Serial Stories தேவதை வம்சம் நீயோ

தேவதை வம்சம் நீயோ-3

3

 

“கையில் கொண்டு வந்து கொடுத்தால் இப்படித்தான் கீழே உருட்டுவாயா?” அவனுடைய கோபம் அஞ்சனாவிற்கு திகைப்பாக இருந்தது. அதென்ன குழந்தைகளின் விளையாட்டுக்கு அவளை பழி சொல்கிறான்!

சித்தப்பாவின் கோபத்திற்கு பிள்ளைகள் பயந்து ஓரம் ஒதுங்க, நடந்ததை விளக்க அஞ்சனா வாய் திறந்த போது “அம்மா” பார்வதியின் சத்தம் வெளியே கேட்டது.

சட்டென முகத்தை மாற்றிக்கொண்டு “வாக்கா” வரவேற்றபடி வெளியே போனான் சத்யநாதன்.

“என்னடா வீடு ஒரே அமைதியா இருக்குது? எல்லாரையும் எங்கே?”

“மதியம் சாப்பிட்டு விட்டு ரெஸ்ட். வாங்க அத்தான்”

” அஞ்சனாவை எங்கேடா?”

முகத்தை மாற்றிக்கொண்டு வந்தாள் அஞ்சனா ,”வாங்க அண்ணி! வாங்க அண்ணா!”

“என்னம்மா எல்லாரும் ரெஸ்ட் எடுக்க, உங்க ரெண்டு பேருக்கும் மட்டும் பால்வாடி வேலையா?”

அவன் பக்கம் திரும்பாமலேயே சத்யநாதனின் பார்வையை உணர்ந்தவள் “அதெல்லாம் ஒன்றும் இல்லை அண்ணா, எங்களுக்கு தூக்கம் வரவில்லை ,பிள்ளைகள் இளநீர் கேட்டார்கள், வெட்டி கொடுத்துக் கொண்டிருந்தோம்”பதில் கணவனுக்கு திருப்தி என்பதை அசைவிலேயே உணர்ந்தாள்.

“மாமா எனக்கு இளநீர்” பார்வதியின் மகள் சாகித்யா கேட்க, சத்யநாதன் மீண்டும் அரிவாளை கையில் எடுத்தான்.பிறகு ஒவ்வொருவராக வர வர எல்லோருக்கும் இளநீர்  வெட்டுவதை தொடர்ந்தான்.

வீட்டிலிருந்த தட்டையையும் பாதுஷாவையும் தட்டுக்களில்  கொண்டுவந்து வைத்த அஞ்சனாவின் உள் மனம் குமுறிக் கொண்டு தான் இருந்தது. நடந்ததை விசாரிக்காமலேயே கோபப்படுகிறானே!

” அத்தை இந்த சாரியும் உங்களுக்கு சூப்பர். இது போன்ற அழகான சேலைகளை எங்கிருந்துதான் வாங்குவீர்கள்?” அடுப்படிக்குள் வந்த சாகித்யா அஞ்சனாவின் தோளை உரசியபடி கேட்டாள்.

பதினொன்றாவது படித்துக் கொண்டிருக்கும் சிறுமி, அவளுக்கு கொஞ்சம் பளிச்சென்று தெரியும் எதுவும் பிரமிப்புதான். இவர்கள் திருமணம் முடிந்த நாளிலிருந்து அஞ்சனா மேல் அவளுடைய எளிமையான அலங்காரம் மற்றும் சேலை கட்டும் விதம் என்று எல்லாவற்றையும் ஓயாது பேசிக்கொண்டே இருப்பவள்.

“இந்த சேரி ரேட் என்ன அத்தை 2000 இருக்குமா?” கேட்டவளின் கன்னத்தில் தட்டினாள். “இல்லைமா 400 ரூபாய்தான். உடுமாற்றுக்கு வாங்கிய சேலைதான்”

“என்னது 400 ரூபாய் சேலையா? அதுவே இவ்வளவு அழகா?”

” சேலையின் அழகு அதன் விலையிலோ டிசைனிலோ இல்லை சாஹி. அதை கட்டும் விதத்தில் இருக்கிறது, ஒழுங்காக மடிப்பு வைத்து அழகாக கட்ட வேண்டும்”

“நீங்கள் ரொம்ப அழகு அத்தை. அதனால் தான் எந்த சேலை கட்டினாலும் உங்களுக்கு பொருந்தி போய்விடுகிறது” சாகித்யா அஞ்சனாவை பார்த்தபடி சொல்ல…

“அழகாக தெரிய நல்ல சேலையோடு வடிவான உடல் அமைப்பும் வேண்டும் சாஹி” சொன்னபடி வந்தான் சத்தியநாதன். அவன் கண்கள் சொன்னமை சரி பார்ப்பது போல் அஞ்சனா மேனி முழுவதும் படிந்தது.




கண்களால் சாகித்யாவை அதட்டலாய் காட்டிவிட்டு முகம் திருப்பிக் கொண்ட அஞ்சனாவின் கன்னங்கள் சிவந்தன. “நான்தான் முதலிலேயே அத்தை அழகென்று சொல்லி விட்டேனே மாமா” மருமகளுக்கு புன்னகைத்து விட்டு, அஞ்சனாவிடம் கையில் கொண்டு வந்த இளநீரை நீட்டினான்.

” உனக்குத்தான், அப்போது கொட்டி விட்டாயே” கைகளில் இளநீரை திணித்துவிட்டு ஸ்ட்ராவையும் சொருகினான் “குடி”

தனக்கென்று கணவன் கொண்டு வந்து கொடுத்தது திருப்தியாக இருந்த போதிலும் அவனது குற்றச்சாட்டு அஞ்சனாவை அழுத்திக் கொண்டே இருந்தது.

தொண்டையை ஏதோ அடைத்துக் கொண்டு இருக்கின்ற உணர்வுடனே இளநீரை விழுங்கினாள்.

மகளும் மருமகனும் வந்திருக்க எல்லோருமாக எங்கேயாவது வெளியே போகும் திட்டமிட ஆளுக்கு ஒன்றாய் இடங்களைச் சொல்லி உளப்பிக் கொண்டிருந்தார்கள். இறுதியாக எக்ஸிபிஷன் போய் வரலாம் என்று முடிவானது.

“கொரோனாவால் இரண்டு  வருடங்களாக பொருட்காட்சி இல்லை. இந்த வருடம்தான் ஆரம்பித்திருக்கிறார்கள். போய் வரலாம்” கலியபெருமாள் சொல்ல எல்லோருமாக சந்தோசமாக கிளம்பினர்.

“எதற்கும் பிளாஸ்கில் கொஞ்சம் சுடுதண்ணீர் எடுத்து வைத்துக்கொள்.உன் மாமாவிற்கு குளிருக்கு தொண்டை கட்டிக் கொண்டால்,இரண்டு மடக்கு வாயில் ஊற்றிக் கொள்வார்” சுகுணா சொல்ல, வாட்டர்பாட்டில்,ஸ்நாக்ஸ் என எடுத்துப் போக வேண்டிய சாமான்கள் பெரிய பட்டியலாக அஞ்சனாவிடம் சொல்லப்பட்டது.

இரண்டு சிறிய வயர் கூடை, ஒரு ஜவுளிக்கடை கட்டைப்பை என அவள் தயாரித்து வைத்த சுமையை சங்கரலிங்கம் அழறாத குறையாக பார்த்தான்.

“கடவுளே இத்தனை எதற்கும்மா? ஸ்னாக்ஸ் வாட்டர் பாட்டில் எல்லாம் அங்கேயே வாங்கிக் கொள்ளலாம். மாமாவிற்கு சுடுதண்ணீர் மட்டும் வேண்டுமானால் எடுத்துக் கொள்வோம். எல்லா பொருட்களையும் மீண்டும் உள்ளேயே வைத்து விடு”

விடுபடல் மூச்சுடன் மீண்டும் சாமான்களை பிரித்து அடுக்கினாள்.  “ஏய் நீ இன்னமும் கிளம்பவில்லையா?” என்றபடி வந்த சுகுணா மெல்லிய சரிகை இட்ட பட்டு புடவையை சுற்றி இருந்தாள்.

சுலேகாவும்,கனகாவும் பளிச்சென்ற சுடிதாரில் இருக்க,பார்வதியும் தலை வாரி பின்னலிட்டு கனகாம்பர நிற காஞ்சி காட்டனுக்கு மாறியிருந்தாள்.ஆண்கள் அனைவரும் நறுவிசான உடைகளில் கிளம்பி இருக்க வியர்த்து வழிந்து நின்ற தன் தோற்றத்தில் தானே வெறுத்து வேகமாக மாடியேறினாள் அஞ்சனா.

“ஐந்து நிமிடங்களில் வரணும். இல்லையென்றால் நாங்க கிளம்பி போயிடுவோம்” சுகுணா கீழிருந்து கத்துவதை கேட்டபடி அறைக்கதவை திறந்து வந்த சத்தியநாதன் கலைந்த தோற்றத்துடன் எதிரே நின்றவளை எரிச்சலாக பார்த்தான்.

” வெளியே கிளம்பும்போது கொஞ்சம் சுறுசுறுப்பாய் இருக்கலாமே, சீக்கிரம் வா”

கண்கள் கலங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டு முகத்தை கழுவினாள். அவசரமாக சேலையை சுற்றிக் கொண்டிருந்தபோது அறைக் கதவை திறந்து உள்ளே வந்தான் சத்தியநாதன்.

“உனக்காகத்தான் எல்லோரும் வெயிட்டிங்.இந்த அவசரத்திலும் சேலையா?” கேட்டவன் சட்டென கீழே குத்திட்டு அமர்ந்து அவளது புடவை கொசுவங்களை சரி செய்ய ஆரம்பித்தான். அஞ்சனா அவனை நம்ப முடியாமல் பார்த்தாள்.

இதோ இப்படி இயல்பாக மனைவிக்கு உதவுபவனாக அவன் முன்பு எப்போதும் இருந்ததில்லை. புடவை மடிப்புகளை அழுத்தி நீவி விட்டு “மடித்து சொருகு” என்றபடி எழுந்தான்.

கொசுவத்தை சரி செய்துவிட்டு முந்தானை மடிப்பை பின் செய்தவள் முன்னிருந்தவனின் பார்வையில் சிவந்தாள். கொஞ்சம் சொக்கலான விழிகளுடன் நின்றவன் மெல்ல அவள் இடையில் கை பதித்தான்.

“சாஹித்யா சொன்னது சரிதான்”  இடை பற்றி தன்னை நோக்கி இழுத்தான்.




What’s your Reaction?
+1
51
+1
34
+1
3
+1
2
+1
1
+1
0
+1
4
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!