Serial Stories எனக்கென ஒரு வானம் 

எனக்கென ஒரு வானம்-6

6

“என்ன விஷயம்? சீக்கிரம் சொல்லுங்கள்” வெடுவெடுத்தவளுக்கு கையில் இருந்த ஜூசை நீட்டினான். 

“இதைக் குடித்து கொஞ்சம் குளிர்ச்சியாகிக் கொள். பிறகு பேசலாம்” 

 என் வீட்டிற்கு வந்து விட்டு என்னையே உபசரிப்பதை பார்… “அங்கே யாரும் நம்மை பேசுவதற்கு அனுமதிக்கவில்லை” குத்தலாய் அவனை பார்த்தாள்.

 அந்த உறுத்தல்தான் அவளுக்கு, அப்பாவின் மறுப்பை உணர்ந்தும் அவருக்கு மறுக்கும் நிலைநை அளிக்காமல் இங்கே இழுத்துக்கொண்டு வந்து விட்டானே என்ற எண்ணம்.

அதென்ன இவர்கள் வீட்டினர் எல்லோருக்கும் எங்களை பார்த்தால் அவ்வளவு இளக்காரமாக இருக்கிறதா? சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் பொம்மைகளா நாங்கள்? வைசாலியின் முகத்தில் முறைப்பு மாறவில்லை.

“திருமண வாழ்வு என்பது மிகவும் முக்கியமில்லையா வைசாலி? வாழ்நாள் முழுமைக்குமான நீண்ட பயணம் அல்லவா? இப்போதெல்லாம் ஆயிரம் காலத்து பயிர்கள் ஓரிரு வருடங்களிலேயே முறிந்து விடுகிறது. இனி ஒரு முறை என் வாழ்வில் அப்படி நடக்க கூடாது என்று நினைக்கிறேன். நாம் முன்பே தெளிவாக பேசிக்கொள்ள வேண்டாமா? அதனால்தான் பெரியவர்களை தாண்டி உன்னை அழைத்து வர வேண்டியதாயிற்று” சித்தார்த்தனின் பேச்சு வறண்டு ஒலித்தது.

உண்மை வருத்தம் தெரிந்த அவனது பேச்சில் வைசாலி அமைதியாகிவிட்டாள். சொல்லு என்பது போல் அவன் முகத்தை பார்த்து நின்றாள். 

மொட்டை மாடி குட்டை கைப்பிடி சுவரில் ஏறி அமர்ந்து கொண்ட சித்தார்த்தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து கர்சிப்பை எடுத்துக்கொண்டு அவசியம் இல்லாமல் நெற்றியில் இல்லாத வியர்வையை துடைத்துக் கொண்டான். நாவை நீட்டி உதட்டை வருடி ஈரப்படுத்தினான். அவனைப் போன்ற எந்த அவஸ்தைகளும் தேவையற்ற வைசாலி கைகளை கட்டிக்கொண்டு

சுவரில் லேசாக சாய்ந்தாற் போல் நின்று அவனை பார்த்திருந்தாள்.

“எனக்கும் மாயாவிற்கும் திருமணம் முடிந்து ஒரு  வருடம் சேர்ந்து வாழ்ந்தோம்.ஆனால் முதல் இரு மாதங்களிலேயே இந்த திருமணம் நீடிக்காது என்று எனக்கு தெரிந்து விட்டது.ஆனாலும் என் வரையில் சுமூகமாக வாழ்வை நீட்டிக்கவே விரும்பினேன். ஆனால் அவள் அப்படி நினைக்கவில்லை” சொல்லிவிட்டு வானை வெறித்தபடி நின்றிருந்தான்.

பட்டும் படாததுமான இந்த விளக்கங்கள் போதாது என்பது போன்ற நேர் பார்வையுடன் அவன் முகத்தை விட்டு பார்வையை அகற்றாமல் நின்றிருந்தாள் வைசாலி.

“மாயா இந்தக் காலத்து நாகரீக வாழ்வை லட்சியமாக வைத்திருப்பவள்.பாலே டான்ஸ் நன்றாக ஆடுவாள்.பல மேடைகளேறியிருக்கிறாள்.

அவளுக்கு எங்கள் குடும்பத்திற்கு ஒத்து வராத நிறைய ஆசைகள். அவற்றில் முக்கியமானது என்னுடைய பங்கு சொத்துக்களை நான் பிரித்து வாங்கிக்கொண்டு அவளுடன் அமெரிக்காவிற்கு போய் செட்டிலாகி விட வேண்டும் என்பது.அங்கேதான் அவளது திறமைக்கு எதிர்காலம் இருக்கிறதாம். எங்கள் திருமணம் நிச்சயமான நாளிலிருந்து இதைப் பற்றி கிண்டல் போல் அவள் பேசும் போதெல்லாம் நான் விளையாட்டுப் பிள்ளை என்று நினைத்திருக்கிறேன். ஆனால் திருமணம் முடிந்த இரண்டாவது நாளில் இதனை தீவிரமாக அவள் பேச நானும் தீவிரமாகவே மறுத்தேன். அன்றிலிருந்தே எங்களுக்குள் சண்டைகள் ஆரம்பித்துவிட்டது”

“சில பெண்களுக்கு வெளிநாட்டு மோகம் அதிகமாக இருக்கும். அவர்களில் ஒருவராக மாயா இருக்கலாம். நீங்கள் பொறுமையாக அவர்களுக்கு விளக்கி இருக்கலாமே? ஒரு முறை அமெரிக்காவிற்கு கூட்டி போய் கூட வந்திருக்கலாம்”

 சித்தார்த்தன் தலையசைத்தான். “இந்த ஐடியா எனக்கும் வந்தது. தொடர்ந்து கொண்டே இருக்கும் சண்டையை முடிவுக்கு கொண்டு வர எண்ணி எங்களது முதல் வருட திருமண நாளின் போது அவளை அமெரிக்கா அழைத்துச் சென்றேன். இங்கே தொழிலை போட்டுவிட்டு அவளுக்காக இரண்டு மாதங்கள் அங்கே தங்கி இருந்தேன். மீண்டும் இந்தியா கிளம்பும் நாளன்று நான் வரப்போவதில்லை என்று சொல்லி எங்கள் பாஸ்போர்ட்டை ஒளித்து வைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்ப மறுத்தாள். நான் கோபப்பட்டு கத்திய போது அவளை கொடுமைப்படுத்துவதாக அமெரிக்க போலீசில் கம்ப்ளைண்ட் செய்யப் போவதாக மிரட்டினாள்”




“நான் அவளது மனம்போல் பேசி கையில் பணம் இல்லை இந்தியா போய் சொத்துக்களை விற்று பணம் எடுத்துக் கொண்டு வரலாம், என்று ஏதேதோ சொல்லி கிட்டத்தட்ட அவள் கால்களில் விழுந்து அவளை மீண்டும் இந்தியா அழைத்து வந்தேன்”

” இங்கே வந்ததும் அதுபோன்ற ஏற்பாடுகளில் நான் இறங்காமல் இருக்க அவள் பக்கத்து உறவினர்கள் எங்கள் பக்கத்து உறவினார்கள் எல்லோரையும் வீட்டிற்கு அழைத்து பெரிய பஞ்சாயத்து வைத்தாள். சொத்துக்களை விற்று எடுத்துக்கொண்டு அவளுடன் அமெரிக்கா வந்து செட்டிலாவதென்றால் என்னுடன் வாழ்வதாகவும் இல்லை என்றால் டைவர்ஸ் வேண்டும் என்றும் கேட்டாள் “

” உறவினர்களுக்கு மத்தியில் மிகுந்த அவமானமாக போய்விட நான் இனி அவளுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்று எல்லோருக்கு முன்பும் சொல்லி அனுப்பிவிட்டேன்”

மொட்டை மாடி காற்று இருவருக்கும் இடையே இருந்த விரும்பத்தகாத மௌனத்தை கலைக்க போராடி அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தது.

” என்ன  சொல்வதென்று தெரியவில்லை.ஆனாலும் நீங்கள் இன்னமும் கொஞ்சம் முயற்சித்திருக்கலாம்” அவளது குரல் வெளியே அவளுக்கே கேட்கவில்லை. 

“இதற்கு மேல் எனக்கு பொறுமை இல்லை வைசாலி. ஒரு வருடம் போன பிறகு அம்மாவும் அப்பாவும் மீண்டும் எனது திருமண பேச்சை எடுத்தனர். எங்கெங்கோ இருந்து மணமகளை பிடித்து வந்தனர். எனக்கு எந்த பெண்ணை பார்த்தாலும் பயமாக இருந்தது. உன்னை அப்பா அம்மாவிடம் சொன்னது நான்தான். காரணம்…”

“ரொம்ப எளிது, உங்கள் வீட்டில் மூத்த மருமகளான என் அக்கா உங்கள் பேச்சுக்களுக்கு தலையாட்டிக் கொண்டு ஐந்து வருடங்களாக உங்கள் வீட்டில் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறாள் .அவளது தங்கையான நானும் அப்படித்தான் இருப்பேன் இல்லாவிட்டாலும் அக்காவை காட்டி இருக்க வைக்கலாம் என்ற எண்ணம் அப்படித்தானே?” வைசாலி படபடக்க காயம் பட்ட முகத்துடன் அவளை பார்த்த சித்தார்த்தன் மெல்ல தலையசைத்தான்.

” உன் வாய் வழியாக கேட்பதற்கு பிடித்தமற்றதாக இருந்தாலும் இப்போது நீ சொன்னதுதான் வார்த்தைக்கு வார்த்தை உண்மை வைசாலி. இனியொருமுறை என் வாழ்வோடு நான் போராட விரும்பவில்லை.என் மனதை உன்னிடம் கொட்டி விட்டேன். இனி முடிவெடுக்க வேண்டியது நீதான். தேவையான நேரம் எடுத்துக்கொண்டு முடிவை சொல்”




What’s your Reaction?
+1
45
+1
28
+1
4
+1
1
+1
2
+1
0
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!