Serial Stories யுகம் யுகமாய்..! 

யுகம் யுகமாய்..! -2

 2

சிலிக்கான் வேலி

தாம்சன் க்ருப் ஆஃப் கம்பெனி ஊழியர்கள் மரப்பாச்சி பொம்மைகளைப்போல அவரவர் வேப்டாப்பைக் குடைந்து கொண்டிருக்க நுனிநாவின் மென்மையான மென்பேச்சு  மெலிதான நிசப்தமாய் அந்த ஹாலெங்கும் இரைந்து கொண்டிருந்தது.

டெய்ஸி பரபரப்பாய் தன்னுடைய லேட்டாப்பில்  தட்டிக் கொண்டே

ஸ்பீக்கரில் இழைந்த குரலின் கட்டளைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்தாள்.

“எஸ்..எஸ் “

“யா..காட்இட் “

“ஒன் மினிட்”

எதிர்ப்பக்க குரலுக்கு டெய்ஸி இந்தப்பக்கம் தனி ஆவர்த்தனம் செய்து கொண்டிருந்த வேளையில் தனக்கிடப்பட்டிருந்த வேலையை முடித்துக் கொண்டு

அறையினுள் நுழைந்த வர்ஷாவை தலையசைத்து வரவேற்றாள் டெய்ஸி. 

கண்களும் காதும் விரல்களும் நர்த்தனமாட. அவளின் பணிபுரியும் அழகை ரசித்தபடி அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவளுக்கு அறைக்குள் வியாபித்த குரலைக் கேட்டதுமே மனதுள் உண்டான அவஸ்தையை தாங்கமாட்டாது தவித்தாள்.

‘இத்தனை நேரம் நன்றாகத்தானே இருந்தேன்.  வேகமாக வேலையை முடித்தேனே இதென்ன இந்த நான்கு நாட்களாய் இல்லாமல்ல் புதிசாய் இந்த வேதனை.’

செவியில் விழுந்து புரண்டு கொண்டிருந்த ப்ருத்வியின் குரலில் சுனாமியே சுழன்றடித்தது. 

வர்ஷா மெதுமெதுவே தன்னிலை மறந்தாள். கருந்துளையினுள்  ஈர்க்கப்பது போல உள்ளே…உள்ளே…இன்னும் உள்ளே…சென்று கொண்டிருந்தாள் பிடிமானமின்றி கைகள் காற்றில் அலைந்தன. இமைக்குடைகள் குவிந்து கிடக்க மனம் மட்டும் தனியே எங்கோ பிரபஞ்சவெளிகளைக் கடந்து பயணம் செய்து ஓரிடத்தில் நின்றது. இங்கே உடல் அசைவற்றுக் கிடக்க மனம் தனியே கழன்று பூமிபோல் தன்னைத் தானே சுழன்று கும்மியடித்தது.

———————–




அத்தனை விதமான மலர்களும் அதைத் தேடி தேனெடுக்க வரும் வண்டினங்களுமாய் பூஞ்சோலை காட்சி தர இரு சிறுமியர் பூவைப் பறித்துக் கொண்டு பூந்தோட்டத்துள்  கைகால் முளைத்த. அசையும் பூக்களாய் அங்குமிங்குமாய் திரிந்தனர். மையமண்டபத்தில் இவர்களின் வயதொத்த சிறுமியர் கூட்டமொன்று பாடிக் கொண்டும் வாத்யமிசைத்துக் கொண்டும் அபிநயம் பிடித்துக் கொண்டுமிருந்தனர்.

மொட்டவிழா பருவம். அரும்பும் அல்ல. அழகின் சாயை படிந்து பிடிகொள்ளும் பருவம். 

“அடி! யவனா..யௌவனகாந்தி! அந்தப்பட்டாம்பூச்சியை விட்டுவிடடி பாவம். “

“மாட்டேன். நான்தானே அல்லல் பட்டு பிடித்தேன். எத்தனை நிறங்கள்…கண் கொள்ளவில்லை”

அவள் லேசாய் உள்ளங் கையை விரிக்க அத்தனை நேரம் பேசிக் கொண்டிருந்த சிறுமி பட்டென்று யௌவனகாந்தியின் தோளில் ஒன்று போட அதிர்ந்தவளின் கை தளர்ந்து விரிவு கொள்ள வண்ணத்துப் பூச்சி சிறகடித்துப் பறந்தது.

“போங்கள் இளவரசியாரே! “முகம் சுருங்க மண்டபத்தின் படிக்கட்டில் அமர்ந்த தோழியின் அருகிலமர்ந்து

“வாயில்லா சிறு பூச்சி! பாவமில்லையா. “என்று  யௌவைனகாந்தியின் நாசியை பிடித்து ஆட்டி தன் நுதலை அவளுடைய நுதலுடன் முட்டினாள்.

யௌவனகாந்தி ஏதோ பேச வாயெடுக்கு முன்னே 

“இளவரசி! தங்களை மகாராணியார் அழைக்கிறார்கள்” எனவும்  இளவரசி சோணைக்குழலி எழுந்தாள்.

அந்தப்புரத்தின் முன்னேயிருந்த மணிமாடத்தில் அன்னையும் மற்றொருவரும் அமர்ந்திருக்க 

“தாயே “

என்றழைத்தாள் இளவரசி சோணைக்குழலி.

“வா! ! வா! என் கண்ணே! பங்கயக் கண்ணியாரே குழந்தை என்னமாய் வளர்ந்து விட்டாள்.”

தாயின் முன்னே நின்றவளை அமர்ந்திருந்த. பெண்மணி கன்னம் வழித்தாள். 

“ஆம்  தாங்கள் இவள் பிறந்ததுமே வந்தீர்கள். இப்போதுதான் கருணைகாட்டி எம் நாட்டிற்கு வந்துள்ளீர்கள்.”

“என்ன செய்வது? ஏதோ ஒன்று அடுத்தடுத்து… எங்கள் செல்வன் பூபாலவர்மனுடைய கல்விக்காக ஆசானை பணிந்து கொண்டு குருகுலத்தில் சேர்த்துவிட எண்ணம் கொண்டே பயணப்பட்டோம். இத்தனை தொலைவு வந்த பின்னே உங்களை காணாமல் போவது அழகன்று மரியாதையும் இல்லையே “

சோணைக்குழலியின் கண்கள் அங்கு நின்று கொண்டிருந்த சிறுவனின் மீது படிந்தது. அவனுமே ஏறிட்டுப் பார்த்து புன்னகைத்தான். அவளை அருகில் வரும்படி சைகை செய்ய அவளும் அவனை நோக்கி நகர்ந்தாள்.

அவன் கைநீட்ட அவளுடைய கரமும் இணைந்தது. இருவரும் மாடத்தின் முன்வெளியில் நிற்க யௌவனகாந்தியும் இணைந்து கொண்டாள். சிறுமிகள் இருவரைக் காட்டிலும்  ஓரிரு பிராயங்கள் அதிகமிருக்கலாம்.

“என் பெயர் பூபாலவர்மன் குணமலைக்குன்றின் வாரிசு”

 குரலில் ஆளுமையோடு உரிமையும் அந்த வயதையும் மீறித் தெறித்தது. 

பட்டுச்சட்டையையும் மீறி சிறுசிறு வடுக்கள் தெரிந்தன. பயிற்சியின்போது ஏற்பட்டதாயிருக்கலாம். குழல்களை சிறு பட்டுத்துணியொன்றில் அடக்கியிருந்தான் கண்ணில் தீட்சண்யமிருந்தது. முகத்தில் ராஜக்களை தேஜசுடன் ஒளிர்ந்தது.

“நான் சோணைக்குழலி.

இந்தநாட்டின் இளவரசி

இவள் என்னுயிர்த் தோழி யௌவனகாந்தி”

இவளும் அவனுக்கு சளைத்தவளில்லை என்பதைக் காட்டினாள்.

மூவரும் ஏதோ பேசிக் கொண்டிருக்க தாய்மார்கள் அழைக்கவே குதித்தோடினர்.

———————-




வர்ஷா மூச்சுவிடவே திணறினாள். ஏதோ பாரமாக அழுத்துவது போலிருந்தது. அடுத்தடுத்து கலைந்து போகும் மேகங்களாய் தெளிவில்லாத காட்சிகள் .டெய்ஸி இவளுக்கு முதுகைக்காட்டிக் கொண்டு நின்றிருந்ததில் இவளைக் கவனிக்கவில்லை.

வர்ஷாவின் ஆழ்மனதுக் காட்சிகள் அவளை நீருக்குள் அழுத்தினால் மேலே வருகின்ற பந்தைப்போல கீழும் மேலுமாய் வர இப்போது வேறொரு காட்சி….

அடர்வனம் ஒன்றின் மையப்பகுதி. சூரியக்கதிர்கள் சிரமப்பட்டுத்தன்னை நுழைத்துக்கொண்டு எட்டிப்பார்த்தன. அங்கே  முற்றிய மூங்கில்களையும் செம்மண் களிமண் குழைத்துக் கட்டிய குடில்கள். நறுமணம் வீசும் கொடிகள் குடில்களில் படர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன.

சற்றே அகன்ற நீள் செவ்வகக் குடிலொன்றில் மாணாக்கர் தம் குரல் முழங்க அருகிலிருந்த திடலில் வாட்கள் வேல்கள் மோதும் ஓசையோடு கட்டிப்புரளும் ஒலியும்  ‘ஹோ”,’ஹா’ என்ற கூப்பாடும் விட்டுவிட்டு கேட்டது. 

பங்கயக்கண்ணி தேவியார் கணவர் செங்கண்ணாருடனும் புதல்வி சோணைக்குழலியுடனும் ஆச்சாரியார் தலைப்பெருமகனாரை வணங்க வந்திருந்தார். அவர் இவர்களின் குருதேவரும் கூட.

சோணைக்குழலிக்கு திருமணவயது வந்து விட்டது. குருவருள் திருவருள் அறியவே வந்துள்ளனர். 

தாயும் தந்தையும் குருதேவரோடு உரையாட யௌவனகாந்தியோடு நழுவினாள் சோணைக்குழலி.

இயற்கையின் அழகில் மனதை பறி கொடுத்தவளாய் நடக்கையில்

அவள் பாதத்தை ஒட்டினாற்போல் ஒரு வாளி* குத்திட்டு நின்றது.

சினம் கொண்ட விழி சிவக்க நிமிர்ந்தவள் முன்னே வந்து நின்றான் கட்டிளங்காளையொருவன்.

கோபத்தில் தன் செவ்விதழ்களை திறக்குமுன்னே யௌவனகாந்தி அலறலோடு பின்னே இழுத்தாள். 

பறந்து வந்த அம்பின் முனை ஒரு அரவத்தின் கழுத்தில் புதைந்திருக்க சோணைக்குழலியின் வதனமோ வெளுத்தது.

“பூபாலா!  அர்ஜுனன் குறி போல தவறாது உன் இலக்கு.நல்லது குழந்தாய்”

என்ற குரல் பின்னே கேட்க 

“வணக்கம் ஆசானே!” என வணங்கினான் அம்பெய்தியவன்.

“செங்கண்ணாரே! தங்கள் மித்ரனின் தவப்புதல்வன் பூபாலவர்மன். குருகுலவாசம் முடிந்து புறப்பட உள்ளான்.குணமலைக்குன்றின் வருங்கால அரசன். குணவான். மாவீரன். பூபாலா இவர் உன் தந்தையின் நண்பர் செங்கண்ணார்.அவர் அவருடைய தேவி பங்கயக்கண்ணி. நீ சர்ப்பத்தினின்றும் காத்த மாதரசி இவர்தம் புதல்வி. பெயர் சோணைக்குழலி”

மூத்தோருக்கு வணக்கம் வைத்து இளையவள்புறம் திரும்ப அவன் உள்ளத்தில் இருவேல்விழிகள் மின்னலாய் வெட்டின. 

சோணைக்குழலி…அழகான பெயர். மழையைப் போன்ற குழலினை உடையவள். பொருத்தமே!

பூபாலரா..? அந்தப் பெயர் நினைவடுக்கில் எங்கோ தலையை நீட்டி வாசம் பரப்பியது.

இருஜோடி விழிகள் ஒரே நேர்க்கோட்டில் சந்தித்து கௌவிக் கொள்ள மாதுதான் தலைகுனிந்தாள். செந்தாமரையாய் முகம் சிவந்துபோக இடை துவண்டாள். 

———————-




நூதனமான உணர்வில் நிலை தடுமாறியது. 

அதன் பின்னே….

“ஹேய்! வர்ஷா! என்ன தூக்கமா? உட்கார்ந்தபடியே தூங்கறியா “

டெய்ஸியின் தோள்தட்டலில் கனவிலிருந்து விழித்தவளைப் போல மலங்க மலங்க பார்த்தாள்.

“சரிதான்! செம தூக்கம் போல! வா காபி குடிச்சுட்டு வரலாம்.”

வர்ஷா இப்போது நிதானத்திலிருந்தாள். எந்த பரபரப்பும் தவிப்புமின்றி நார்மலாயிருந்தாள்.. ப்ருத்வியின் குரல் அங்கே ஒலிக்கவில்லை.

‘எனக்கேதோ ஆகி விட்டதா? ப்ருத்வியின் குரலிலும் அண்மையிலுமா தடுமாறுகிறேன். கடவுளே! என்னுள் என்னதான் நடக்கிறது. ஒரு நல்ல சைக்யாரிஸ்ட்டை பார்க்கனும் போலேயே’

வர்ஷா குழப்பத்தை மறைத்துக் கொண்டு டெய்ஸியுடன் போக 

“கலிபோர்னியாவிலிருந்து ப்ருத்வி நாளையே வந்துவிடுவார் வர்ஷா! உனக்கான ஷெட்யூல்டுகளை அவரே பிரிச்சு கொடுத்திடுவார். அவருக்குத்தான் நீ ரிப்போர்ட் பண்ணனும்.”

“அய்யோடா ” என்று மானசீகமாய் தலையிலடித்துக் கொண்டாள் வர்ஷா.

கலிபோர்னியாவிலிருந்தவனும் இவளைத்தான் அந்தநொடி நினைத்துக் கொண்டிருந்தான்.சில மணித்துளிகளே பார்த்த  அவள் முகம் இம்சித்தது. இரவின் ஏகாந்தத்தில் அவள் ரொம்பவே ஆட்டுவித்தாள். பகலெல்லாம் பணி அவனை ஆட் கொள்ளும். இரவிலோ இவளின் நினைவுகள் கொல்லும். ப்ருத்விக்கு குழப்பம். அவன் பெண்களை தூரவே நிறுத்திப் பழக்கப்பட்டவன். 

தாத்தா திருமுக பாண்டியனின் வளர்ப்பு. தாய் தந்தையிடம் வளர்ந்ததைக் காட்டிலும் தாத்தனிம் வளர்ந்த நாட்களே அதிகம்.. இந்த வயது வரையுமே தாத்தா செல்லம் தான் மனசுவிட்டு எதையும் பேசலாம்.  நண்பன் வழிகாட்டி ஆசிரியர் எப்படியும் சொல்லலாம். பெண்ணைப் போற்ற வேண்டும் என்று புகட்டியவர் அவர்.  அதனாலேயே எல்லையுடனே பழகுபவன். இப்போதென்னவோ  இந்த வர்ஷா மனமெல்லாம் வர்ஷித்து நனைக்கிறாளே! ப்ருத்வி தாத்தாவின் எண்ணுக்கு அழைப்பு விடுத்தான்.

*வாளி…அம்பு

(தொடரும்)




What’s your Reaction?
+1
11
+1
6
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!