Serial Stories மஞ்சள்காடு

மஞ்சள்காடு-15

15

“ஹரி!” என்று கத்தினாள் ஸ்வேதா. “உங்ககிட்ட நான் எவ்வளவோ விளக்கிட்டேன் – நான் உடையார் குடும்பத்தைச் சேர்ந்தவதான்னாலும், எனக்கும் அரண்மனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! இந்த அரண்மனையை யார் வாங்கினாலும் இதை என்ன பண்ணினாலும் ஐ டோண்ட் கேர்! ஏன் என்னைக் கஷ்டப்படுத்தறீங்க?”

“ஐ அம் ஸாரி, மிஸஸ் ஸ்வேதா, என்னைத் தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க! இங்கே இருக்கற விவகாரங்களுக்கு தீபாவும்தான் காரணம்னு சொன்னேன், ஆனா அவ இன்வால்வ்ட்னு சொன்னேனா?” என்றான் ஹரி.

“ஆனா உங்க விஷயத்தில் அப்படிச் சொல்ல முடியலை, ஸ்வேதா!” என்று ஹரிணி சொன்னதும் சற்று நிம்மதி மூச்சுவிட்டிருந்த ஸ்வேதா மறுபடி மூச்சை இழுத்துப் பிடித்தாள்.

“யெஸ். உங்க குடும்பத்தோட சாஸன பத்திரத்தை நானும் ஹரியும் பார்த்துட்டோம், அதை எங்க அஸிஸ்டெண்ட் இன்வெஸ்டிகேட் பண்ணி ரிப்போர்ட்டும் அனுப்பிட்டான்! இந்த அரண்மனையோட சொந்தக்காரர், உங்க குடும்பத்தோட மூத்த வாரிசு. உங்க தலைமுறையில் அது உங்க ப்ரதர். துரதிர்ஷ்டவசமா இந்த இடம் விற்றபோது அவர் கையெழுத்தை வாங்கணும்னே உங்க குடும்பத்தாருக்குத் தோணலை…”

“நீங்க சொல்ற வாரிசு விஷயம் எனக்குத் தெரியாது. ஆனா அப்போ என் அண்ணாக்கு ஆக்ஸிடெண்ட் ஆகியிருந்தது…”

“யெஸ், கையெழுத்து வாங்கமுடியாத நிலை! ஆனா அப்போ அவர் உயிரோடுதான் இருந்தார்! ஸோ, இந்த அரண்மனை கம்பெனிக்கு விற்கப்பட்டதே செல்லாது! அப்புறம் அவர் இறந்துட்டாரானாலும், அவர் உயில் எழுதிவெச்சிருந்தார் – நீங்கதான் அவருக்கு வாரிசுன்னு! வயதுக் கணக்கும் உங்களுக்குச் சாதகமா இருக்கு! இப்போ கம்பெனிமீது கேஸ் போடப்பட்டதுன்னா, இந்த விற்பனையே செல்லாதுன்னு அறிவிக்கப்பட்டு, இந்த அரண்மனை மற்றும் அதைச் சுற்றிய இந்த மஞ்சள்காடு முழுவதும் உங்களுக்கு, உங்க மூலம் உங்க கணவருக்கு, சொந்தமாகும்” – நீளமாகப் பேசி நிறுத்தினான் ஹரி.

ஆதித்யா சடாரென்று எழுந்து நின்றான். 

“சொல்லுங்க ஆதி! இந்த விஷயம் உங்களுக்கு நல்லா தெரியும், இல்லையா? இந்த அரண்மனைக்காகக் கேஸ் போடறதுக்கு முன்னால் இதை முழுவதுமா டெவெலப் பண்ணிக்கணும்னு நினைச்சீங்க, இல்லையா?…”

“… கம்பெனி செலவில்…” என்று இடைமறித்தாள் ஹரிணி.

ஹரி புன்னகைத்தான். “எக்ஸாக்ட்லி. இங்கே இன்ஃப்ராஸ்ட்ரக்சர் வேலைகள் முடிந்ததும், இதற்குண்டான கெட்ட பெயர் அகன்றதும், இதைக் கைப்பற்றணும்னு முடிவு பண்ணியிருக்கீங்க! அப்போதான் உங்களுக்கு விஷயம் தெரிஞ்ச மாதிரியும், அதுவரை நீங்க கம்பெனிக்காகக் கஷ்டப்பட்டு ஸின்ஸியரா உழைச்ச மாதிரியும் காட்டிப்பீங்க! ஆனா இப்போதிலிருந்தே நீங்க வக்கீல்களைக் கன்ஸல்ட் பண்ணிட்டிருக்கீங்க, இல்லையா?”

ஸ்வேதா நடுநடுங்கி ஆதியைப் பார்த்தாள். காயத்ரியின் பார்வையில் வெறுப்பு மாறவில்லை. ஆதி தலைகுனிந்தவன் நிமிரவேயில்லை.

“இப்படி மௌனமா நின்னா எப்படி ஆதி? மணி பற்றி நீங்க சொல்லவேண்டாமா?” என்று ஹரி கேட்டதும், அடுத்த அதிர்ச்சி அங்கே அலையலையாய்த் தாக்கியது. 

“ம… மணி? என்ன சொல்றீங்க ஹரி?” என்று முன்னால் வந்தார் சந்தானபாண்டியன். அவருக்கு உடல் நடுங்க ஆரம்பித்திருந்தது.

“பேசுங்க ஆதி!” என்று ஊக்கினான் ஹரி.

ஆதி தலைநிமிராமலே பேச ஆரம்பித்தான். “வெல்… ஒருநாள் நான் வக்கீல் வீட்டுக்குள் போறதை மணி பார்த்துட்டான். என்னைத் தொடர்ந்துவந்து எங்க பேச்சை எப்படியோ ஒட்டுக் கேட்டிருப்பான் போலிருக்கு. அவனுக்கு முழுசும் விஷயம் புரியலைன்னாலும், இதை வெச்சு என்னை ப்ளாக்மெயில் பண்ணலாம்னு புரிஞ்சுக்கிட்டான்.

“எனக்கு இந்த விவகாரத்தில் உதவறதுக்கு ஒரு அடியாள் கூட்டம் ரெடி பண்ணியிருந்தேன். மணிக்கு அரண்மனை போகிற வழியில் பணம் கொடுக்கறதா சொல்லி, வண்டியை நிறுத்திட்டு வரச் சொன்னேன். அவனை அடிச்சுப் போடச் சொன்னா, என் ஆள் அவனைச் சினையில் தள்ளிவிட்டுட்டான்! அவனை வெளியே எடுத்துட்டோம்னாலும், மண்டையில் அடிபட்டு மணி ஆஸ்பத்ரியில் இறந்துட்டான்… ஐ அம் ரியலி சாரி, இப்படியெல்லாம் நடக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை!”

“இப்படி சாரின்னு சொல்லிட்டா ஆச்சாடா? நீ என்ன பண்ணிருக்கன்னு புரியுதா? கொலை! கொலை பண்ணிருக்க நீ!” – காயத்ரி வார்த்தையாலும் கைகளாலும் ஆதியை மாறிமாறி அறைந்தாள்.

“ஆதி! அப்போ இங்கே நடக்கிற எல்லா சம்பவங்களுக்கு நீதான் காரணமா?” – திகிலடித்த குரலில் கேட்டாள் ஸ்வேதா.

“இல்லை மேம். இந்த இடத்தின் பேரைக் கெடுக்கற மாதிரி ஆதி ஏன் நடந்துக்கப் போறார்? அதோடு, இங்கே அமானுஷ்ய சக்தி ஒண்ணு இருக்குன்றதை மறந்துட்டீங்களா?” என்றான் ஹரி.

“அ… அமானுஷ்ய… அது எல்லாம் ஹம்பக் இல்லையா?” என்று கேட்டான் க்ருபா. “என்னைத் தாக்கியது அ… அமானுஷ்யமா?” – பயந்திருந்தான் என்று தெரிந்தது.

“இல்லை க்ருபா. உன்னைத் தாக்கியது சந்தானபாண்டியன் சார்!”

“வாட்?” என்றான் க்ருபா.

“பின்னே அந்த இரவில் அரண்மனைக்கு வெளியே தாழ்வாரத்தில் அவரைத் தவிர யார் இருந்தாங்க? எல்லோரும் ஒண்ணா உள்ளே இருந்தோம், சிலர் வெளியில் இருந்தாங்க – பத்ரியும் அவர் துணையும். க்ருபா வெளியில் போனதைப் பார்த்தவர் அவர் ஒருவர்தான். பேசுங்க, சந்தானபாண்டியன்! உண்மையைச் சொல்லுங்க” என்றாள் ஹரிணி.

சந்தானபாண்டியன் எங்கோ பார்த்துக் கொண்டு பேசினார். “அன்னைக்குப் புல்லாங்குழல் சப்தம் கேட்டபோது நான் தூக்கத்திலிருந்து விழிச்சுக்கிட்டேன். யதார்த்தமா ஜன்னல் வழியே பார்த்தேன். அங்கே – அந்தப் பொண்ணு – வனமங்கை – மிதந்த மாதிரிப் போயிட்டிருந்தா. எனக்குள்ளே தெய்வ பயம் இருந்தாலும், ஒரு நிமிஷம் சபலப்பட்டுட்டேன். அவளைத் தொடர்ந்து போனா… இந்த க்ருபா தாழ்வாரத்திலிருந்து இறங்கிப் போயிட்டிருந்தான். அவன் என்னைப் பார்த்துட்டா… அவமானத்துக்குப் பயந்து அவனைத் தடியால் அடிச்சேன். அவன் கத்தினதில் ஹரிணி எழுந்து வந்துட்டாங்க. அந்தப் பெண்ணும் மறைஞ்சுட்டா. நானும் சப்தம் கேட்டு வந்த மாதிரி நடிக்க வேண்டியதா போச்சு!”




“அடச் சே! நீங்களும் ஒரு மனுஷனா? ஏம்ப்பா ஹரி! இங்கே வேற என்ன அமானுஷ்யம் இருக்குன்னு நீ சொல்ற? இங்கிருக்கற ஆண்கள் எல்லோருமே மனுஷத் தன்மையே இல்லாம இருக்காங்க!” – பொறுமினாள் மீனா.

“ஏம்மா, நீங்க உண்மையை மறைக்கலையா? உங்க மகன் என்ற போர்வையில் ஒரு க்ரிமினலை உள்ளே விடலையா?” என்றாள் ஹரிணி.

“ஐயையோ! என் பேரனுக்கு ஆபத்து ஏற்படுத்திடுவேன்னு அவங்க மிரட்டினதால் தான்மா நான் இதுக்குச் சம்மதிச்சேன்! இத்தனை ஆபத்திலும் இந்த மனுஷன்…” மீனாவின் பார்வை சந்தானபாண்டியனை ஈட்டியாய்க் குத்த, அவர் நிலைதடுமாறி ஒரு சோபாவில் விழுந்தார்.

“அப்போ ஆனந்தனோட மரணம் ஒரு ஆக்ஸிடெண்ட்னு வெச்சுக்கிட்டா, இங்கே நடந்த எல்லாம் விளக்கப்பட்டாச்சு இல்லையா?” என்றான் ஆதி, கண்கள் பளிச்சிட.

“அப்படியா? எல்லாத்தையும் விளக்கிட்டீங்களா? வனமங்கை யாரு? ஏன் அவ அவ்வப்போது ஒவ்வொருத்தர் கண்ணில் பட்டுட்டே இருந்தா? எப்படித் திடீர் திடீர்னு மறைஞ்சு போனா? புரொபஸரைக் கடிச்ச தேள் எங்கிருந்து வந்தது? சந்தானபாண்டியனும் நானும் ஹரிணியும் அன்றிரவு பார்த்த உருவம் யாருடையது? இதுக்கெல்லாம் பதில் இருக்கா உங்ககிட்ட?” 

ஹரியின் சரமாரிக் கேள்வியில் ஆதி திணறிப் போனானாயினும் சமாளித்துக் கொண்டான். “ஓகே, அதான் சொல்லிட்டீங்களே, இங்கே ஏதோ அமானுஷ்யம் இருக்குன்னு! அதை ஏதாவது பூஜை, பரிகாரம்னு செய்து அடக்கிடலாம். அதுக்கும் நீங்கதான் உதவணும்” என்றான்.

“இந்த விவகாரம் அவ்வளவு சுலபமா தீர்க்கக் கூடியது இல்லை ஆதி! இங்கே நடக்கிற பிரச்சனைகளுக்குக் காரணம் நான் சொல்றேன் – இந்த வீட்டோட வாரிசு, நாம் இறந்துட்டார்னு நினைச்சிட்டிருக்கற ஒருத்தர், இன்னும் உயிரோடுதான் இருக்கார்! இந்த அரண்மனை தன் கையைவிட்டுப் போயிடக் கூடாதுன்னுதான் இதையெல்லாம் செய்துக்கிட்டிருக்கார்!”

“யார்? யாரைச் சொல்றீங்க?” என்று பரபரப்பாகக் கேட்டான் ஆதி.

“அண்ணா! என் அண்ணா… அவன்… அவன் உயிரோடு… எப்படி… யார்” தடுமாறினாள் ஸ்வேதா.

அப்போது வேகமாய் ஹாலுக்குள் நுழைந்தான் முத்துவேல். “அ… ஐயா! ஐயா! ஆறாங்கட்டில் பூட்டிய அறையிலிருந்து யாரோ முனகற சப்தம் கேட்குதுங்க! ‘சுவே’, ‘சுவேதா’ன்னு நம்ம அம்மா பேரைத்தான் சொல்ற மாதிரி இருக்கு. கொஞ்சம் வந்து பாருங்க ஐயா! எனக்குப் பயமாயிருக்கு!” என்றான்.

ஸ்வேதா பதற, ஹரி-ஹரிணியின் முகங்களில் புன்னகை தவழ்ந்தது.




What’s your Reaction?
+1
12
+1
7
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!