Serial Stories

ஊரெங்கும் பூ வாசனை-7

(7)

   படுத்தவுடன் உறங்கிவிடும் நமச்சிவாயம்

வெகுநேரம் வரை விட்டத்தை வெறித்தபடி படுத்திருப்பதையும் எதையோ தீவிரமாக சிந்திப்பதையும் கண்டாள் ஜானகி.

   அவளுடைய மனநிலையும் அப்படித்தான் இருந்தது. அவளுக்கும் உறக்கம் வரவில்லை. ஏதோதோ சிந்தனைகள் குழப்பங்கள்.

தனக்குத்தான் மனக் குழப்பம். ஆனால்…இவர் ஏன் உறங்கவில்லை என்பது தெரியாமல் கேட்டாள்.

    “என்ன தூக்கம் வரலையா?” இரவுவிளக்கின் வெளிச்சத்தில் மனைவிப் பக்கம் தலையை திருப்பியவரின் முகத்தில் குழப்பம் அப்பட்டமாகத் தெரிந்தது.

    “இல்லை தூக்கம் வரலை”

    “ஏன்…படுத்த உடனே எப்பவும் தூங்கிடுவீங்க…?”

    “பச்!. மௌரியை நினைச்சு என்னமோ ஒரே சிந்தனையா இருக்கு”

  அவளுக்கு  ஆச்சரியமாக இருந்தது.

  மௌரியனால் அவளுக்குத்தான் மனக் குழப்பம் என்றால் இவருக்கு என்ன?

    “அவனை நினைச்சு என்ன உங்களுக்கு குழப்பம்?”

   “அவன் நேத்து நடந்த ஆண்டு விழாவுல டான்ஸ் ஆடலைன்னு சொன்னானே…அதை நினைச்சுத்தான்.”

   அலுவலகத்திலிருந்து வந்ததுமே அவனுடைய டான்ஸ் வீடியோவை பார்க்க ஆவலாக கேட்டவரிடம் மௌரியன் அவளிடம் சொன்ன அதே பதிலைத்தான் சொன்னான்.

    “டான்ஸ் ஆடலை”

    “ஏன்…?”

    “டான்ஸ் ப்ரோக்ராம் கேன்சலாயிடுச்சு”

    “கேன்ஸலாயிடுச்சா? ஏன்?”

    “ப்ச்! டயம் இல்லை.” சொல்லிவிட்டு அதற்குமேல் எதுவும் பேச பிடிக்கவில்லை என எழுந்து வெளியேப் போய்விட்டான்.

     “டான்ஸ் ப்ரோக்ராம் ஏன் கேன்ஸலாச்சு?” மனைவியைப் பார்த்து இப்பொழுதுக் கேட்டார் நமச்சிவாயம்.

     “அதான் டயம் இல்லைன்னு சொன்னானே”

     “டான்ஸ்ன்னா ரொம்ப வெறியா இருப்பானே. கேன்சலாயிடுச்சுன்னதும் ரொம்ப அப்செட் ஆயிருப்பானோ? ரொம்ப வருத்தமா இருக்கற மாதிரி தெரியலை?”

    “ஆமா” என்றாள் ஜானகி.

அவன் தூக்க மாத்திரையை சாப்பிட்டதைப் பத்தி இவரிடம் இப்பொழுது சொல்லலாமா எனநினைத்தாள்.

     டான்ஸ் ஆடியதால் உடம்பு வலி வந்து அதனால் தூக்கம் வராமல் தூக்க மாத்திரையை சாப்பிட்டிருப்பான் என அவள் நினைக்க அவன்; டான்ஸ் ஆடவேயில்லை என்று தெரிந்ததும் அப்பறம் ஏன் தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தூங்கினான் என்ற கேள்வி அவளை அரித்தெடுத்தது.

    இப்பொழுது புரிந்தது. டான்ஸ் ப்ரோக்ராம் கேன்சல் ஆனதால் மிகவும் ஆவலாக ஆட காத்திருந்த அவனுக்கு அதிர்ச்சியாக இருந்திருக்குமோ? அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பானோ? அதனால் மாத்திரையை சாப்பிட்டிருப்பானோ?

    “என்ன யோசிக்கறே?” நமச்சிவாயம் கேட்கவும் எழுந்து உட்கார்ந்தாள் ஜானகி.




     “நீங்க நினைக்கிறது சரிதான். ராத்திரி அவன் தூக்க மாத்திரை போட்டுக்கிட்டுத் தூங்கியிருக்கான்.” என்றாள்.

   இதைக் கேட்டு அதிர்ந்த அவரும் எழுந்து உட்கார்ந்தார்.

    “என்ன சொல்றே?”

    “ஆமா…என்னோட தூக்க மாத்தரை ஸ்ட்ரிப்பிலிருந்து ரெண்டு மாத்திரையை எடுத்து சாப்பிட்டிருக்கான். அதில் இருந்ததே ரெண்டு மாத்திரைதான். ரெண்டையும் சாப்பிட்டிருக்கான். அதனால்தான் இன்னைக்குப் பூரா தூங்கியிருக்கான். என்ன மனநிலையில சாப்பிட்டானோ? இன்னும் ரெண்டு மூணு மாத்திரை இருந்திருந்தா எல்லாத்தையும் சாப்பிட்டிருப்பானோன்னு நினைச்சு எனக்கு ரொம்ப பயமாப் போயிட்டு. டான்ஸ் ஆடினதுல ரொம்ப களைச்சுப் போயி உடம்பு வலியால தூக்கம் வராம மாத்திரையை சாப்பிட்டிருப்பான்னு நினைச்சேன். அப்படியே சாப்பிட்டிருந்தாலும் ஒரு மாத்திரைதானே போட்டிருக்கனும். எதுக்கு ரெண்டு மாத்திரையை போட்டான்? அவனுக்கு நேத்து மனநிலை சரியல்லாம இருந்திருக்கு.”

    அவள் சொல்ல சொல்ல நமச்சிவாயத்தின் முகம் மாறிக் கொண்டே வந்தது. மெல்லிய திகில் அந்த அரை இருளில் அவருடைய முகத்தை பயமாகக் காட்டியது.

    “ஓரு டான்ஸ் ப்ரோக்ராம் கேன்சலானதுக்கா இத்தனை அப்செட் ஆவான். தூக்க மாத்திரையைப் போட்டுக்கிட்டு தூங்கற அளவுக்கு வருவான். எனக்கென்னமோ அவனுக்கு வேறு ஏதாவது பிரச்சனை இருக்கமோன்னு தோணுது.”

    “கேட்டேனே…வேற ஒன்னும் இல்லைன்னு சொல்லிட்டுப் போறான்.”

    “இந்த வயசுல பசங்களுக்கு எத்தனையோ பிரச்சனைகள். எல்லாத்தையும் அம்மாக்கிட்ட சொல்லிடறதில்லை.”

     “நாம என்ன பண்றது? எப்படி கண்டுப் பிடிக்கிறது?”

     “நாளைக்கு அவனோட ப்ரண்ட் கோகுல்கிட்ட கேளேன்”

     “சரி…” என்றாள்.

  பின் இருவரும் அத்துடன் பேச்சை நிறுத்திக் கொண்டு அமைதியாக உறங்க முற்பட்டனர். ஆனாலும் உறக்கம் வரவில்லை.

   மறுநாள் மௌரியன் கல்லூரிக்கு சென்றதும் கோகுலனுக்கு ஃபோன் செய்யலாமா என யோசித்தாள்.

  அவன் கல்லூரியில் வகுப்பில் இருப்பானே என நினைத்தாள்.

  மாலை ஃபோன் செய்யலாம் என முடிவு செய்து வீட்டு வேலைகளில் ஈடுபட்ட போது கோகுலிடமிருந்தே அழைப்பு வந்தது.

  எடுத்து ‘ஹலோ’ என்றாள்.

    “ஆன்டி…மௌரியனுக்கு என்னாச்சு? உடம்பு சரியில்லையா?” என்றான்.

    “ஏன்…அப்படி கேட்குறே?” என்றாள் முகம் மாறியவளாய்.

    “அவன் காலேஜூக்கு வரலையே அதான் கேட்டேன்” என்றான்.

  திக்கென்றது ஜானகிக்கு.

    “என்ன காலேஜூக்கு வரலையா? காலையில காலேஜூக்குத்தானே கிளம்பி போனான்.”

   “இல்லை ஆன்டி. அவன் காலேஜூக்கு வரலை. அவனோட செல்லுக்கு ட்ரைப் பண்ணினேன். ஸ்விட்ச் ஆஃப்னு வருது. அதான் உங்களுக்கு ஃபோன் பண்ணினேன்”

   “காலேஜூக்கு வரலைன்னா வேற எங்க போயிருப்பான்? கோகுல் நானே உன்கிட்ட பேசனும்னு இருந்தேன். அன்னைக்கு காலேஜ்ல பங்ஷன் இருந்ததுல்ல அன்னைக்கு அவன் லேட்டா வந்தான். வந்தவன்…” என ஆரம்பித்து அவன் தூக்க மாத்திரை சாப்பிட்டது டான்ஸ் ப்ரோக்ராம் கேன்சலானது வரை சொன்னாள்.




  அவனோட டான்ஸ் ப்ரோக்ராமை கேன்சல் பண்ணினதால அவன் மனசு அப்செட் ஆயிட்டான்னு நினைக்கிறேன். இப்ப காலேஜூக்கு வராம எங்க போனான்னே தெரியலையே…” கலக்கமாக சொன்னாள் ஜானகி.

     “ஆன்டி…அவனோட டான்ஸ் ப்ரோக்ராம் கேன்சலாகலை. அவனோட நேரம் வந்தப்ப ஸ்டேஜிலேர்ந்து அவனை கூப்பிட்டா ஆளையே காணோம். சரி எங்காவது வாஷ் ரும் போயிருப்பான்னு அடுத்த நிகழ்ச்சியை ஆரம்பிச்சு வச்சிட்டு அவனைத் தேட ஆரம்பிச்சோம். காலேஜ்ல அவனை எங்கேயுமே காணும். ஃபோன் பண்ணினாலும் சுவிட்ச் ஆஃப்னு வருது. விழா தொடங்கும் போது ரொம்ப உற்சாகமாத்தான் இருந்தான். திடீர்னு ஆள் காணாமப் போயிட்டான். எங்களுக்கு ஒன்னுமே புரியலை. அடுத்தடுத்த நிகழ்ச்சியை நடத்த வேண்டிய கட்டாயத்துல இருந்ததால அதுல நாங்க கவனம் செலுத்த ஆரம்பிச்சுட்டோம். அவனை மறந்துட்டோம். இன்னைக்கும் வராததால அவனுக்கு அன்னைக்கு உடம்புக்கு சரியல்லாமத்தான் போயிட்டானோன்னு நினைச்சு ஃபோன் பண்ணினேன்.”

கோகுல் சொல்லிக் கொண்டே போக ஜானகிக்கு தலை சுற்றியது.

அதே நேரம் மௌரியன் ஒரு பாரில் அமர்ந்து தண்ணியடித்துக்கொண்டிருந்தான்.




What’s your Reaction?
+1
15
+1
8
+1
1
+1
0
+1
0
+1
0
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!