Serial Stories தேவதை வம்சம் நீயோ

தேவதை வம்சம் நீயோ-2

2

 

“இதோ இப்படி இங்கே உட்கார்ந்து பேசுங்கள்” முன் வரண்டாவில் எடுத்து போடப்பட்ட பிளாஸ்டிக் நாற்காலிகளை மனதில் ஒருவித படபடப்போடு பார்த்தாள் அஞ்சனா. அவர்கள் வீட்டு நாற்காலிதான். அவள் வழக்கமாக உட்கார்ந்து எழும் நாற்காலிதான். ஏனோ இன்று அதில் உட்காரவே மிகுந்த தயக்கமாக இருந்தது.

அருகே உட்கார வந்த சத்தியநாதனின் முகத்தில் அழகான புன்முறுவல் இருந்தது. “பொண்ணும் மாப்பிள்ளையும் அஞ்சு நிமிஷம் தனியா பேசிக்கட்டுமே” சிவகுமார் சொன்னதும்,மரகதவல்லி

சங்கடமாய் பார்க்க, அருஞ்சுனைநாதர் தலையசைத்து நாற்காலிகளை தூக்கி வந்து வராண்டாவில் போட்டார்.

“உங்கள் வீட்டு உள்ளறை ரொம்ப சிறியதோ? இந்த சேர்களை போட முடியாதோ?” கிண்டலான அவன் கேள்வியை இரண்டு முழு நிமிடங்களுக்குப் பிறகுதான் அஞ்சனாவால் உணர முடிந்தது.

திருமண உறுதி செய்யாத நிலையில் மகளை பையனுடன் சற்றேனும் ஒதுக்கமான இடத்தில் பேச வைக்க கூட தயங்கிய தன் பெற்றோரை அவன் இனம் கண்டு கொண்டதை உணர்ந்து முகம் சிவக்க தலை குனிந்தாள்.

ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தவர்களின் சத்தமே அதிகமாக கேட்க தலை குனிந்து முணுமுணுப்பாய் பேசிய அஞ்சனாவில் குரல் நன்றாக கேட்க வேண்டும் என்றோ என்னவோ தனது சேரை அவள் அருகில் ஒட்டிப் போட்டான் சத்தியநாதன்.

இரு நாற்காலிகளுக்கும் இடையில் ஒரு ஜான் இடைவெளி இருந்தாலும் அவன் உடலின் வெப்பம் தன்னை தாக்கியது போல் ஒரு கதகதப்பை உணர்ந்தாள் அஞ்சனா.

“எல்லோரும் இன்ட்ரஸ்டாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதோ இருக்கிறது வாசல்… அதோ நிற்கிறது என் பைக். இப்போது நாம் இருவர் மட்டும் என் பைக்கில் வெளியேறி போய்விட்டால்….?”

அஞ்சனா திக்கிட்டு நிமிர்ந்து அவனைப் பார்க்க பளிச்சென பற்கள் தெரிய புன்னகைத்தான். ஆட்காட்டி விரலை தன் உதடுகளில் மேல் வைத்துக் கொண்டவன் “சும்மா கேட்டேன்மா, உடனே உள்ளே ஓடிப்போய் புகார் கொடுக்கும் எண்ணத்தை விட்டு விடு” என்றான்.

கேலியும் குறும்பும் கலந்து மின்னிய அவன் கண்களை சந்திக்க முடியாமல் தலை குனிந்து கொண்டாள். இதற்கு பதில் சொல்ல வேண்டுமா? என்ன சொல்வது?உலர்ந்திருந்த உதடுகளை நாவால் வருடிக் கொண்டாள்.

“ரிலாக்ஸ்” அவள் அமர்ந்திருந்த பிளாஸ்டிக் சேரின் கைப்பிடி மேல் லேசாக தட்டினான். அஞ்சனா  ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

“எல்லோரும் கம்ப்யூட்டரில் மூழ்கிக் கிடக்கும்போது நீங்க மட்டும் எப்படி இந்த படிப்பை செலக்ட் செய்தீர்கள்? ஒருவேளை உங்கள் வீட்டில் சஜ்செஸ்ட் செய்தார்களா?” அவளது கேட்டரிங் படிப்பை குறித்து சத்தியநாதன் கேட்டான்.

“இல்லை அம்மாவும் அப்பாவும் இதற்கெல்லாம் எங்கள் விருப்பம் என்று விடுவார்கள். எனக்கு சிறுவயதில் இருந்தே சமையல், கை வேலைகள், வீட்டு அலங்காரம் என்று ஆர்வம்.அதனால் இந்த படிப்பை தேர்ந்தெடுத்தேன்”

” ஓ…லக்கி பர்சன்”என்றவன் எழுந்து கொண்டான். உள்ளே போய் அம்மாவிடம் “எனக்கு சம்மதம்” என்றான்.




அதன் பிறகு வானில் இருந்து இறங்கி வந்த தேவதை ஒருத்தி கையில் இருந்த மந்திரக்கோலை அசைத்ததும் மாறுவது போல் காட்சிகள் வேகமாக மாறி இரண்டே மாதங்களில் இவர்கள் திருமணம் நடந்து முடிந்தது.

திருமணத்திற்கு முந்தைய இரண்டு மாதங்கள் முடிந்த பின்னான இந்த இரண்டு மாதங்கள் என அஞ்சனா பலவாறு யோசித்துப் பார்த்தும் அன்று பெண் பார்க்க வந்த போது இருந்த சத்தியநாதன் வேற்றாளாகவே தெரிந்தான். சரியாக சொல்வதானால் அந்த குறும்பும் கேலியும் அதன் பிறகு அவனிடம் காணப்படவே இல்லை.

பெருமூச்சுடன் புரண்டு படுத்தாள் அஞ்சனா.அருகே படுக்கையின் வெறுமை அவளது தூக்கத்திற்கு தடா போட்டது. இரவு பதினொன்னரை என்று அவளது போன் டைம் சொன்னது. ஏன் இவ்வளவு நேரம் அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அறைக் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்க கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

இரவு அவனுக்காக காத்திருக்கக் கூடாது என்பது அவனுடைய உத்தரவு. அவனிடம் உள்ள சாவியால் வீட்டுக் கதவை திறந்து உள்ளே வந்து படுத்துக்கொள்வான். அவன் உடம்பு கழுவும் ஓசை சன்னமாக பாத்ரூமிற்குள் கேட்க விழிகளை இறுக்க மூடி, இனி தூங்கு தனக்கே கட்டளையிட்டாள்.

அடுத்த ஐந்தாவது நிமிடம் பாமோலிவ் ஷவர் ஜெல் வாசனையுடன் அவள் அருகே சரிந்தவன் முகத்தை உற்றுப் பார்த்து “இன்னமும் தூங்கவில்லை?” கேட்டபடி அவளை தன் பக்கம் இழுத்தான்.

——-

டப் டப் என்ற சிறு துடிப்புடன் வேண்டா வெறுப்பாக எரிந்து கொண்டிருந்த கேஸ் ஸ்டவ்வை எரிச்சலுடன் பார்த்தாள் அஞ்சனா. பத்து நாட்களுக்கு ஒரு முறை அடைத்துக் கொண்டு விடுகிறது. எளிதாக சுத்தம் செய்ய முடிவதில்லை. இந்த ஹாப்(Hob) வகை ஸ்டவ்வுகளில் இதுதான் பிரச்சனை என்றார்கள். எனினும் பந்தாவுக்காக இந்த அடுப்பை வாங்கி வைப்பது ஏனோ?

எரிச்சலுடன் அடுத்த அடுப்பிற்கு குக்கரை மாற்றினாள். உடன் இரண்டாவது நிமிடமே விசில் வந்தது. ஐந்து நிமிடம் முன்புதான் கனகா சமையல் முடிய இன்னமும் எவ்வளவு நேரம் ஆகும் என்று கேட்டுவிட்டு போனாள்.

அன்று ஞாயிற்றுக்கிழமையாதலால் எல்லோருமே வீட்டில் இருந்தனர். வாரம் ஒரு முறை விடுமுறை என்பது போன்ற அவர்கள் பேச்சுக்களில் அஞ்சனாவிற்கான விடுமுறை யோசிக்கப்படாமலே போனது.

இப்போது சுலேகா உள்ளே வந்து எட்டி பார்த்துவிட்டு போனாள்.ஆள் மாற்றி வந்தால் சமையல் முடிந்து விடுமா? கறி வேக வேண்டாமா? தனக்குள் நினைத்துக் கொண்ட அஞ்சனா ரசத்திற்கு புளியை கரைக்கத் துவங்கினாள்.

நீலமும் பச்சையும் கலந்து அழகாக எரிந்து கொண்டிருந்த அடுப்பு நெருப்பு முந்தின இரவு கணவனின் மோகத்தை அவளுக்கு நினைவுறுத்தியது.உடன் ஒப்புக் கொள்ள முடியா முரண்பாடு அவளுள்.

அதென்ன பகல் முழுவதும் யார் நீ உன்னை எங்கேயோ பார்த்திருக்கிறேனே என்பது போன்று நடந்து கொள்வது, இரவானால் மட்டும் மனைவி ஞாபகம் வருமா? அது எப்படி இவனால் மாறிவிட முடிகிறது?

யோசிக்க யோசிக்க இப்போது சில தினங்களாகத்தான் அஞ்சனாவிற்கு சத்யநாதன் தன்னை இரவில் மட்டுமே மனைவியாக நடத்துவது தெளிவாக புரிய தொடங்கியது.

அதுவும் நேற்றெல்லாம் எப்படி பேசினான்? எந்நேரமும் தூக்கம் அல்லது சாப்பாடா? வீட்டில் நீ இருப்பதே தூங்குவதற்கும் சாப்பிடுவதற்குமா? இப்படித்தானே மறைமுகமாக குத்திப் பேசினான். இரவில் மட்டும் எப்படி ஒரு சிறந்த காதல் கணவனாக மாற முடிகிறது?

இல்லை, இப்படி ஒரு சுயநலவாதிக்கு இரவு மனைவியாக மட்டுமே அவள் இனி இருக்கப் போவதில்லை. அஞ்சனா தனக்குத்தானே ஒரு உறுதி எடுத்துக் கொண்டாள். நாளை இரவில் அவன் தோளை பிடித்து தள்ளி விட வேண்டும்… தனக்குள்ளேயே ஒத்திகையும் பார்த்துக் கொண்டதில் ஓரளவு திருப்தியாக உணர்ந்தாள்.

சமையல் முடிந்து குழந்தைகள் ஆண்கள் சாப்பிட்டு முடித்தபின் பெண்கள் சாப்பிட அமர்ந்தனர். சுலேகாவும் கனகாவும் அவரவர் வேலை தொடர்பான விஷயங்களை பேசிக்கொண்டே சாப்பிட, அஞ்சனா மௌனமாக சாப்பிட்டாள்.

“என்ன அஞ்சனா எதுவுமே பேச மாட்டேனென்கிறாய்?” கனகா கேட்க “அவளை என்ன பேச சொல்கிறாய்? கேசரிக்கு ஆரஞ்சு கலர் போடலாமா? மஞ்சள் கலர் போடலாமான்னு கேட்டா பதில் சொல்வாள்.வேறென்ன தெரியும்?” என்றாள் சுலேகா.

உடன் இருவரும் சிரிக்க அஞ்சனா புன்னகை ஒன்றை ஒட்ட வைத்துக் கொண்டாள். மதிய உணவின் பின் அனைவரும் ஓய்வென அவரவர் அறைக்குள் ஒதுங்க குழந்தைகள் ஹாலில் டிவி பார்க்க,விளையாட என்று இருந்தனர்.

சிவகுமாரின் மகள் ஸ்மிருதி ஹாலில் நின்று கொண்டு அண்ணாந்து பார்த்து கத்தினாள்.”சித்தப்பா”

சத்யநாதன் மாடியில் இருந்து எட்டிப் பார்த்தான்.”இளநீர் வெட்டி கொடுங்க சித்தப்பா ப்ளீஸ்”




அவர்கள் வீட்டின் பின்புறமிருந்த நான்கு தென்னை மரங்களிலிருந்த இளநீர்களை அன்று காலைதான் இளநீர் வெட்டுபவர் மரமேறி வெட்டி ஓரத்தில் குவித்து போட்டிருந்தார். சிவக்குமாரோ சுரேந்தரும் இந்த வேலையை செய்வதில்லை பிள்ளைகள் இதற்காக நாடுவது சத்யநாதனைதான்.மாடியிலிருந்து இறங்கி வந்தவன் சிறிய அரிவாள் வைத்து இளநீரை சீவத் துவங்கினான்.

கரெண்ட் பில்,தீர்வை,தண்ணீர் வரி கட்டுவது போன்ற வீட்டிற்கு பொதுவான வேலைகளெல்லாம் செய்வது சத்யநாதன்தான்.அத்தோடு குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை அழைத்து போய் வாங்கி தருவதும் அவன்தான்.அஞ்சனாவிற்கு தானும்,கணவனும் அந்த வீட்டின் எடுபிடிகளா எனும் எண்ணம் இம்சித்துக் கொண்டே இருக்கும்.

உன்னை அவன் நினைப்பதே கிடையாது…அவன் நிலை பற்றி உனக்கென்ன கவலை மனட்சாட்சி இடித்துரைக்க ,ஜிம் பனியனும் சார்ட்சுசமாக நின்றபடி இளநீர் வெட்டிக் கொண்டிருந்தவன் அடிக்கடி கண்ணில் பட அந்தப் பக்க ஜன்னலை பூட்டி வைத்தாள்.

“சித்தி இந்தாங்க” ஒரு இளநீரை  தூக்கிக் கொண்டு வந்தான் ஆதவ்.

“எனக்கு வேண்டாம்டா” அஞ்சனா சொல்லிக் கொண்டிருக்கும்போதே “ஏய் அந்த செவ்விளநீர் எனக்கு” பின்னாலேயே வந்து பிடுங்கினாள் அக்ஷயா.

இருவரும் பிடித்து இழுத்ததில் இளநீர் கைதவறி கீழே விழுந்து அடுப்படி முழுவதும் சிதறி ஓடியது.

சத்தம் கேட்டு வந்த சத்யநாதன் அஞ்சனாவை கோபத்துடன் பார்த்தான்.




What’s your Reaction?
+1
43
+1
26
+1
4
+1
2
+1
2
+1
1
+1
12
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!