Serial Stories மஞ்சள்காடு

மஞ்சள்காடு-14

14

ஹரி-ஹரிணியின் அறை.

கையில் டீக்கோப்பையோடு சோபாவில் அமர்ந்திருந்த ஹரி ‘அடுத்து க்ருபாவைப் போய்ப் பார்க்கலாமா, அல்லது புரொபஸர் விழுந்த இடத்தை ஆராயலாமா?’ என்று யோசித்துக் கொண்டிருந்தான். அருகே திவானில் ஹரிணி கண்களை மூடிச் சாய்ந்திருந்தாள்.

அறைவாசலில் “உள்ளே வரலாமா?” என்று குரல் வந்தது.

“வாங்க மிஸஸ் ஸ்வேதா” என்று அழைத்தான் ஹரி. ஹரிணி நிமிர்ந்து அமர்ந்தாள்.

“வாழ்த்துகள்” என்றாள் ஸ்வேதா அமர்ந்ததும்.

ஹரி-ஹரிணி புருவம் சுருக்கினார்கள்.

“இங்கே ஒளிஞ்சிருந்த அந்தக் கைதியை அருமையா திட்டம்போட்டு வெளிப்படுத்தியதுக்காக! பெரிய ஆபத்திலிருந்து எங்க எல்லாரையும் காப்பாற்றியதுக்காக!”

ஹரி-ஹரிணி மௌனமாக அவளைப் பார்த்தார்கள். அவள் இன்னும் பேசி முடிக்கவில்லை என்று அவர்களுக்குத் தோன்றியது.

சற்று இடைவெளிவிட்டு, ஸ்வேதா தொடர்ந்தாள். “உங்க வேலை முடிஞ்சு போச்சு. உங்களுக்கு நாங்க எவ்வளவு பே பண்ணணும்னு சொல்லிட்டீங்கன்னா, செக் போட்டுத் தந்துடுவேன்” – கையில் மடக்கி வைத்திருந்த செக் புத்தகத்தைப் பிரித்தாள் ஸ்வேதா.

ஹரியின் முகத்தில் புன்னகை நெளிந்தது. “மிஸஸ் ஸ்வேதா! எங்களை எம்ப்ளாய் பண்ணியது உங்க கணவரா இருந்தா, இந்தச் செக்கை நான் வாங்கிக்கிட்டு வெளியே போயிடலாம். ஆனா எங்களை எம்ப்ளாய் பண்ணியது, மிஸ்டர் ஆதித்யா இல்லை, க்ரீன் ஹோம்ஸ் கம்பெனி! க்ளையண்ட்ஸ் கொடுத்த வேலையை முடிக்காமல் நாங்க வெளியேறினதா சரித்திரமே இல்லை” என்றான்.

“புது சரித்திரம் எழுதலாமே, எங்களுக்காக? இங்கே தங்கியிருக்கற இத்தனை உயிர்களுக்காக? நீங்க இங்கேருந்து வெளியேறணும், மற்றவங்களையும் வெளியேறச் சொல்லணும்.”

“ஏன்? புரியலை” என்றாள் ஹரிணி.

ஸ்வேதா செக் புத்தகத்திலேயே மடித்து வைத்திருந்த ஒரு காகிதத்தை நீட்டினாள்.

ஆதி! மஞ்சள்காடு அம்மனின் இடம். இங்கு அம்மன் ஏகாந்தத் தவத்தில் இருக்கிறாள். இதை வியாபார ஸ்தலமாக்கினால் அம்பிகை உன்னைச் சும்மா விடமாட்டாள். நடந்த மூன்று மரணங்களுக்கும் உன் மூடத்தனம்தான் காரணம். இனியாவது விலகிப் போய்விடு, இருக்கிறவர்களாவது உயிர் பிழைக்கட்டும்.

ஹரி அந்தக் கடிதத்தைப் படித்துவிட்டுப் பெருமூச்சுவிட்டான். “இதை எழுதியது யார், மிஸஸ் ஸ்வேதா? ஆவியா, அம்மனா, அல்லது நீங்களே…”

“மைண்ட் யுவர் வர்ட்ஸ், மிஸ்டர் ஹரி!” என்று கத்தினாள் ஸ்வேதா. “நான் ஏன் இந்த லெட்டர் எழுதணும்? இந்த ப்ராஜக்ட் ஆதியுடைய லட்சியம்! அவனுடைய ட்ரீம், விஷன்! இதைக் கெடுக்கறதால எனக்கு என்ன லாபம்? முதலில் எனக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?”

“என்ன, இப்படிக் கேட்டுட்டீங்க ஸ்வேதா? இது உங்க அரண்மனை இல்லையா? நீங்க உடையார் குடும்பத்தைச் சேர்ந்தவங்க இல்லையா? இது மறுபடி உடையார் குடும்பத்துக்கே போய்ச் சேரணும்ங்கறதுல உங்களுக்கு இண்ட்ரெஸ்ட் இல்லையா? ப்ளீஸ், உண்மையைச் சொல்லுங்க” என்றாள் ஹரிணி கிடுக்கிப்பிடியாக.

கைகளைப் பிசைந்துகொண்டு தவித்துப் போனாள் ஸ்வேதா. ‘அவள் பதில் சொல்லட்டும்’ என்று அவளை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் ஹரியும் ஹரிணியும்.

“ஓகே, இனி உங்களிடம் எதையும் மறைச்சுப் பிரயோஜனம் இல்லை” என்றாள் ஸ்வேதா. “ஆமா, நான் உடையார் குடும்பத்தைச் சேர்ந்தவதான். ஆனா, நான் பிறக்கறதுக்கு முன்னாடியே என் தாத்தா அரண்மனையைவிட்டு வந்துட்டாங்க. பாகப்பிரிவினை ஆகிடுச்சு. அப்புறம் அரண்மனை நெருப்பால் அழிஞ்சுபோன விஷயம் அரசல்புரசலா கேள்விப்பட்டேன். எதனாலன்னு எனக்குத் தெரியாது. ஏதோ ‘அமுதவல்லி விவகாரம்’ என்று என் அம்மா-அப்பா பேசிக்கறதைக் கேட்டிருக்கேன். என் அண்ணா சொல்வான் – அமுதவல்லின்னு எங்களுக்கு ஒரு அத்தை இருந்ததாகவும், அவ செத்துப் போயிட்டான்னும், அவளுக்கு ஏதோ லவ் அஃபேர் இருந்ததாகவும். பத்து வருஷத்துக்கு முன்னாடி அரண்மனையை வித்தப்போ என் அப்பாவும் தன் கஸின்ஸோட சேர்ந்து கையெழுத்துப் போடப் போயிருந்தார். ஆனா அவங்கள்ளாம் எங்களுக்குத் தூரத்து சொந்தம், அதோட நான் அவங்களைப் பார்த்ததே இல்லை, ஸோ, இந்த விஷயங்களெல்லாம் ஒண்ணும் தெரியாது.




“எனக்கும் ஆதிக்கும் கல்யாணம் ஆனது. அவன் யங்கஸ்ட் சி இ ஓ வா ப்ரமோட் ஆனதும் ஆதிக்குக் கம்பெனியில் சில பிரச்சனைகள் உருவாச்சு. அப்போல்லாம் நான் அவனுக்குத் துணை நின்னு அவன் பிரச்சனை தீர உதவியிருக்கேன், மிச்சபடி நான் ஹோம்மேக்கர்தான், அப்படி இருக்கறதுதான் இஷ்டம்…

“இந்த விவகாரத்தை ஆதி ஒரு சேலஞ்சா கையிலெடுத்தப்போ, எனக்கு இந்த அரண்மனை எங்க குடும்பத்துக்குச் சொந்தம்ங்கறதே மறந்துபோச்சு. ஆதி இங்கே விஸிட் பண்ணினப்போ, நானும் இங்கே வந்திருக்கேன். ஆறாம் கட்டைத் திறந்தபோது நானும் அங்கே இருந்தேன்… அங்கே எதுவும் அமானுஷ்யமா நான் பார்க்கலை.

“ஆனா அங்கிருந்து போனதிலிருந்து தினமும் எனக்குக் கனவு… ஆதியை அரண்மனைக்கு வர விடாதே, விடாதேன்னு குரல்… நான் சொன்னதை ஆதி கேட்கலை. பயந்துக்கிட்டுத்தான் நானும் அத்தையும் அவன் கூட வந்தோம். இங்கே நடக்கிற விஷயங்கள்… இப்போ கடைசியா இந்தக் கடிதம்… பயமா இருக்கு ஹரி! எல்லாரையும் எப்படியாவது இந்த அரண்மனையிலிருந்து வெளியேத்திடுங்க, ப்ளீஸ்!” ஸ்வேதா கண்களில் கண்ணீர் தெரிந்தது; பொய் தெரியவில்லை.

“ஓகே” என்றாள் ஹரிணி, சில விநாடிகளுக்குப் பிறகு. “வா ஹரி! அவங்க இவ்வளவு தூரம் சொல்றாங்க, இந்தக் கடிதத்தைக் காட்டிப் பேசிப் பார்க்கலாம்” என்று எழுந்துவிட்டாள்.

ஹரி ஹரிணியைப் பார்த்துக் கொண்டே எழுந்தான்.

*****

ஹாலில் எல்லோரும் கூடியிருந்தார்கள்.

ஹரிணி எழுந்தாள். எவ்வித முன்னுரையும் இல்லாமல் பேசலானாள். “இந்த வீடு ஒண்ணும் மொபைல் எடுக்காத அத்துவானக் காட்டிலோ, கடலுக்கு நடுவில் இருக்கற தீவிலோ இல்லை. கிராமப்புறம், ஒரு குன்றுமேல இருக்குங்கறதைத் தவிர, நம்மால் யாரோட வேணும்னாலும் கம்யூனிகேட் பண்ண முடியும், எப்போ வேணும்னாலும் இந்த அரண்மனையைவிட்டு வெளியே போயிட முடியும். 

“இந்த மஞ்சள் காட்டில் இதுவரை மூன்று உயிர்கள் போயிருக்கு. ஏதேதோ அமானுஷ்ய சம்பவங்கள் நடந்திருக்கு. ஆனா, இதுவரை யாரும் இந்த இடத்தைவிட்டுப் போகணும்னு நினைக்கலை. சொல்லப் போனா, சந்தானபாண்டியனோட மகனும் மருமகளும் வெளியே போனவங்க, திரும்பி வந்துட்டாங்க! இந்த அரண்மனை முன்பு யாருக்குச் சொந்தமாக இருந்ததோ, அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஸ்வேதாவைத் தவிர, யாருமே மஞ்சள் காட்டைவிட்டுப் போக நினைக்கலை!” எல்லோரும் ஸ்வேதாவைப் பார்த்தார்கள்.

ஹரிக்கு ஹரிணியின் எண்ணங்கள் புரிய ஆரம்பித்தது. “முதலில் பெரியவங்க கிட்டருந்து ஆரம்பிப்போம். ஆதியுடைய அம்மா, இங்கிருக்கற கோயிலில் வழிபடறதன் மூலம் ஆதிக்கு நிச்சயம் குழந்தை பிறந்துடும்னு நம்பறாங்க. இதை உங்ககிட்டச் சொன்னது யாரும்மா?” என்று கேட்டான்.

“நாந்தான்” என்று ஒப்புக்கொண்டான் ஆதி. “எனக்கு யாரோ சாமியார் சொன்னதா சொன்னேன். நான் கோயிலுக்கு வரலைன்னாலும், அம்மாவைப் போய்வரச் சொன்னேன். கோயிலுக்கும் இந்தப் பகுதிக்கும் ஒரு நல்ல ரெபுட்டேஷன் க்ரியேட் பண்ணலாம்னு” என்றான் வெட்கமாக.

“ஆதி! உன்னுடைய தொழில் வெற்றிக்காக, என்னுடைய பக்தியையும் பாசத்தையும் பயன்படுத்திக்கிட்டியா?” – காயத்ரி அதிர்ந்து நின்றாள்.

“சந்தானபாண்டியன்-மீனாம்மா” ஹரி தொடர்ந்தான். “சந்தானம் சார் இங்கே வந்ததுக்குக் காரணம் நம்ம எல்லோருக்கும் தெரியும். மீனாம்மா இங்கே தன் கணவரோட ஒரு வெகேஷனுக்கு வந்திருக்காங்க…”

“ஆனா இத்தனை ஆபத்துகளைப் பார்த்தும் அவங்க கிளம்பலை. சந்தானபாண்டியனே ஒரு நியர்-டெத் சிச்சுவேஷனைப் பார்த்தும், இங்கிருந்து போகணும்னு சொல்லல. அதுக்கு வெறும் காமம் காரணமா இருக்கும்னு எனக்குத் தோணலை…”

“ஹரி, எனக்கு அப்படி ஒரு எண்ணம் இருந்தது உண்மைதான், ஆனா நான்…”

“திருந்திட்டீங்க! சரி, உங்க விவகாரத்துக்குக் கொஞ்ச நேரத்தில் திரும்ப வரேன்” என்ற ஹரி “ஆதி! இங்கே இந்த அரண்மனையில் வெளியாட்களைத் தங்க வைக்கறது மூலமா, இதோட கெட்ட பேரைப் போக்கி, பிஸினஸ்க்குள்ள கொண்டுவந்துடலாம்ங்கற ஐடியா உங்களுக்குக் கொடுத்தது யாரு?”

“க்ருபா” என்றான் ஆதி, சற்று தயக்கத்துக்குப் பின்னால்.

“அவரை உங்களுக்கு எப்படித் தெரியும்?”

“நேரடியா தெரியாது, தீபா மூலமா என்னைத் தொடர்பு கொண்டார்.”

“யெஸ், தீபா! ஒரு செண்ட்ரல் மினிஸ்டரோட மகள். அவருடைய அதிரடிச் செயல்பாடுகளால் அவருக்குச் சர்வதேச அளவில் த்ரெட் இருக்கறது உங்களுக்குத் தெரியுமா? அதுக்காக அவர் மகளைக் கடத்தக்கூட ப்ளான் இருக்கு, தெரியுமா?” ஹரி அடுக்கிக் கொண்டு போக, ஹாலில் எல்லோரும் அதிர்ந்தார்கள்.

“க்ருபா, கோதையை லவ் பண்றதா சொல்லப்பட்டது. ஆனா, க்ருபாவோட பார்வை பெரும்பாலும் தீபா மேலதான் இருந்தது. தீபாவும் அவரும் அடிக்கடி கூடிப் பேசறதையும் கவனிச்சேன். சரி, குணக்கேடுன்னு முதலில் விட்டுட்டேன். ஆனாலும் இந்தக் கோதைமேல உண்டான பரிதாபத்தால, இவங்களைப் பற்றி விசாரிச்சேன். அப்பதான் பல விஷயங்களும் புரிஞ்சது” என்றாள் ஹரிணி.

“என்ன… என்ன புரிஞ்சிடுச்சு உங்களுக்கு?” – தலையில் கட்டோடு படுத்திருந்த அறையிலிருந்து வெளியே வந்துவிட்டான் க்ருபா.

“நீ ஜெயிலிலிருந்து தப்பிச்சுப் போன பத்ரியோட தோஸ்துன்னும், அவனுக்காகத் தீபாவை இங்கே கொண்டுவந்து, யாரும் சந்தேகப்படாத விதத்தில் அவன் கிட்ட ஒப்படைக்கறதா ஒத்துக்கிட்டிருக்கேன்னும் புரிஞ்சது” என்றாள் ஹரிணி, அமைதியான குரலில்.

க்ருபா திகைத்தான்.

“இந்த மஞ்சள்காட்டை ஆராய்ச்சி பண்றதுக்காக நீ வரலை, க்ருபா! அன்றைக்குக் கர்ணகடூரமா புல்லாங்குழல் சப்தம் எழுப்பினது பத்ரிதானே? வெளியே தயாரா இருக்கேன், தீபாவைக் கொண்டுவான்னு சிக்னல்! நீ தீபாவை மயங்க வெச்சுக் கொண்டுபோக நினைச்ச. ஆனா அன்று தீபாவும் கோதையும் தூங்கவேயில்லை! அதோடு இன்னொரு பிரச்சனை வேற பாண்டியும் முத்துவேலும் கிளப்பிட்டாங்க! அதை நீ பத்ரிட்ட சொல்லப் போனபோது, நீயே தாக்கப்பட்டுட்ட!”

“என்ன சொல்றீங்க? பாண்டிதானே பத்ரி? நீங்ககூட எக்ஸ்போஸ் பண்ணினீங்களே!”

“இல்ல ஆதி! பாண்டி பத்ரி இல்ல! இந்தத் தீபாவைக் காவல் காக்க செக்யூரிட்டி ஏஜன்சி நியமிச்ச பாடிகார்ட் – மிஸ்டர் பத்மநாபன்! தன்னைப் பற்றின விவரம் யாருக்கும் தெரியாமல் இருக்க சினிமா யூனிட்காரனா அரண்மனைக்குள்ள புகுந்துட்டார்!”

“அப்போ பத்ரி? அவன் இந்தக் காட்டுக்குள்ளே ஒளிஞ்சிட்டிருக்கானா? ஏன் அவன் போலீஸ் கையில் பிடிபடலை?”

“அதுக்குப் பதிலைச் சந்தானபாண்டியன் ஃபேமிலிதான் சொல்லணும்! வாங்க சார்! இந்த அரண்மனைக்கு வந்தன்னிக்கே உங்க பேரக்குழந்தைக்கு ஏதோ லேசா உடம்பு முடியலைன்னு உங்க மகனும் மருமகளும் புறப்பட்டுப் போனாங்க. ஒரே நாளில் திரும்ப வந்துட்டாங்க. ஆனா போனவங்களும் வந்தவங்களும் ஒரே ஆட்கள் இல்ல, சரியா?” ஹரிணி சொல்லிக் கொண்டிருக்கும்போதே ‘டுமீல்’ என்று துப்பாக்கி முழங்கியது.

சந்தானபாண்டியனின் மகன் புகைவிடும் துப்பாக்கியோடு முன்னே வந்து நின்றான். இன்னொரு கையால் தீபாவின் கழுத்தைச் சுற்றி இறுக்கிப் பிடித்திருந்தான்.

“சரியா கண்டுபிடிச்சுட்டீங்க, துப்பறியும் நாய்களே! நாந்தான் பத்ரி!”




*****

“வாங்க பத்ரி சார்! உங்களை வெளிப்படுத்திக்கிட்டதுக்கு நன்றி! இனிமே அடுத்த விவகாரத்துக்கு நாம போகலாம்” என்றான் ஹரி, அலட்டிக் கொள்ளாமல்.

“நீ அடுத்து நரகத்துக்குத்தான் போவ! இதோ உங்க எல்லார் முன்னாடியும் தீபாவைக் கடத்திட்டுப் போகப் போறேன்! முடிஞ்சா தடுத்துப் பாரு! நான் கதவுக்கிட்ட போற வரைக்கும் உனக்கு டைம் இருக்கு! அதுக்கப்புறம் உன்னை ஷூட் பண்ணிடுவேன்! வேணும்னா மறைஞ்சுக்கோ, ரூமுக்குள் ஓடிப்போ!”

“என்ன பத்ரி, நீ எப்படிப்பட்ட ஷுர்-ஷாட்னு எனக்குத் தெரியாதா? உனக்கெதிரா நான் ஓடியெல்லாம் தப்பிக்க முடியுமா? மின்னல் மாதிரி சுடறவனாச்சே நீ? அப்படியே நீ என்னை மிஸ் பண்ணிட்டாலும், வேற யார் மேலயாவது பட்டுட்டா? இந்த ‘ணி’ மேல பட்டா பரவாயில்லை… மற்றவங்க பாவமாச்சே!”

ஹரிணி பத்ரகாளிக் கோபத்துடன் அவனை முறைக்க, ஹரி அவளைப் பார்க்காமல் மேலும் பேசலானான். “அதான் எதுக்கு ரிஸ்க்னு, சிம்ப்பிளா உன் துப்பாக்கில குண்டை எடுத்துட்டு ப்ளாங்க்ஸ் லோட் பண்ணிட்டேன்!”

பத்ரி நம்பாதவனாய் ஹரியை நோக்கிச் சுட்டுவிட்டு அவன் சிரிப்பதைக் கண்டதும் வெறுத்துப் போனான்.

“ரைட்! இனிமே காமா உட்காரு பத்ரி!” என்று அவனையும் அவன் “மனைவி”யையும் அகன்ற நாற்காலிகளில் அமர்த்திக் கயிற்றினால் கட்டி, டேப்பும் ஒட்டினார்கள் ஹரி-ஹரிணி.

“மிஸ்டர் க்ருபா! நீங்க ஒண்ணும் விளையாடாம இருப்பீங்கன்னு நினைக்கறேன். இல்லேன்னா உங்களையும் கட்டிப் போட வேண்டியது வரும்” என்றாள் ஹரிணி.

“ப்ளீஸ் மேடம்! வாழ்க்கையில் வறுமையை மட்டுமே பார்த்தவன் நான். முன்னேறணும், பணக்காரனா ஆகணும், ஜெயிக்கணும்ங்கற வெறி! பத்ரி வந்து தீபாவைக் கடத்தி அவன் கிட்ட ஒப்படைக்கணும்னு சொன்னப்போ ஒத்துக்கிட்டேன். முதலில் பத்ரி இங்கே வரதாகவே இல்லை! அப்புறம்தான் எங்களோட சந்தானபாண்டியன் ஃபாமிலியும் இங்கே தங்கினதும் அவங்க மகன்-மருமகளா இவங்க மறைஞ்சிருக்கலாம், தீபாவை ஏமாற்றி இவங்ககிட்ட ஒப்படைக்கறதும் ஈஸின்னு நாந்தான் இந்த ப்ளான் சஜஸ்ட் பண்ணினேன். என் தப்பை உணர்ந்துட்டேன், தீபாகிட்ட மனமார மன்னிப்பு கேட்டுக்கறேன். கோதைகிட்ட எப்படி மன்னிப்புக் கேட்கறதுன்னே எனக்குத் தெரியலை” என்றான் க்ருபா வெட்கித் தலைகுனிந்தவாறே.  

“ஒரு விவகாரம் முடிஞ்சது” என்றாள் ஹரிணி, கதறி அழுதுகொண்டிருந்த கோதையையும் அவளைவிட்டுச் சற்று விலகி நின்று வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்த தீபாவையும் பரிதாபத்துடன் பார்த்தவாறே.

“யெஸ், அடுத்த விவகாரத்துக்குப் போகலாம். இங்கே மஞ்சள் காட்டில் நடக்கின்ற அசாதாரணச் சம்பவங்களுக்குக் காரணம், இங்கே வரவேண்டும் என்றே நினைக்காத, வேறு வழியின்றி மற்றவர்களோடு சேர்ந்து வந்த இரண்டு பெண்கள்தான்! ஒன்று, தீபா. மற்றொன்று…” ஹரி நாடகத்தனமாய் சற்று இடைவெளிவிட்டுச் சொன்னான் – “ஸ்வேதா!




What’s your Reaction?
+1
8
+1
9
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!