையும்  இங்கே வைசாலியின் தாயும் தந்தையும்தான் சுமக்க வேண்டியதிருக்கும். இது போன்ற ஒரு இணக்கமற்ற குடும்பச் சூழலை வைசாலி விரும்பவில்லை.

 அடுத்த காரணம் சித்தார்த்தின் வெளிப்படையான பேச்சு 

என்னால் என் மனைவியை சமாளித்து வாழ முடியவில்லை என்ற ஒப்புக் கொடுத்தல் சித்தார்த்தின் மீது கொஞ்சம் பரிதாபத்தோடு ஓரளவு திருப்தியையும் வைசாலிக்கு கொடுத்தது.மற்றபடி அவளுக்கு மணம் பேச பார்த்திருக்கும் மணமகன் என்ற முறையில் அவனிடம் குறையேதும் அவளால் காண முடியவில்லை.

மூன்றாவது காரணம் தங்கள் குடும்பத்தையே மதிக்காமல் இத்தனை வருடங்களாக அரச குடும்பத்தினர் போல் நடந்து கொண்டிருந்த சித்தார்த்தின் குடும்பத்தினர் இன்று தேவை என்று தங்கள் வீட்டு வாசலில் நின்றதையே பெரிய தெய்வச் செயலாக கருதினாள்.

ஒரு திருமணம் என்பது இரு குடும்பங்களின் இணைப்பு என்பதை சித்தார்த்தின் குடும்பத்திற்கு புரிய வைக்க கிடைத்த வாய்ப்பாக இந்த திருமணத்தை நினைத்தாள்.

தங்கையின் சம்மதத்தை சுமலதா அங்கே போய் சொன்ன ஒரு மணி நேரத்திலேயே கந்தவேலும் பாக்கியலட்சுமி கிளம்பி வந்து விட்டனர்.

நாள் நட்சத்திரம் சாஸ்திரம் சம்பிரதாயம் என்று சிறு குறையும் இல்லாமல் பார்த்து பார்த்து பேசிக் கொண்டிருந்தவர்கள் திருமணம்  குலதெய்வம் கோவிலில், சாப்பாடு ஒரு உயர்தர ஹோட்டலில் என்றது வைசாலியை அவ்வளவாக பாதிக்கவில்லை. லட்சங்களை கொட்டி ஆடம்பரமாக செய்யும் திருமணங்களில் அவளுக்கும் அவ்வளவாக அபிப்பிராயம் கிடையாது. தவிரவும் இது சித்தார்த்தனுக்கு இரண்டாவது திருமணம் என்பதும் அவள் மன மூலையில் வண்டலாய் தேங்கி கிடக்க, இந்த எளிமையான திருமணத்திற்கு தலையசைத்தாள்.

“அதிகபட்சம் என்னால் ஒரு வாரம் லீவ் எடுக்க முடியும். அதற்குள் திருமணம் சம்பந்தப்பட்ட எல்லா சடங்குகளையும் முடித்து விடுங்கள்” சொன்ன வைசாலியை அதிர்ச்சியாய் பார்த்தனர் கந்தவேலும்,பாக்கியலட்சுமியும்.

” நீ திருமணத்திற்கு பிறகும் வேலைக்கு போகப் போகிறாயா?” அதிர்ச்சியாய் கேட்ட பாக்கியலட்சுமிக்கு அழுத்தமாக தலையசைத்தாள்.

” நிச்சயம், இந்த காலத்தில் படிப்பும் வேலையும் பெண்களின் முதல் கணவன். என் வேலையை ஒரு நாளும் நான் விடப் போவதில்லை”

“எங்கள் வீட்டு மருமகள் வேறு இடத்திற்கு வேலைக்கு போனால்…” முணுமுணுத்த பாக்கியலட்சுமி கைப்பற்றி அழுத்தி அடக்கினார் கந்தவேலன். 

“உன் விருப்பம்தான்மா” 

அன்று இரவு அவளுடைய போன் சித்தார்த்தன் என ஒளிர்ந்ததைக் கண்டதும் வேகமாக எடுத்தவள் “என்னால் வேலையெல்லாம் விட முடியாது” என்றாள் வேகமாக.




“யார் வேலையை விடச் சொன்னது? உன் வேலை, உன் விருப்பம். நான் பேச அழைத்த விஷயம் வேறு” சித்தார்த்தன் நிதானமாக பேச 

நாக்கை கடித்துக் கொண்டவள் “சாரி” என்றாள்.

“அதேதான், சாரி என்ன கலரில் எடுக்கலாம் என்று டிஸ்கஸ் பண்ணவே அழைத்தேன்” என்றவனின் முகத்து புன்னகையை வார்த்தைகளில் உணர முடிந்தது.

“ஏதாவது லைட் கலர்” முணுமுணுத்தாள்

“லைட் கலர்சா? உனக்கு அடர்த்தியான வயலட் நிறம் தான் பிடிக்கும் என்று நினைத்தேனே, மிகவும் பிடித்த கலர் என்பதால் தானே உன் அம்மாவிடமிருந்து பிடுங்கி அன்று அந்த  சேலையை கட்டி இருந்தாய்?”

வைசாலி O வாக வாய் திறந்தாள். உண்மையில் அது தேவகியின் புடவைதான். ஆனால் அது எப்படி இவனுக்கு தெரியும்…?

“சேலையைத்தான் அம்மாவிடம் இருந்து வாங்கினாய், ஜாக்கெட்டாவது உன்னுடையதாக தைத்துப் போட்டிருக்கலாமே! அதையுமா அம்மாவிடம் வாங்கிக் கொள்வாய்?” அவன் கிண்டலை தொடர,

” ஜாக்கெட் என்னுடையதுதான்” ரோசத்தோடு இடைமறித்தாள்.

“ஓ… அப்போ புடவை உன் அம்மாவுடையதே தானா?”

 அடப்பாவி போட்டு வாங்கினானா? நாக்கை கடித்துக் கொண்டாள், “இந்தப் பேச்சு இப்போது எதற்கு? எனக்கு வயலட் கலரெல்லாம் பிடிக்காது” 

” ம்…பார்த்ததும் பெண் பிடிக்கவில்லை என்று திரும்பி போவதற்காக நீ எடுத்த முன்னேற்பாடா?” போனில் தான் பேசிக் கொண்டிருந்தனர்,ஆனாலும் தன் திட்டங்களை அம்பலப்படுத்திய முக பாவங்களை கைகளால் மூடிக்கொண்டாள் வைசாலி. 

அவள் ஆசுவாசமடைய சில நிமிடங்களை கொடுத்த சித்தார்த்தன் பிறகு மெல்ல “என்ன கலர்?” என்றான்.

” எனக்கு பேபி பிங்க் ரொம்ப பிடிக்கும் “அவளையறியாமல் விருப்பம் சொன்னது அவள் நாவு.

“அழகான நிறம்” மெச்சியவன் ஃபோனை கட் செய்தான்.

அடுத்த நிமிடமே உன்னுடைய ஆபீஸ் யூனிபார்ம்மெரூன் கலர் உனக்கு மிகுந்த பொருத்தம் என்று மெசேஜ் அனுப்பினான்.

எனக்கு அந்த கலர் பிடிக்காது என்று ஒரு முகம் சுளிக்கும் ஸ்மைலியை அனுப்பினாள். பதிலாக கண்களில் இதயம் வைத்து சிரிக்கும் ஸ்மைலியை அனுப்பினான்.

பிறகே உன்னை ஆபீஸ் யூனிஃபார்மில் அழகாக பார்த்து விட்ட பிறகு இந்த வயலட் நிற சேலை நாடகம் என்னை பாதிக்கவில்லை என்ற அவனுடைய உள் குறிப்பை உணர்ந்தாள். அவளை அறியாது மென் நகை ஒன்று அவள் உதடுகளில் வந்து அமர்ந்து கொண்டது.

 அக்கா சுமலதாவின் திருமணத்தின் போது எவ்வளவுக்கு எவ்வளவு கராராக நடந்து கொண்டனரோ அதற்கு முற்றிலும் மாறாக சுமுகமாக தளைந்து இறங்கி வந்து திருமண விஷயங்களை கந்தவேல் குடும்பத்தினர் பேச, முகுந்தன் குடும்பத்தினரும் மிக திருப்தி அடைந்தனர்.தனது இந்த திருமண முடிவு மிக சரியானதுதான் என தாய்,தந்தையின் மலர்வான முகத்தை பார்த்து மகிழ்ந்தாள் வைசாலி.

பெரிதான அதிருப்திகள் எதுவும் இன்றி சித்தார்த்தன் – வைசாலி திருமணம் இனிமையாக நடந்து முடிந்தது.




What’s your Reaction?
+1
45
+1
22
+1
3
+1
3
+1
1
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!