Serial Stories எனக்கென ஒரு வானம் 

எனக்கென ஒரு வானம்-12

 12

“சேல்ஸ் பில் இந்த லட்சணத்திலா எழுதுவீர்கள்? கஸ்டமர் என் மூஞ்சியில் தூக்கிப்போட்டு விட்டு போகிறான்” அவள் டேபிள் மேல் நோட்பேடை எறிந்தான்  சங்கரன். வைசாலி எடுத்துப் பார்க்க நிஜமாகவே அவளது தவறுதான்.

“சாரி சார். இப்போது திருத்தி விடுகிறேன்” பணிவாக சொல்லிவிட்டு தவறை திருத்த ஆரம்பித்தாள். ஆனால் அவள் மனதிற்குள் சற்று முன் வந்த எண்ணம் அவளை துணுக்குற வைத்துக் கொண்டிருந்தது. சங்கரன் கோபத்துடன் நோட்பேடை தூக்கி எறிய வீறு கொண்டு எழுந்தது வைசாலியின் உள்ளம்.

 நான் யார் தெரியுமா? என் மாமனார் யார் தெரியுமா? கணவன் யார் தெரியுமா? என்று வெகுண்டு எழுந்து கொண்டிருந்தது அவள் மனம். பிழையை திருத்தி முடித்ததும் உட்கார்ந்து யோசிக்க ஒருவித பய அமிலம் வயிற்றுக்குள் சுரந்தது. இவர்கள் பணத்திற்கு நான் அடிமையாகி விட்டேனா?

இந்த பந்தா, திமிர் ,அதிகாரம் இல்லாமல் என்னால் வாழ முடியாமல் போய்விடுமோ? நானும் சுமலதாவைப் போல் மாறி விடுவேனா? தன்னைத்தானே கூறு போட்டு ஆராய்ந்து கொண்டாள் வைசாலி.

அவளது திருமணத்திற்கு அலுவலகத்திலிருந்து யாரையும் அழைக்காததால் திருமண விவரம் தவிர வேறு எதுவும் அவர்களுக்கு தெரியாது. ஏனோ தன் சுயத்தை இழந்து கொண்டே வருவது போல் ஓர் எண்ணம் வைசாலிக்கு உண்டானது.




என்ன திருமணம் சரியான 

முடிவுதானா? நூறாவது தடவைக்கு மேலாக மீண்டும் சந்திக்க தொடங்கினாள். சித்தார்த்தனை பொறுத்தவரை நல்ல கணவனாக இல்லை மிகச் சிறந்த நண்பனாக அவளிடம் நடந்து கொண்டான். உடலால் இருவரும் இணைவதில் அவளுக்கு இருக்கம் தயக்கத்தை உணர்ந்து கொண்டவன் அதை குறித்த நேரடியான பேச்சை கூட தவிர்த்து மிக இலகுவாகவே அவளுக்கு நண்பனாக மாறிப் போனான்.

 சில நேரங்களில் அவனிடம் கணவனின் பார்வையை உணர்ந்தாலும் விரைவிலேயே அவன் தன்னை மாற்றிக் கொள்வதையும் உணர்ந்திருந்தாள் வைசாலி. இப்போதெல்லாம் தான் சித்தார்த்தனுக்கு ஏதோ ஒரு வகையில் அநியாயம் செய்வதாக அவள் மனம் அரிக்க ஆரம்பித்திருந்த்து. 

ஆனாலும் இன்னதென்று விளக்க முடிய வகையில் மாயா என்ற முள் தம்பதியர்களிடையே  தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. எங்கேயோ ஏதோ ஒரு சம்பவத்தில் அவள் பெயர் இடையில் வந்துவிடும். இதில் பெரும் பங்கு வகிப்பவள் சுமலதா.

அக்கா போட்டியும் பொறாமையும் உடைய சாதாரண பெண்.இது அவளுடன் பிறந்து வளர்ந்த வைசாலிக்கு நன்றாகவே தெரியும். ஆனால் இப்படி தங்கையின் வாழ்க்கையுடனே விளையாடுவாளா? 

ஆனால் சுமலதா அப்படித்தான் இருந்தாள். இந்த வீட்டின் மூத்த மருமகள் நான்.நான் பார்த்து போட்ட பிச்சைதான் உன்னுடைய வாழ்வு. என்னிடம் கைகட்டி பணிவாக நடந்து கொள், என் பேச்சுக்கு மறு பேச்சு பேசாதே! இப்படி சொல்லாமல் சொன்னாள்.

இவற்றை வைசாலி மீறும் தருணங்களில் அவளை தடுமாற வைக்க சுமலதா வைத்திருக்கும் ஆயுதம்தான் மாயா. முன்பு மாயாவுடனான ஏதோ ஒரு சம்பவத்தை ,செயலை எளிதாக சூழலுக்குள் நுழைத்து விடுவாள்.

ஸ்தம்பித்து நிற்கும் தங்கையை கிண்டலாக பார்த்தபடி நகர்ந்து போவாள். 

உடன்பிறந்த சகோதரிகளிடையே நடக்கும் இந்த மறைமுக மோதலை சித்தார்த்தன் மிக நன்றாகவே அறிந்திருந்தான். தேவையான நேரங்களில் அண்ணிக்கு பதிலடி கொடுக்க அவன் தயங்கவில்லை. ஆனால் அந்த நேரங்களில் எல்லாம் சந்திரகுமார் அதிசயமாக மனைவியின் பக்கம் சேர்ந்து கொண்டு தம்பியை சாட,இந்த பிரச்சனை குடும்பச் சண்டையாக மாறாமல் இருக்க வேண்டும் என்று  வைசாலி பெரும்பாலும் பொறுத்து போய்விடுவாள்.




 சித்தார்த்தனையும் அடக்கி விடுவாள். “விடுங்க அக்காவுடைய குணம் அவ்வளவுதான். கூட பிறந்த தங்கை நானே பழித்துப் பேசினால் நன்றாகவா இருக்கும்?”

” அவர்கள் நம் வாழ்க்கையோடு விளையாடுகிறார்கள்.உனக்கு தெரியவில்லையா வைஷு?” ஆதங்கத்துடன் கேட்பவனின் கைப்பற்றி அழுத்தினாள்.

” எத்தனை நாளைக்கு? எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு வரும். கவலைப்படாதீர்கள்”

 வைசாலி சொன்னது போல் இந்த பிரச்சனைக்கும் ஒரு முடிவு வந்தது. கந்தவேலன் அவர்கள் வீட்டில் ஒரு சிறிய விழாவை ஏற்பாடு செய்தார். தன்னுடைய புது மருமகளை எல்லோருக்கும் அறிமுகம் செய்வதற்காக அந்த விழா என்று என்று நினைத்தார் போலும்.

“எங்கே உணவு ஆர்டர் கொடுக்க வேண்டும் மாமா? எல்லோருக்கும் என்ன உடைகள் வாங்க வேண்டும்? வீட்டிற்கு அலங்காரத்திற்கு எங்கே செல்லட்டும்?” விழா பேச்சை எடுத்ததுமே முன் வந்து நின்று கேள்விகளை அடுக்கினாள் சுமலதா. அவள் செய்கையில் இதெல்லாம் எனக்கு ரொம்ப பழக்கம். உனக்கு ஒன்றும் புரியாது தள்ளி நில் என்ற செய்தி இருந்தது.

 வைஷாலி புன்னகையுடன் அக்காவை பார்த்துவிட்டு சற்று ஒதுங்கியே நின்றாள். ஆனால் கந்தவேல் அவளை கையசைத்து முன்னால் அழைத்தவர் “இந்த விழாவின் கதாநாயகியே நீ தான்மா” என்றார்.

 எல்லோரும் திகைக்க சுமலதாவின் முகத்தில் குரோதம்.” என்னப்பா வைசாலியை எல்லோருக்கும் அறிமுகம் செய்யப் போகிறீர்களா?” சந்திரகுமாரின் குரலில் ஒரு ஜாக்கிரதைத்தனம் தெரிந்தது.

” அன்று நம் வைசாலியின் நாட்டிய அரங்கேற்றம்” கந்தவேல் புன்னகையுடன் சொல்ல வைசாலிக்கு கண்கள் கலங்கிவிட்டது. “மாமா…”

“ஆமாம்மா எங்கள் வீட்டில் இவ்வளவு சிறந்த பரதநாட்டிய டான்ஸரை வைத்துக்கொண்டு அதை எல்லோருக்கும் தெரியப்படுத்தாமல் இருந்தால் எப்படி? நீ தயாராக இரு”

” அப்பா இதெல்லாம் கொஞ்ச நாட்கள் கழித்து பார்க்கலாம்”சித்தார்த்  சொல்ல,

” எனக்கு தெரியும் சித்தார்த்,நீ பேசாமல் இரு” இளைய மகனை அடக்கி விட்டார் கந்தவேல்.தொடர்ந்து வைசாலியின் நாட்டிய அரங்கேற்ற விசயங்கள் வீட்டற்குள் பேசப்பட,வைசாலி எங்கேயோ மிதப்பது போல் உணர்ந்தாள்.

  கண்ணாடி காட்டிய உருவம் தன்னுடையதுதானா? ஆச்சரியப்பட்டாள்.உள்ளிருந்து ஒளிவீசும் தங்கத்தகடுபோல் ஒளிர்ந்து நின்றாள் அவள். தன்னுடைய நாட்டிய அரங்கேற்றத்தின் மேல் தனக்கு இவ்வளவு ஆசை இருந்ததா? ஆச்சரியமாய் தன்னையே பார்த்தபடி நின்றவளின்  பின் வந்து நின்றான் சித்தார்த்தன்.

“அட என் மனைவிதானா இது? நான் ஏதோ பொற்சிலை என்று நினைத்தேனே?” கேலியுடன் மென்மையாக அவள் கன்னம் நிமிண்டினான்.




 “ம்க்கும், மாமாவிற்கு உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி”

துடிப்புடன் பேசியவளை புன்னகையோடு பார்த்திருந்தவன்  அவள் கன்னங்களை வருடினான் “உனக்கு இவ்வளவு சந்தோஷம் என்றால் எதையும் எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன் வைஷு”

 வைசாலி புரியாமல் பார்க்க, ஒரே நொடிதான் தன்னை மீட்டுக் கொண்டான்.” டான்ஸ் தூள் கிளப்பிடனும். சரியா? “

ஆனால் முதலில் கொஞ்சம் கவலையோடு இருந்தாற் போல் இருந்தானோ ? உடனே கணவனை சமாதானம் செய்ய வேணடுமென தோன்றி விட சட்டென எக்கி அவன் கன்னத்தில் இதழ் பதித்தாள்.

“ஏய்” சந்தோச கூச்சல் ஒன்றுடன் அவளை இறுக்கி அணைத்திருந்தான் சித்தார்த்தன்.

” சை…நம் திருமணம் முடிந்த மறுதாளே அப்பாவிடம் அரங்கேற்றம் பற்றி பேசியிருக்கலாமோ?” வருந்தியவனின் கையை நறுக்கென கிள்ளினாள் ” ஆசைதான்.முதலில் அரங்கேற்றம் முடியட்டும்” 

சித்தார்த்தனின் முகம் கொஞ்சம் வாடினாற் போலிருந்தது. ” ஆமாம் அரங்கேற்றம் நல்லபடியாக முடிய வேண்டும்.நீ இன்றிலிருந்தே ப்ராக்டிஸை ஆரம்பித்து விடு வைஷு” இருவருக்கடையிலான நெருக்கத்தை குறைத்து தள்ளி நின்று கொண்டான்.

வைஷாலி அரங்கேற்றத்திற்கு மும்முரமாக தயாராகி கொண்டிருந்தாலும் சித்தார்த்தனிடம் ஏதோ ஒரு மாற்றத்தை உணர்ந்தாள். ஒரு வித தவிப்பு…விலகல்.ஏன்…?

ஒன்றிணைந்து வாழ்ந்து கொண்டிருக்கும் தம்பதியர் என்றால் உடனே கேட்டிருப்பாள்.ஆனால்…இப்போது அரங்கேற்றம் முடியட்டுமென்று தள்ளிப் போட்டாள்.

ஆனால் சித்தார்த்தனின் தவிப்பின்  காரணம் விழா நாளில் தெரிய வந்தது. அன்று விழாவிற்கு வந்திருந்தவர்களிடம் சித்தார்த்தனின் மனைவி என்று அறிமுகமாகி கொண்டவள் மாயா. அவனது முன்னாள் மனைவி.




What’s your Reaction?
+1
41
+1
24
+1
2
+1
0
+1
1
+1
1
+1
7
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!