Serial Stories ஊரெங்கும் பூ வாசனை

ஊரெங்கும் பூ வாசனை-14

(14)

‘மலையரசன் பட்டணமாம் மலையனூரு தேவி…

நீ மயங்கி ஆடிவாடி..இந்த மக்கள் குடி தேடி

நீ தேரிலேறி ஓடிவந்தா தேசநலம் கோடி…

தந்தனாந்தினம் தந்தனாந்தினம் தந்தனாந்தினம் தந்தானே….

   ஒலிப் பெருக்கியில் நாலாப்புறமும் சீர்காழி இரட்டை சகோதரிகள் அருணா அகிலாவின் குரல் கணிரென ஒலித்து எல்லாரையும் சிலரிக்க வைத்தது. சிலரை சாமி வந்து ஆடவும் வைத்தது.

   திருநாங்கூர் பேச்சியம்மன் ஆலயத்தில் சுற்றுப்பட்டு கிராமம் அத்தனையும் கூடியிருந்தது.

    கோவில் அலங்கரிக்கப்பட்டு முன் புறம் பெரிய பந்தல் போடப்பட்டு பந்தல் தூண்களில் வாழை கன்றுகளும் மாவிளைகளும் கட்டப்பட்டு தோரணங்கள் காற்றில் அசைந்தன.

    உள்ளே…

    காளி வேஷம் கட்டப்பட்டுக் கொண்டிருந்தது.

    கோவிலுக்கு வெளியே போடப்பட்டிருந்த பந்தலில் இருபுறமும் வரிசையாக மூங்கில் பாடைகள் போடப்பட்டு அதன் மேல் வெள்ளைத்

துணியால் போர்த்தப்பட்டு, மாலை போடப்பட்டு இறந்த மனிதர்களின் கடைசி நேர காட்சியாய் மனிதர்கள் கிடந்தனர்.

    அவர்களின் தலைமாட்டில் அவர்களுடைய உறவினர்கள் கவலையான முகத்துடன் அமர்ந்திருந்தனர்.

    மேளதாளமும் சாமப்பிராணி புகையும் எங்கும் பரவியது.

    ஒரு பாடையின் தலை மாட்டில் ஜானகி அமர்ந்திருந்தாள்.

    தன் மாமியாருக்கு அவ்வப்போது தண்ணீரை ஸ்பூனால் எடுத்து எடுத்து ஊட்டிக்  கொண்டிருந்தாள்.

    நமச்சிவாயம்…கூட்டத்தில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தார்.

    வெகு நாட்களுக்குப் பிறகு ஊர்கார்களுடன் பேசுவதால் எல்லா கவலைகளையும் மீறி அவருடைய முகத்தில் மகிழ்ச்சி பிரகாசித்துக் கொண்டிருந்தது.

    மௌரியன் எங்கே என தேடினாள் ஜானகி.

கூட்டத்தில் அவனைக் காணவில்லை.

    அங்கும் இங்கும் கண்களாலேயே தேடியவள் அவன் கண்ணில் படாததைக் கண்டு எழுந்தாள்.

    பக்கத்தில் நின்றபடி ஒரு பெண்மணியிடம் அம்மாவின் உடல்நிலையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த ஆச்சியை அழைத்தாள்.

      “ஆச்சி…”

     “என்னாம்மா?” என அருகே வந்தாள் ஆச்சி.

     “ஆச்சி…மௌரியன் எங்கே? இங்கதானே நின்னுக்கிட்டிருந்தான்?” என்றாள்.

    “தம்பி வீட்டுக்குப் போயிட்டும்மா”

    “ஏன்…?”




    “தெரியலிங்கம்மா. என்கிட்ட வந்து சாவி கேட்டுது. ஏதோ வேலை இருக்குதாம்மா. போறேன்னுச்சு. சாவியக் கொடுத்தேன். அதான் போயிட்டு. எனக்கென்னமோ அதுக்கு இந்த காளியாட்டம், பாடை கட்டிக்கிடக்கறது இதெல்லாம் புடிக்கலைன்னு நினைக்கிறேன். அதான் இங்கிருக்கப் புடிக்காமப் போயிட்டு”

   உண்மைதான் இதெல்லாம் அவனுக்குப் பிடிக்காது. மூட நம்பிக்கை என்பான். நமச்சிவாயத்திற்கும் ஏன் அவளுக்கும் கூட இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை என்றாலும் கிராமம் அதன் காலம் காலமான பழக்க வழக்கம் எனும்போது சொந்த கருத்துக்களையும் நம்பிக்கைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு ஊர் மக்களுடன் ஒன்றாகி நிற்கும் போது மனதிற்குள் இனம் புரியாத மகிழ்சியும், ஒற்றுமையும் உண்டாகிறது. பகுத்தறிவா பாசமா என வரும்போது பாசத்திற்குத்தானே மனிதன் அடிமை?

    ஊர் மக்களின் பாசத்திற்கு அவர்கள் அடிமையாகிப் போயினர்.

   ஆனால் இவையெல்லம் பிடிக்காமல் அறிவிற்கு புறம்பானவை என அலட்சியமாய் மௌரியன் போய்விட்டான் என அவளால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.

   வீட்டில் யாரும் இல்லை. தனிமையில் இருப்பான். ஏற்கனவே பெரும் மன அழுத்தத்தில் இருப்பவனை எக்காரணத்தைக் கொண்டும் தனிமையில் விடமால் பார்த்துக் கொண்டாள்.

    இரவில் கூட நைசாக தாத்தாவின் பக்கத்தில் படுத்துக் கொள்ளும்படி அனுப்பிவிடுவாள்.

    இப்பொழுது வீட்டில் தனியாக இருக்கிறான். காதல் தோல்வி கண்ட மனது. கண்டபடி ஏதாவது செய்து விட்டால்….

    தனிமை என்பது தற்கொலை எண்ணங்களை பூஸ்ட் கொடுத்து தூண்டக் கூடியதாயிற்றே…?

    நினைத்ததுமே மனதிற்குள் பாம்பு பல்லி என ஓட ஆரம்பித்தது.

      “ஆச்சி….”

     “என்னம்மா…?”

    “நீ வீட்டுக்குப் போறியா?”

    “ஏம்மா…?”

    “மௌரியன் தனியா இருக்கான்.”

  ஆச்சி சிரித்தாள்.

    “தம்பி என்ன கொழந்தையா? பயப்பட…?”

    “நான் சொல்றதைக் கேளு”

    “எப்படிம்மா போவ முடியும்? இன்னும் கொஞ்ச நாழியில காளிக்கட்டி ஐய்யா வெளிய வருவாரு…ஊரு சனமே பாத்து கும்பிடும். நான் மட்டும்…”

     “பச்! புரியாம பேசாதே.” என்றவள் இவளிடம் உண்மையை சொல்லித்தான் ஆகவேண்டும் என நினைத்தவளாய்…

    அவனுடைய காதலைப் பற்றி அதன் தோல்வியைப் பற்றி, தூக்க மாத்திரை தின்றதைப் பற்றி குடித்துவிட்டு கல்லூரிக்கு போகாமல் கிடந்ததைப் பற்றியெல்லாம் சொன்னாள்.

    கேட்க கேட்க முகம்மாறிய ஆச்சி “நான் இப்பவே போறேம்மா…” என கூறிவிட்டு ஓட்டமும் நடையுமாக வீட்டை நோக்கி ஓடினாள்.




What’s your Reaction?
+1
13
+1
10
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!