Serial Stories தேவதை வம்சம் நீயோ

தேவதை வம்சம் நீயோ-8

8

 

ஏதோ கோபம் ஓரிரு நாளில் சரியாகிவிடுவாளென்ற  சத்தியநாதனின் நினைப்பை கடந்த ஒரு வாரமாக அவனுக்கு முதுகு காட்டியே படுத்து பொய்யாக்கினாள் அஞ்சனா.

இதோ இப்போது கூட ஒரு உதவி என பற்றியவனைக் கூட உதறித் தள்ளி நிற்கிறாள்.

வேப்பிலைகளை இணுக்குகளாக ஒடித்து அலமாரிகளுக்குள் போட்டுக் கொண்டிருந்த மனைவியை சோபாவில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் சத்யநாதன்.

“சத்யாவிற்கு டிபன் கொடுத்தாயா?” சுகுணா கேட்க, “இதோ எடுத்து வைத்திருக்கிறேன். நீங்களே கொடுங்கள் அத்தை” கொடுத்து விட்டாள்.

ஒரு விள்ளல் கூட வாயில் எடுத்து வைக்க மனதில்லாமல் அப்படியே எடுத்துக்கொண்டு அடுப்படிக்குள் வந்தவன் அஞ்சனா செய்த செயலுக்கு திடுக்கிட்டான்.

அடுப்படி ஜன்னல் வழியாக வெளியே யாரையோ நோட்டம் விட்டபடி நின்றிருந்தாள். அருகே போய் பார்க்க பின் வாராண்டா ஊஞ்சலில் அமர்ந்து கொண்டு சாகித்யா கையில் போனுடன் ஊஞ்சலாடி கொண்டிருந்தாள்.

அவளை பார்த்தபடி நின்றிருந்த அஞ்சனாவின் முகத்தில் நிறைய கோபமும் எரிச்சலும் இருந்தது. சத்யநாதன் வலுவாக அவள் தோள் பற்றி திருப்பினான்

“உள்ளே வேலைகளை பார்க்காமல் வெளியே என்னடி பராக்கு பார்க்கிறாய்?”

திடுமென்ற அவன் ஆவேசத்தில் மலங்க விழித்தவள் உடன் தலையை குலுக்கிக் கொண்டு “எல்லா வேலைகளையும் உதறிவிட்டு இப்படி ஊஞ்சலாடிக் கொண்டிருந்தால் எவ்வளவு ஜாலியாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்” அவன் கைகளில் சிக்கியிருந்த தன் தோள்களை விடுவித்துக் கொள்ள முயன்றாள்.

“அவள் சிறு பெண். அவளிடம் போய் இவ்வளவு பொறாமையா? சீ…சீ ” சத்யநாதன் தன் கைப்பிடியை உதறி விடுக்க, பலமாக ஜன்னல் கதவில் மோதிக்கொண்டாள் அஞ்சனா.

வேண்டாம், பலவீனமாகாதே! அழாதே! தன்னைத் தானே  உருவேற்றிக் கொண்ட போதும் அஞ்சனாவிற்கு கண்ணீர் வழியத்தான் செய்தது.

அன்று நடு இரவுக்கு மேல் வீடு திரும்பிய சத்யநாதன் கண்களை இறுக மூடி படுத்து கிடந்த அஞ்சனாவின் தோளை தட்டினான். “எழுந்து வந்து கட்டிலில் படுடி”

மூக்கை தேய்த்தபடி விருட்டென எழுந்த அஞ்சனா “குடித்திருக்கிறீர்களா?” கோபமாக கேட்டாள்.

“ஆமாம்டி குடித்தேன். என் பொண்டாட்டி தானே நீ?  வா…” அவளைப் பற்றி இழுத்து கட்டிலில் தள்ளி மேலே படர்ந்தான்.

அஞ்சனாவின் தள்ளல் அவனது குடிபோதையின் முன் எடுபடாமல் போனது. இது அன்றாடம் தொடர அஞ்சனா தவித்தாள். பகல் முழுவதும் அவள் முகம் பார்ப்பதையும் தவிர்ப்பவன் இரவானால் போதையில் துணையுடன் கணவனின் உரிமையை நிலைநாட்டினான்.

“உங்கள் அப்பாவிடம் நீங்கள் குடித்துவிட்டு வருவதை சொல்லவா?” ஒரு நாள் மிரட்டினாள்.

இதுபோன்ற ஒழுங்கீனங்களை கலியபெருமாள் தன் மகன்களிடம் அனுமதிப்பதே இல்லை. அவர் எப்போதும் கெடு பழக்கங்களற்று நேர் வழியில் நடப்பவர்.அது போன்றே மகன்களையும் நடக்க வைப்பவர்.அப்படியல்லாது கொஞ்சம் தவறிப் போனதால்தான் சத்யநாதனுக்கு அவருக்கும் பகை வளர்ந்தது.

விரக்தியாக சிரித்தான் சத்யநாதன். “சொல்லேன். எதை காரணமாக வைத்து என்னை இந்த வீட்டை விட்டு ஒதுக்கி வைக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருப்பவர் அவர். நீ காரணம் எடுத்துக் கொடுத்தால் சந்தோஷமாக என்னை ஒதுக்கி வைப்பார்.அதில் உனக்கும் நன்மைதானே?தனிக் குடித்தனம் என்றாகிவிட்டால் இதுபோல் குடும்பத்திற்கே சமையல்காரியாக இருக்க வேண்டியதில்லையே”

அஞ்சனா அயர்ந்து போனாள். எதற்கு எதை முடிச்சிடுகிறான்?

“அவர் குடிப்பாரா அத்தை?” சுகுணாவிடம் மெல்ல கேட்டாள்.

 சுகுணா வேகமாக அக்கம் பக்கம் திரும்பி பார்த்துவிட்டு ,உதட்டின் மேல் விரல் வைத்து “மெல்ல பேசு “என்றாள். “சத்யா அப்படி ஏதாவது செய்தானா?” கட்டை விரலால் குடிப்பது போல் ஜாடை காட்டி கேட்டாள்.




” வந்து… ஒரு நாள்… கொஞ்சம்…”

இன்னமும் சத்தத்தை குறைக்குமாறு சைகை செய்தவள் “அஞ்சனா இதையெல்லாம் வெளியே யாரிடமும் சொல்லாதே!குறிப்பாக உன் மாமாவிற்கு தெரியவே கூடாது. சத்யா எப்போதாவது குடிப்பது உண்டு.உன் மாமாவிற்கு தெரிந்தால்  வீட்டை விட்டுக் கூட விரட்டி விடுவார். ப்ளீஸ்மா சொல்லிடாதே” கெஞ்சுதலாய் அஞ்சனாவின் கைகளை பற்றினாள்.

“உங்களைப் போன்ற அம்மாக்களின் இயலாமைதான் இவரைப் போன்ற பிள்ளைகளை கெட்டவர்களாக்குகிறது அத்தை”

“இல்லைம்மா சத்யா கெட்டவன் கிடையாது. கொஞ்சம் கட்டுப்பாடில்லாமல் ஜாலியாக இருக்க நினைப்பவன். சிவாவும் சுரேனும் அப்பா சொல்வதை அப்படியே பின்பற்றும் பிள்ளைகள். இவன் கொஞ்சம் எதிர்த்து கேள்வி கேட்பான். ஏன் செய்யக்கூடாது என்பான். அதனால் எப்போதும் இவனுக்கும் அவருக்கும் பிரச்சனைதான். ஒரு கெட்ட பையனுக்கு நான் ஆதரவு கொடுக்க மாட்டேன்மா. சத்யாவிற்கு ஏதாவது மனச்சங்கடம் இருக்கலாம்,அல்லது நண்பர்களை சந்தித்திருக்கலாம். அவனுக்கு காரணம் ஏதாவது இருக்கும்மா “

“இருக்கும்தானே,குடும்ப கட்டமைப்பிற்குள் அடையாமல்

தான் தோன்றித்தனமாக இருப்பதற்கும் இந்த ஆண்களுக்கு காரணம் இருக்கத்தான் செய்யும்..!”

அஞ்சனாவின் கசப்பான பேச்சில் சுகுணா இன்னமும் பதறினாள் “நான் அவனிடம் பேசுகிறேன்மா. நீ ஏதாவது வாயை விட்டு விடாதே”

அஞ்சனாவிற்கு வெறுத்து வந்தது சை…இந்த ஆண்களின் தப்புக்களுக்கு பெரும்பான்மையான காரணம் பெண்களாகத்தான் இருக்கிறார்கள். அம்மாவாகவோ, மனைவியாகவோ…

ஆனால் அவள் ஒரு முடிவுடன்தான் இருந்தாள்.இனியொரு முறை போதையில் தன்னையே இழந்த நிலையில் கணவன் தன்னை தொடுவதை அனுமதிக்கப் போவதில்லை என்ற உறுதி எடுத்தாள்.

“அம்மாவிடம் என்ன சொன்னாய்?” சத்யநாதன் கோபமாக கேட்டபோது, அலட்சியம் காட்டினாள். “நடப்பதை சொன்னேன்”

“அம்மாவிடம் சொன்னால் பயந்து விடுவேன் என்று நினைத்தாயா?”

“அப்பாவிடம் சொன்னாலும் நீங்கள் பயப்பட போவதில்லை என்று எனக்குத் தெரியும்.சிறு வயதிலிருந்து வீட்டிற்கு அடங்காமல் வளர்ந்தவராயிற்றே! உங்களுக்கு ஒன்று தெரியுமா… உங்கள் வீட்டு ஆண்களின் நல்ல குணங்களை விசாரித்து தெரிந்து கொண்ட பிறகுதான் மிகுந்த மன நிறைவுடன் நம் திருமணத்திற்கு சம்மதம் சொன்னார் என் அப்பா. குடும்ப கவுரவத்தை குறைக்கவென்றே ஓரிருவர் இருப்பார்கள் என்பதை பாவம் அவர் எதிர்பார்க்கவில்லை”

அஞ்சனா பேசப்பேச சத்யநாதனின் முகத்தில் ரௌத்திரம் ஏறியது.

“ஏய் திமிராடி குடும்ப கௌரவத்தை கெடுக்க வந்தவனா நான்?”

அஞ்சனா மவுனமாக அறையை விட்டு வெளியே நடந்தாள். அறைக்கதவருகே நின்று திரும்பி உள்ளிருந்தவனை பார்த்தாள் “ஆமாம்டா இந்த நல்ல குடும்ப கௌரவத்தை கெடுக்க வந்த வில்லன்டா நீ”

“ஏய்” அவன் கத்தியபடி வர “ஆமாம்டா நீ பொறுக்கிடா… ரவுடிடா…” தொடர்ந்து கத்தி விட்டு படபடவென மாடிப்படிகளில் இறங்கி அவனிடமிருந்து தப்பினாள்.

மாடிப்படியின் இடையிலிருந்த திருப்பத்தில் பெரிய கண்ணாடி மாட்டப்பட்டிருக்க அதில் மேலே நின்ற அவன் பிம்பம் தெரிந்தது. கோபமாக இருப்பான் என்று எண்ணியதற்கு மாறாக மனோகரமான முறுவலுடன் இருந்தது அவன் முகம்.

மூச்சை பிடித்துக் கொண்டு சண்டைக்கு வருவான் என்று நினைத்திருக்க ஈயென்று இளித்துக் கொண்டிருக்கிறானே! என்ன ஜென்மம் இவன்! குழப்பமான மனதுடன் சமைத்துக் கொண்டிருந்தவளின் நினைவுகளை இம்சித்தபடியே இருந்தது அந்த மனோகர முறுவல்.

எதற்காக எப்போதும் அவன் முகரைக்கட்டையே நினைத்துக் கொண்டு… தலையை உலுக்கி கொண்டவள் இன்று இரவு அவனை எப்படி தவிர்ப்பது மூளையை கசக்கினாள்.

அவளுக்கு உதவுவதற்காக வீட்டிற்கு வருகை தந்தனர் பார்வதியும் சங்கரலிங்கமும்.




What’s your Reaction?
+1
56
+1
34
+1
3
+1
3
+1
2
+1
0
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!