Serial Stories ஜில்லுன்னு ஒரு நெருப்பு

ஜில்லுன்னு ஒரு நெருப்பு-8

 8


“குட் ஷெப்பர்ட் மெட்ரிகுலேஷன் ஸ்கூல்” என்ற ஆர்சுக்குள் நுழைந்து நின்றது அந்த ஸ்கூல் வேன்.

 உள்ளிருந்த சிறுவர்கள் வரிசையாக இறங்க கடைசியாய் இறங்கினாள் கிருபை.  ஸ்கர்ட்க்கு பதிலாய் டவுசர் சட்டையுடன் இருந்தாள்.

“வெல்கம் பாய்ஸ்” என்று சிரித்த முகத்துடன் அவர்களை வரவேற்ற வேறொரு வெள்ளை ஆடை சிஸ்டர்,  “ப்ளீஸ் ஃபாலோ மீ” என்று சொல்லி அவர்களை, ஹெட் மாஸ்டர் அறைக்கு அழைத்துச் சென்றாள்.

அறைக்கு வெளியே அவர்களை நிறுத்தி வைத்து விட்டு, உள்ளே சென்று அனுமதி பெற்ற பின் வெளியே வந்தவள்,  “ஆல் ஆஃப் யூ ப்ளீஸ் கம் இன்சைட்” என்று அழைக்க, சிறுவர்கள் கூட்டம் ஹெட் மாஸ்டர் அறைக்குள் நுழைந்தது.

“எல்லோரும் ஹெட் மாஸ்டருக்கு குட் மார்னிங் சொல்லுங்க”

“குட் மார்னிங் சார்”

உச்சி குளிர்ந்து போன அந்த ஹெட்மாஸ்டர், “டியர் சில்ட்ரன்… இனிமேல் நீங்க எல்லோரும் இங்கேதான் இருக்கப் போறீங்க!… இது உங்க ஸ்கூல் மட்டுமல்ல… இதுதான் உங்க வீடும்!… உங்க டீச்சர்ஸ் தான் இனி உங்க பேரண்ட்ஸ்!… ஸ்கூலுக்குப்  பின்னாடி ஹாஸ்டல்… மெஸ்… ப்ளே கிரவுண்ட்… எல்லாம் இருக்கு!.. உங்களுக்கு இங்கே எல்லா வசதியும் இருக்கும்!… அதனால… நீங்க எல்லோரும் ஒழுங்கா இருக்கணும்!… ஒழுங்கா படிக்கணும்!… என்ன?” மிகவும் அமைதியாகவும் நிதானமாகவும் சொன்னார். அவர் ஒரு பிரெஞ்சுக்காரர் என்பது அவர் பேசிய தமிழிலேயே தெரிந்தது.


ஒட்டு மொத்தமாக தலையாட்டியது சிறார் குழு.

“தென்…. எனக்கு டிசிப்ளின் தான் ரொம்ப முக்கியம்!… டிசிப்ளின் இல்லேன்னா… சிவியர் பனிஷ்மென்ட் தான்!… ஓகே?… எல்லோரும் உங்க மிஸ் கூடப் போங்க!…” என்றவர் சிஸ்டரை பார்த்து,  “சிஸ்டர் இவங்களை முதலில் ஆபிஸுக்குக் கூட்டிட்டுப் போய் இவங்க நேம்…  அண்டு அதர் டீட்டெய்ல்ஸ்  எல்லாம் ரெக்கார்ட்ஸ்ல எண்ட்ரி பண்ணிட்டு, ஹாஸ்டல்… மெஸ்… எல்லா இடத்திற்கும் ஒரு தடவை கூட்டிட்டுப் போய் காண்பிச்சுட்டு, அப்புறமா கிளாஸ் ரூமுக்கு கூட்டிட்டு போங்க!”

சிறுவர்கள் வெளியேறப் போக, அவர்களைத் தடுத்து நிறுத்திய சிஸ்டர்,   “பாய்ஸ்… ஹெட்மாஸ்டர்க்கு தேங்க்யூ சொல்லிட்டு போங்க!” என்றாள்.




சிறுவர்கள் கோரஸாக,  “தேங்க்யூ சார்” என்று கத்தி விட்டு வெளியேறினர்.

சிறுவர் பட்டாளம் வரிசையாக ஒருவர் பின் ஒருவராக செல்ல, அந்தக்  கூட்டத்தில் கடைசியாக சென்று கொண்டிருந்த கிருபையை பயம் தொற்றிக் கொண்டது.  “அய்யய்யோ… பேர் எழுதற இடத்துல என் பேரை “கிருபை”ன்னு சொன்னா… நான் பொண்ணுங்கறதைக் கண்டுபிடிச்சிடுவாங்களே… என்ன பண்றது?… பேசாம பேரை மாத்தி… ஏதாவது பையன் பேரைச் சொல்லி விடலாமா?” யோசித்தாள்.

 கடைசியில் கடவுள் விட்ட வழி என்று.  மொத்த பாரத்தையும். இளிச்சவாய் இறைவன் மேல் சுமத்தி விட்டு துணிந்து இறங்கினாள். தன்னை நம்பியவர்களை என்றும் எதிலும் கைவிடாத இறைவன் அவளையும் அன்று காப்பாற்றினான். ஆம்.. “கிருபை” என்னும் சிறுமி  “கிருபாகரன்” என்னும் சிறுவன் பெயரில் வெளியே வந்தாள்.  அவளை யாராலும் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

வகுப்பிலும் ஆண்கள் வரிசையில் அமர்த்தி வைக்கப்பட்டாள். ஹாஸ்டலிலும் சிறுவர்கள் தங்கும் அறையிலேயே தங்க வைக்கப்பட்டாள்.


எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலையிலும் தான் ஒரு பெண் என்பதை யாருமே கண்டுபிடிக்க முடியாத வகையில் வெகு ஜாக்கிரதையாக நடந்து கொண்டாள்.  காரணம் இல்லாமல் பிறருடன் பேசுவதையும், பழகுவதையும் கூட தவிர்த்தாள். 

“டேய் இந்தக் கிருபாகரனுக்கு தலைக்கனம் ஜாஸ்திடா!… அவனுக்குத்தான் மத்தவங்களை விட எல்லாம் தெரியும்ங்கற கர்வம்டா”

“ஆமாம்டா… அதனாலதான்  யார் கிட்டயும் ஒட்டாம தனியாகவே இருக்கிறான்!”

நண்பர்களின் கோப மற்றும் கிண்டல் வார்த்தைகள் காதுகளில் விழுந்தாலும்  “அதுவும் ஒரு பாதுகாப்புக்கே” என்று எடுத்துக் கொண்டு தனி வழியே நடந்தாள் கிருபை.  இல்லையில்லை நடந்தான் கிருபாகரன்.

*****


இரண்டாம் உலகப் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்த நேரம். ஜப்பான் படைகள் இந்தியாவின் கிழக்கு எல்லையான பர்மாவிற்குள் நுழைந்து விட்டிருந்தன.

            பாண்டிச்சேரியில் எல்லா கல்லூரிகளும், பள்ளிகளும் காலவரையற்று மூடப்பட்டு கிடந்தன.  தனக்கு கிடைத்த அந்த விடுமுறை வாய்ப்பை மொத்தமாய் படிப்பிலேயே செலுத்தினான் கிருபாகரன். 

 அன்று மட்டுமல்லாமல் எப்போதுமே ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்காமல் படிப்பிற்கென்றே செலவழித்தான்.  

அதன் விளைவாய் பள்ளி இறுதித் தேர்வில் எல்லோருமே வியக்கும் வண்ணம் பள்ளியிலேயே முதலாவதாகத் தேறினான். அவன் பெற்ற மதிப்பெண்கள் காரணமாக மருத்துவ படிப்புக்கான வாய்ப்பு எளிதாய் வந்து அவன் மடியில் விழுந்தது.

என்றோ… எப்போதோ… எதிர்காலத்தில் தான் ஒரு டாக்டராக வேண்டும் என்று அவன் நினைத்திருந்த எண்ணம் அதுவாகவே நிறைவேறத் துவங்கியது. 




மருத்துவத் துறைக்கே தன்னை முழுமையாக அர்ப்பணித்து, மருத்துவச் சேவையொன்றே, தன் உன்னத லட்சியமாய்க் கொண்டு, பொதுநல வாழ்க்கை வாழும் குறிக்கோளோடு மருத்துவக் கல்லூரிக்குள் காலடி எடுத்து வைத்தான் கிருபாகரன்.

ஆனால் பள்ளி வாழ்க்கையில் எளிதாய் காப்பாற்றிக் கொண்டு வந்த அந்த ரகசியத்தை கல்லூரி வாழ்க்கையிலும் தொடர்வது என்பது எளிதல்ல என்பதை கல்லூரிக்குள் நுழைந்த முதல் நாளே அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.

****

     அந்த மருத்துவக் கல்லூரி கட்டிடம் இன்னும் புது மெருகு குறையாமல்  “பளிச்”சென்றிருந்தது. 

நான்கு வருடங்களுக்கு முன்பு அப்போதைய தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட அந்த மருத்துவக் கல்லூரி காலை நேரத்திலேயே கலகலப்பு வாங்கி இருந்தது. 

காரணம். சமீப காலமாய் மருத்துவக் கல்லூரிகளில் மட்டுமே தோன்றியிருந்த அந்த புதிய பழக்கம்.

முதலாம் ஆண்டு மாணவர்களை மூத்த மாணவர்கள் சீண்டி விளையாடுவது. அதற்கு ராகிங் என்ற நாகரிக பெயர் வேறு. 

அன்று முதலாம் ஆண்டு மாணவர்கள் உள்ளே நுழையும் நாளானதால் கல்லூரி கொஞ்சமாய் கலகலப்பிலிருந்தது.  சீனியர்ஸ் என்கிற அந்தஸ்தோடு ராகிங் செய்ய காத்திருந்தது மாணவக் கூட்டம்.

கல்லூரிப் பேருந்து கேட்டிற்குள் நுழைந்து மரத்தடியில் ஓரங்கட்டி நின்றது.

அதைப் பார்த்ததும் தாவிக் கொண்டு. ஓடியது மூத்த மாணவர் கூட்டம். பஸ்ஸிலிருந்து இறங்கியவர்களில் முதலாம் ஆண்டு மாணவர்களை மட்டும்  “லபக்” செய்து மரத்தடிக்கு தள்ளிச் சென்றனர் சில மூத்த மாணவர்கள்.

ஒருவனை பரதநாட்டியம் ஆடச் சொல்லிப் பார்த்து மகிழ்ந்தனர். இன்னொருவனை பைத்தியமாய் நடிக்கச் செய்தனர். வேறொருவனை மரத்திற்கு முத்தமிடச் சொன்னார்கள்.  ம்ற்றொருவனை மரத்துடன் சண்டை போடச் சொன்னார்கள்.

அடுத்து கிருபாகரன் முறை.  நடுங்கினான்.

“டேய்… வாடா இப்படி!… என்னடா இது மூஞ்சில மீசையையே காணோம்?…  எடுத்திட்டியா இல்ல வளரவே இல்லையா?” சீனியர் ஒருவன் அவன் மேலுதட்டைப்  பிடித்தபடி கேட்க,

“வ… வ… வளரவே இல்லை” என்றான் கிருபாகரன்.




“ம்ம்ம்ம்…. ஆளைப் பார்த்தா அழகாய்த்தான் இருக்கே பொம்பளையாட்டம்!..” என்றான் ஒருத்தன்.

“அப்ப காலேஜ் ஆண்டு விழாவுல… நாம போடற நாடகத்துக்கு பொம்பளை வேஷம் போட இவனை யூஸ் பண்ணிக்குவோம்!… ரொம்பவே அம்சமாய் இருப்பான்”

“டேய் அதையெல்லாம் அப்ப ப் பாத்துக்கலாம்டா… இன்னிக்கு இப்ப இவனை என்ன பண்ணச் சொல்லலாம்?” சீனியர் மாணவன் தன் சகாக்களை கேட்க,

“பையன் ரொம்பவே வெட்கப்படறான்!…. அதனால அவனோட வெட்கத்தை போக்குவதற்காக மேல் சட்டையை மட்டும் கழட்ட சொல்லுவோம்!… ஓ.கே.வா?”

மற்றவர்கள் ஒட்டு மொத்தக் குரலில், “ஓ.கே.”என்று கத்த, மயக்கமே வந்து விடும் போலானது கிருபாகரனுக்கு.

“ம்… கழட்டுடா தம்பி”

“வேண்டாம் ப்ளீஸ்!… வெட்கமா இருக்கு”

“அந்த வெட்கத்தை போக்குவதற்காகத்தான் கழட்ட சென்றோம்”

அப்போதுதான் அது நடந்தது.

“டேய்…. அங்க பாருடா நம்ம சுந்தர் ஒரு தேவதையைப் பிடிச்சிட்டு வந்திருக்கான்” எவனோ கத்த,

எல்லோரும் ஒட்டு மொத்தமாக அவன் காட்டிய திசையில் திரும்பி பார்க்க அங்கே நடிகை டி ஆர் ராஜகுமாரியின் சாயலிலிருந்த ஒரு மாணவியை ராகிங் செய்வதற்காக அழைத்துக் கொண்டு வந்தான் ஒருவன்.

“ஹ்ய்ய்ய்ய்ய்”  என்று கத்தியபடி எல்லோரும் அவனை நாடி ஓட,

‘தப்பித்தது தம்பிரான் புண்ணியம்’ என்று.  அந்த இடத்தை விட்டு வேக வேகமாக நடந்தான் கிருபாகரன்.


முதல் கட்ட அக்னி பரிட்சையில் தப்பிய கிருபாகரனுக்கு தொடர்ந்து பல கட்டங்களில்… பல சோதனைகள்… பல வடிவங்களில் வரத்தான் செய்தன.  வகுப்பில்,  லேப்பில்,  கேண்டீனில் என்று பல இடங்களில் சக மாணவர்களின் சகஜமான தொடுதலில் நெருப்பில் விழுந்த புழுவாய் துடித்தான். மெல்லவும் முடியாமல், துப்பவும் முடியாமல் தவித்தான்.

ஆயினும் மருத்துவப் படிப்பின் மேல் இருந்த அபரிமிதமான ஆர்வமும், பிள்ளை பிராயத்தில் அனுபவித்த அருவருப்பான நிகழ்வுகளும், அவனுக்குள் ஒரு வலியை ஏற்படுத்தி,  படிப்பின் மேல் மட்டும் கவனத்தை செலுத்த வைத்தன.

தான் ஒரு “ரிசர்வ்டு டைப்” என்கிற இமேஜை பரவலாக ஏற்படுத்திக் கொண்டு தன்னை தனிமைப்படுத்திக் கொண்டான். 

ஆனால் மனித வாழ்க்கையில் பிரச்சனை என்பது எப்போது யார் ரூபத்தில் வரும் என்பதை யாராலும் கணிக்க முடியாது.  ஆம்!… கிருபாகரனுக்கு பிரச்சனை அவன் உடன் பயிலும் மாணவி நந்தினி ரூபத்தில் வந்தது. 




What’s your Reaction?
+1
6
+1
7
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!