Serial Stories யுகம் யுகமாய்..! 

யுகம் யுகமாய்..!-13

 13

மடியில் இருந்த லேப்டாப்பைப் பார்க்காது எங்கோ வெறித்து ஒரு விக்கர் சேரில் பிரமித்து அமர்ந்திருந்த வர்ஷாவின் முன் அமர்ந்தான் ப்ருத்வி. “வர்ஷா, ஆர் யூ ஆல்ரைட்?” என்றான் கவலையாக.

வர்ஷா நிமிர்ந்தாள். அழுதிருந்தாள் என்று புரிந்தது.

உதரம் விட்டு வெளிவந்த நாள் முதல் உடன் வளர்ந்தவள், இளவரசே! எனக்காகவே வாழ்ந்தவள், எனக்காகவே மரித்திருக்கிறாள். எப்படி மறப்பது? மறந்துவிட்டு எதற்காக நான் வாழ்வது? உங்களுக்காக என்னைத் தேற்றிக் கொள்ளத்தான் நினைக்கிறேன், முடியவில்லையே!

மனதில் அலைமோதிய வார்த்தைகளைக் கஷ்டப்பட்டு விலக்கி,

 “ஏதோ டிப்ரஷன், சரியாகிடும். அதை விடுங்க. ஆர் யூ  ஆல் ரைட்? என்னைப் பார்த்து ஏதேதோ சொன்னீங்களே!” என்றாள்.

“ஆமா, ஏதோ ராஜா-ராணி படம் பார்த்த எஃபெக்ட்னு நினைக்கிறேன். அந்த ஜ்வல்லைப் பார்த்ததும் டயலாக் வருது!” என்றான் ப்ருத்வி. இருவரும் சிரமப்பட்டுச் சிரித்தார்கள்.

“இந்த யவனிகா எங்கே போனான்னு தெரியலை, பார்த்தீங்களா?” என்று கேட்டாள் வர்ஷா.

“அருவிக்கரைப் பக்கம் அவளும் அங்கத்தும் போனாங்க. இரு பார்த்துட்டு வரேன்” என்று கிளம்பினான் ப்ருத்வி.

அங்கத் என்ற பெயரைக் கேட்டதும் வர்ஷாவின் உடல் முறுக்கியது.

தப்பித்துவிட்டோம் என்று மனப்பால் குடிக்காதே! இன்று உன் தோழி. சந்திர கிரஹணத்தன்று, நீ!

சீறிய குரல் நெஞ்சுள் கேட்டது. வர்ஷாவின் உதடு கடிபட்டது. அவள் கண்ணீர் வற்றியது.

=====================

“அங்கத்! உங்க பெயர் வித்தியாசமா இருக்கு. அத்தான் என்று சொல்றாப்ல…” 

என்று சொல்லிவிட்டு முகம் சிவந்தாள் யவனிகா.

“அப்போ அத்தான்னே சொல்லேன்” என்றான் அங்கத். 

பெண்கள்! ஃபிக்கில்-மைண்டட் இடியட்ஸ். முக அழகுக்கு விலைபோகும் டெய்ஸி. புறத் தோற்றத்தைக் கேவலம் செய்து அந்நியன் என்றும் பாராமல் அறையும் திமிர்பிடித்த வர்ஷா. இதோ, இங்கே! என் தோற்றத்தைப் பற்றிக் கவலைப்படாத ஒரு பெண் என்று நினைத்தோமே, இவள் மட்டும் என்ன? பெரிய பதவி, டாலர் மழை, அமெரிக்கச் சுவர்க்க வாசம் இதற்கெல்லாம்தானே மயங்கியிருக்கிறாள்?




விடமாட்டேன். இவர்களில் ஒருவரையும் விடமாட்டேன். வர்ஷா! உனக்கு நான் கொடுக்கப் போகும் தண்டனை யுகம் யுகமாக உன்னைத் தொடர்ந்துவரும். உன் காவல்தெய்வம் இருக்கிறாளே, அந்த டெய்ஸி, அவளுக்கும் ஒரு பாடம் புகட்டுகிறேன், இந்த மண்ணிலேயே!

இந்த யவனிகா ஆசைப்பட்ட சுவர்க்கத்தை இவளுக்குக் காட்டிவிட்டு, அப்புறம் அசல் சுவர்க்கத்துக்கு அனுப்பலாம். எனக்கு உதவியாக இருப்பதற்குப் பரிசு, சில ஆண்டுகள் ஆயுள்!

ஒரு சீரியல் கில்லர் உருவாகிக் கொண்டிருக்கிறான் என்று புரிந்துகொள்ளாமல் வெட்கமும் குதூகலமுமாக அவனிடம் பேசிக் கொண்டிருந்தாள் யவனிகா.

“அங்கத்! அங்கே வேலையை வெச்சுக்கிட்டு இங்கே அருவிக்கரையில் ரெண்டுபேரும் என்ன பண்றீங்க?” 

என்றவாறே அருகில் வந்தான் ப்ருத்வி. சடாரென்று விலகி ஓடிவிட்டாள் யவனிகா.

“சும்மா. கொஞ்சம் ரிலாக்சேஷன். அதென்ன கையில?” என்று கேட்டான் அங்கத்.

“இது… ஒண்ணுமில்ல” என்றான் ப்ருத்வி. அங்கத்தின் வர்ஷா மேலான பார்வை குறித்து அவனுக்குச் சந்தேகமும் வெறுப்பும் ஏற்பட்டிருந்ததால் அவள் பொருட்களைக்கூட அவன் தொடுவதை வெறுத்தான்.

“அட, கொடுப்பா பார்க்கலாம்” என்று பிடுங்கிக் கொண்டான் அங்கத். ரத்தினங்கள் மின்னிய அந்தப் பதக்கம் அவன் கையில் புரண்டது. அவன் நினைவும் புரண்டது.

“அட, இதில் மேகமலைக் குன்றின் இராஜ இலச்சினை இருக்கிறதே” என்ற சொற்கள் அவனை அறியாமல் அவன் வாயிலிருந்து உதிர்ந்தன.

“அங்கத்! என்ன சொல்ற?” என்று திடுக்கிட்டான் ப்ருத்வி. “உனக்கு எப்படிச் செந்தமிழ் வருது? நீ மலையாளம்னு சொன்னியே!”




“இது அவளுடையதுதானே? சொல்லுங்கள் இளவரசே! அழகுமுகம் காட்டி உங்களை மயக்கிய மோகினியுடையதுதானே? மகாராணி என்பது எத்தனை முக்கியமான பதவி, ஆயிரமாயிரம் குடும்பங்களின் நன்மையைக் கோரவேண்டிய பதவி, எத்தனை நிதானமும் கூர்மதியும் அதற்குத் தேவை என்றெல்லாம் புரிந்துகொள்ளாமல், முக அழகையும் புறத்தோற்றத்தையும் கொண்டு தனக்கு இணையைத் தேர்வு செய்யும் அறிவீனரே, கேட்டுக் கொள்ளும்! வருகிற சந்திர கிரஹணத்தன்று, அந்த மோகினியை நான் மரணப் படுகுழியில் வீழ்த்தாமல் விடமாட்டேன்!”

“அங்கத்! அங்கத்!” அலறியவனைப் பிடித்து உலுக்கினான் ப்ருத்வி. 

மிக உயரமான இடத்திலிருந்து கீழே குதித்தவனைப் போல் அங்கத்தின் உடல் தூக்கிப் போட்டது. “ப்ருத்வி… நான் இப்போ என்ன சொன்னேன்? என்ன பேசினேன்?” – கைகால் நடுங்கியது.

“நல்லா இருக்கு ரெண்டுபேரும் செந்தமிழ் பேசறது! இதுக்குத்தான் நேத்தி ராத்திரி நெட்ஃபிளிக்ஸ்ல சந்திரமுகி-2 பார்க்காதீங்கன்னு சொன்னோம்! ஒரேடியா பயந்திருக்கீங்க! ப்ருத்வி என்னடான்னா கையில் எதையோ வெச்சுக்கிட்டு நாட்டியம் ஆடறான், நீங்க லகலகன்னு ஏதோ வசனம் பேசறீங்க” 

என்றவாறே டெய்ஸியுடன் அங்கே வந்தாள் வர்ஷா. யவனிகாவும் அவர்கள் பின்னால் வந்தாள்.

வர்ஷா? எப்போதும் கண்களில் தெரியும் குழப்பம் எங்கே? பயமும் படபடப்புமான நடத்தை எங்கே? 

ப்ருத்வி கண்களாலேயே கேள்வி கேட்க, டெய்ஸி குழப்பமாகப் ‘புரியவில்லை’ என்று தலையசைத்தாள்.

தாத்தா! அவர் கொடுத்த மஞ்சளின் மகிமை இது! ஆனால்… எங்களுக்கெல்லாம் என்ன ஆனது?  இந்த அங்கத்! ‘இளவரசே!’ ‘மோகினி!’ ‘சந்திர கிரஹணம்!’ பதக்கத்தில்… அது என்ன… இலச்சினையா?

ப்ருத்வியின் கண்கள் அங்கத்தின் கையிலிருந்த பதக்கத்தின்மேல் விழுந்தன. அதைத் திரும்ப எடுத்துக் கொண்டான்.

வர்ஷா தன்னைச் சந்தித்ததிலிருந்தே மாற்றங்களை உணருகிறாள். ஆனால் அவனும்,அங்கத்தும் இந்தப் பதக்கத்தின் ஸ்பரிசத்தில்தான் மாறினார்கள். அப்படி இந்தப் பதக்கத்தில் என்ன இருக்கிறது? இதில் ஏதோ ஓலைச் சுவடிகள் பார்த்தானே! ஏதாவது ப்ளாக் மேஜிக்கா இருக்குமா?

ஒரு நிமிஷம்! வர்ஷா அந்தக் குழியினருகில் யவனா என்று அலறினாளே! அது ஒருவேளை இந்த யவனிகாவாய் இருக்குமா? அவளும் இந்தப் பிரச்சனையில் சம்பந்தப்படுகிறாளா?

“யவனிகா! இது உன் பெண்டண்ட் செயினா பாரு” என்று நீட்டினான் ப்ருத்வி.

வாங்கிப் பார்த்த யவனிகா “என்னோடது இல்லையே சார்” என்றாள் சாதாரணமாக. கழுத்தில் வைத்து ஓடையில் அழகு பார்த்தாள். “சூப்பரா இருக்கு” என்றாள்.

“சரி, அதைக் கொடு” என்றான் ப்ருத்வி. முகம் சுருங்கி அதை அவள் திரும்ப அளித்துவிட்டாள். ப்ருத்வி சிந்தித்தவாறே டெய்ஸி பக்கம் திரும்பினான்.

“இங்கே கொடு ப்ருத்வி” என்றாள் வர்ஷா சட்டென்று. அதை வாங்கித் தன் கழுத்தில் வைத்து “எனக்கு எப்படி இருக்கு? பொருத்தமா இருக்கா?” என்று கேட்டாள்.

“நல்லா இருக்கு. தா, அதைக் கவர்மெண்ட்டில் சேர்த்துடணும்” என்று பதறினான் ப்ருத்வி.

பிரமித்திருந்த அங்கத் எல்லோரும் அங்கிருந்து செல்கிறார்கள் என்று உணர்ந்து தானும் நகர ஆரம்பித்தவன், தன் அருகில் வர்ஷா இருப்பதை உணர்ந்து திடுக்கிட்டு நின்றான்.

“மரணப் படுகுழியில் தள்ளுவாயா? தள்ளேன்!” என்று மெல்லிய குரலில் சொல்லிவிட்டு நகர்ந்தவள், சட்டென்று நின்று அவனைத் திரும்பிப் பார்த்தாள். “உன்னால் முடிந்தால்!”

அங்கத் உடலில் முத்துமுத்தாக வியர்வை பூக்க, முத்துக் கோத்தாற்போல் அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள் வர்ஷா. 




==============

“நீங்களும் மேகமலைக்குப் போறீங்களாமே! சாரி, இம்மிக்ரேஷன்ல நீங்க சொன்னதைக் கேட்டேன்” என்றார் டாக்டர் லைலா அன்சாரி.

“ஆமா. நீங்க…”

“நானும். என் பேஷண்ட் ஒருவர் அங்கே இருக்கிறார். நான் டாக்டர் லைலா அன்சாரி. சைக்கியாட்ரிஸ்ட்.”

“ஓ, நான் ப்ருத்வியின் க்ராண்ட்பா.”

இருவரும் முகமன் கூறிக் கொண்டு, விமானத்திலேறி அருகருகே அமர்ந்தார்கள்.

“உங்கள் பேரன் ப்ருத்விதான் என்னை அழைத்திருக்கிறார். வர்ஷாவின் மனநிலையில் பல மாற்றங்கள் தெரிகிறதாம். அதோடு, அவள் பேசுவது போலவே ஒரு சந்தர்ப்பத்தில் அவரும் பேசியதாகச் சொல்கிறார்.”

“அவர்களுடைய முற்பிறவியை நினைவுபடுத்துவதைப்போல் அவன் எதையோ பார்த்திருக்க வேண்டும்.”

“முற்பிறவியா?”

“ஆம், டாக்டர்! அவர்களுடைய நாடியைப் பரிசோதித்ததில் எனக்கு அவர்களின் பூர்வஜன்மம் தெரிய வந்தது. அஃப்கோர்ஸ், மேற்கு இதை நம்பாது.”

“யார் சொன்னது? பாராஸைகாலஜி துறையில் முற்பிறவி குறித்த ஆராய்ச்சிகள் வெகுகாலமாக நடந்துவருகின்றன. இதுபோன்ற பெரும்பாலான கேஸ்கள் ஹிப்னாட்டிஸத்தால் பாதிக்கப்பட்டவை, அல்லது ஆழ்மனச் சிதைவுக்கு ஆளானவை என்பதும் உண்மை. உங்கள் வர்ஷா விஷயத்தில் சிறுவயதில் அவள் தன் ஊருக்குச் சென்றிருந்தபோது கேட்ட ஏதேதோ கதைகளினால் மனச்சிதைவு ஏற்பட்டிருக்கலாம் என்று ஊகித்தேன். ஷஆனால், இன்னும் இருவர் இதேபோல் பேசுகிறார்கள் என்றால்…

” டாக்டர் சிந்தனைவயப்பட்டார். “இப்போது நீங்கள் அங்கே செல்வது…” என்று இழுத்தார்.

“வருகின்ற சந்திரகிரகணத்துக்குள் நான் அங்கே இருந்தாக வேண்டும் என்பதையே இந்தக் குறிகள் சொல்கின்றன, டாக்டர். பழங்கால நினைவுகளால் பிணைக்கப்பட்டவர்கள் மூவர் மேகமலையில் கூடியிருப்பதைப் பார்த்தால்… வர்ஷாவுக்கு ஏதேனும் ஆபத்து வரலாம் என்று அஞ்சுகிறேன். இல்லையேல்…”

“சொல்லுங்கள்.”

“வர்ஷாவால் யாருக்கேனும் ஆபத்து வரலாம்.”

(தொடரும்)




What’s your Reaction?
+1
9
+1
7
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!