Serial Stories

நீ தந்த மாங்கல்யம்-31

( 31 )

எதிர்பாராத அதிர்ச்சி மூளையை தாக்க , விழிகள் தானாக சொருகிக் கொள்ள கீழே சரிந்த முகிலினியை தனது தோளில் தாங்கினாள் வைஷ்ணவி .எப்படிப்பட்ட நேரத்தில் மயங்குகிறாள் பார் .ஆத்திரத்துடன் அவளை உலுக்கினாள் .

” முகிலினி ..எழுந்து கொள்ளடி .இங்கே உன் வாழ்க்கை இங்கே பறிபோய் கொண்டிருக்கிறது ” அவள் காதிற்குள் முனங்கியபடி கன்னங்களில் பட்டென தட்டினாள் .

விழிகளை விரித்த முகிலினி முன் அந்த மங்கலநாணுடன் சௌம்யாவை நெருங்கிக் கொண்டிருந்த யதுநந்தன் தென்பட்டான் .” நிறுத்துங்கள் .இதனை நான் அனுமதிக்க ….” என்ற முகிலினியின் வேக குரல் அமுங்கியது கீர்த்திவாசனின் பதட்ட குரலில் .

” அண்ணா நம் கோவில் பின்வாசல் அருகில் ஏதோ ஆக்ஸிடென்ட் .அந்த ஆள் குடித்துவிட்டு வந்திருப்பானோ என்னவோ ? ஒரே ரத்தம் …உயிர் இருக்கோ ? என்னவோ …?” நிறைய கவலை அவன் குரலில் .

மங்கலநாணை கையில் வைத்தபடி யதுநந்தன் யோசனையில் மூழ்க, மோகனரங்கம் வெளியே ஓடுகிறார் .

” என்ன சார் இந்த மங்கலநாணை பற்றி நிறைய சொன்னீர்களே .இது மேடத்திற்கு ஒத்துவராது போலவே .சகுனம் ரொம்ப நன்றாக இருக்கே ” என பாட்டியம்மாவை நோக்கினாள் காருண்யா .

பாட்டியம்மாவின் முகத்தில் கவலை தெரியத் தொடங்கியது .” அம்மா அதெல்லாம் ஒன்றுமில்லைம்மா .இதெல்லாம் சின்ன விசயம் .நீங்கள் பெரியதாக எடுத்து கொள்ளாதீர்கள் ” சந்திரவதனா தன் தாயை சமாதானப்படுத்த முனைந்தாள் .

அப்போது உள்ளே ஓடி வந்த மோகனரங்கம் ” சௌமிம்மா …அங்கே விபத்தில் அடிபட்டு கிடப்பது நம்ம குணா தம்பிம்மா .உன் புருசன் .ஆள் இருக்காரா ..போய்ட்டாரோ தெரியலையே ? அலறினார் .

” குணா ….” கத்தியபடி வாசலுக்கு ஓடினாள் சௌம்யா .

” சௌமி …நில்லு …” அவளை முந்திக்கொண்டு ஓடிப்போய் அவளை நிறுத்த முயன்றாள் சந்திரவதனா .

” உனக்கென்ன பைத்தியமா ? அவனுக்கும் ..உனக்கும் விவாகரத்து ஆயிடுச்சு .உங்களுக்குள்ள எந்த சம்பந்தமும் இல்லை .ஒழுங்காக உள்ளே வந்து தாலி கட்டிக்கோ ” அவள் கைகளை பிடித்து உள்ளே இழுத்தாள் .

” இல்லைம்மா …இல்லை ..என்னால் குணாவை மறக்க முடியாது .அவர் இடத்தில் என்னால் வேறு யாரையும் எந்த காரணத்திற்காகவும் வைத்து பார்க்க முடியாது .அவர்தான் எனக்கு எல்லாம் ….” வெளியே போக துடித்தாள் சௌம்யா .

” சௌமி கொஞ்சம் யோசிடி .இதோ நம் நந்துவை பார் .அருமையான பையன் .நீ முதலில் தாலி மட்டும் கட்டிக் கொள் .மற்றதை பிறகு பார்க்கலாம் .வா …வா ….என்னங்க நீங்க வந்து சொல்லுங்க “,

” நந்து கையால் தாலியா ? இல்லைம்மா அது நடக்காது .என் புருசனாக நான் நந்துவை நினைத்து பார்த்ததேயில்லையே.அவன் அந்த மாதிரி எண்ணத்துடன் என்னை தொட்டால் எனக்கு உடம்பெல்லாம எரிகிறதே .என்னால் குணாவுடன் மட்டும்தான்மா மனைவியாய் வாழமுடியும் .இனியும் என் வாழ்வை கெடுக்காதீர்கள் ” என்றவள் சந்திரவதனாவை பிடித்து தள்ளிவிட்டு காற்றாக பறந்து விட்டாள் .

அவள் தள்ளியதில் கீழே விழுவது போல் போன சந்திரவதனா சுதாரித்து நின்று யதுநந்தனிடம் வந்து ” நந்து ..நீ எதுவும் தப்பாக எடுத்துக் கொள்ளாதே .அவள் சிறு பெண் .இதோ இப்போதே நாங்கள் இருவரும் போய் அவளை சமாதானம் பண்ணி அழைத்து வந்து விடுகிறோம் .நீ ஒரு ஐந்து நிமிடம் வெயிட் பண்ணு .ஏங்க நீங்களும் வாங்க ” என்றபடி வாசலை நோக்கி சென்றவள் அப்படியே உறைந்தாற்போல் ஒரு நிமிடம் நின்றாள் .

பொம்மை போல் திரும்பி அனைவரையும் பார்த்தாள் .நம்ப முடியாத ஆச்சரியத்துடன் பார்த்தபடி நின்றிருந்தனர் முகிலினியும் , வைஷ்ணவியும் .

தாள முடியாத அதிர்ச்சியில் நின்றிருந்தார் பாட்டியம்மாள் .

சாதித்துவிட்ட மகிழ்ச்சியில் நின்றிருந்தனர் மோகனரங்கம் , கீர்த்திவாசன் , காருண்யா , யதுநந்தன் .

மெல்ல நடந்து வந்து அவர்கள் முன் தரையில் அமர்ந்தாள் சந்திரவதனா .அவள் முன் வந்து நின்று ” மாமாவை எங்கே ? ” என்றான் யதுநந்தன் .

கையில் துப்பாக்கியோடு தன் முன் கால்களை அகற்றிபடி கண்ணில் சிறிதும் கருணையின்றி நின்ற அண்ணன் மகனை அச்சத்தோடு நோக்கினாள் சந்திரவதனா .

” இங்கே இருக்கிறார் சார் “காருண்யா தள்ளி விட்டதில்  மனைவியருகே வந்து விழுந்தார் அவள் கணவர் ஈஸ்வரமூர்த்தி .

” கோவிலுக்கு பின்னால் மறைந்து நின்று கொண்டு இந்த கல்யாணத்தை வீடியோ எடுப்பதற்கான ஏற்பாடுகளில் இருந்தார் . அவர் மகள் திருமணமாயிற்றே .பிடித்து இழுத்து கொண்டு வந்தேன் ” நக்கலடித்தாள் .




துப்பாக்கியை அவர் நெற்றியில் பொருத்தினான் யதுநந்தன் .”நடந்ததையெல்லாம் ஒரு வார்த்தை விடாமல் சொல்லுங்கள் ” என்றான் .

ஈஸ்வரமூர்த்தியும் , சந்திரவதனாவும் ஆடம்பர பேர்வழிகள் .ஈஸ்வரமூர்த்திக்கு அவரது தந்தை வீட்டு வழி வந்த சொத்துக்களையும் , சந்திரவதனா பங்குக்கு அவள் தந்தை தந்த சொத்துக்களையும் ஐந்தே வருடங்களில் முடித்து விட்டு குழந்தையுடன்  அண்ணன் மணிமாறன் வீட்டு படியேறினர் .

மணிமாறனும் , காயத்ரியும் பாசமாகவே அவர்களை அணைத்து கொண்டனர் .மணிமாறன் தொழிலிலும் , காயத்ரி வீட்டிலும் அவர்களுக்கு உரிய இடமளித்தாலும் , அது அந்த இருவருக்கும் போதவில்லை .

எப்படி போதும் ? அவர்கள் குறி அந்த சாம்ராஜ்ஜிய நாற்காலியாயிற்றே .அதிலேறி அமர்வதற்குரிய வழிக்காக தீவிர யோசனையிலிருந்தார் ஈஸ்வரமூர்த்தி .

ஒத்த வயதுடன் கள்ளங்கபடமின்றி விளையாடிக் கொண்டிருந்த குழந்தை செல்வங்கள் கண்ணில் பட இவர்களின் இணைப்புதான் தனக்கு ராஜா பதவியை தருமென எண்ண தொடங்கினார் .தனது எண்ணத்தை பலவிதங்களில் வீட்டினரிடம் விதைத்து வைத்தார் .

பெரிதான எதிர்ப்பு யாரிடமும் இல்லை .குழந்தைகள் காதில் இப்போதைக்கு இந்த விசயம் போடப்பட வேண்டாமென்பது காயத்ரியின் அபிப்ராயமாக இருக்க , அனைவரும் ஒத்துக் கொண்டனர் .

அதுகளுக்கென்ன தெரியும் .கல்யாணம் பண்ணிக்கோன்னா பண்ணிக்கிட போகுதுகள் என்ற ஈஸ்வரமூர்த்தியின் அலட்சிய எண்ணம் தவறாக போனது .

தனது மேற்படிப்பிற்காக யதுநந்தன் பள்ளி முடிந்ததுமே வெளிநாடு சென்றவன் , படிப்பு முடிந்தும் இங்கு வரும் எண்ணமேயின்றி படிப்பிற்கேற்ற வேலை ஒன்றுடன் அங்கேயே தங்கிவிட்டான் .

மணிமாறனிடம் திருமண பேச்சை எடுத்த போது பையன் மனம் மாறி இங்கே வரட்டுமென தள்ளி போட்டார் .அதற்குள் இங்கே  தன்னை சிம்மாசனம் ஏற்றப் போகும் தேவதை என கனவு கண்டு கொண்டிருந்த அவர் மகள் ஒரு காதல் கதையோடு வந்து நின்றாள். யதுநந்தனுக்கும் , தனக்கும் அப்படி ஒரு எண்ணமேயில்லை என அடித்து உரைத்தாள் .

அம்மா , அப்பா தீவிரமாக எதிர்க்க , அத்தை , மாமா, பாட்டி  மற்றும் யதுநந்தன் உதவியுடன் மனங்கவர்ந்தவனை மணம் முடித்துக் கொண்டு மும்பை பறந்து விட்டாள் சௌம்யா .

மனம் கொதித்து நின்றனர் சந்திரவதனாவும் , ஈஸ்வரமூர்த்தியும் .அன்று நால்வருமாக காரில் சென்று கொண்டிருக்கையில் இது விசயமாக மணிமாறனுக்கும் , ஈஸ்வரமூர்த்திக்கும் தகராறு வந்துவிட்டது .

” என்னுடைய இருபது வருட கனவை எளிதாக தகர்த்து விட்டீர்களே .” என ஈஸ்வரமூர்த்தி உளறி வைக்க ,

” அப்போது சொத்துக்காகத்தான் இந்த திருமண எண்ணம் உங்களுக்கு வந்ததா ? “, என மணிமாறன் மடக்க ,

தன் குட்டு வெளியான ஆத்திரத்தில் பின்சீட்டில் அமர்ந்திருந்த ஈஸ்வரமூர்த்தி துப்பாக்கியை மணிமாறன் கழுத்தில் வைத்து ஆமாம் எனக்கு சொத்துதான் முக்கியம் .இதோ பத்திரங்களை எப்போதும் கைவசம் வைத்துக் கொண்டேதான் இருப்பேன் .இப்போதே இதில் கையெழுத்து போடு என மிரட்ட , அவர் மறுக்க ,

இந்த களேபரத்தில் கார் பள்ளத்தை நோக்கி ஓட ஆரம்பித்தது .முதலில் சுதாரித்த ஈஸ்வரமூர்த்தி , சந்திரவதனாவை கதவை உடைத்து வெளியே தள்ளி விட்டு தானும் குதித்து விட்டார் .

மணிமாறனும் , காயத்ரியும் காரோடு பள்ளத்தில் விழுந்து நொறுங்கினார்கள் .இனி நம் ராஜ்ஜியம்தான் என சந்திரவதனாவும் , ஈஸ்வர மூர்த்தியும் நினைத்தாலும் போலீஸ் , கேஸ் என்று வந்தால் தாங்கள் மாட்டக்கூடாது என ,அனைவரின் பரிதாபத்தையும்  சம்பாதிக்க , தான் இறந்ததால் சந்திரவதனா விதவை என்றும் ,அவளுக்கு கண் பார்வை  போய்விட்டது என்றும் நாடகம் தயார் செய்தார் .

இது கொலையென்று மற்றவர்கள் கண்டறியும் முன் நாமே அப்படி சொல்லி விடுவோமென , சதாசிவம்தான் ஆளை அனுப்பி இந்த விபத்தை செய்தாரெனவும் , சதாசிவத்தின் காரை கடைசியாக பார்த்ததாக சந்திரவதனா மூலம் சொல்ல வைத்தார் .

இதற்கு அவரது டாக்டர் நண்பரொருவர் உதவினார் .யதுநந்தன் எப்படியும் இங்கே வர போவதில்லை .பாட்டியம்மாள் அதிக நாட்கள் இருக்க போவதில்லை .கொஞ்ச நாட்கள் போகவும் தான் நினைவுகள் மறந்து எங்கோ  உயிரோடு இருந்ததாக கூறி மனைவியுடன் சேர்ந்து கொள்வோம் என்பது அவரது திட்டம் .ஏனென்றால் இவருடைய உடல்தான் போலீஸாருக்கு கிடைக்கவில்லையே .

ஆனால் பெற்றோர் சாவிற்கு வந்த யதுநந்தன் மீண்டும் வெளிநாடு போகாமல் இங்கேயே தங்கியதோடு மட்டுமின்றி தொழிலையும் காருண்யாவை துணையாக வைத்துக் கொண்டு நோண்ட துவங்கினான் .

அவரது தில்லுமுல்லுகள் வெளியே வந்து விடுமோ என பயந்து , வெளியிலிருந்தபடியே யதுநந்தனை கொல்வதற்கு ஏற்பாடுகள் செய்ய துவங்கினார் .அவன் தனது மோசடிகளை கண்டு கொண்டு சந்திரவதனாவை வீட்டை விட்டு அனுப்பி விட்டால் போட்ட திட்டமெல்லாம் வீணாகி விடுமே .எனவே அவனை ஒழித்து கட்டிவிட்டு ஆளில்லா சொத்துக்கு வாரிசாக எண்ணினார் .

ஆனால் திடீரென ஒருநாள் யதுநந்தன் காணாமல் போனான் .அவன் இருப்பிடம் அறியாமல் தவித்துக் கொண்டிருக்கையில் , கணவனுடன் சண்டையென திரும்பி வந்தாள் சௌம்யா .இப்போது வீடு இருந்த நிலையில் அதிர்ந்தாள் அவள் .

இப்போது ஈஸ்வரமூர்த்தி யதுநந்தனை கொல்லும் எண்ணத்தை கைவிட்டார் .மீண்டும் தன் மகளுக்கு அவனை
மணமுடித்து வைத்து , சொத்துக்களை அடைய எண்ணினார் .தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமலேயே சந்திரவதனா மூலம் மகள் நெஞ்சில் நஞ்சேற்றியவர் யதுநந்தனையும் தேடினார் .

ஆனால் அவனாகவே வெளியே வந்த பின்தான் அவனை ஈஸ்வரமூர்த்தியால் அறிய முடிந்தது .அவனுக்கு அங்கே புதிதாக ஒரு காதல் முளைத்திருப்பதை அறிந்து அதிர்ந்தார் .

அதனை முளையிலேயே கிள்ள முயன்றார் . மீண்டும் வீடு திரும்பிய யதுநந்தன் சகஜமாக சௌம்யாவுடன் பழக ,தனக்கு நல்ல நேரம் வந்து விட்டது என எண்ணிக்கொண்டிருந்த போது , திடீரென யதுநந்தன் முகிலினியை மணம் முடித்துக் கொண்டு வந்து நின்றான் .

வேறு வழியின்றி ஆரம்பத்திலிருந்து ஈஸ்வரமூர்த்தியும் , சந்திரவதனாவும் வர வேண்டியிருந்தது .

ஒப்புதல் வாக்குமூலம் போல் கொடுத்து முடித்தார்கள் ஈஸ்வர மூர்த்தியும் , சந்திரவதனாவும் .

துயரம் தோய்ந்த முகத்துடன் அவர்கள் எதிரே வந்து நின்றாள் முகிலினி




What’s your Reaction?
+1
24
+1
15
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!