எனக்கென ஒரு வானம் 

எனக்கென ஒரு வானம்-5

5

“சித்தார்த்திற்கு டார்க் கலர்ஸ் பிடிக்காது.இது வேண்டாம், இந்த இந்த சேலையை கட்டிக் கொள்” இளம் மஞ்சளில் அடர் மஞ்சள் எம்ப்ராய்டர்கள் போட்ட காட்டன் பட்டுப் புடவையை நீட்டிய சுமலதாவை முறைத்த வைசாலி அந்த புடவையை வாங்கி கட்டிலில் தூக்கி போட்டாள்.

” நான் இதைத்தான் கட்டிக் கொள்ளப் போகிறேன்” அடர் வயலட் நிற காஞ்சிபுரம் பட்டை எடுத்துக் கொண்டாள்.

” இந்த சேலையை கட்டினால் பாட்டிம்மா மாதிரி தெரிவாய்”

” இந்தப் பாட்டி வேண்டாம் என்று திரும்பிப் போகப் போகிறார்களா?” தங்கையின் கூர் கேள்விக்கு சுமலதாவின் கண்கள் கலங்கிவிட்டன. அதனை மறைக்க அறையை விட்டு ஓடி விட்டாள்.

 பாவம் அவளும்தான் என்ன செய்வாள்? உடனே அக்காவின் மேல் தோன்றிய பரிதாபத்தை தன் தலையில் தானே கொட்டு வைத்து மாற்றினாள் வைசாலி.உன் நிலையே கவலைக்கிடமாக இருக்கிறது,இதில் அடுத்தவருக்கு பரிந்து வருகிறாயா நீ!

 தனது மாநிறத்திற்கு அவ்வளவாக பொருத்தமாக இராது என்று வைசாலியே அடர் நிற புடவைகளை தவிர்த்து விடுவாள்தான். இன்றும் இந்த வயலட் பட்டுப்புடவை அவள் நிறத்தை மட்டுப்படுத்தி காட்டியதோடு அகன்ற பார்டர் அவள் வயதையும் நான்காவது கூட்டிக் காட்டியது.வகிடெடுத்து கூந்தலை அழுத்தி வாரி பின்னலிட்டாள். கண்ணாடியில் தெரிந்த தன் உருவத்தில் ஒரு நிமிடம் அதிருப்தியானவள் மறு நொடியே உதடுகளை சுளித்துக் கொண்டாள்.

வேண்டாம் என்று விட்டு விடவா போகிறார்கள்..!?




சுமலதா கவலைப்பட்டது போல் அவளது மாமியார் பாக்கியலட்சுமியிடம் வைசாலியின் தோற்றம் குறித்த அதிருப்தி மிக வெளிப்படையாகவே தெரிந்தது. வைசாலியை பார்த்த கணமே எந்நேரமும் இங்கிருந்து கிளம்பி விடலாம் என்ற மனநிலையிலேயே அவள் இருப்பது புரிந்தது.

மாமனார் கந்தவேலன் “நல்லா இருக்கியாம்மா?” என்ற சம்பிரதாய விசாரிப்பின்போது லேசாக அவள் முகத்தை பார்த்ததோடு சரி. அதன் பின் இவள் பக்கம் திரும்பவே இல்லை. சுமலதாவின் கணவன் சந்திரகுமார் யோசித்து யோசித்து சில கேள்விகளை கொழுந்தியாளிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.

 எங்கே படித்தாய் ? எங்கே வேலை பார்க்கிறாய்? என்பது போன்ற சாதாரண கேள்விகள். பொதுவாக அக்காவின் கணவனுக்கு தெரிந்திருக்க வேண்டிய பதில்கள்தான். ஆனால் வைசாலியின் அத்தானிற்கு எதுவுமே தெரியாது. திருமணம் முடிந்த அன்று  இரண்டு மணி நேரங்கள் இவர்கள் வீட்டில் தங்கியதுதான்.அதன் பிறகு இவர்கள் வீட்டு பக்கமே சந்திரகுமார் வந்தது கிடையாது. 

நான் பெரிய இவனாக்கும் என்பது போல் ஒரு கிரீடத்தை எந்நேரமும் அவன் தலை மேல் வைத்திருப்பதாக வைசாலிக்கு தோன்றும். மச்சினிச்சியோ, மாமனார், மாமியாரோ என்ன செய்கிறார்கள் என்ற எண்ணம் கூட அவனுக்கு இதுவரை வந்ததில்லை. இன்றோ வேறு வழி இன்றி ஐந்து வருடங்களுக்கு முன்பு நடந்த தன் திருமணத்தின் போது தெரிந்திருக்க வேண்டிய விபரங்களை இப்போது கேட்டுக் கொண்டிருக்கிறான். தயக்கமும் நிறைய சங்கடமும் அவன் முகத்தில் தெரிந்தன.

என்ன பேசுவது என்ற தயக்கம், இங்கெல்லாம் வந்து திருமணம் பேச வேண்டியதாகி விட்டதே என்ற சங்கடம். ஓரக்கண்ணால் தமக்கையின் கணவனை கணித்தபடி அவன் கேள்விகளுக்கு ஒற்றை வார்த்தையில் பதில் அளித்துக் கொண்டிருந்தாள் வைசாலி.

வீட்டிற்குள் நுழைந்ததிலிருந்து தன் அக்கா வீட்டு ஆட்கள் ஒவ்வொருவரையாக கவனித்து எடை போட்டுக் கொண்டிருந்தவள் இப்போது பார்வையை நகர்த்த அவள் பார்வை வட்டத்திற்குள் விழுந்தான் சித்தார்த்தன். இவள் பார்வையை சந்தித்ததும் “ஹாய்” என்றபடி பளிச்சென சிரித்தான்.

 வைசாலி திகைத்தாள். இவனும் வந்திருக்கிறானா? அக்கா மணம் முடித்த நாளிலிருந்தே ஒரு வகை கர்வத்துடனேயே நடமாடிக் கொண்டிருந்த அவள் குடும்ப உறுப்பினர்கள். இன்று ஒரு தேவை என்று படியேறி வந்திருக்கின்றனர். வேறு வழியின்றி இந்த திருமணத்திற்கு சம்மதித்த உடனேயே வைசாலி மனதில் பட்டது இந்த விஷயம்தான். இதில் ஏனோ ஒருவகையில் அவளுக்கு மன திருப்தி இருந்தது. அப்படி தங்கள் வீடு தேடி வந்தவர்களின் முகத்தை கவனிப்பதிலேயே இருந்தவள் இவனை… மணமகனை கவனிக்க மறந்திருந்தாள்.

“என் ஃப்ரெண்ட்ஸோட உங்கள் ஷோரூமுக்கு வந்திருந்தேனே நினைவிருக்கிறதா?” சித்தார்த்தன் கேட்க,தலையசைத்தாள்.

“நேற்றே உங்க பிரெண்ட்ஸ் ஸ்கூட்டர் புக் பண்ணிட்டு போயிட்டாங்களே”

” ஆமாம், அந்த ஸ்கூட்டரை நான் தான் சரண்யாவிற்கு ரெகமெண்ட் செய்தேன். ஆனால் கடைசிவரை கூட இருந்து முடிக்க முடியாமல் ஒரு வேலைக்குள் மாட்டிக் கொண்டேன். அதனால் அவர்களையே போய் எடுக்க சொன்னேன்”

 உன்னை எங்கே காணோம் என்ற  அவள் மறைமுக கேள்வி குறிப்பறிந்து சித்தார்த் பதில் அளித்தான்.

“வந்து…மச்சான் அப்புறம் வேலையெல்லாம் எப்படி போகிறது?” கந்தவேலன் தொண்டையை பலமாக  செருமிக் கொண்டு உள்ளுக்குள் கிடந்த வார்த்தைகளை வலுக்கட்டாயமாக நாவிற்கு எடுத்து வந்து பேசினார்.

“நன்றாக போகிறது உங்கள் தொழிலெல்லாம் எப்படி நடக்கிறது?” முகுந்தன் ஒருவித இறுக்கமான முகத்துடனே பதில் அளித்துக் கொண்டிருந்தார். அதை உணர்ந்தோ என்னவோ கந்தவேலனின் வார்த்தைகள் சரளமாக வரவில்லை.




“முறுக்கு வீட்டில் செய்தீர்களா அ…அண்ணி ?மொறுமொறுன்னு பக்குவம் நன்றாக வந்திருக்கிறது” பாக்கியலட்சுமி தேவகியிடம் எதையோ பேசினாள்.

“அத்தை நன்றாகவே சமைப்பார்கள் அம்மா” சந்திரகுமார் சொல்ல அட, என வைசாலி அவனை பார்த்தாள்.

மாமியாரின் சமையல் பக்குவம் மருமகனுக்கு தெரிந்திருக்கிறது பாரேன்! கை தட்டி முகவாயில் வைத்து ஆச்சரியம் சொல்லும் உந்துதலை கஷ்டப்பட்டு அடக்கினாள்.

“அத்தையும் நன்றாகவே சமைப்பார்கள் அம்மா. அவர்கள் பால் பாயாசம் வைத்தால் நாள் முழுவதும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம்” கிடைத்த சந்தர்ப்பத்தில் தன் புகுந்த வீட்டு பக்கம் பேசி தன் நிலையை இருத்திக் கொண்டாள் சுமலதா.

” மாப்பிள்ளை விருந்தின் போது அத்தை செய்த பிரியாணி சுவை இன்னமும் நாவிலேயே இருக்கிறதும்மா. நாம் எல்லோரும் ஒருநாள் அத்தையை பிரியாணி செய்ய சொல்லி சாப்பிட வேண்டும்” சந்திரகுமார் சொல்ல தேவகியின் முகம் இலகுவானது.

 சுமலதாவும் ,சந்திரகுமாரும் எதிரெதிர் சோபாவில் அமர்ந்திருந்த அவர்கள் குடும்பத்தினருக்கிடையில் நின்று கொண்டு இரு வீட்டினரையும் இணைத்து வைக்கும் பாலமாக பேச்சுக்களை யோசித்து வார்த்தைகளை செலவழித்து கொண்டிருந்தனர்.

அவர்களை சுவாரசியமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வைசாலி கண்களை திருப்ப அவளது போன்றே முகபாவத்துடன் அமர்ந்திருந்தான் சித்தார்த்தன். இவள் பார்வையை சந்தித்ததும் கண்களால் அவர்களைக் காட்டி இரு கண்களையும் சிமிட்டினான்.

அந்த சிமிட்டலில் குபுக்கென நீர்க்குமிழி ஒன்று வைசாலியினுள் உருவாகி மிதந்தது.

டீபாயில் இருந்த அன்னாசி ஜூஸில் இரண்டு டம்ளர்களை இரு கைகளிலும் எடுத்துக்கொண்ட சித்தார்த்தன் “வைசாலி நாம் இருவரும் கொஞ்சம் பேசலாம் வா” இயல்பாக அழைத்தான்.

 வைசாலி திகைப்புடன் தந்தையை பார்க்க அவர் மறுப்பான முக பாவத்துடன் அமர்ந்திருந்தார்.

“பெரியவர்கள் நீங்கள் என்ன பேசிக் கொண்டாலும், திருமணம் முடிக்க போகும் நாங்கள் பேச வேண்டியது முக்கியமில்லையா மாமா! பத்து நிமிடங்களில் வந்து விடுகிறோம். வா” என்றபடி வீட்டிற்கு வெளியே நடந்தான்.

 முன்புற சிறு வராண்டாவில் பேசலாம் என்றிருந்த மனநிலையை ஓரமாக போகும் மாடிப்படிகளை பார்த்ததும் மாற்றிக்கொண்டு “மொட்டை மாடியில் பேசிக் கொண்டிருக்கிறோம் மாமா” என்று உள்ளே திரும்பி அறிவித்துவிட்டு படி ஏறினான்.




 

What’s your Reaction?
+1
47
+1
26
+1
4
+1
2
+1
3
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!