Serial Stories எனக்கென ஒரு வானம் 

எனக்கென ஒரு வானம் -15

15

இரவு முழுவதும் தூக்கமின்றி கழித்துவிட்டு மறுநாள் காலை கடுமையான தலைவலியுடன் எழுந்த வைசாலி அறையை விட்டு வெளியே வந்தாள். ஹால் சோபாவில் அவளது அறையை பார்த்தபடி  ஒரு ஒற்றை சோபாவை இழுத்து போட்டு அமர்ந்திருந்த சித்தார்த்தனை கண்டதும் திகைத்தாள். இவன் என்ன இரவு முழுவதும் இங்கேயேவா உட்கார்ந்திருந்தான்?

வியப்போடு ஒருவகை திருப்தியும் தன்னுள் பரவுவதை ஆச்சரியமாய் உணர்ந்தாள். 

“நடன உடையுடனேயே இருந்தாயே! உனக்கு மாற்றுவதற்காக உடையுடன்  இரவு வந்தேன். நீ கதவை திறக்கவில்லை” தளர்ந்த குரலில் சொன்னான் சித்தார்த்தன். அவன் கண்கள் உடைமாற்றி சுடிதாரில் இருந்தவளின் மேல் யோசனையுடன் படிந்தன. 

வைசாலி முகத்தை திருப்பிக்கொண்டு அடுப்படியை நோக்கி போய் சூடாக தனக்கு காபி கலந்து கொண்டாள். அதனை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு பின்புறம் தோட்டத்திற்குச் சென்று அங்கிருந்த மர பெஞ்சில் அமர்ந்து கொண்டாள். 

சித்தார்த்தும் அவள் அருகே வந்து அமர்ந்தான் “சாரி வைஷு வீட்டில் எல்லோருமாக விவாகரத்து விஷயத்தை உங்கள் வீட்டிற்கு சொல்ல வேண்டாம் என்ற முடிவெடுத்த பிறகும் மனது கேளாமல் உன்னை தனியாக சந்தித்து சொல்லிவிட எண்ணித்தான்  முதலில் உன் ஷோரூமிற்கு உன்னை பார்க்க வந்தேன்.”

“ஆனால் உன்னுடைய அலுவலக யூனிஃபார்மில் எல்லோருடனும் பேசிக்கொண்டு பரபரப்பாக நீ வேலை பார்த்துக் கொண்டிருந்ததை பார்த்தபோது என்னை அறியாமல் என் மனதிற்குள் ஆழமாக பதிந்து விட்டாய். எனக்கென பிறந்தவள் நீ தான் என்று என் மனம் சொல்லிக்கொண்டே இருக்க, உன்னை திருமணம் செய்து கொள்ள கிடைத்த வாய்ப்பை இழக்க விரும்பவில்லை. அன்று உன்னுடைய வேலைக்காகத்தான் என்றாலும் யாரோ ஒருவன் உன்னிடம் சிறிது கடிந்து பேசியதை கூட என்னால் தாங்க முடியவில்லை. இப்பொழுது அவனை அறைந்தால் என்ன என்று தோன்ற அவசரப்பட்டு  உன்னிடம் அதை பற்றி கேட்டு வாங்கி கட்டிக் கொண்டேன்.”

” அன்று நீ ஒரு பார்வை பார்த்தாயே… அப்போதுதான் நீ எனக்கு உரிமையற்றவளான நிலையில் இருப்பதை உணர்ந்து கொண்டேன். அந்த நேரத்தில் உன்னை எப்படியும் எனக்கு உரிமையானவளாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே என்னுள் இறங்கி இருந்தது. நீ நமது திருமணத்திற்கு சம்மதிக்க வேண்டுமே என்ற பரிதவிப்பை தவிர வேறு எதைப் பற்றியும் யோசிக்கும் நிலையில் நான் இல்லை”

. ஆக  விவாகரத்து ஆகாததை மறைத்து விடலாம் என்ற வீட்டினரின் யோசனைக்கு நானும் ஒத்துக் கொண்டேன். நம் திருமணத்திற்கு பின்பும் கூட உன்னை முழுமையாக கணவனாக நெருங்க முடியாமல் தடுமாறி தள்ளி நின்றதன் காரணமும் மாயாதான்.”

” அவளை முழுவதுமாக என் வாழ்வில் இருந்து பிடுங்கி  எறிந்த பிறகுதான் கணவனாக உன் அருகே வருவது என்று எனக்குள் ஒரு வரையறையை உருவாக்கிக் கொண்டு காத்திருந்தேன். ஆனால் நேற்று நடன உடையில் முழு அலங்காரத்துடன் உன்னை பார்த்த பிறகு ஒரே ஒரு முத்தமாவது கொடுத்து விட வேண்டும் என்று உள்ளமும் உடலும் துடிக்க உன்னை நெருங்கிய போதுதான்… என்னை மறந்து விட்டாயா! என்பது போல் அந்த மாயாவே வந்து நின்றாள்”

” அவளைப் பார்த்த அதிர்ச்சியிலிருந்து விலக முடியாமல் தவித்து நான் நின்ற பொழுது இவள் உன்னை என்னிடம் இருந்து பிரிக்க வந்திருக்கிறாள் என்ற எண்ணம் மட்டுமே மனதிற்குள் கேட்டுக் கொண்டே இருக்க, அவளை கோபப்படுத்தி விடாமல் இங்கிருந்து அனுப்ப வேண்டும்  என்றே அவள் இழுவைக்கு என்னால் சென்றேன்”

கையில் வைத்திருந்த காபி கப்பை கீழே வைத்து விட்டு மெலிதாய் கைதட்டினாள் வைசாலி “வெல்டன் மிஸ்டர் சித்தார்த். மிக அருமையாக திறமையாக இரண்டாவது திருமணத்தை முடித்துவிட்டு ஏதேதோ சாக்கு போக்குகளை சொல்லி பூசி மெழுகுகிறீர்கள். இனி என்ன மாடியில் மாயா..கீழே வைசுவா?” 

 சித்தார்த்தன் உடன் “சீ” என்றான். ” என் பேச்சை சரியாக கவனித்தாயா வைசு..? இரண்டு மாதமாக நாம் இருவரும் ஒரே அறையில்தான்  தனிமையில் இருந்திருக்கிறோம். உன்னிடம் என்றாவது கணவன் உரிமையை எடுத்திருக்கிறேனா?” 

“ம், நம் பணத்தையும் செல்வாக்கையும் பார்த்து தலை சுற்றி போய் கிடக்கும் குடும்பம் தானே, எங்கே போய் விடப் போகிறார்கள் என்ற நிதானமாக இருக்கும்”




” வைசாலி ” சித்தார்த்தன் அதட்ட, விழிகளை விரித்தாள் “அடப் பார்டா செய்வதையும் செய்துவிட்டு இவ்வளவு கோபமா?”

அவன் கண்களை இறுக மூடி தன்னை நிதானப்படுத்திக் கொண்டான் “வைசாலி முள் மேல் கிடக்கும் சேலையை எடுக்க பொறுமை அவசியம். நீ கொஞ்சம் பொறுமையாக…”

 “விவாகம் ரத்தாகும் வரை பொறுமையின்றி அடுத்த மனைவியை தேடுபவருக்கு என்னை பொறுமை காக்க சொல்லும் உரிமை கொஞ்சமும் இல்லை.இனி என் வாழ்வை நானே பார்த்துக் கொள்வேன்” 

தலையை சிலுப்பி விட்டு வீட்டுக்குள் சென்றவளை பெரு மூச்சுடன் பார்த்துவிட்டு வீட்டைச் சுற்றி  ஜாக்கிங் செய்ய துவங்கினான் சித்தார்த்தன். மன அழுத்தத்தை பூமிக்குள் செலுத்தி விடுபவன் போல் அவனுடைய பாதங்கள் பூமியில் இருந்த பதிந்து பதிந்து எழுந்தன. 

“என்ன விஷயம்?” கேட்டபடி திடுமென தன் முன் வந்து நின்ற மாயாவை திகைப்பாய் பார்த்தாள் வைசாலி. இவள் எங்கேயோ இருந்து எங்களை நோட்டமிட்டதைப் போல் இருக்கிறதே…!

” எதை கேட்கிறீர்கள்?” 

“நீயும் சித்துவும் என்ன பேசிக் கொண்டிருந்தீர்கள் என்று கேட்டேன்” அதிகாரம் சொட்டியது அவள் குரலில்.

” அது எதற்கு உங்களுக்கு?”

” அடிங் ————“

திடுமென காளி உருவம் எடுத்திருந்தாள் மாயா.அவள் சாதாரணமாக உதிர்த்த கெட்ட வார்த்தையில் வைசாலியின் உடல் அதிர்ச்சியில் ஆடியது.

” எனக்கு ஒன்றும் தெரியாதென்று நினைத்தாயா? என்னை டைவர்ஸ் பண்ணாமலேயே உன்னை கல்யாணம் முடித்திருக்கிறான். சட்டப்படி இந்தக் கல்யாணம் செல்லுபடி ஆகுமா? அறிவு கெட்டவளே! இப்போது உன்னுடைய நிலைமை  புரிகிறதா? நீ அவனுக்கு கீப்?  இதனால் பரவாயில்லையா?” மாயாவின் ஒவ்வொரு வார்த்தைகளும் குத்தூசிகளாக வைசாலியின் மனதில் சொருகின.

 கலங்கிவிட்ட கண்களை அவளுக்கு காட்ட மனமற்று வேகமாக நகர்ந்தாள். ஆனால் மாயா விடுவதாயில்லை. பின்னேயே வந்தவள் “சித்தார்த்தனை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்க நான் தயாராக இல்லை. அவரை எனக்கேற்றார் போல் வளைக்கத்தான் இந்த பிரிவெல்லாம். கொஞ்சம் அசந்தேன் நீ உள்ளே நுழைந்து விட்டாய். இனி நான் இங்கிருந்து போவதாக இல்லை. என்னை இங்கிருந்து வெளியேற்றும் உரிமையும் யாருக்கும் இல்லை. ஒழுங்காக பெட்டி படுக்கையை தூக்கிக் கொண்டு உன் அம்மா வீட்டிற்கு ஓடி விடு. இல்லையென்றால் என் புருஷனுடன் தகாத முறையில் உறவு வைத்திருக்கிறாய் என்று உன் பெயர் போட்டோவோடு சோசியல் மீடியாவில் பரப்பி விடுவேன்”

 வைசாலி நடையை நிறுத்தி திரும்பி மாயாவை விழியால் எரிக்க “நான் ஒரு பாலே டான்சர் .சோசியல் மீடியாவில் பிரபலமானவள். எனக்கு youtube சேனல் இருக்கிறது. இன்ஸ்டாகிராம்,ட்வீட்டரில் பாலோயர்ஸ் இருக்கிறார்கள் எல்லா இடங்களிலும் உன்னை பற்றி பேச ஆரம்பித்தேனானால் உன் நிலைமை ?”

“சீ…என்ன பெண் நீ?  இது உனக்கும் அசிங்கமில்லையா?”

” எனக்கென்ன அசிங்கம்? இவ்வளவு அழகான திறமையான டான்ஸரை விட்டு விட்டு இப்படி ஒரு அசிங்கமான பெண் பின்னால் போவானா ஒருவன், என்று உலகமே கேள்வி கேட்கும். என் மீது பரிதாபப்படும். இந்த பரிதாபத்தை என்னுடைய முன்னேற்றத்திற்கு நான் பயன்படுத்திக் கொள்வேன்” மாயாவின் அடுத்தடுத்த திட்டங்களில் முகம் வெளிறி  நின்றாள் வைசாலி.

“இதனால் சித்தார்த்தனுடனான வாழ்வை நிரந்தரமாக இழக்க போகிறீர்கள் .உங்களுக்கு புரியவில்லையா?” மாயாவின் அராஜகத்தை தடுத்து நிறுத்திவிடும் வேகத்தில் கேட்டாள் வைசாலி.




“நான் ஏன்  வாழ்விழக்க போகிறேன்? இந்த பிரச்சனைகளால் கொஞ்ச நாட்களுக்கு நான் சோசியல் மீடியாக்கள் எல்லாவற்றிலும் பரபரப்பாக பேசப்படுவேன். தவறி போன பல வாய்ப்புகள் கூட எனக்கு கிடைக்கலாம் .பயிரானதை எல்லாமே அறுவடை செய்துவிட்டு, என் காதல் கணவரை… அவர் எனக்கு எவ்வளவுதான் துரோகம் செய்திருந்தாலும் அவரை என்னால் மறக்க முடியாது, என்று ஒரு அறிவிப்பு கொடுத்துவிட்டு திரும்பவும் சித்தார்த்தனிடமே வந்து விடுவேன். பத்தினி என்று எனக்கு மாலை போடுவார்கள் தெரியுமா?”

“நீ ஒரு குடும்பத்தையே சீரழிக்கிறாய் தெரிகிறதா உனக்கு?” தைரியமாக கேட்க நினைத்தும் தழுதழுத்தது வைசாலியின் குரல்.

“என் பக்கம் நிற்காத குடும்பம் எப்படி போனால் எனக்கென்ன? இந்த மாயாவை ஏமாற்றி மறுமணம் முடித்தார்கள் தானே? அவர்கள் எப்படி நிம்மதியாக இருக்கிறார்கள் என்று பார்க்கிறேன்”

” வேண்டாம்…அவர்களை விட்டுவிடு, நா…நான் ஒதுங்கிக் கொள்கிறேன்” தலை குனிந்து சொன்ன வைசாலியின் குரல் இயலாமையில் நடுங்கியது.




What’s your Reaction?
+1
45
+1
30
+1
3
+1
0
+1
1
+1
1
+1
8
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
Thenmozhi
Thenmozhi
5 months ago

Waiting for next ud

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!