Serial Stories மஞ்சள்காடு

மஞ்சள்காடு-18 (நிறைவு)

 18

ஸ்வேதாவைக் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டார் உடையார்.

“ம்…மோ…” மாட்டின் கம்பீர கர்ஜனை கேட்டது.

“செங்காளை இங்கேதான் இருக்கானா?” என்று அவர் நினைத்து முடிப்பதற்குள்… பின்னாலிருந்து மோதியது செங்காளை.

வெலவெலத்துக் கீழே விழுந்தார் உடையார்.

*****

அதற்குள் ஹரிணி தன் உடலை அப்படியே கீழே விழச் செய்தாள். நெற்றியில் அடிபட்ட்டு ரத்தம் பெருகியது.

“அம்மா! ரணபத்ர காளி! என்னுடைய இந்த ரத்தபலியை ஏத்துக்கிட்டு உடையாரோட மந்திரக்கட்டிலிருந்து வெளியே வா! ஸ்வேதாவை எப்படியாவது காப்பாற்று தாயே!” என்று அலறினாள்.

அன்னை பீடத்திலிருந்து ஒளி கிளம்பியது.

*****

செங்காளை உடையாரைக் கீழே தள்ளிவிட்டு, ஆலயத்தின் அன்னையின் திருமேனிமீது முகத்தை மறுபடி மறுபடி மோதியது. வெளியே சூலம் நட்டிருந்த பீடத்தின்மீது முட்டி முட்டி அழுதது. “இரு, முதலில் உன்னை ஒரு வழி பண்றேன்” என்று அதனைப் பின்தொடர்ந்து உடையார் வந்துவிட்டார்.

சூலம் பெயர்ந்து வெளிக்கிளம்பியது. அதன்மீது ஏதோ மின்னல் பாய்ந்தாற்போலிருந்தது. யாரோ கையாளுவதுபோல சூலம் மேலெழும்பியது. அதிலிருந்து மின்னல் அலைகள் கீழே வட்டவட்டமாகப் பாய்ந்தன. ரணபத்திரகாளி ஆலயம் முழுவதும் எரிந்து சாம்பலானது.

*****

மற்றவர்கள் எல்லோரும் ஸ்வேதாவை வந்து பார்த்தபோது அவள் மயங்கியிருந்தாள். அவளைத் தெளிவித்து விவரம் கேட்டபோது, திக்கித் திணறி எல்லா விஷயமும் சொன்னாள்.

“நல்லவேளை உடையார் ஒழிஞ்சார். இந்த மின்னல்வீச்சில் அவர் அஸ்திதான் மிச்சம்” என்றான் ஹரி.

“இது உண்மைதானா ஹரி? ஒருவேளை தப்பிச்சிருந்தா?” என்று சந்தேகமாய்க் கேட்டாள் ஹரிணி.

“அஞ்சடியில் ஒரு இஞ்ச் கூட மூளை இல்லை! பைத்தியம்! அப்படியிருந்தா நாம உறைநிலையிலிருந்து வெளியே எப்படி வந்திருப்போம்?” என்று ஹரி கேட்டதும்தான் ஹரிணி வெட்கிச் சிரித்தாள்.

*****

“அம்பாளுடைய சாந்நித்யம் அகற்றப்பட்டு, தீயசக்திகள் நடமாடிய இடமாயிருந்த கோயில் அழிஞ்சுட்டது. மின்னல் தாக்கி அழிஞ்சதா சொல்லிடுங்க! இப்போ அவ சாந்நித்யம் வீற்றிருக்கற சூலத்திற்குப் புதுசா ஆலயம் கட்டிடுங்க” என்றாள் ஹரிணி.

“அது மட்டுமில்லைம்மா, இந்த அரண்மனையை நான் கம்பெனியிடமிருந்து மீட்கத்தான் போறேன்! ஆனா எனக்காக இல்லை! ஒரு ட்ரஸ்ட் நிறுவப்பட்டு இந்த இடத்தில் அமுதவல்லி சாந்தியடையறதுக்கு முன்னால் சொன்னமாதிரி ‘பாரி-ஔவை தமிழாராய்ச்சி நிலையம்’ தொடங்கப்படும்! அதுக்குப் பொறுப்பாளரையும் நான் இப்பவே நியமிச்சாச்சு” என்று ஆதி கைகாட்ட, அங்கே சுமார் ஐம்பத்தைந்து வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர்.




“வெ… வெற்றிச் செல்வனா?” ஹரிணி வியந்தாள்.

“என்னம்மா, ஆச்சரியப்படறீங்க? வெறும் வெற்றுச் செல்வனா இருந்தவனை மறுபடி வெற்றிச் செல்வனா மாற்றினதே நீங்களும் ஹரி சாரும் தானே!” வெற்றியின் கண்கள் கசிந்தன. “இனி அமுதவல்லியோட லட்சியம்தான் என் வாழ்க்கை!”

“ஹரி, இங்கே இருக்கற பொக்கிஷத்தை என்ன பண்றது?” என்று கேட்டான் ஆதி.

“அப்படியே விட்டுடுங்கன்னுதான் நான் சொல்வேன். நல்லதுக்கு உபயோகப்படுத்தணும்ட்டு வெளியே எடுத்தால்கூட, மற்றவங்க திருட நினைக்கலாம், நாமளே சபலப்படலாம், எதுக்கு? அன்னையுடைய அனுக்கிரகமும், பாரியுடைய பரோபகாரமும் இந்தத் தங்கம் மூலமா செடிகள்ள கசிஞ்சு, இதன் இலைகள் பிரசாதமா கொடுக்கப்படும்போது பக்தர்களுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கட்டும்!”

“கரெக்ட், ரகசியமா இருக்கறதுதான் நல்லது. இல்லேன்னா, நீங்க அதை எடுத்துப் போறதுக்குள்ள சந்தானபாண்டியன் சார் அதில் பாதியை லாவிட மாட்டாரா?” என்று சிரித்தாள் ஹரிணி.

“சும்மா இரும்மா நீ! இனி மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை எதுவும் என் வாழ்வில் கிடையாது!” என்று சூளுரைத்தார் சந்தானபாண்டியன்.

“அதுசரி, கட்டையில் போற காலத்தில் ஞானோதயம்! சரி, இப்பவாவது வந்ததே!” என்றான் போலீசாரால் மீட்கப்பட்டு அங்கே வந்திருந்த அவர் மகன்.

*****

“என்ன எழில்மாறன்? பிரமிச்சுப் போய் உட்கார்ந்திட்டீங்க?” என்றவாறே அவர் அருகில் வந்து அமர்ந்தான் ஹரி.

“இந்த உலகில் நமக்குத் தெரியாதவைகள் எத்தனையோ இருக்கு! ஏதோ நமக்கு வாழ்க்கையில் கிடைக்கற சில வெற்றிகளால நமக்கு வருகிற ஆணவம் எத்தனை முட்டாள்த்தனம்னு நினைச்சுப் பார்த்திட்டிருந்தேன், ஹரி! நான் உடையாரை நினைச்சு மாத்திரம் இதைச் சொல்லல. என்னை நினைச்சும் சொல்றேன்” என்றார் எழில்மாறன்.

“சரிதான் சார், சும்மா கதை விடாதீங்க! இந்த ஃபிலாஸஃபியா இவ்வளவு நேரம் நீங்க யோசிச்சிட்டிருந்தது? இங்கே நடந்த சம்பவங்களை வெச்சு எப்படி ஒரு சூப்பர்ஹிட் படம் பண்ணலாம்னு ப்ளான் பண்ணிட்டு இருந்திருப்பீங்க! உண்மையைச் சொல்லுங்க!” என்றான் ஹரி சிரிப்புடன்.

எழில்மாறன் வெட்கத்துடன் தலைகவிழ்ந்தார்.

“சும்மா அவரைக் கிண்டல் பண்ணாதே! அவர் செய்திருக்கற உதவி ரொம்பப் பெரிசு! அவர் மட்டும் நாம கேட்டுக்கிட்டபடி அழகா ஒரு சீன் செட்டப் செஞ்சிருக்கலைன்னா, இன்றைக்கு ஸ்வேதா உயிருடன் இருந்திருப்பாளாங்கறதே சந்தேகம். நாம கொடுத்த கல்கத்தா காளி சந்நிதில பூஜை பண்ணிய வளையலை அவரோட ஹீரோயினுக்காக வாங்கியதுன்னும் அதை அவங்க வேணாம்னு மறுத்துட்டதாலே யாராவது ஒரு பெண்ணுக்குக் கொடுத்திடலாம்னு நினைக்கறதாகவும், சங்கு வளையல் கல்யாணம் ஆனவங்கதான் போட்டுக்கலாம்ங்கறதுனால் ஸ்வேதாவுக்குக் கொடுக்கறதாகவும் சொல்லி ரொம்பக் கெட்டிக்காரத்தனமா ஸ்வேதா அதை விரும்பி வாங்கிக் கையில் போட்டுக்கும்படியா பண்ணிட்டாரு! உங்க டைரக்‌ஷன் திறமை இந்த விஷயத்தில் ரொம்ப உதவி பண்ணிருச்சு சார்!” என்றாள் ஹரிணி நன்றியுடன்.

“என்னவோ, சினிமாவினால் நன்மை இருக்குன்னு ஒத்துக்கிட்டீங்க, அது போதும்!”

“நிச்சயமா இருக்கு. ஆனா நல்ல படங்கள் எடுங்க. நல்ல விஷயங்களை, நம்ம தர்மங்களைச் சொல்லிக் கொடுங்க” என்றாள் ஹரிணி.

*****

“சே! எத்தனைச் சக்திகள், வித்தைகள் தெரிஞ்சவர் இந்த உடையார்! தீய குணத்தால அழிஞ்சுட்டாரே!” என்று வருந்தினான் ஹரி.

“உனக்கென்ன இவ்வளவு வருத்தம்?” என்று கேட்டாள் ஹரிணி.

“இல்லை டார்லிங்! சில வித்தைகளாவது எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கலாமில்லையா? உதாரணத்திற்கு, ஆட்களை ஃப்ரீஸ் செய்யும் வித்தை! மணவாழ்க்கையில் அது எத்தனை சந்தர்ப்பத்தில் உதவும்!” என்ற ஹரியை அடிக்கக் கை ஓங்கினாள் ஹரிணி.

“இதோ, இந்த மாதிரிச் சந்தர்ப்பத்தில்!” என்று சொல்லி அவள் கையில் பிடிபடாமல் ஓடினான் ஹரி!




What’s your Reaction?
+1
10
+1
10
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!