Serial Stories பறக்கும்; பந்து பறக்கும்

பறக்கும்; பந்து பறக்கும்-8

8

மரத்தின் கிளைகளிலும்  இலைகளின் ஓரமும் சிறுசிறு நீர்முத்துக்கள். கடந்துபோன கருமேகங்களுக்கு என்ன அவசரமோ?. தூறலாய் விசிறிவிட்டுப் போனதில் உருண்டு கொண்டிருந்த முத்துக்களை காற்று வீசும் போதெல்லாம் தங்களை உதிர்த்துக் கொண்டு நிலத்தை ஆலிங்கனம் செய்ய முயன்றன.மரத்தின் கீழே நின்றிருந்த அதுல்யாவையும் நனைத்து சிலிர்க்க வைத்தன.

இதையெல்லாம் ரசிக்கவோ கவனிக்கவோ முடியாமல் அவளின் மனம் வேதனையில் வெந்து கிடந்தது. விஸ்வாவின் அண்ணனின் பேச்சு பாரமாய் அழுத்தியது. 

அதுசரி! நம்ம வீட்டில் நித்யா இல்லையா? பேசியே சாகடிக்க. இவருக்கும் பயமிருக்கும் தானே! வீட்டைத்தேடி ஒரு பெண் வந்தால் என்னென்னவோ நினைக்கத்தானே தோன்றும்.? ஆனால் அந்த அக்கா ரொம்ப அன்பா பேசினார்களே! பைரவியிடம் கொடு என்று பொம்மை கூட தந்தார்களே! அவங்க கணவர் விஸ்வாவின் சின்ன அண்ணா கூட மரியாதையாகவே  விசாரித்தார். மனைவி பேசத் துவங்கியதுமே உள்ளே போய் விட்டாரே!  நல்ல மனிதர்கள் தாம்! இந்த விஜயசந்திரிகா  மேமால் வந்தது. இவரே விஸ்வாவிடம் பேசியிருந்திருக்கலாம். க்கூம்… போன் தான் போகவேயில்லையே! எல்லாம் என் நேரம். விஜயசந்திரிகா வேற பயமுறுத்திட்டாங்க! உடனே நேர்ல போய் பேசிடு அதுல்யா!  விஸ்வா பணத்தை வேறெதிலாவது கமிட் பண்ணிட்டா கஷ்டம். போன் போகலை. நீ நேரிலேயே பேசுன்னு துரத்திட்டாங்க. அவனால் முடியுமா, தருவானான்னு கூட யோசிக்கலை… உடனே புறப்பட்டு வீடு வரைக்கும் போயாச்சு. அப்படியென்ன அவனிடம் அத்தனை நம்பிக்கை? ப்ச்!  போயும் பேச சங்கடம். எதையோ சொல்லி மழுப்பி வந்தாச்சு. வருவானா? அவனுக்கு நான் பொய்தான் சொல்றேன்னு தெரிஞ்சிருக்கும்.  தப்பா நினைச்சிருப்பானோ? அன்னிக்கு என்னவோ பெரிய இவ மாதிரி பேசினா அப்படின்னு கீழ்மையா நினைச்சிருப்பானோ?  எல்லா இந்த நித்யாக்காவால வந்தது தான். ச்சே! ஆனா சரண்யாவுக்கும் படிக்க பிரச்னை! தினம் ஒரு சண்டைன்னு அமைதியே பாழாகுது.  வீடு அமைதியாயிருந்தாத்தானே படிக்க முடியும்? எப்படியோ நித்யாக்கா இப்போ பணத்தை வாங்கினாலும் திரும்ப கேட்க மாட்டாள்ங்கிறது என்ன நிச்சயம். இல்லே இதை இளங்கோ மாமாவை அவ மாமியாரையெல்லாம் வரவச்சு செட்டில் பண்ணனும். இனிமே ஒருபைசா கூடத் தரமாட்டோம்ன்னு பளிச்சுன்னு பேசிடனும் என்னவோ! ஆரம்பம் நம்ம கையிலேயிருந்தாலும் சில முடிவுகள் எல்லாம் தொடுவானம் மாதிரி! அண்டசராசரத்தை விடப் பெரியது நம்முடைய மனம். அதுல்யாவின் மனமென்ன விதிவிலக்கா?

எதையெதையோ நினைத்து எங்கெங்கோ சுற்றி வந்து விஸ்வா என்னும் புள்ளியில் நிலைத்தது.

“ஹா…அப்பாடி! வந்து விட்டான்.” மனசுக்குள் சின்னச் சுடராய் நிம்மதி வந்தது. 

பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு இவளை நோக்கித்தான் வந்தான். ஆழ்நீலத்தில் பேண்டும் பளிச் வெள்ளையில் ஃபார்மல் ஷர்ட்டும். சட்டையின் கை முழங்கைக்கு கீழே மணிக்கட்டுக்கு மேலே என ஏற்றிவிடப்பட்டிருந்தது.

அவன் நெருங்கி வரவர அதுல்யா உள்ளுக்குள்ளே சுருண்டாள். ‘கடவுளே! என்னன்னு சொல்லுவேன். ரொம்பவும் பழக்கம் கூட இல்லையே! சொல்ல வருவதை புரிஞ்சுக்குவானா இல்லை இதையே அட்வான்ட்டேஜா எடுத்து…’ நினைப்பே கசந்தது.

“ஹாய்! அதுல்யா!”

“ஹாய் விஸ்வா!”




அவள் பேசுவாளோ என்று அவன் பார்க்க அவளோ எப்படித் துவங்க என்று அமைதியாய் நின்றாள். குழப்பம் முகத்தில் கூடு கட்டியது.அவனே மௌனத்தை உடைக்கும் விதமாய் “அதுல்யா! வாங்க காண்டீன் போகலாம். எதுவோ பேசத்தானே வீடு வரை வந்தீங்க. வாங்க அங்கே போய்  நிதானமா பேசலாம்” என்றான்.

அவனை ஏறிட்டுப் பார்த்துவிட்டு தலையசைத்த வண்ணம் அவனைத் தொடர்ந்தாள்.

“காபி? “

அவள் தலையாட்ட அவன் போய் வாங்கி வந்தான். ஒரு கப்பை அவள் பக்கமாய் நகர்த்தி வைத்தான். தன்னுடைய காபியை மிடறுமிடராய் உறிஞ்சினான்.

அவனுக்குமே என்னவாயிருக்குமென்ற குறுகுறுப்புதான். திடீரென வீடுவரை வந்தது வியப்புதான். 

‘இருக்கட்டும் பூனைக்குட்டி வெளியே வராமலா போய்விடும்.’

அலையலையான அவளின்  கூந்தல் காற்றில் அலைந்தது. விளையாடும் போது தூக்கிக் கொண்டையாய் போட்டிருப்பாள். பீச் நிறத்தில் பலோசா பாண்டும் ரத்தச்சிவப்பில் வெல்வெட் பூக்களை கொட்டினாற் போன்ற டாப்பும் காதில் அதே சிவப்பில் தோடும் ஒட்டினாற் போல் ஆடுகிற  முத்தும். ஒருகையில் தங்கத்தில் கைச் சங்கிலி மறுகையில் ஸ்மார்ட் வாட்ச். முகம் மட்டும் ஏனோ வழக்கமான தெளிவு இன்றி கருமை படர்ந்திருந்தது. 

மொத்தத்தில் அழகிதான்!  உள்ளுக்குள் சாரலடிக்க பூக்கவிருந்த புன்னகையை அதரங்களுக்குள் அழுத்தினான். இவளை எண்ணுந்தோறும்  ஏதோ ஒரு நூதன உணர்வு.  அது மிகவும் பிடித்தமாகவுமிருந்தது. அதற்கு பெயர்தான் தெரியவில்லை.  ஒரு அழகான இதம் மெருகு சேர்த்து உள்ளே அசைத்துப் பார்த்தது. பின்கேசத்தை இடது கையால் அழுத்திக் கொண்டு அவளைப் பேசத்தூண்டும் விதமாய்

“வெல்! தென்?” என்று துவங்கினான்.

‘ஒருவேளை இவளுக்கும் இவனைப் போலவே மனதில் நட்சத்திரங்கள் மினுக்கி அதைத் தன்னோடு பகிர்ந்து கொள்ள விரும்பி வந்திருப்பாளோ? ச்சீச்சீ..ஊஹும். அதுல்யா அப்படிப்பட்டவள் இல்லை. அவள் சமஸ்தானத்து மகராணி.

டேய் விஷு…! நீயா போய் மாட்டிக்காதேடா! அடங்கு! அடங்கு அடங்குடா’

மனதின் ஓசை வெளியே தெரியாமல் வெற்றுப் பார்வையாய் பார்த்தான்.

சிலநொடிகளின் மரணத்துக்குப் பின்னே அவளே இதழ் பிரித்தாள்.

தனக்கான பணத்தேவையை சொன்னாள். கோச் விஜயசந்திரிகா சொன்ன யோசனையையும் சொன்னாள். 

‘அடதேவுடா? விஸ்வா பெரிசா பல்பு வாங்கிட்டேடா.  நல்லவேளை வாயை விடலை. விட்டுருந்தா தாடை இடம் மாறியிருக்கும். ஜஸ்ட் மிஸ்!’ மனசாட்சி காறித் துப்பியதை வெளியிடாமல் அவள் பேச்சை மட்டுமே கவனமாய் அவதானித்தான்.  அதாவது அப்படி நடித்தான். 

“உங்களிடம் இருக்கும் பரிசுப்பணம் உதவக்கூடும் என்று உடனே வீட்டுக்கே போய் பேசிவிடு என்றும் விரட்டவே தான்…”

‘அய்யோடா! நான் பெரியண்ணிகிட்டே கொடுத்திட்டேனே.  திரும்பக் கேட்டா அவர் கேள்வி கேட்டே கொல்வாரே! இவளுக்கும் ரொம்ப அவசரம் போலவே! தேவைன்னாதாலேதான் நம்பி வந்து கேட்கிறா.? எப்படியாவது புரட்டி கொடுக்கணுமே! யாரைக் கேட்பதாம்?’

அவன் யோசனைக்குள் புதைய அதுல்யாவுக்குள்ளே பதுங்கியிருந்த தன்மானப்புலி சீறியபடி சிலிர்த்து எழுந்தது.

சட்டென்று தன்னுடைய ஹாண்ட்பேகை கையிலெடுத்த வேகத்திலேயே அவளின் எண்ணத்தை புரிந்தவனாய் “அதுல்யா எத்தன நாளுக்குள் வேணும்?”

பட்டென்று தண்ணீர் தெளிக்கப்பட்ட பாலைப்போல உடலும் உள்ளமும் அமைதலாக தேகம் தளர இருக்கையில் அமர்ந்தாள்.  அத்தனைநேர பிரளயமும் அடங்கிப்போன நிம்மதி முகத்தில் தெரிந்தது.

“விஸ்வா! முடியுமா? பிரச்னையில்லையே! உங்கநிலைமை என்னன்னு தெரியாமலே கேட்டுட்டேன்.”

“நான் கேட்டதுக்கு இது பதில் இல்லையே!”

“இல்லை வந்து… நான் உங்ககிட்டே ரொம்ப…”

“அதுல்யா! என்னாலே முடியலாம் ன்னு நம்பிக்கையிலேதானே கேட்டீங்க. நாம ஒன்னும் எதிரிகளோ அறிமுகமில்லாதவங்களோ இல்லையே. வீ ஆர் ப்ரெண்ட்ஸ்! ஒரு தோழிக்குப் பிரச்னைன்னா தீர்க்கனும் தானே!”

“அர்ஜெண்டுன்னு சொல்ல முடியாது. ஆனா சீக்கிரம் பணம் கிடைச்சிட்டா எங்க அக்காவை பைசல் பண்ணிடுவேன்.”

விஸ்வாவுக்கு லேசாய்ப் புரிந்தது. அவள் அக்காவுக்காகத் தடுமாறுகிறாள் போல என்று எண்ணியவன் “ஒரு மூனுநாள் டைம் கொடுங்க அதுல்யா. பணம் கொடுத்திடுறேன். அந்தப்பணத்தை  பெரியண்ணாகிட்டே கொடுத்திட்டேன். அவர்கிட்டே போய் கேக்கிறது கஷ்டம். நான் வேறஇடத்துலே அரேஞ்ச் பண்றேன்” என்றான்.

ஒரே நொடி கண்ணில் வந்து போன நிராசையை மறைத்துக் கொண்டு “தேங்க் யூ விஸ்வா! ரொம்பவும் வருத்திக்காதீங்க. நானும் சிலபேரிடம்  கேட்டுருக்கேன். பார்ப்போம். வரேன்” என்றாள்.

அவள் போய்விட்டாள்.




விஸ்வா கையில் முகத்தை புதைத்துக் கொண்டான். இதுவரை யாரிடமும் கடன் என்று நின்றதேயில்லை. எல்லாமே பெரியண்ணா நிறைவேற்றி விடுவார். வேலைக்கு வந்து சம்பாதிக்கத் துவங்கியபின்னும் தன் செலவுக்கென சிறு தொகையை ஒதுக்கி அவர் தந்துவிட சம்பளத்தை அப்படியே அவரிடம் தந்து விடுவான். 

இப்போது ….

கை டேபிளில் சிந்தியிருந்த தண்ணீரில் நீர்ச்சித்திரம் வரைந்து கொண்டிருந்தது அனிச்சையாய்…

வீட்டுக்குப் போகவே பிடிக்கவில்லை. இளங்கோ வண்டியை அந்தப் பெரிய பூங்காவிற்குள் விட்டான். இலைகளால் குடை விரித்திருந்த  மரமல்லி மரத்தின் கீழிருந்த கல் இருக்கையில் அமர்ந்தான். 

குழந்தைகளின் கூச்சலும் பெற்றோரின் அதட்டலும் நடைபாதையில் வாக்கிங் போவோரும் சூழரே ரம்யமாயிருந்தது. பைரவியின் நினைவு வந்தது. பார்த்தே நாட்களாகி விட்டது. குழந்தை கண்ணிலேயே நின்றாள். 

காதலித்தபோது இருந்த நித்யா எங்கோ காணாமல் போய்விட்டாள். எதற்கெடுத்தாலும் பேச்சாலேயே எதிராளி மனசை  கிழிக்கும் இந்த நித்யா புதிசு. ஒவ்வொரு வார்த்தைக்கும் அனர்த்தமாய் தோரணம் கட்டுபவளை எதில் சேர்ப்பது? புழுவைக் கொட்டிக் கொட்டியே குளவியாக்குவது என்பார்களே அதேபோல அம்மாவையும் அவளைப் போலவே மாற்றி விட்டாள்.

பைரவியை உண்டாவதற்கு முன்பே துரும்பை நகர்த்த மாட்டாள். உண்டானதுமே அம்மாதான் எல்லாமே! அத்தனை செய்தும் அம்மாவை, தங்கையை என்ன பேச்சுப் பேசிவிட்டாள். 

இளங்கோ வெகுண்டது அப்போதுதான். அது மட்டுமல்லாது தானும் தன் வீடும் பணம் கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும் பிசினசுக்கு பணம் வேண்டுமென்று விரட்டிவிட்டதாகவும் அவள் பேசியதை காதாலேயே கேட்டபின்பு மிச்சசொச்ச காதலுமே தூக்குமாட்டிக் கொண்டது. ஏமாந்ததின் வலி தொண்டையை நெரித்தது. 

ஒரு தாம்பத்யத்தின் அஸ்திவாரமே சரிந்து போய்விட்ட கோரம். மனமெல்லாம் பாரத்தோடு வீடு வந்தவனை கதவில் தொங்கிய  பூட்டுதான் வரவேற்றது. கால் வைக்கும் போதே அம்மாவின் போன். 

“இளங்கோ! என்னடா  எங்கேயிருக்கே? எத்தனை தடவை கால் பண்ணினேன். போன் போட்டா எடுக்க மாட்டியா? மாப்பிள்ளை ஊருக்கு போறாராம். சம்பந்தியும் இல்லையாம். கிராமத்துக்கு போயிருக்காங்களாம். குட்டிமாவுக்குத் துணையா வரச் சொன்னார்டா. நான் குட்டிமா கிட்டே போறேன். மசக்கை படுத்துதுன்னு போன் பண்ணினா. பக்கத்து வீட்டு ப்ரதீப்தான் பஸ் ஸ்டாண்டு வந்து வண்டியேத்தி விட்டான்” என்றாள் அம்மா.

யாருமில்லா வீடு அவன் மனதைப் போலவே வெறுமையாயிருந்தது. 

உள்ளே வந்து உடல் கழுவியனுக்கு பசி கூட மரத்துப் போயிருக்க வெறும் தரையிலேயே தலைக்கு கைககளை அண்டக் கொடுத்து காலை நீட்டிப் படுத்து விட்டான்.

கண்ணெதிரே செலவுகள் வரிசைகட்டி நின்றன.

இப்போது தங்கைக்கு நான்காம் மாதத் துவக்கம். ஏழாம் மாதம் சீமந்தம்… பிரசவச் செலவு… சீர் செய்முறை… பேருவைக்க… தொட்டிலிட….. கடவுளே! ‘ஓ’ வென்று ஓங்கிக் கத்த வேண்டும் என்று தோன்றியது.

இதை வைத்து நித்யாவுக்கு என்ன பேச்சு! அம்மா குட்டிமா முழுகாமலிருக்கிறாள் என்ற சேதி வந்ததுமே மறுநாளே போய் பார்த்து விட்டு வரவேண்டும் என்று துவங்க இவனுக்குமே ஆசைதான். கையிலேயே வளர்ந்த தங்கையாயிற்றே! ப்ளஸ்டூ முடித்து படிக்க ஆசைப்பட்டாலும் அண்ணனை கஷ்டப்படுத்த விரும்பாமல் தையல் வகுப்பில் சேர்ந்தவள். கல்யாணம் ஆகும்வரை அக்கம்பக்கம் தைத்துத் கொடுத்துக் குடும்பத்திற்கு உதவியவள் வீட்டிலிருந்தே இரண்டு பிரபல தையலகத்துக்குத் துணிகளைத் தைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள். இவளின் தொழில் நேர்த்தி நல்ல வருமானமும் தந்தது. நல்ல உழைப்பாளி. அம்மா கஷ்டப்படுவாளே என்று வீட்டுவேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொள்வாள். 

அவளைப் போய்ப் பார்க்க கிளம்பியிருக்கிறாள் அம்மா என்றதும் போனில் உரக்க அம்மா காதுபடவே “க்கூம்! இது வேறயா?  கல்யாணமாகி மாசம் அஞ்சு கூட ஆகலை.  அதுக்குள்ளார இது ரொம்ப அவசியமா? இனிமே சீமந்தம் புள்ளைபேறுன்னு பத்தியம் பார்த்து பக்குவம் பண்ணி அனுப்புறதுக்குள்ளே தாவு தீர்ந்துடும். அண்ணன் சம்பாதிக்கிற லட்சணத்துக்கு இதெல்லாம் தேவைதான்!”

இளங்கோவுக்குமே பொறுக்கவில்லை. இவளுக்குப் போய் நல்ல விஷயத்தைச் சொல்லவேண்டும் என்று கால் பண்ணினேனே1

“ஆமாண்டி! நீ அப்படியே அம்மாவூட்டுலேருந்து அஞ்சுமுட்டு அறுவதும் கொண்டாந்து ரொப்பிட்டே! எந்தங்கச்சியே பேச வந்திட்டே! உனக்கே தலைப்பிரசவம் நாங்கதானே பார்த்தோம் மூடிக்கிட்டுப் போடி! எங்களுக்குத் தெரியும்” என்று எகிர அவள் குதிக்க மொத்தத்தில் அவள் குழந்தையைத் தூக்கிக் கொண்டு போய் விட்டாள். இவனும் இரண்டு முறை போனான் தான். அவள் முறுக்கிக் கொண்டாள். மூன்றாம் முறை போனபோது அவள் குடும்பத்தாரிடம் நீலிக்கண்ணீர் வடித்து நாடகம் போட்டதைக் கேட்டு வெறுத்துப் போய் வந்து விட்டான். 

இப்போதும் ச்சீ யென்றாகி விட்டது அவனுக்கு.

எப்போது தூங்கினானோ… காலையில் அவன் செல் அடித்து அவனை எழுப்பியது. அடித்து பிடித்து எழுந்தவன் யார் என்று கூட பார்க்காமலே “ஹலோ” என்றான். மறுபக்கம் காதில் விழுந்த செய்தியில்  செயலிழந்து நின்றான்.




What’s your Reaction?
+1
6
+1
8
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!