Serial Stories கனவு காணும் நேரங்கள்

கனவு காணும் நேரங்கள்-3

3

*****************

பள்ளியின் முதல் வகுப்பிலிருந்து இருவரும் ஒன்றாகப் படித்தார்கள் என்றாலும், மூன்றாம் வகுப்பு படிக்கும் போதுதான் தங்கமும், முத்தழகியும் நெருக்கம் ஆனார்கள். 

முத்தழகிக்கு தாய் இல்லை என்ற செய்தியும் அப்போதுதான் தங்கம் தெரிந்து கொண்டாள். 

வழித்துப் பின்னி, ஒற்றை ஜடையாகத்தான் போட்டுவருவாள் முத்தழகி. 

“ஏண்டி இப்படி வளிச்சி பின்னிட்டுவர? என்ன மாதிரி அழகா இரட்டை ஜடை பின்னிட்டு வரலாம், இல்ல?” என்று தெரியாமல் தங்கம் கேட்க, விக்கி விக்கி அழ ஆரம்பித்தாள் முத்தழகி. 

தங்கம் தான் எதோ செய்து விட்டாள் என்று பள்ளியில் ஆசிரியைகள் உள்பட நினைத்து, முத்தழகியைப் பற்றித் தெரிந்த ஒரு ஆசிரியை தங்கத்தை ஒரு அடியும் வைத்து விட்டாள். 

ஒருவாரம் இருவரும் பேசவே இல்லை. பிறகு ஒரு வழியாய் மறந்து மறுபடி பேச ஆரம்பித்த பொழுது தான் முத்தழகிக்கு அம்மா இல்லாத விஷயம் தங்கத்துக்குத் தெரியும். 

அதன் பிறகுதான் இருவரும் நெருங்கிய தோழிகள் ஆனார்கள். அதன் பிறகு அவர்களுக்குள் எந்த சண்டையும் வந்தது கிடையாது. 

முத்தழகி அழுதால் தங்கத்துக்குத் தாங்காது. அவளால் எதுவும் செய்ய முடியாவிட்டால், அவளும் அழ ஆரம்பித்து விடுவாள். 

இன்று ஆற்றங்கரையில் அவள் திருமணத்தை நினைத்து அழ ஆரம்பிக்கவும், சில நிமிடங்கள் தவித்தாள் தங்கம். அதற்குள் தூரத்தில் யாரோ வருவது தெரிந்ததும், “ஏய் அழகி, யாரோ வராங்க பாரு! முதல்ல கண்ணத் தொட! அப்றம் பேசிக்கலாம்” என்று அதை வைத்தே முத்தழகியின் அழுகையை நிறுத்தப் பார்த்தாள். அவளும் அவசரமாய் கண்களைத் துடைத்தாள். 

இருவரும் அவசரமாய் குடங்களை நிரப்பிக் கொண்டார்கள். 

கொஞ்ச நேரம் பேசாமல் வந்தார்கள். “ஏண்டி, அழகி, மாப்ளயைப் பிடிச்சிருக்கா? பாக்க எப்டி இருக்காரு? “

என்றாள் தங்கம். 




“யாரு பாத்தா? எங்க அப்பாவும், அப்பத்தாளுமே பாக்கலையாம். எப்பவோ சின்ன வயசுல பாத்ததுன்னு சொன்னாங்க” 

“அப்றம் எப்பிடிடீ அதுக்குள்ள கல்யாணம் பேசறாங்க” ஆச்சரியத்துடன் கேட்டாள் தங்கம். 

” பழச நினைச்சுகிட்டு சிவகாமி அத்த திடீர்னு வந்தாங்க. பையனுக்குப் பொண்ணெடுக்கும் போதுதான் சொந்த ஜனம் அவங்களுக்கு ஞாபகம் வந்திருக்கு. வந்தாங்க. பாத்தாங்க. பையனைக் கூட்டிட்டு வரேன்னு போய்ட்டாங்க. அதுக்குள்ளதான் அப்பத்தா குதியாய்க் குதிக்கறாங்க. நீ சொல்றதையெல்லாம் கேட்டாக்கா எனக்கு பயமா இருக்கு. எனக்கு டவுனெல்லாம் ஒத்து வருமான்னு பயமா இருக்கு “

முத்தழகி மறுபடி கண்ணைக் கசக்க ஆரம்பித்தாள். 

” உஷ்! அழாதடீ! இன்னும் மாப்ளயே பாக்கல,அதுக்குள்ள என்ன! பாப்போம். வரட்டும். உனக்குப் பிடிச்சா பாப்போம். இல்லன்னா சொல்லிடு”

” அப்பா ஒண்ணும் சொல்ல மாட்டாரு! அப்பத்தா பிடிச்சா பிடிச்சதுதான். அவங்க ஒத்துக்கணுமே”

“நீ எங்கிட்ட சொல்லு. நான் எங்க அப்பாகிட்ட சொல்லி ஒத்துக்க வைக்கறேன்”

பேச்சு ஆரம்பிக்கும் போது கேலியும், கிண்டலுமாக ஆரம்பித்தது, வீடு வந்து சேரும் போது கவலையையும், மனவருத்தத்தையும் கொடுப்பதாக முடிந்தது. 

மாலையில் மீண்டும் சந்திப்பதாக சொல்லிக் கொண்டு அவரவர் வீடு நோக்கிப் போனார்கள். 

மகள் குடத்துடன் வீட்டுக்குள் நுழைவதை வாசல் முற்றத்தில் நாற்காலியில்  அமர்ந்து கொண்டிருந்த ராமசாமி பார்த்தார். எதிரில் நாலைந்து ஆட்கள் நின்று கொண்டிருந்தார்கள். எதோ பஞ்சாயத்து நடந்து கொண்டிருந்திருக்க வேண்டும். 

தங்கத்தைப் பார்த்ததும், “ஏன் தாயி! நீ என்னத்துக்கு குடம் எடுத்துட்டுப் போறே! உங்காத்தாளையே வெளியே அனுப்ப யோசனை செய்யறேன். உன்ன அனுப்பிச்சுட்டு அவ என்ன பண்றா!” என்று கேட்டவாறே உள்நோக்கி, “பஞ்சவர்ணம், பஞ்சவர்ணம்” என்று குரல் கொடுத்தார். 

“வாரேன்! வாரேன்! வாசல்ல உக்காந்து என்னாத்துக்கு இப்படி ஏலம் போடறீங்க”என்று வெளியே வந்த பஞ்சவர்ணம் தங்கம் குடத்துடன் நிற்பதைப் பார்த்து,” ஏம்புள்ள! ஆத்துல ஓடற தண்ணிய ஒரு குடம் மோந்தார இம்புட்டு நேரமா! எப்போ போன நீ! இது என்ன நீ படிக்கற சென்னைன்னு நினைப்பா? எப்ப வேண்ணா போவேன், எப்ப வேண்ணா வருவேன்றதுக்கு! “

மளமளவென பேசிக்கொண்டே போனவளை இடை மறித்தது ராமசாமியின் குரல். 

“ஏய்! நிறுத்து! நிறுத்து! நான் உன்ன கேக்கக் கூப்டா, நீ எம்ட பொண்ண வசை பாடறியா?அவள அனுப்பிச்சுட்டு உனக்கென்ன வேல? அனுப்புச்சியே, கூடவாச்சும் வேற யாரையாவது அனுப்பணும்னு தோணலியா உனக்கு! “

” க்கும், நான் சொன்னா அப்படியே நீங்களும், உங்க பொண்ணும் முதல்ல கேட்டுட்டுத் தானே வேற வேல பாப்பீங்க! இவ படிச்சு என்னப் பண்ணப் போறா, சீக்கிரம் கல்யாணத்தைப் பண்ணிடுவோம்னு சொன்னேன் கேட்டீங்களா! “

” இவ ஒருத்தி! நான் உன்ன என்ன கேக்கறேன், நீ என்ன பதில் சொல்ற! பொண்ண ஏண்டி தனியா அனுப்பிச்சேன்னு கேட்டா, அவளுக்கு ஏன் கல்யாணம் பண்ணலேன்னு பதில் சொல்ற! என் பொண்ணோட அழகுக்கும், அறிவுக்கும் நம்ம ஒறவுல யாருடி இருக்கா? தங்கம் மொதல்ல அவ ஆசைப்படி படிப்ப முடிக்கட்டும். அப்றம் தேடுவோம் மாப்ளய”

” ஏன், என் அண்ணன் பையனுக்கு என்ன கொறச்சலாம்? “

இவர்கள் பேச ஆரம்பித்ததுமே குடத்தோடு உள்ளே போய்விட்ட தங்கம், குடத்தை வைத்துவிட்டு, கைகளை துடைத்தபடி வெளியே வந்தாள். இன்னும் அவர்கள் பேசி முடிக்காததைக் கண்டவள்,” அப்… பா! நான் தனியா போலப்பா! முத்தழகியோடதான் போனேன். நான் என்ன சின்னக் குழந்தையாப்பா? நாம் பொறந்து வளர்ந்த ஊர்ல எனக்கென்னப்பா பயம்? தேவையில்லாம அம்மாவை ஏன் கோச்சுக்கறீங்க?” எனவும்

“அத அப்பவே சொல்லக் கூடாதா தாயி! பாரு! உங்க ஆத்தா தேவையில்லாம கத்திட்டு கிடக்கறா!”என்றார் ராமசாமி. 

” சும்மா கிடந்தவளைக் கூப்பிட்டு, கத்த வெச்சுட்டு… ஏம் பேச மாட்டீங்க! இதோ! இவ வயசுக்காரி தானே முத்தழகி. வீட்டோட இருக்கறதால தானே அப்பத்தா பேச்சு கேட்னு கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டா! “என்று கிடைத்த சந்தர்ப்பத்தை விடாமல் பஞ்சவர்ணம் பேச ஆரம்பித்தாள். 

“இப்போ என்னாங்கறே! பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணனும் அவ்வளவு தானே

விடு! தரகர வரச் சொல்லி நல்ல மாப்பிள்ளையைத் தேடுவோம். அதுக்குள்ள இந்த வருட படிப்பையும் பொண்ணு முடிச்சுடுவா! “

என்று பேச்சை முடித்தார் ராமசாமி. 

“என் அண்ணன் பையன்….” 

பஞ்சவர்ணம் பேச்சை முடிக்கு முன்பே” உனக்கு ஒரு வாட்டி சொன்னா தெரியாதா? அந்தக் காலிப் பயலுக்கு எம் பொண்ணத் தரமாட்டேன்”என்று முடிவாகக் கூறவும் பஞ்சவர்ணம் முகத்தை நொடித்தபடி உள்ளே போனாள். 

” அப்பாடி! மாமா பையன் கிட்ட இருந்து தப்பிச்சிட்டோம்! ஆனா, டவுன்  மாப்பிள்ள தான் வேணும்னா ஒத்துக்குவாங்களா! தெரியல்லையே! “

மனசுக்குள் கனவுகள் விரிய, அதற்குள் ஆனந்த் தெரிந்தான். 

அவனை முதன்முதலாக சந்தித்த நிகழ்ச்சி ஞாபகம் வந்தது. 

நேரம் கிடைக்கும் போது தோழிகளுடன் வெளியே போவாள் தங்கம்.அண்ணாசாலையில் ஹிக்கின்பாதம்ஸ் புத்தகக் கடைக்குச் சென்றிருந்தார்கள். 

அங்கிருந்து மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குப் போய்விட்டு, சரவணபவனில் சாப்பிட்டு விட்டு ஹாஸ்டலுக்குத் திரும்புவதாகத் திட்டம் போட்டார்கள். 

சாலையைக் கடக்கும் போது வந்தவர்களில் மூன்று பேர் சாலையைக் கடந்து விட, தங்கத்துடன் கைகோர்த்தபடி வந்த மீனா, பஸ் வருவதைப் பார்த்து சாலையைக் கடக்க முடியாது என நினைத்து நின்று விட்டாள். அவள் கூட வருகிறாள் என்று நினைத்து நடக்க முயன்ற தங்கம் கால் தடுக்கி கீழே விழுந்தாள். வேகமாக வந்து கொண்டிருந்த ஸ்கூட்டர் அவள் அருகில் சடன்பிரேக் போட்டு நின்றது. 




நிறுத்தும் போதே ஓரமாய் நிறுத்திவிட்டவன், சட்டென்று கீழிறங்கி அதே வேகத்தில் அவளைத் தூக்கி நிறுத்தி சாலை ஓரத்துக்கு கூட்டி வந்து, அருகிலிருந்த டீக்கடையின் நாற்காலியின் உக்கார வைத்தான்.

அருகிலிருந்த மீனாவிடம், “காயம் பட்டிருக்கா பாருங்க, நான் போய் மாத்திரையும், ஆயின்மென்டும் வாங்கி வரேன்” என ஓடினான். 

யோசனையோடு தண்ணீர் பாட்டிலும் வாங்கி வந்து, “இந்த மாத்திரையைப் போட்டுக்கோங்க.பெயின் கில்லர் தான். ” என்று நீட்டினான். 

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். போலாம் வாடி” என்று கூறிக் கொண்டே எழ முயன்றவள்,” ஆ, ஸ்ஸ்ஸ்”என முனகிக் கொண்டே மறுபடி உட்கார்ந்து விட்டாள். 

அவளை முறைத்தபடியே, “சொன்னாக் கேளு. இப்டி வலியோட போனா வார்டன் கிட்ட வேற திட்டு வாங்கணும்.” என்று அவளிடமும், “நீங்க குடுங்க “

என்று அவனிடமும் சொல்லியவாறு  கைநீட்டி மாத்திரையை வாங்கிக் கொண்ட மீனாவின் அதட்டலில் தங்கம் மாத்திரையை வாங்கி விழுங்கினாள். 

“எப்படிப் போப்போறீங்க” என்று அக்கறையாய் கேட்டு ஆட்டோ பிடித்துத் தந்தான். அவர்கள் ஆட்டோவில் ஏறி அமர்ந்தது நன்றி சொன்னதும் அவசரமாய் அவள் பெயரைக் கேட்டான். அவர்கள் சொல்லி விட்டு அவன் பெயரைக் கேப்பதற்குள் ஆட்டோ டிரைவர் வண்டியைக் கிளப்பி விட்டார். 

ஹாஸ்டலுக்குத் திரும்பி வந்தவளுக்கு, அவன் பெயரைக் கூட கேட்டுக் கொள்ளாமல் வந்தது வருத்தமாக இருந்தது. சொற்ப நேரம் தான் அவனுடன் பேசினாள் என்றாலும், அதை நினைத்துப் பார்க்கும் போது மனம் முழுக்க இனித்தது. 

அவன் தடாலென தன்னைத் தூக்கி நிறுத்தியதும், பதறிப் போய் மருந்து வாங்கிக் கொண்டு வந்ததும், ஆயின்மென்ட் தடவிக் கொள்ளச் சொன்னதும் நினைத்தாலே மகிழ்ச்சி வந்தது. 

முதலில் சாதாரணமாகத்தான் நினைத்துப் பார்த்தாள். “நேற்று இல்லாத மாற்றம் என்னது! காற்று என்னோடு ஏதோ சொன்னது! இதுதான் காதல் என்பதா!” தன்னையறியாமல் பாடிக் கொண்டிருந்தவள் திடுக்கிட்டாள். எனக்கா! காதலா! ஊஹீம்! நான் படிக்க வந்திருக்கிறேன். அவன் யாரோ! நான் யாரோ! அவனை இனிமேல் எங்கே பார்க்கப் போகிறேன்! இவ்வளவு பெரிய சென்னையில் விலாசம் இருந்தாலே தேடிப் பிடிப்பது கஷ்டம்தான்! இதில் அவனை மறுபடி எங்கே பார்க்கப் போகிறேன்! அதோட அம்மாக்கு நான் யார் கூடயாவது பேசினேன்னு தெரிஞ்சாவே கொன்னு போட்டுடுவாங்க”

பெருமூச்செறிந்த தங்கம் தன் நினைவுகளை மடை மாற்ற முயற்சி செய்தாள். 

ஆனால் இரண்டு வாரங்கள் கழித்து துணிக்கடையில் மறுபடி அவனைப் பார்க்க நேர்ந்தது. தூரத்தில் அவனைப் பார்த்தவளுக்கு

” அவன் தானா?” என்று சந்தேகமாக இருந்தது. அன்று அடிபட்ட வலியோடு சிறிது நேரமே பார்த்ததில் முகம் மறந்து போயிருந்தது. 

தானாகப் போய்ப் பேசுவதில் தயக்கம் இருந்ததால் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். 

“உதவி செஞ்சதுக்கு நன்றி கூட கிடையாதா? ஒண்ணுமே சொல்லாமல் அன்னிக்குப் போய்டீங்களே!” குரல் அருகில் கேட்டதும் மனதில் தோன்றியது தயக்கமா? மகிழ்ச்சியா என்று புரியாமல் நின்றிருந்தாள். 

பக்கத்தில் இருந்த மீனா நறுக்கென்று கையில் கிள்ளினாள். “இவர் தாண்டி உனக்கு அன்னிக்கு உதவி செஞ்சவரு”என்று அவளிடம் கூறிவிட்டு,” மன்னிச்சுக்குங்க! அன்னிக்கு பதட்டமா இருந்ததால உங்க பேரைக் கூட கேக்காம போய்ட்டம்.” என்று அவனிடம் மன்னிப்புக் கேட்டாள் மீனா. 

“போகட்டும்! அதுக்குத் தண்டனையா, இன்னிக்கு என்னோட சேர்ந்து காப்பி சாப்பிடறதா சொன்னாதான், என் பேரைச் சொல்வேன்” கன்னத்தில் குழிவிழ அழகாகச் சிரித்தவன்,அவர்கள் ஒத்துக் கொள்வதற்கு முன்னாலேயே ” என் பெயர் ஆனந்த்”என்றான். 

” காப்பி குடிக்கற தண்டனைக்கு முன்னாலேயே சொல்லிட்டீங்களே! எங்க ஹாஸ்டல் காப்பியையே நாங்க கேட்டு வாங்கிக் குடிப்போம். அதனால அது தண்டனைக் கிடையாது. “

என்றாள் மீனா. 

“அப்ப வர ஒத்துக்கறீங்க. உங்க ப்ரெண்ட் பேச மாட்டாங்களா?” என்றான் ஆனந்த் தங்கத்தைப் பார்த்தபடி. 

” இவளா? யப்பா! பட்டுபட்னு பேசுவா! என்னன்னு தெரியல! மலைச்சுப் போய் நிக்கிறா! “என்று சிரித்தவள்,

” அவ வந்தா தான் காப்பியா? 

இல்ல அவளுக்கு மட்டும் தான் காப்பியா?” என்று ஆனந்தை நோக்கிக் கிண்டலடித்தாள். 

” சேச்சே! காப்பி உங்களுக்கும் உண்டு” என்று தானும் கிண்டலாகக் சொன்ன ஆனந்த்,” நீங்க வராம அவங்க வரமாட்டாங்க போல இருக்கே! அதுக்கானும் உங்களை நான் கூப்பிட்டே ஆகணும்”என்று சொல்லவும் தங்கமும் சிரித்து விட்டாள். 

மூவரும் காபி ஹவுசுக்குச் சென்றனர். சிற்றுண்டிகளைக் கொறித்தபடி ஆனந்துடன் பேசிக் கொண்டிருந்தது நேரம் போனதே தெரியவில்லை. ஹாஸ்டலுக்குத் திரும்பும் போது தங்கத்துக்கு அம்மாவின் கண்டிஷன்கள் ஞாபகம் வந்து பயமுறுத்தியது. 

-தொடரும்




What’s your Reaction?
+1
8
+1
9
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!