Serial Stories ஜில்லுன்னு ஒரு நெருப்பு

ஜில்லுன்னு ஒரு நெருப்பு-10

10
டாக்டர் கிருபாகரனைக் கடத்திச் சென்ற வேன் பாலக்காட்டை நெருங்கும் முன்னால் அவசரமாய் வேனை நிறுத்தினான் முத்து.

“என்ன முத்து ஏன் நிறுத்திட்டே?”

பாண்டியனின் கேள்விக்கு எந்தவொரு பதிலும் சொல்லாமல், வேனின் இரு பக்கமும் சென்று, அதில் ஒட்டியிருந்த ரெட் கிராஸ் சிம்பலையும்… எழுத்துக்களையும் பிரித்தெடுத்தான்.  அதே போல், முகப்பிலும், பின் புறத்திலுமிருந்த ஸ்டிக்கர்களையும் பிரித்தெடுத்தான். 

மீண்டும் வந்து வேனில் ஏறியது, பாண்டியன் சொன்னான்.  “முத்து… செய்யறது தப்பாயிருந்தாலும்… அதை பர்ஃபெக்டா செய்யணும்னு நினைக்கறே பாரு?… அங்கதான் முத்து நீ நிக்கறே”

அரை மணி நேரப் பயணத்திற்குப் பின் பாலக்காட்டைத் தொட்டதும், திருச்சூர் ரோட்டில் சிறிது தூரம் சென்று விட்டு,  இடது புற மண் ரோட்டில் இறங்கியது.

பின் இருக்கையிலிருந்த டாக்டர் மெல்லக் கேட்டார்.  “பிரதர்ஸ்… நீங்கெல்லாம் யாரு?… என்னை எங்கே கூட்டிட்டுப் போறீங்க?… இந்த எண்பத்திமூணு வயசுக் கிழவனைக் கடத்திட்டுப் போறதுல உங்களுக்கு என்ன லாபம்?”

“கிழவா… கொஞ்சம் நேரம் வாயைப் பொத்திக்கிட்டு வர்றியா?… இல்லை  கையிலிருக்கற கத்தியை உன் வயிற்றுக்குள் இறக்கவா?” பாண்டியன் கேட்டான்.

அதைக் கேட்டு “ஹா…ஹா…”வெனச் சிரித்த டாக்டர், “நீங்கெல்லாம் பேசறதைப் பார்த்தா உங்க கிட்டே யாரோ என்னைக் கடத்திட்டு வரச் சொல்லியிருக்காங்க… அதுக்காகப் பணமும் குடுக்கறேன்னு சொல்லியிருக்காங்க!… அந்தப் பணத்துக்காக நீங்க என்னை கடத்திட்டுப் போறீங்க!ன்னு தெளிவாப் புரியுது!… என்ன நான் சொல்றது சரியா?” என்று இடைவெளி இல்லாமல் பேச,

வேனை டிரைவ் செய்து கொண்டிருந்த முத்து என்பவன் தலையைத் திருப்பி, “டேய் பாண்டியா அந்தக் கத்தியை அந்தக் கிழவன் வயித்துல சொருகறதை விட வாயில சொருகிடு… அப்பத்தான் வாயை மூடிக்கிட்டு வருவான்” என்றான்.

இதற்கு மேலும் வாய் பேசினால் அவர்கள் தன்னைக் காயப்படுத்தி விடுவார்கள், என்பதைப் புரிந்து கொண்ட டாக்டர் அமைதியானார்.

தூரத்தில் தெரிந்த பழைய கால ஓட்டுக் கட்டிடத்தை நோக்கிச் சென்று, அதன் முன் நின்ற போது, தூரத்தில் செடிகளை வெட்டிக் கொண்டிருந்தவன் ஓடி வந்து.

“ஆராணு நிங்கள்?” என்று மலையாளத்தில் சோதித்தான்.

“அப்துல்ண்ட ஆளானு!.. இவிட தங்கணும்” வண்டியை ஓட்டி வந்த முத்து என்பவன் இறங்கியபடியே சொல்ல,




“ஆஹா… நிங்கள் இவிட வரும்னு எனிக்கு அப்துல் ஏட்டன் பறஞ்சிட்டில்லையே?”

“அப்படியா?… இந்தா கால் பண்ணி நீயே கேளு… பறைவான்” முத்து தன் மொபைலை அவனிடம் தர,

“ஹோஓஒ…. ஞான் அதெல்லாம் அறியில்லா… நிங்களே விளிச்சுத் தரும்”

முத்து தானே அந்த அப்துலுக்குக் கால் செய்து, அவன் லைனுக்கு வந்ததும், “இந்தா பேசு” என்று அந்த ஆளிடம் தந்தான்.

வாங்கிக் கொண்டவன், “ஆராணு?.. அப்துல் ஏட்டனோ?… ம்.. பறை!… ஓ… நிங்களோட கூட்டுக்காரங்களானோ?…  சரி…சரி… ஞான் விடும்…”

போனைத் திருப்பிக் கொடுத்து விட்டு, “ஹி… ஹி… போய்க்கோ” என்று வழி விட்டான்.

 வேனை அந்தக் கட்டிடத்தின் பின் பகுதிக்கு ஓட்டிச் சென்று நிறுத்திய முத்து, சுற்றும்முற்றும் பார்த்து விட்டுக் கீழே இறங்கினான். மெல்ல வேனின் பின் பக்கம் வந்து, கதவை திறந்து விட்டு டாக்டரையும் பாண்டியனையும் கீழே இறங்கச் செய்தான்.

கத்தி முனையில் டாக்டரை வீட்டினுள் அழைத்துச் சென்று, அந்த சிறிய அறைக்குள் தள்ளினான்.

“கிழட்டுப் பயலே!… தப்பிக்கறதுக்கான எந்த முயற்சியும் செய்யாமே ஒழுங்கா… நல்ல பிள்ளையா இருந்துக்கோ… அதுதான் உனக்கும் உன்னோட வயசுக்கும் நல்லது!… எங்களுக்கும்… எங்க திமிருக்கும் நல்லது” சொல்லி விட்டு பெரிய இரும்புக் கதவை ஓங்கிச் சாத்தி, வெளிப்புறமாய்த் தாழிட்டு விட்டு வெளியேறினான் முத்து.

“தான் யாரால் கடத்தப்பட்டிருக்கிறோம்?… எதற்காகக் கடத்தப்பட்டிருக்கிறோம்?… இது எந்த ஊர்?”…  எதுவும் புரியாத நிலையில்… அங்கிருந்த கட்டிலில் அமர்ந்தார் டாக்டர் கிருபாகரன்.  ஆயினும் ஒரு நம்பிக்கை அந்த ஆட்டோகிராப் நிச்சயம் தன்னைக் காப்பாற்றும் என்கிற பாசிட்டிவ் எண்ணத்தோடு அந்த அறையை நோட்டமிட்டார். சினிமாக்களில் கிளைமாக்ஸ் காட்சிகளில் வரும் பெரிய குடோன் போலிருந்தது அந்த இடம். பழங்கால பொருட்கள், பழைய டயர்கள், டிரம்கள், ஓடாத பைக்குகள் என கலவையான பொருட்கள் அங்கே குவிந்து கிடந்தன.  கதவு… ஜன்னல் எல்லாமே தேக்கினால் இழைக்கப்பட்டு உறுதிக்கு உத்தரவாதம் அளித்துக் கொண்டிருந்தன.  ஒரு காலத்தில அந்த வீடு ஒரு மாளிகையாய் இருந்திருக்கும் என்று தனக்குள் நினைத்துக் கொண்டார் டாக்டர்.


“என்னைக் கூட்டிட்டு வந்த இவனுக ரெண்டு பேரும் வெறும் அம்புகள்தான்!… இவர்களை எய்தவன் யாரோ… எவரோ…?… அவன் எங்கே இருக்கானோ?.. யார் அவன்?.. யாராயிருக்கும்?” யோசித்தார்.

     அறைக்கு வெளியே பேச்சு குரல் கேட்டது.  அந்த பாண்டியன் என்பவன் யாருடனோ போனில் கத்தலாய்ப் பேசிக் கொண்டிருந்தான்.   

“ஒண்ணும் பிரச்சனை இல்லை புத்தா!…  ரொம்பச் சுலபமா கொண்டாந்துட்டோம்!… இப்ப டாக்டரை அறையில்தான் அடைச்சு வச்சிருக்கோம்!…” 

“சரி நீ போனை வெச்சிடு… நான் நாளைக்குக் காலைல போன்ல கூப்பிடறேன்”




“என்னது?… காலையில் போன் பண்றியா?… ஒரு நிமிஷம் வச்சிடாதே!…  எங்களுக்கு நீ கொடுத்த வேலை டாக்டரை இங்கே வந்து சேர்க்கணும்… அவ்வளவுதான்!… நாங்களும் அந்த வேலையை வெற்றிகரமா முடிச்சிட்டோம்!… எங்களைக் கவனிச்சிட்டா…. நாங்க பாட்டுக்கு போயிட்டே இருப்போம்!..” கட் அண்ட் ரைட்டாகப் பேசினான் பாண்டியன்.

 “அதெப்படி… அந்த டாக்டரி அந்த குடோனில் வெச்சிருக்க முடியாது… அந்த இடம் அவ்வளவு ஸேப்டி இல்லை… அதனால அவரை இடம் மாத்தணும்”

  “என்னது… மறுபடியும் அவரை இங்கிருந்து வேற இடத்துக்கு ஷிப்ட் பண்ணணுமா?.. நோ நோ… இங்கிருந்து ஷிப்ட் பண்றது உங்க வேலை!… அதுக்கு நீங்க வேற ஆளை வெச்சுப் பார்த்துக்கோங்க!…” ஆணித்தரமாய் மறுத்தான் பாண்டியன்.

“என்னப்பா… இப்படி பாதில கழண்டுக்கிட்டா எப்படி?… இதுக்காக நான் வேற ஆட்களை எங்கே போய்த் தேடுவேன்!… அப்படியே கிடைச்சாலும்,…. அவங்களை எப்படி நம்ப முடியும்!… த பாரு பாணிடியா… நாம் செஞ்சிருக்கறது ரொம்ப ரொம்ப ரிஸ்கான வேலை!… அதனால நீங்களே அந்த ஷிப்டிங் வேலையையும் பண்ணிடுங்க!.. எங்கே கொண்டு போகணும்ங்கறதை… நான் நாளைக்குக் காலைல கால் பண்ணிச் சொல்றேன்”

“இல்லை புத்தா!… நாங்களே கண்டினியூவா இந்த வேலையைச் செஞ்சா… ஈஸியா மாட்டிக்குவோம்!… பஸ்ல பிக்பாக்கெட் அடிக்கிறவன் கூட பர்சைக் கை மாத்திக்… கை மாத்தித்தான் தப்பிக்கிறான்!….  நாம எவ்வளவோ பெரிய பர்சனைத் தூக்கிட்டு வந்திருக்கோம்!… கண்டிப்பா கை மாறியே ஆகணும்!… அப்படிப் பண்ணலேன்னா… நாங்க மட்டுமல்ல எங்களோட சேர்ந்து நீயும் மாட்டிக்குவே புத்தா!… ஓகே.. காலைல போன் பண்ணு!… அப்புறம்… சீக்கிரமே எங்களை செட்டில் பண்ணி அனுப்பற வழியை பாரு” போனைக் கட் செய்தான் பாண்டியன்.

குடோனுக்குள் இருந்து அந்த உரையாடலை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த டாக்டர், “ஸோ… இந்த அம்புகளை எய்தவன் பேரு புத்தா!… புத்தாங்கறது… முஸ்லிம் பெயர் இல்லை!… அப்படின்னா… இதுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்த சம்பந்தமுமே இல்லை!… அப்படின்னா வேற யாராயிருக்கும்?”  குழம்பினார்.

அதே நேரம், எடிட்டர், ஜோல்னாபை வாசு, விஜயசந்திரன் மூவரும் வாளையார் செக் போஸ்ட் தாண்டி, அந்த இடத்தில் நின்று இருந்தனர்.   “இதே இடம்தான் சார்!… இந்த இடத்துல தான் சார் வேன் நின்னுட்டு இருந்துச்சு!… ரெட் கிராஸ் சிம்பல் போட்டிருந்திச்சு!… அதுக்குள்ளாரதான் டாக்டர் இருந்தார்”


“ஷ்..ஷ்..ஷ்” என்று ஆட்காட்டி விரலை வாயில் வைத்து அவன் பேசுவதை நிறுத்தச் சொன்ன எடிட்டர் கண்களை சுருக்கியபடி யோசித்தார்.  “இந்த வழில மேற்கு நோக்கிப் போறாங்கன்னா… நிச்சயம் பாலகாட்டுக்குத்தான் போயிருக்கணும்!… அங்க போய் அங்கிருந்து வேற எங்காவது போயிருக்காங்களா?… இல்லை பாலக்காட்டிலேயே எங்காவது டாக்டரை ஒளிச்சு வெச்சிருக்காங்களா?ன்னு கண்டுபிடிக்கணும்”


“எதுக்கும் பாலக்காடு வரை போவோம்!… அங்க போய் விசாரிச்சுப் பாப்போம்!… ஏதாவது சின்னத் தடயம் கிடைக்காமலா போய் விடும்?” என்று வாசு சொல்ல,

“கரெக்ட்… கிளம்புங்க போவோம்”

மூவரும் ஏறிக் கொண்டதும், அந்த ஃபியட் கார் பாலக்காட்டை நோக்கிப் பறந்தது.




What’s your Reaction?
+1
6
+1
6
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!