Serial Stories தேவதை வம்சம் நீயோ

தேவதை வம்சம் நீயோ-4

4

 

“முதலில் ஜெயன்ட் வீல்”

“இல்லை கொலம்பஸ்”

” பேய் மாளிகை பார்க்கலாம்”

” எனக்கு மிளகாய் பஜ்ஜி”

சென்னை தீவுத்திடல் கலியப்பெருமாள் குடும்பத்தினரால் கலக்கப்பட்டுக் கொண்டிருந்தது. சூழ்ந்திருந்த மக்கள் வெள்ளத்திற்குள் அவர்கள் தனியாக தெரிந்தனர். ஆளுக்கொன்று சொல்வதும் ஆளுக்கொரு பக்கம் இழுப்பதுமாக சூழ்நிலை தங்கள் பக்கம் திருப்பிக் கொள்ள ஒவ்வொருவரும் முயன்றனர்.

குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஒவ்வொரு ரைடாக ஏற்றி இறக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தவன் சத்யநாதன்.  மற்றவர்கள் டெல்லி அப்பளம், சூப் ,புட்டு என அமர்ந்து விட ஒவ்வொரு ரைடாக ஓடிக்கொண்டிருந்தான்.

மொத்தமாக வாங்கி வந்து குவித்த தின்பண்டங்களை பேப்பர் தட்டில் தனித்தனியாக எடுத்து வைத்து ஒவ்வொருவருக்கும் பிரித்து கொடுத்துக் கொண்டிருந்தாள் அஞ்சனா,அடிக்கடி அவள் பார்வை கணவன் மீது பட்டு திரும்பியது. கிளம்பும் முன் எதிர்பாராமல் அவன் கொடுத்த இதழ் முத்தம் இன்னமும் தித்தித்துக் கொண்டிருந்தது.

திடுமென புடவை கட்ட உதவுவான், முத்தமிடுவான் என எதிர்பாராமல் உடலும் மனமும் நெகிழ, பண்டங்களை ஒவ்வொருவருக்காக கொடுத்துக் கொண்டிருந்தாள். எழுந்து ஓடிப்போய் கணவனுடன் இணைந்து கொள்ளும் ஆவல் திடீரென அவள் உடம்பின் செல்களில் பரவ கை வேலையை உதற முடியாமல் யோசித்தபடி இருந்தாள்.

ஒரு ரவுண்ட் சுற்றி விட்டு வந்த பிள்ளைகள் பசி பசி என திண்பண்டங்களில் பாய, அவர்களுக்கு கொடுத்த பின் சுண்டல் கப்பை கணவனுக்கும் நீட்டினாள்.

“ஆ! சுண்டல் காரம்!” ஆதவ் கத்த “என்ன காரமா?” சுண்டல் கப்பை திரும்ப அஞ்சனாவிடமே நீட்டினான். அவனுக்கு காரம் பிடிக்காது.

“இல்லையில்லை அவன் மிளகாயை கடித்திருப்பான்.காரமெல்லாம் இல்லை.நீங்கள் சாப்பிடுங்கள்”

“நீ காரம் சாப்பிடுபவளாயிற்றே!உன்னை நம்ப முடியாது” சத்தியநாதன் யோசிக்க அஞ்சனாவிற்குள் ஜிலிரென்று ஒரு ஐஸ்கட்டி  வழுக்கியது.

பொதுவாக அவள் காரம் விரும்பி சாப்பிடுபவள்தான். சட்னி சாம்பாருடன் காரமாக இட்லி பொடியும் வேண்டும் அவளுக்கு. ஆனால் இதெல்லாம் இவனுக்கு தெரியுமா? அந்த அளவு என்னை கவனித்திருக்கிறானா? கண்களில் பொங்கிய சிரிப்புடன் அவனைப் பார்க்க ,கொஞ்சம் சுண்டலை அள்ளி அவள் வாயில் திணித்தான்.

“காரமா இல்லையா சொல்லு” அஞ்சனாவிற்கு ஏனோ கண்கள் கலங்கிவிட்டது. “ரொம்ப ஸ்வீட்” என்றவளின் முகத்தை கூர்ந்து பார்த்தவனின் கண்கள் கனிந்தன.

“அந்த ரைடு போகலாமா?” அஞ்சனா ஒரு வித சலுகையுடன் அவனிடம் கேட்க திகைத்தான் சத்யநாதன்.




“நீ ராட்டினம் ஏறுவாயா?”

“ரொம்ப பிடிக்கும். ஜாலியாக இருக்கும்”

“ஐ… நானும்” இவர்கள் பேச்சை கவனித்துவிட்ட சாஹித்யா குதிக்க கனகாவும் சிவகுமாரும் பார்வதியும் நாங்களும் என கிளம்பவே அஞ்சனா உற்சாகத்துடன் எழுந்தாள்.

இரண்டு எட்டு எடுத்து வைத்த பிறகே கவனிக்க சத்யநாதன் எழாமல் அமர்ந்தபடி இருந்தான்.”வாங்க” அஞ்சனா கண்ணால் அழைக்க மெல்ல எழுந்து வந்தான்.

டிக்கெட் எடுத்து வரிசையில் நிற்கும் போதும் சத்யநாதனின் முகம் சரியில்லாததை உணர்ந்தாள். இப்படி திடீர் திடீரென்று மூடு மாறி விடுகிறதே இவருக்கு! கவலையுடன் நினைத்துக் கொண்டாள்.

ஆனால் ரைடில் ஏறி அமர்ந்த பிறகு அவனது முக மாற்றத்திற்கான காரணம் புரிந்தது.வெடித்துக் கொண்டு வந்த சிரிப்பை அடக்க மிக சிரமபட்டாள்.ராட்டினம் சுற்ற ஆரம்பித்த உடனேயே இவள் பக்கம் சாய்ந்து கொண்டே வந்தவன் ஒரு கட்டத்தில் அவள் தோளில் தலையை சாய்த்து கொண்டான்.

“ஹேய் ராட்டினம் பயமா உங்களுக்கு?” அவனிடம் கிசுகிசுக்க “மெல்ல பேசு, மானத்தை வாங்காதே” என்றான்.குரல் நடுங்கியது.

“சத்யா என்னடா?” பின்னால் அமர்ந்திருந்த பார்வதி கேட்க, “ஒன்றுமில்லைக்கா இவள் ரொம்ப பயப்படுகிறாள்” கையை அஞ்சனாவின் தோளை சுற்றி போட்டுக் கொண்டு தன்னோடு அவளை இறுக்கிக் கொண்டான்.

யாருக்கு பயமோ… தனக்குள் சிரித்தபடி கணவன் இடையில் கை போட்டு தன்னோடு அணைத்துக் கொண்டாள். ரைடிலிருந்து இறங்கிய பின்பும் தடுமாற்றம் தனக்குத்தான் என்பது போல் சத்யநாதனை ஒட்டி நின்று அவனை ஆசுவாசப்படுத்தினாள்.

மற்றவர்கள் முன்னால் நடக்க, “யாருக்கும் உங்கள் பயம் தெரியாதா?” எ எனக் கேட்டால் சிரிப்பு குரலில் தெரிந்து விடாதிருக்க மெனக்கெட்டாள்.

“கொஞ்சம் பெரியவனானதும் அதெல்லாம் சிறுவர்கள் விளையாட்டு என்று பந்தாவாக இருந்து கொண்டேனே” அவன் சொல்ல மெனக்கெட்டிருந்த சிரிப்பை வழிய விட்டாள்.

“ஏய் யார்கிட்டயாவது ஏதாவது சொன்ன கொன்னுடுவேன்” கன்னத்தை நிமிண்டி மிரட்டினான்.

“சின்ன பிள்ளையா இருக்கும்போது சத்யா ராட்டினம் ஏறுவதற்கு அந்த மாதிரி அலறுவான். இப்போ ஜம்முனு பொண்டாட்டிய ஏற வச்சு பத்திரமா கூட்டிட்டு வரான் பாருங்க” சுகுணா சொல்ல உரத்து சிரிக்க வந்த உந்துதலை அடக்கினாள். பிறரறியாமல் நாக்கை துருத்தி மிரட்டினான் சத்தியநாதன்.

தாய் தந்தை கூட அறியாத தனக்கு மட்டுமே தெரிந்து விட்ட கணவனின் ரகசியம் என்ற எண்ணிய அஞ்சனாவினுள் மனைவிக்கான உரிமை உணர்வு பெருமித செம்பருத்தியாய் இதழ் விரித்தது.

குச்சியில் சுற்றிய பஞ்சு மிட்டாய் மீது ஆவலுடன் பதிந்த விழிகளை கணவன் பக்கம் திருப்பியவள் திடுக்கிட்டாள். சத்தியநாதனின் முகம் இறுகி இருந்தது. அதற்குள் என்னவாயிற்று?காரணம் உடனே தெரிந்தது.

“ஆமாமாம் உன் சின்ன மகனால் அப்போதிருந்தே தொல்லைதான்” ஒருவித வெறுப்போடு சொல்லிக் கொண்டிருந்தார் கலியபெருமாள்.

மாமா ஏன் இப்படி சொல்கிறார்..? அஞ்சனா குழம்பிக் கொண்டிருக்கும்போதே சத்யநாதன் விருட்டென்று எழுந்து தள்ளிப்போனான்.

“ஏம்பா?” என பார்வதியும் “என்னங்க இது?” சுகுணாவும் தாங்கலாக பேச மற்றவர்கள் அமைதியாக இருந்தனர். கலியபெருமாள் உதட்டை பிதுக்கினார் “முணுக்கென்ற கோபத்திற்கு குறைச்சலில்லை” சலித்தபடி “ஆதவ் வாடா, சூப் சாப்பிடலாம்” பேரனை அழைத்துக்கொண்டு எழுந்து போனார்.

“என்ன விஷயம் அண்ணி?” அஞ்சனா கேட்க பார்வதி புன்னகைத்தாள். “வேறொன்றும் இல்லை அஞ்சனா. நாங்கள் எல்லோரும் அப்பா சொன்ன படிப்பை படித்து, காட்டிய வேலையில் சேர்ந்து என்று இருந்தோம். சத்யா மட்டும் ஆரம்பத்திலிருந்தே எனக்கு பிடிக்கவில்லை, பிடித்ததைதான் செய்வேன் என்று அப்பாவை எதிர்த்து பேசுவான். அதனால் அவர்களுக்குள் எப்போதும் தள்ளுமுள்ளுதான்”




“ஓ “அந்த வீட்டில் தன் கணவனின் ஒருவித விலகல் அஞ்சனாவிற்கு புரிந்தது.

இதனை ஒரு நாளும் சத்யநாதன் அவளுடன் பகிர்ந்து கொண்டதே இல்லை. ஏன்?அந்த அளவு தனக்கு உரிமை கொடுக்க அவன் தயாராக இல்லையே… வருத்தத்துடன் நினைத்துக் கொண்டவள் பார்வையை கூட்டத்தில் நகர்த்திக் கொண்டிருந்தபோது ஓர் இடத்தில் நிலைத்தது. புருவங்களை சுருக்கி கவனித்தாள்.

அரை மணி நேரம் தனியாகவே அந்த பொருட்காட்சியை சுற்றி விட்டு  சத்தியநாதன் வந்தபோது அஞ்சனா அங்கு இருக்கவில்லை.

ஐந்து நிமிடம் கழித்தே வந்தாள். “யாரைப் பார்க்கப் போனாய்? கோகுலையா?” சத்தியநாதன் கேட்ட தொனியில் டன் கணக்கில் கோபமும் லிட்டர் கணக்கில் எரிச்சலும்.




What’s your Reaction?
+1
51
+1
28
+1
3
+1
3
+1
3
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!