Serial Stories தீரா…நிலதீரா…!

தீரா…நிலதீரா…! -3

3.கொங்கு படை

*************************

 நிதானமான நடையில் புரவிகள் அசைய. அதன்மேலே பயணித்த இருவரும் இளைஞர்களே!

ஒருவன் சிந்தனையில் மூழ்கியிருக்க அடுத்தவனோ அவன் யோசனையைக் கலைக்க விரும்பாதவனாக அமைதியைக் குத்தகை எடுத்தான்.

புறப்படுவதற்கு முன்பாக  நடைபெற்ற சந்திப்பில் கலங்கி நின்ற அவனுடைய காதலியின் வதனமே மனதில் எழும்பி நின்றது. 

விசாலமான அந்த மையுண்ட விழிகளில் காதலும் கலக்கமும் கரிசனமும் பெருமிதமும்  துயரமும் ஏக்கமும்! அப்பப்பா…நிமிடப் பொழுதில் எத்தனையெத்தனை வர்ண ஜாலங்கள்… பெருமூச்சு விட்டான் அந்த சிந்தனையாளன்.

பிரிவின் துயரத்தை வென்றது பெருமைமிகு கர்வம் எனினும் அவளும் சிறு பெண்தானே! அதிலும் திருமணப்பேச்சு நடைபெறப் போகும் நேரம் தூரப்பயணம் என்கையில் நேசமனம் கலங்கித்தான் போனது. அவனால் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருக்க முடிந்தது. அவளோ பேதைப்பெண் சட்டென்று உணர்ச்சிவசப்பட்டு விட்டாள்.

அன்று 

சிவன் கோயில் குளக்கரையில்

“மைசூரிலிருந்து ஓலை வந்துள்ளது பொம்மாயி”

“ஆ..மைசூரிலிருந்தா? ஏன்? எதற்கு?  மன்னரிடமிருந்தா? உங்கள் செய்லில் அதிருப்தியுற்றதாலா..?”

“ஹேய் பொம்மாயி! பொறுமை! பொறுமை!  மன்னர் சார்பாக என்றுள்ளது ஆனால் ஓலை சாயபுவிடமிருந்து வந்துள்ளது”

“உங்கள் நண்பர் கிரிமீரே சாயபு அண்ணாவிடமிருந்தா “

“ம்”

“என்ன எழுதியுள்ளது “

“அவர் உடனே மைசூர் வந்து அவரை சந்திக்கும் படியும் முக்ய சேதியொன்றைப் பகிர்ந்து கொள்ள விரும்புவதாகவும்  குறிப்பிட்டுள்ளார். “

“நல்ல நாள் பார்த்து சுபஹோரையில் புறப்படுங்கள் அத்தான்”

“பொம்மாயி…நீ பொம்மாயியேதான். நான்  என்ன பெண்பார்க்கவா போகிறேன்”

“அதைவிட முக்யம் இது. பேரரசரைக் காணபோகிறிர்கள்.  நல்ல செய்தியோடு திரும்பி வரும் வரை அச்சத்தோடு இருப்பேன்”

“அடி பெண்ணே! அவரை என்ன கொடுங்கோலரைப் போல வர்ணிக்கிறாய்? அச்சமென்கிறாய். அவர் பழகுவதற்கு இனியவர். அந்நியர்க்கோ எமன் மக்களுக்கு காவலர்.  வீரம் செறிந்தவர்”

“ஆனாலும் அதிகாரம் மிகுந்தவர். அதை மறக்க வேண்டாம். ராஜாங்க விஷயத்தில் ஏற்கெனவே தலையைக் கொடுத்து விட்டீர்கள்.அதுவேறு வண்டாய்க் குடைகிறது.”

“இந்தச் சிறுமண்டைக்குள் வண்டு குடைச்சல் வேண்டாம். நட்பாகவே நண்பர் அழைப்பு விடுத்துள்ளதால் நல்லதாகவே இருக்கும்.உன் அத்தானை நம்பு “

“நம்பாமலேதான்  பொழுது சாய்ந்து இத்தனை நாழிகை கழிந்தும் உம்மோடு வாய் பார்த்து நிற்கிறேன்”

“அடி… உனக்கு வாய் நீண்டு விட்டது. அத்துடன் நீ இந்த தீர்த்தகிரி மன்றாடி தீரன் சின்னமலையின் வருங்கால மனைவி! நிகழ்கால காதலி! .இதை நினைவில் கொள்.  எப்போதுமே நீ வீரப் பெண்மணியாய் புத்தி சாதுர்யமாய் விழிப்புடனே இருக்க வேண்டும். நம்மைச் சுற்றிலும் ஓநாய்க் கூட்ட ங்களும் நரிக்கூட்டங்களுமே அதிகம். அதித கவனத்துடன் உணர்ச்சிகளைக் காட்டாது இருக்கவும் பழக வேண்டும்.  இதையெல்லாம் நீ வளர்த்துக் கொள்வது அவசியம் நிலமங்கை “

என்றவன் அவனை கைகளை தன் கைகளுக்குள் பொதிந்து 

“நாளை கழித்து மறுநாள் புறப்படுகிறேன். விடைகொடு”




“வெற்றியோடு வாருங்கள்”

அவளை முதலில்  வழியனுப்பி வைத்து விட்டு பின்னரே இவன் புறப்பட்டான்.

தன் நினைவினின்றும் மீண்டவன் அருகில் வந்த நண்பனை

“கருப்பச் சேர்வை! வேலப்பனும் முத்துச்சேர்வையும் நாம் கூறியபடியே கவனமாக இருப்பார்கள் தாமே! “

“ஆமாம் தீர்த்தா! ஐயமே வேண்டாம். மேலும் ஆசான்களும் உள்ளனரே! அவர்களின் மேற்பார்வையில் எல்லாமே சரியாகவே நடக்கும்”

கருப்பன் சேர்வை தீர்த்தகிரியின் உயிர் நண்பன். அவனுடைய கொங்குபடையின் தளபதி இவனுக்கு மெய்க்காப்பாளன் இப்படி பற்பல அவதாரமெடுப்பான். மைசூர் செல்கிறேன் என்றதுமே 

 உடனே புறப்பட்டு விட்டான் நண்பனுடன்.

இருவரிடையேயும் ஆத்மார்ந்த நட்பு வேரோடிக் கிடந்தது.

பாதை முடிந்து வனாந்திரப்பகுதி துவங்கியதுமே நிழல் கவிந்து கொண்டது. அந்த இடம் வந்ததுமே சாயபு மரைக்காயரின் நினைவு வந்தது. இங்கே தான் அவரை குற்றுயிரும் குலையுயிருமாய் கண்டான்.

எங்கோ போய் விட்டு வந்தவன் வனத்தினுள் ப்ரவேசித்து கடக்க முயல்கையில் பாதையில் யாராலோ கடுமையாகத் தாக்கப்பட்டு ரத்த சகதியில் கிடப்பதைக் கண்டான். 

செம்பாவிலிருந்து குதித்து இறங்கியவன் இவரைக் காண்கையில் உயிர் அவர் உடலோடு கண்ணாமூச்சியாட்டம் ஆடிக் கொண்டிருந்தது. 

அவருடைய ஆடையையே கிழித்தவன் அவரையும் அமர்த்தி தன்னை அவரோடு சேர்த்துப் பிணைத்துக் கட்டிக் கொண்டு பறந்தான். செம்பாவும் எஜமானனின் அவசரம் புரிந்து வேகமெடுத்து மருத்துவசாலையில் நின்றது. அவரோ புரவிப்பயணம் காரணமாய் இன்னமும் தொய்ந்திருந்தார். 

அதன் பிறகு 

மூன்று மாதங்களுக்கு மேல் சிகிச்சை தொடர்ந்தது. பேச்சுமூச்சின்றி கிடந்தவரை காணவே பயமாயிருந்தது. 

அவருடைய மனத்திண்மையும் தீரனின் கவனிப்பும் சேர்வராயன்மலை மூலிகைகளும்  காப்பாற்றி விட்டன. 

தீரனின் மாளிகையில் நடந்த  ராஜோபசாரதத்தில்   

நாட்கள் கடந்துபோக அவரும் உடலாலும் உள்ளத்தாலும் நலமும் பலமுமாகி விட்டார். அந்த நாட்களில் முகிழ்த்ததுதான் இருவரிடையேயான நட்பு. அவர் பிரியாவிடை பெற்று சென்ற பின்னும் நட்பு கிளைத்து செழித்தே யிருந்தது.

ஓரிருமுறை அவர் இல்லம் சென்று அவர் விருந்தோம்பலை மனமகிழ்வோடு ஏற்றிருக்கிறான். இப்போது நட்பை மீறியதோர் விஷயம் ஒன்றுள்ளது என்பதை உணர்ந்து பயணம் மேற்கொண்டுள்ளான். 

அமைதியாகவே தொடர்ந்தது பயணம்.

மைசூர் ….

அரசர் திப்பு சுல்தான் தன்னுடைய அந்தரங்க ஆலோசனை அறையில் நடைபயின்று கொண்டிருந்தார். வலது கை  முறுக்கியிருந்த மீசையை இன்னும் முறுக்கிக் கொண்டிருந்தது. 

எப்போதுமே சிரத்தை  அலங்கரிக்கும் அந்த அழகான மாணிக்கக் கற்கள் பதித்த வட்டவடிவமான தலைப்பாகை இன்றி. காற்றில் அவருடைய கேசக்குழல் அலைந்து கொண்டிருந்தது. இந்தத் தென்றலுக்குத்தான் எத்தனை துணிவு. கிடைத்ததே சந்தர்ப்பமென பலமாக வீசி அவருடை குழல் கற்றைகளை தாவிப் பிடித்து விளையாடியதுமன்றி அவருடைய விழுப்புண்களினால் உண்டான தழும்புகளை மறைத்த வெண்ணிற பட்டு உத்தரியத்தையும் கன்னிப்பெண்ணைப் போலத் தழுவிக் கொண்டு நழுவ வைத்தது.

அவரோ எதையுமே சிந்தையில் கொள்ளாமல் அறையைத் தன் திருவடிகளால் அளந்த வண்ணமிருந்தார்.

சுவர்களின் கண்ணுக்கிதமான வண்ணப்பூச்சோ அவற்றில் மிக அழகாக இயற்கைப்பூக்களேதானோ என ஐயுறும்படி அமைந்திருந்த வண்ணப் பூக்களின் படிவங்களையோ…. அற்புதமான சித்திரங்களையோ சாளரம் வழியே உள்ளே எட்டிப்பார்த்து தன் பூக்களின் நறுமணத்தை பரப்பிய பூங்கொடிகளையோ 

வானிலிருந்து கண்சிமிட்டும் தாரகைகளோடு வலம் வந்து வெள்ளித்தூவல்களை படரவிட்ட நிலவையோ கவனத்தில் கொள்ளாததினால் தோற்றுப் போய்த் தவித்தன.

“ஹூசூர்”

“வாருங்கள்! வாருங்கள்! “

“மிகவும் தாமதப்படுத்திவிட்டேனோ?”

“இல்லையில்லை. நான்தான் விரைவிலேயே மஹாலுக்கு வந்து விட்டேன். அமருங்கள்”

அரசர் அமரும் வரை வந்தவரும் அமரமாட்டார் என்பதைப் புரிந்தவனாக அந்த நீண்ட திவானில் அமர்ந்தார் திப்பு சுல்தான். 

அவர் அமர்ந்ததுமே எதிரேயிருந்த திண்டு ஒன்றில் அமர்ந்தார் வந்தவர்.




எவ்வித ஆபரணங்களுமற்ற நெஞ்சத்தில்  ஏராளமான தழும்புகள். அவற்றை மறைக்க முடியாத கையாலாகத் தனத்துடன் ஒரேஒரு பதக்கம் பொதிந்த கனமான தங்கச் சங்கிலி மட்டுமே ஊசலாடியது. வெண்பட்டு மேலாடை அதே போல இடையில் செம்பழுப்புநிறப் பட்டாடை. விரலில் ராஜவம்சத்தின் முத்திரை மோதிரம். கைகளில்  பொற்கடகம். கண்களில் தீக்ஷண்யம்

கன்னங்கரேலென்று திட்டமாக முறுக்கிய மீசை ஆண்மைக்கழகாக. சிறு மடிப்புடன் கூடிய இதழ்கள். எப்போதுமே ஒரு ரகசியப் புன்னகை ததும்பி நிற்கும் வீரம் செறிந்த கம்பீரமான வதனம். ஒரு குழந்தையின் மாசுமருவற்றது போன்ற தோற்றம் . இடது கை திவானின் திண்ணைச்சுருள்மேட்டில் இருக்க வலது கை வலது தொடையில் வீற்றிருந்தது.அமர்ந்திருந்த தோரணையில் ராஜகளை சொட்டியது. 

வந்தவர் தொண்டையை செருமிக் கொண்டு பேச ஆரம்பித்தார்.

வழுவழுவென்ற சீனத்துப்பட்டின் பூப்போட்ட வஸ்திரத்தால் ஆன மேல்சட்டை அங்கி போல் முழங்கால் வரையும் இருந்தது. சிரத்தில் குச்சு வைத்த குல்லா ஒன்று மரப்பட்டையின்நிறத்திலிருக்க லேசான சுர்மா போட்ட பழுப்புக்கண்கள் அடர் புருவத்தின் கீழே ஒளிர்ந்தன. வேளை தவறாத தொழுகை காரணமாக நெற்றியின் நிறம் நடுவே சற்றே மாறுபட்டிருந்தது.

குல்லாவைக் கழற்றி கரத்தில் வைத்துக் கொண்டவர்

“ஹுசூர்! இதுவரை மகிழ்ச்சியான தகவல்களே வந்துள்ளன. மதுரையைச் சேர்ந்த சிற்றரசர் அதிருங்கழகோன் தஞ்சையின் சுந்தரவேலு நாய்க்கர் இருவருமே உதவுவதற்குத் தயார் என்று உறுதி கூறி வாக்கு தந்துள்ளனர். அடுத்து பிரெஞ்சு பேரரசர் நெப்போலியன் போனபார்ட்டு அவர்களும் படையுதவி தர சம்மதித்திருப்பதாக நம்பிக்கையான சேதி வந்துள்ளது.மேலும் நாம்  கேட்டுக் கொண்ட விதமாக துப்பாக்கி பீரங்கி வெடிமருந்து ஆகியவற்றில் பயிற்சி தரவும் ஆட்களை அனுப்ப சம்மதித்துள்ளார்”

“ஆனாலும் ஒரு அந்நியனை வீழ்த்த மற்றொரு அந்நியனை…. தேசத்துக்குள்ளே கொண்டு வருவது என்பது நெருடலாக இருக்கிறது “

“பாதுஷா… எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கோணத்தில் பாருங்கள். அவர்களுடைய உதவியோடு பயிற்சியை மேற் கொள்ளலாம். அடுத்து….”

“……….”

“தீர்த்தகிரி …அதாவது உங்களால் பட்டம் பெற்ற தீரன் சின்னமலை புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறான். அவனுக்குப் பின்னே பயிற்சி பெற்ற  இளைஞர் படை உள்ளது. தீர்த்தாவுமே போர்க்கலைகள் பல கற்றவன். அவனும் தங்களுக்கு பக்கத் துணையாக நிற்பான். அல்லாவின் அருள் பூர்ணமாகக் கிட்டும். “

“தீரனுக்குப் பின்னே படையா? “

“ஆம் ஹுசூர்.  ஆங்கிலேயரை முழுதுமாக விரட்டிய பின்பே தங்க சிம்மாசனத்தில்* அமர்வேன் என்ற தங்களின் சூளுரை போன்றே இவனும் என் நாட்டிலிருந்து அந்நியரை விரட்டுவேன்.  இதுவே என் லட்சியம் என்று பிரதிக்ஞை செய்து அதற்கான முயற்சியாக ஊரிலுள்ள இளைஞர்களையெல்லாம் திரட்டி பயிற்சி தந்து படையாகத் திரட்டி வைத்துள்ளான். “கொங்கு படை ” என்று நாமமும் சூட்டியுள்ளான். வில் வாள் சிலம்பம் என்று ஒவ்வொருவரும் கடுமையான பயிற்சியை மேற்கொண்ட தலைசிறந்த வீரர்கள்.”

“பலே! பலே! எம்மக்கள் அனைவருமே வீரத்தில் புலிக்குட்டிகள்”

என்று கர்வமாகச் சிரித்தது அந்த மைசூர் புலி.

(தீரன் வருவான்)

*தங்கசிம்மாசனம்*

திப்புசுல்தான் பதவியேற்கும் சமயம் மைசூர் அரண்மனையில் சொக்கத்தங்கத்தினாலான சிம்மாசனம் வடிவமக்கப்பட்டிருந்தது.” ஆங்கிலேயரை விரட்டியபின்பே தங்க அரியணையிலமர்வேன் ” என்று சூளுரைத்தார்  திப்புசுல்தான் . அரண்மனையின் மேற்புற அறை ஒன்றில் காத்திருந்த அதில் அவர் கடைசிவரை அமரவேயில்லை என்பது சோகமே.

— வரலாற்றுக் குறிப்பின்படி —-

தீரா….நிலதீரா…!




What’s your Reaction?
+1
2
+1
1
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!