Serial Stories எனக்கென ஒரு வானம் 

எனக்கென ஒரு வானம்-4

4

“நான் போன் செய்தேன். அவர் எடுக்கவில்லை சார்” சங்கரனிடம் சொன்னவளின் உள்ளத்திற்குள் குற்றக் குறுகுறுப்பு. 

முதல் நாள் இரவு சித்தார்த்தனின் போனை அவள் எடுக்கவில்லையே… பொதுவாக வேலை நேரம் முடிந்த பிறகு வரும் தொழில் சம்பந்தமான போன்கள் எதையும் அவள் பேசுவதில்லைதான். என்றாலும் இது போல் மாத கடைசியில் நெருக்கடியான நேரத்தில் இருக்கும்பொழுது கஸ்டமர்களின் ஃபோன்களை அட்டென்ட் செய்வது உண்டுதான்.

 இரவு வேளைகளில் சில வழிசல்களிடம் மாட்டிக் கொண்டு சமாளித்த அனுபவங்களும் வைசாலிக்கு நிறையவே உண்டு. ஆனாலும் இப்போது இந்த போனை எடுக்கும் எண்ணம் வரவில்லை.

“போனை எடுக்கவில்லை என்றால் அவருடைய whatsapp எண்ணிற்கு நமது ஸ்கூட்டரின் வீடியோக்கள், போட்டோக்களை அனுப்பி கொண்டே இருங்கள். அவரிடமிருந்து ஏதேனும் பதில் வரும் வரை விடாதீர்கள்” சங்கரன் சொல்லிவிட்டு போக முதன்முறையாக தனது வேலையை வெறுத்தால் வைசாலி.

 இது என்ன வேலை? சீ போ வேண்டாம் என்று விரட்டுபவர்களிடம் கெஞ்சிக் கொண்டு நிற்கும் வேலை! ஒரு வருடமாக திருப்தியுடன் ஒரு சவாலுடன் அவள் செய்து வந்த வேலைதான். இன்று ஏனோ சட்டென பிடிக்காமல் போனது. ஆனாலும் அவர்களது கம்பெனி விதிப்படி போட்டோக்கள் வீடியோக்கள் விவரங்கள் என அவனுடைய whatsapp எண்ணிற்கு அனுப்பளானாள்.

 ஒரு மணி நேரம் கழித்து அவன் அவற்றை பார்த்து விட்டதாக தெரிந்தாலும் எந்த பதிலும் வரவில்லை.அவனை தொடர்பு கொண்டுதான் இருக்கிறேன் என்பதற்கு இந்த ஆதாரம் போதும் என்று திருப்திப்படுத்திக் கொண்ட வைசாலி மற்ற கஸ்டமர்களை கவனிக்க துவங்கினாள்.

இரண்டு நாட்கள் எந்த நிகழ்வுகளும் இல்லாமல் நகர கொஞ்சம் ஆசுவாசமான மனதுடன் தனது வேலைகளுக்குள் இறங்க பழகி இருந்தால் வைசாலி. ஆனாலும் அடிமனதிற்குள் நொண நொணத்தபடி எந்நேரமும் ஒரு ரயில் ஓடிக்கொண்டேதான் இருந்தது.

மூன்றாவது நாள் மாலை அவர்கள் வீட்டிற்கு வந்த சுமலதாவின் முகம் உண்மையிலேயே சோகத்தில் கசங்கியிருந்தது. சோபாவில் அமர்ந்திருந்த தந்தையை தவிர்த்து தரையில் அமர்ந்து வெங்காயம் உரித்துக் கொண்டிருந்த தாயின் மடிக்கு தஞ்சம் புகுந்தாள் சுமலதா.




” அம்மா எப்படியாவது இந்த திருமணத்திற்கு நீ சம்மதம் வாங்கி வந்தே ஆக வேண்டும் என்று என் வீட்டில் எல்லோரும் என்னை கட்டாயப்படுத்துகிறார்கள்” விம்மினாள்.

“அப்படி கட்டாயப்படுத்த இது அவர்கள் பார்க்கும் தொழில் அல்ல சுமா, நம் வீட்டுப் பெண்ணின் வாழ்க்கை” அப்பாவின் பேச்சிற்கு வைசாலி மனம் மகிழ சுமலதாவோ ஆத்திரமானாள்.

“உங்கள் இரண்டாவது மகளின் வாழ்க்கையை பார்க்கும் வேகத்தில் மூத்த மகளின் வாழ்வை மறந்து விட்டீர்கள் அப்பா” கூசாமல் தந்தையை குற்றம் சாட்டினாள்.

“எதையாவது உளறாதே”

“உளறல் இல்லை அப்பா,அங்கே நிலைமை இதுதான். எனது தம்பிக்கு உன் தங்கையை திருமணம் பேசி முடித்துவிட்டு நிதானமாக வா, என்று என்னை இங்கே அனுப்பி இருக்கிறார் என் கணவர். இதன் உள் அர்த்தம் அதற்கு முன் நீ இங்கே வராதே என்பதுதான். சொல்லுங்கள் அப்பா இனி நான் இங்கேயே இருந்து விடவா?” சுமலதா கேட்க முகுந்தன் திகைத்தார்.

தேவகி யோசனையாய் இருக்க வைசாலி குழம்பினாள். அன்று அப்பா இந்த திருமணத்திற்கு மறுத்ததும் சுமலதா உண்மையில் சந்தோஷம்தான் அடைந்தாள். அதனை வைசாலி நன்றாகவே உணர்ந்தாள். அதன் காரணமும் அவளுக்கு யோசித்ததில் புலப்பட்டு விட்டது.

 சுமலதாவை பொறுத்தவரை தன்னைவிட அழகில் படிப்பில் கீழாக இருக்கும் தங்கை வாழ்க்கையிலும் கீழாகத்தான் இருப்பாள் என்ற எண்ணம்.தங்கைக்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்று அம்மா சொன்னபோது கூட மேட்ரிமோனியல் சைட்டில் ரிஜிஸ்டர் பண்ணி வையுங்கள்மா. மாதச் சம்பளம் வாங்கும் நிறைய மாப்பிள்ளைகள் அங்கே இருப்பார்கள் என்றுதான் சொல்லிவிட்டு போனாள்.

 அப்படி தங்கையின் வாழ்க்கையை கற்பனை செய்திருந்தவளுக்கு தான் மணம் முடித்துப் போன கோடீஸ்வரர் குடும்பத்திற்கு தங்கையும் மருமகளாக வருவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்பா மறுக்கவும் சந்தோஷத்துடனே சென்றாள். ஆனால் அங்கே இந்த மாதிரி பதில் கிடைக்கும் என்பதை அவள் நினைக்கவில்லை.

தன் வாழ்வே பணயத்தில் இருப்பதை உணர்ந்தவள் தஞ்சம் என்று பிறந்த வீட்டிற்கு வந்து விழுந்து விட்டாள். அக்காவின் நிலைமையை உணர்ந்து கொண்ட வைசாலி முதலில் உணர்ந்தது பரிதாபத்தையே. பாவம் அக்கா! திருமணம் முடிந்த ஐந்து வருடங்களுக்குப் பிறகும் கூட இன்னமும் தன் இடத்தை புகுந்த வீட்டில் தக்கவைத்துக் கொள்ளாமலேயே இருந்திருக்கிறாள்.

தங்கையின் பரிதாபப் பார்வை சுமலதாவை மேலும் சீற்றத்திற்கு உள்ளாக்கியது. “எதற்காக இப்படி பார்த்து தொலைகிறாய்?அக்கா வாழ்விற்கு ஒரு ஆபத்து வந்திருக்கிறது என்று கொஞ்சமாவது உனக்கு மண்டையில் ஏறுகிறதா இல்லையா?”

“அதற்கு நான் என்ன செய்ய முடியும்?” வைசாலி உண்மையிலேயே புரியாமல்தான் கேட்டாள்.

” நீ சித்தார்த்தை திருமணம் செய்து கொள்” கருணை வள்ளல் போல் தங்கைக்கான பதிலை சொன்னாள் தமக்கை.

“இரண்டாம் தாரமாகவா அக்கா?” அழுத்தி கேட்டாள் வைசாலி.

 “என்னடி 60 வயது கிழவனை  திருமணம் செய்து கொள்ள சொல்வது போல் குதிக்கிறாயே? உனக்கும் சித்தார்த்திற்கும் நான்கே வயதுதான் வித்தியாசம்.முதல் திருமணத்தில் குழந்தை கூட கிடையாது.அதோடு எங்கள் வீட்டு வளமும் வாழ்வும் உனக்கு தெரிந்தது தானே? இதற்கு மேல் வேறென்ன வேண்டும்?”




“மனதில் நிம்மதி வேண்டும் அக்கா. ஒரு நிறைவு வேண்டும். அது உன்னுடைய புகுந்த வீட்டில் கிடைக்குமா என்று யோசித்து நீயே சொல்” 

“நிம்மதியும் ,நிறைவும் அவரவருக்கு தக்க மாறுபடும் வைஷு,எனக்கு என் வீடு தேவலோகம்தான்…அப்படி மாற்றிக் கொண்டேன் அல்லது ஏற்றுக் கொண்டேன்.எங்கேயோ ஒரு வீட்டிற்கு நீ திருமணம் முடித்து போனாலும் இந்த பொறுப்பேற்றலையோ,பொறுத்து போவதையோ செய்யத்தானே வேண்டும்.அது ஏன் என் புகுந்த வீடாகவே இருக்க கூடாது?”

வைசாலி எழுந்து கொண்டாள். அவள் மனதிற்குள் ஒரு வகை வெற்றிடம் உருவாகியிருந்தது. எங்கேயோ எதிலோ மாட்டிக் கொள்ளப் போவதாக அவள் உள் மனம் சொன்னது.

இரண்டு நாட்களுக்கு முன் சுமலதாவிடம் முறுக்காக மறுத்த தந்தை இன்று பதிலின்றி அமைதியாக அமர்ந்திருப்பது வைசாலியின் உள்ளத்திற்குள் புயலை உருவாக்கியது.

அதன் பிறகு ஒரு வார காலம் அவர்கள் வீடு கிட்டத்தட்ட நரகத்தில் இருந்தது என்று சொல்லலாம். சுமலதா வீட்டை கிட்டத்தட்ட அப்படி மாற்றி இருந்தாள். இளைய மகளின் வாழ்க்கை முக்கியம் என்றால் உங்களுக்கு மூத்த மகளைப் பற்றி கவலை இல்லை என்றுதானே அர்த்தம் இதுதான் அவளுடைய வாதத்தின் முக்கிய பாகம். இதனை மையமாக்கி வேறு வேறு வார்த்தைகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் அப்பாவையும் அம்மாவையும் குத்தி கிழித்துக் கொண்டிருந்தாள். இடையிடையே வீட்டைப் பற்றிய குறை கூறல் வேறு. இங்கே இப்படி இருக்க வேண்டியவளா நான் என்பது போன்ற பேச்சுக்கள்.

வைசாலி தனது பக்கம் மிகவும் பலவீனம் ஆகிக்கொண்டே வருவதாக உணர்ந்தாள். அன்று இரவு பாதி தூக்கத்தில் தண்ணீர் குடிப்பதற்காக எழுந்து வந்தவள் அம்மா அப்பாவின் அறைக்குள் இருந்து வந்த சத்தத்திற்கு தயங்கி  நின்றாள்.சிறு விசும்பலும் முக்குறுஞ்சலும் கவனித்து கேட்டவள் அதிர்ந்தாள்.

 அப்பா அழுகிறாரா என்ன? அவள் அறிந்த அப்பா கம்பீரமான நிமிர்வான ஆண். வைசாலியின் பதின்ம வயதுகளில் அவளுடைய ஹீரோ நிச்சயம் அப்பாதான். தன்னைவிட ஒரு படி மேலாக அக்காவை அவர் போற்றுவது தெரிந்தாலும் தனது ஆதர்ச ஆணாக அப்பாவைத்தான் வரித்து வைத்திருந்தாள். அவர் துவண்டு அழுகிறாரா?

” இரண்டு கண்களில் ஒன்றுதான் உனக்கு உண்டு. எது வேண்டும் என்று கேட்டால் நான் என்ன சொல்வேன் தேவகி?” புலம்பியபடி வெகு நிச்சயமாக அழுது கொண்டிருந்தார் அப்பா.அம்மா அவரை சமாதானம் செய்து கொண்டிருந்தாள்.

வைசாலியின் கண்கள் அவளை அறியாமலேயே நீரைப் பொழியத் துவங்கின.




What’s your Reaction?
+1
51
+1
24
+1
3
+1
1
+1
0
+1
1
+1
6
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!