Serial Stories ஜில்லுன்னு ஒரு நெருப்பு

ஜில்லுன்னு ஒரு நெருப்பு-11

11.

மருத்துவக் கல்லூரி நூலகம்.

மருத்துவம் சம்பந்தப்பட்ட ஒரு புத்தகத்தில் மூழ்கி இருந்தான் கிருபாகரன்.

தன்னை யாரோ கூர்ந்து கவனிப்பது போன்ற உள்ளுணர்வு ஏற்பட, தலையைத் தூக்கிப் பார்த்தான்.  எதிரே நந்தினி வைத்த கண் வாங்காமல் அவனையே மென்று தின்று விடுபவள் போல் பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள்.  கையில் சும்மாவாச்சும் ஒரு புத்தகம்.

“என்ன நந்தினி?… என்ன விஷயம்?” சற்றுக் காட்டுமாகவே கேட்டான் கிருபாகரன்.

“ஒன்றா… இரண்டா நிறைய விஷயம் இருக்கு!… ஆனா இது  ‘சைலன்ஸ் ப்ளீஸ்’ ஏரியா!… அதனால இங்க பேச முடியாது!… வேணும்ன்னா.. கேண்டினுக்கோ… மரத்தடிக்கோ… வா பேசலாம்” கொஞ்சல் வாய்ஸில் சொன்னாள் நந்தினி.

திடுக்கிட்டான் கிருபாகரன். “நோ… நோ… நாம கல்லூரிக்கு படிக்கத்தான் வந்திருக்கிறோம்!… இந்த மாதிரி கேண்டீனிலேயும்… மரத்தடியிலேயும்… உட்கார்ந்து  மாநாடு போட்டு அரட்டை அடிக்கிறதுக்கல்ல!”

“அட சாமியாரே!… நான் ஒரு பொண்ணு…. வலிய வந்து “வாய்யா காதல் பண்ணலாம்”னு கூப்பிடுறேன்!… ஒரு ஆம்பளையா இருந்துக்கிட்டு இப்படி பயந்து சாகறியே!… இந்தக் காலேஜ்ல எத்தனை பசங்க என்னோட கடைக்கண் பார்வை கிடைக்காதா?ன்னு ஏங்கிட்டு இருக்காங்க தெரியுமா?… அதென்னமோ தெரியலை!…  எனக்கு உன்னைத்தான்யா பிடிச்சிருக்கு”

கலவரமானான் கிருபாகரன்.  “ஆண்டவா!… இது என்ன சோதனை?… இந்தப் பொண்ணு என்னைய ஆம்பளைன்னு நெனச்சுக்கிட்டு மனசுக்குள்ளார கண்டபடி  காதல் கோட்டை கட்டிக்கிட்டிருக்கும் போலிருக்கே!… என்ன பண்றது?… எப்படிச் சொல்லி… சமாளிக்கிறது?”

பெண்மைக்குரிய சில அவயங்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த, சில ஹார்மோன் சுரப்பிகளை செயல்படாமல் நிறுத்தி வைக்க, சமீபகாலமாய் அவன் எடுத்துக் கொண்ட ஊசி மருந்துகள், தங்கள் பணியை செவ்வனே செய்ததில் தோற்றம் நிறையவே பெண்மைத்தனத்திலிருந்து மாறி அவனை பெண்மை கலந்த ஆண் மகனாகக் காட்டிக் கொண்டிருந்தது.

”என்ன கிருபா… நான் கேட்டுகிட்டே இருக்கேன்… நீ பாட்டுக்கு எங்கியோ கனவுலகத்துல மிதக்கிறே?… மிதக்கறதுதான் மிதக்கறே… என்னையும் உன் கூட அந்தக்  கனவுலகத்திற்கு கூட்டிக்கிட்டு போனேன்னா… நாம ரெண்டு பேரும் போய்  ஒண்ணாய் டூயட் பாடிக்கிட்டு ஜாலியாய் இருக்கலாமல்ல?” அவள் சற்றுப் பெரிய குரலில் பேசியதில் லைப்ரரியில் இருந்த மற்றவர்கள் கவனம் சிதைக்கப்பட்டு இவர்களப்  பார்த்தனர்.

இதற்கு மேலும் அங்கு இருந்தால் அவள் வேண்டுமென்றே குரலை உயர்த்திப் பேசி அடம் பிடிப்பாள், என்பதைப் புரிந்து கொண்ட கிருபாகரன்,  “சரி… வா… வெளியே மரத்தடிக்கே போவோம்” என்றபடி எழுந்தான்.




“இது… இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்!” என்றபடி அவளும் எழுந்தாள்.

 மரத்தடிக்கு வந்ததும்,  “அய்ய… இந்த மரம் வேண்டாம்!… அதோ.. அங்க… அந்த மரத்தடிக்குப் போகலாம்” என்றாள் நந்தினி வேறொரு மரத்தைக் காட்டி.  அவள் காட்டிய மரம் ஒதுக்குப்புறமாய் இருந்ததால் யோசனை செய்த கிருபாகரன் பிறகு,  “சரி… வா” என்று சொல்லி அந்த மரத்தை நோக்கி நடந்தான்.

 இருவரும் மரத்தடியில் அமர்ந்ததும், அவன் கையைப் பற்றினாள் நந்தினி.

கையை உதறிய கிருபாகரன், “நோ… டோண்ட் டச்” என்றான்.

“ஏன்… நான் தொடக் கூடாதா?” கோபமாய்க் கேட்டாள்.

“எதுக்குத் தொடணும்?” திருப்பிக் கேட்டான் கிருபாகரன்.

“கிருபா… நான் உன்னை உயிருக்குயிரா நேசிக்கிறேன் கிருபா!…” என்று சொல்லிக் கொண்டே மறுபடியும் அவன் விரல்களைப் பற்றி முத்த மழை பொழிந்தாள் நந்தினி.

“நோ… நந்தினி… நோ!… எனக்கு இதெல்லாம் பிடிக்காது” என்றான்.

“ம்ஹும்… அப்படிச் சொல்லக் கூடாது!… உனக்கு பிடித்துத் தான் ஆகணும்!… ஏன்னா… நீ இல்லாம என்னால வாழவே முடியாது” கெஞ்சினாள்.

“நந்தினி… ப்ளீஸ் என்னைய தொந்தரவு  பண்ணாதம்மா!… நான் பாட்டுக்கு  “நானுண்டு என் படிப்புண்டு”ன்னு என் வழில போய்க்கிட்டிருக்கேன்”

“போ… நான் வேண்டாங்கலையே!… நானும் உன் கூட வர்றேன்னு தானே சொல்றேன்” என்றாள் நந்தினி.

 “அய்யோ… கடவுளே!…. உனக்கு எப்படிப் புரிய வைக்கிறதுன்னு எனக்குத் தெரியல!…  ஆனா ஒண்ணு மட்டும் உறுதி!… உன்னோட காதல் நிச்சயமா இந்த ஜென்மத்தில் ஜெயிக்காது!” கண்களைப் பெரிதாக்கிக் கொண்டு ஆணித்தரமாய் கிருபாகரன் சொல்ல,

“ஏன் அப்படி சொல்றே?… அன்ன காரணத்தினால அப்படி சொல்றே?” நந்தினியும் விடாமல் வாக்குவாதம் செய்தாள்.

“என்னோட வாழ்க்கை லட்சியமே… பெரிய டாக்டராகணும்!… இந்த உலகமே புகழ்ந்து பேசுற அளவுக்கு மருத்துவத்தில் சேவை புரியணும்!… இதுக்காக இந்த ஜென்மம் முழுவதையுமே நான் அர்ப்பணிக்க போறேன்!… ஐ மீன்… இந்த ஜென்மத்துல எனக்குக் கல்யாணம்… குடும்பம்… குழந்தை… குட்டி… எதுவுமே கிடையாது!… இதுக்கு மேல எதுவும் பேச வேண்டாம்” என்று சொல்லி முகத்தை திருப்பிக் கொண்டான் திருபாகரன்.

 ஐந்து நிமிடங்கள் அவர்களுக்கு இடையில் பெரிய அமைதி நிலவியது.   “ஓ.கே. கிருபா… நீ உன் பாதையில் போ… நான் என் பாதையில் போறேன்!…”  ‘விருட்’டென்று  எழுந்து வேகமாக நடந்தாள் நந்தினி.

போகும் அவளையே வெறித்துப் பார்த்த கிருபாகரன், “ஆண்டவா… இன்னும் ரெண்டு வருஷம் இந்தக் காலேஜ்ல எப்படி இருக்க போறேன்?னு தெரியலையே!… ஒவ்வொரு நாளும்   ஒவ்வொரு கண்ணி வெடி என் கால்களுக்கடியில் வந்து வந்து வெடிக்குதே!”

அவன் மனம் அஞ்சியது போலவே, மறுநாள் காலை அடுத்த கண்ணி வெடி வெடித்தது.




“ஹலோ மிஸ்டர் கிருபாகரன்… உங்களை. பிரின்ஸிபால் கூப்பிடறார்” கல்லூரி அலுவலகத்தில் பணி புரியும் கிளார்க் ஒருத்தர் வந்து சொல்ல, நூலகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த கிருபாகரன் பாதியிலேயே திரும்பி பிரின்ஸிபால் அறையை நோக்கி நடந்தான்.

“பிரின்ஸிபால்… என்னை எதுக்குக் கூப்பிடறார்!…” மனதிற்குள் கேள்விகள் அடுக்கடுக்காய்.

“என்ன மிஸ்டர் கிருபாகரன்… வாட் ஹேப்பண்ட் டு நந்தினி?” பிரின்ஸிபால் எடுத்த எடுப்பில் கேட்க, அவர் எதைக் குறித்துக் கேட்கிறார் என்பது புரியாமல் இமைகளைப் “பட…பட”வென்று அடித்துக் கொண்டு, “சார்… நீங்க என்ன கேட்கறீங்கன்னே புரியலை சார்” என்றான் கிருபாகரன்.

“இஸிட்?… உங்களுக்கு விஷயமே தெரியாதா?… நந்தினி தன்னோட மெடிக்கல் படிப்பை டிஸ்-கண்டினியூ பண்ணிக்கிட்டா… நாளைக்கு தன்னோட சொந்த ஊருக்கே திரும்பிப் போகப் போறா”

 “வொய் சார்” அதிர்ச்சியுடன் கேட்டான் கிருபாகரன்.

 “வாட் மேன்?… அந்தக் காரணத்தைத் தெரிஞ்சுக்கத்தான் உன்னை நான் கூப்பிட்டேன்… நீ என்னடான்னா என் கிட்டே கேட்கிறாயே?”

 “சார்… எனக்கு… எப்படி?…”

 “என்ன மேன்?… இந்தக் காலேஜிலேயே நந்தினி ரொம்பக் குளோஸா பழகறது உன் கூடத்தான்… அதனால நிச்சயம் உன் கிட்டே அவள் காரணத்தைச் சொல்லியிருப்பாள்!னு மத்த ஸ்டூடண்ட்ஸ் சொன்னாங்க… அதனாலதான் உன் கிட்டே கேட்டேன்” பிரின்ஸிபால் சொல்ல,

குழப்பத்தோடு நின்றான் கிருபாகரன்.

பிரின்ஸிபாலே தொடர்ந்தார். “யூ டூ ஒன் திங்!.,… அந்த நந்தினியோட வீடு உனக்குத் தெரியுமல்ல?… அங்க போய் விசாரிச்சிட்டு வந்து எனக்குத் தகவல் சொல்லு!… நான் ஏன் இந்த விஷயத்துல அதிக அக்கறை எடுத்துக்கறேன்னா… நந்தினி ஈஸ் எ பிரில்லியண்ட் கேர்ள்… அவ மெடிக்கல் முடிச்சா இந்த நாட்டுக்கு நிச்சயம் ஒரு நல்ல டாக்டர் கிடைப்பார்ங்கற நம்பிக்கைல இருந்தேன்!… அந்த நம்பிக்கை பொய்யாய்ப் போறது எனக்கு ரொம்ப சங்கடமாயிருக்கு… அதான்”

 “ஓ.ஏ/சார்!… நான் இன்னிக்கு ஈவினிங்கே அவங்க வீட்டுக்குப் போய் விசாரிக்கறேன் சார்”

பிரின்ஸிபால் அறையை விட்டு வெளியே வந்த கிருபாகரனுக்கு முதல் முறையாக நெஞ்சு கனத்தது.  “ஏன் இந்த நந்தினி இப்படிப் பண்றா?… ஒரு வேளை நான் அவளைக் காதலிக்க மறுத்ததால் வெறுத்துப் போய்க் கிளம்பிட்டாளோ?… ச்சை… நானே ஒரு பெண் என்பதை இந்த உலகத்துக்கு தெரிவிக்காம ஆம்பளையா வாழ்ந்திட்டிருக்கேன்!… என்னைப் போய்… இவள்…?”

அன்று மாலை, கிருபாகரன் நந்தினி வீட்டிற்குப் போயிருந்த போது, அவனை வரவேற்றது கதவில் தொங்கிய பூட்டு.

பக்கத்து வீட்டில் விசாரித்தான்.  “நேத்து ராத்திரியே அவங்க குடும்பம் இந்த ஊரை விட்டுக் கிளம்பிப் போயிடுச்சு”

“ஏன்?”

“யாருக்குத் தெரியும்?… சொல்லிட்டுப் போனால்தானே தெரியும்?… சொல்லாம “திடு…திப்”ன்னு வண்டியை வரச் சொல்லி பாத்திர பண்டங்களை ஏத்திக்கிட்டுக் கிளம்பிப் போயிட்டா யாருக்குத் தெரியும்?”

“சரி… எங்கே போயிருக்காங்க?ன்னு..”

“அடப்போப்பா… உன் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல என்னால் முடியாது” கதவைச் சாத்திக் கொண்டு உள்ளே போனாள் அந்தப் பக்கத்து வீட்டுப் பெண்மணி.




What’s your Reaction?
+1
5
+1
5
+1
1
+1
1
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!