Serial Stories தேவதை வம்சம் நீயோ

தேவதை வம்சம் நீயோ-11

11

 

அன்று மாலை வீட்டிற்கு திரும்பிய உடனேயே சாஹித்யா ஆரம்பித்துவிட்டாள். “என்னுடைய பிரைவசியில் தலையிடுகிறார்கள் தாத்தா. என்னை ஆச்சி வீட்டிற்கு அனுப்பி விடுங்கள். நான் அம்மாவும் அப்பாவும் வரும் வரை அங்கே இருந்து கொள்கிறேன்” பேத்தியின் குற்றச்சாட்டில் கலியபெருமாள் திடுக்கிட்டார்.

பார்த்துக் கொள்ளுங்கள் என்று பேத்தியை அவர் வசம் மருமகன் ஒப்படைத்துவிட்டு போயிருக்க, பேத்தியோ அப்பா வழி பாட்டி வீட்டிற்கு போகிறேன் என்கிறாள். சம்மந்திகளுக்கிடையே அவருடைய  கவுரவம் என்னாவது? ஆணவம் தலை தூக்க “யாரும்மா உன்னை இங்கே தொல்லை செய்வது?” குரல் உயர்த்தி கர்ஜித்தார்.

“இதோ இவர்கள்தான்” சுலபமாக அஞ்சனா பக்கம் கைநீட்டிவிட்டு சம்மணமாய் சோபாவில் அமர்ந்து கொண்டாள் சாஹித்யா.

அந்நேரத்திற்கு கலிய பெருமாளுக்கு நெற்றிக்கண் இருந்திருக்குமேயானால் நிச்சயம் அஞ்சனா பஸ்பமாகியிருப்பாள்.

“என் பேத்தியை என்ன செய்தாய்?”

“நான் ஒன்றும் செய்யவில்லை”

“என் ஸ்கூல் பேக்கை திறந்து பார்க்கிறார்கள். என் நோட்டு புத்தகங்களை ஆராய்கிறார்கள். என்னை கேட்காமல் என் போனை ஓபன் செய்ய முயற்சிக்கிறார்கள். இதெல்லாம் என்ன தாத்தா?அத்தோடு தினமும் இரவு என்னுடனேயே படுத்துக் கொள்கிறார்கள்”

“என்ன?” அஞ்சனாவின் இரவு படுக்கை விபரம் வீட்டினர் அனைவருக்கும் புது தகவல்தான். இதையெல்லாம் நீ கவனிப்பதில்லையா?

கலியபெருமாளின் பார்வைக்கு சுகுணா சங்கடமாய் விழித்தாள். கோபமாய் மருமகளை பார்த்தாள்.

“அஞ்சனாவிற்கு சாஹித்யாவின் ஸ்கூல்,டிரஸ் ,போன் என்று எல்லாவற்றிலும் ஒரு கண் மாமா” கனகா கண்களை உருட்டியபடி சொன்னாள்.

“ஆமாம் மாமா அஞ்சனா சாஹித்யாவைப் போல பள்ளி, படிப்பு இப்படி தனக்கு அமையவில்லையே என்று ஒருவகை ஏக்கத்தில் இருக்கிறாளென்று நினைக்கிறேன்” சுலேகா தெளிவாக விளக்கினாள்.

கலியப்பெருமாளின் எரிதழல் பார்வைக்கு ” அப்படியெல்லாம் இல்லை மாமா” தலை குனிந்து பதிலளித்தாள் அஞ்சனா.

“அப்படித்தான் தாத்தா, என்னுடைய உடைகளை கூட அடிக்கடி போட்டுப் பார்த்துக் கொள்வார்கள்” சாஹித்யா சொல்ல வீட்டினர் அனைவரும் ஒருவகையான இகழ் பார்வையை அஞ்சனாவிற்கு கொடுத்தார்கள்.

“சரிடாம்மா, ஏதோ அல்பத்தனமாய் ஆசைப்பட்டு விட்டாள். இனி உன் பக்கம் அவள் வரமாட்டாள். அவரவர் வேலைகளை பாருங்கள்” சபையை கலைக்க முயன்றார் கலியபெருமாள்.

“இல்லை தாத்தா, எனக்கு இவர்களைப் பார்த்தாலே பிடிக்கவில்லை. இங்கே நான் இருக்க வேண்டும் அல்லது இவர்கள் இருக்க வேண்டும். உங்கள் எல்லோருக்கும் நான் முக்கியமா? இவர்கள் முக்கியமா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்” சாஹித்யா உறுதியாய் நின்றாள்.

“என்ன சாஹி இது சின்னப்பிள்ளை போல் இல்லாமல்… இது என்ன பேச்சு?” சுகுணா கண்டிக்கும்போதே அஞ்சனா வேகமாக சாஹித்யா அருகில் வந்து அவள் கைகளை பற்றிக் கொண்டாள்.

“வேண்டாம் சாஹி,என்னை போகச் சொல்லாதே! நீ எடுத்த முடிவு சரியல்ல”




சாஹித்யா அவள் கையை உதறினாள். “என்னை விடுங்கள். எனக்கு உங்கள் அறிவுரை தேவையில்லை. என்னை பார்த்துக்கொள்ள எனக்குத் தெரியும். நீங்கள் என் கண்ணில் படாமல் போய்விடுங்கள்” அஞ்சனாவை இழுத்து வாசலுக்கு தள்ளினாள்.

தடுமாறி கீழே விழப்போனவளை அப்போது உள்ளே நுழைந்த சத்யநாதன் தாங்கி நிறுத்தினான். அவமானத்தில் சிறுத்த முகத்துடன் இருந்தவளை உற்றுப் பார்த்தான் “என்ன நடக்கிறது இங்கே?”

” உங்க பொண்டாட்டிக்கும் நம்ம சாஹித்யாவுக்கும் சரியான சண்டை தம்பி “கனகா சொல்ல “சும்மாயிரு” சுரேந்தர் அவளை அதட்டினான்.

“சத்யா,சாஹித்யா நம் பொறுப்பில்  இருக்கும் போது,அஞ்சனாவிற்கும் அவளுக்கும் ஒத்து வராத நிலையில்… ம்… ஒரு பத்து நாட்களுக்கு அஞ்சனாவை…” மேலே சொல்லத் தயங்கி நிறுத்தினான் சிவகுமார்.

குடும்பத்தினர் அனைவரும் சுற்றி நின்று தூற்றிய போதும் அஞ்சனா ஆதரவுக்காக கணவனின் முகம் பார்த்தாள். அவனோ மற்றவர்களுக்கு கேட்காத மெல்லிய குரலில் முணுமுணுத்தான் “உன்னை பெருமாள் கோயிலில் கோகுலுடன் பார்த்தேன்”

பாறாங்கல் ஒன்று முகத்தில் மோதியது போல் துடித்துப் போனாள் அஞ்சனா.ஆதரவாய் தாங்கியிருந்தவனின் கையை உதற முயல விடாமல் இறுக்கிப்பிடித்தவன் “அக்காவும் ,அத்தானும் வரும்வரை இவளை அம்மா வீட்டில் விட்டுவிட்டு வருகிறேன் அப்பா” எப்போதும் போல் நேருக்கு நேர் நின்று தந்தை முகம் பாராமலேயே பேசினான்.

வெடுக்கென அவன் கையை உதறி தள்ளியவள் “முடியாது” உயர்ந்த குரலில் அறிவித்தாள்.

“எனது அம்மா வீட்டிற்கு நானாக போனால்தான் உண்டு. என்னை இங்கிருந்து அனுப்பும் உரிமை உங்கள் யாருக்கும் கிடையாது. உங்கள் எல்லோருக்கும் ஒன்றை நினைவூட்ட நினைக்கிறேன். சமையல்காரி பத்து நாட்களுக்கு லீவு எடுத்து போய் விட்டால் பாவம் நீங்கள் எல்லோரும் சாப்பிட என்ன செய்வீர்கள்? அதை மறந்து விட்டீர்களா?” நக்கலாக கேட்டாள்.

“என்ன உளறுகிறாய்?” கலியபெருமாள் கர்ஜிக்க கையசைத்து அவர் குரலை அலட்சியம் செய்தாள்.

“வேளா வேளைக்கு சாப்பாடும் டிபனும் காபியும் டீயும் பார்த்து பார்த்து எல்லோருக்கும் வைத்து கொடுக்கிறேன்.பத்து நாட்களாக நான் இல்லாமல் போய்விட்டால் வகை வகையாக சாப்பிட

என்ன செய்வீர்கள்?”

“அஞ்சனா” அதட்டலுடன் அவள் தோள் தொட்ட சத்யநாதனை உதறினாள். “என்னை சொல்லும் உரிமை உங்களுக்கு இல்லை. உங்கள் மனைவியை சமையல்காரியாக வீட்டிற்குள் நடத்துவதை பார்த்துக் கொண்டு வாய்மூடி இருந்தவர்தானே நீங்கள்?”

“ஏய் என்னடி அபவாதம் பேசுகிறாய்? நீ இந்த வீட்டிற்கு வந்து நான்கு மாதங்கள்தான் ஆகிறது. அதற்கு முன்னால் நாங்கள் எல்லோரும் வயிற்றில் துண்டை போட்டுக் கொண்டு இருந்தோமா?” சுகுணா கோபமாக கேட்டாள்.

“ஆஹா நானும் கேள்விப்பட்டேன். இரண்டு வருடங்களில் ஆறு சமையல்காரிகள் வந்துவிட்டு தாக்குப் பிடிக்க முடியாமல் ஓடிவிட்டார்கள். அதனால் தானே சம்பளம் இல்லாத வேலைக்காரியாக என்னை தாலி கட்டி இழுத்து வந்தீர்கள்”

“சுகுணா அந்த பெண்ணை என் முன்னால் நிற்க வைக்காதே, உடனே  இங்கிருந்து கூட்டிப் போ!இளையதாய் வந்து பிறந்ததும் சரியில்லை.வந்து வாய்த்ததும் சரியில்லை.இரண்டையும் ஒன்றாக தலை முழுகிவிட்டு போகிறேன்”

 கலியபெருமாள் சொல்ல, கைப்பிடித்து இழுத்த சுகுணாவிடமிருந்து கையை உருவிக்கொண்டு கலியபெருமாள் எதிரிலேயே போய் நின்றாள் அஞ்சனா.

“அதென்ன மாமா உங்களுக்கு தலையாட்டாதவர்கள் எல்லோரையும் தலை முழுகி விடுவீர்களா?ம்…பெற்ற பிள்ளையையே நீங்கள் சொன்ன வேலையில் சேரவில்லையென்று ஆறு வருடங்களாக ஒதுக்கி வைத்திருப்பவர்தானே நீங்கள்? மருமகளுக்கு உங்களிடமிருந்து என்ன நியாயத்தை எதிர்பார்க்க முடியும்? அது எப்படி மாமா சட்டம் படிப்பதற்கு பதிலாக சமையல் படித்தால் எளிதாக கிளைன்ட்ஸை வசியம் செய்வீர்களா? எங்கே ஒரு நாள்… இல்லை ஒரு தரம் சமைத்துப் பாருங்களேன். அப்போது தெரியும் சட்டம் ஈஸியா? சமையல் ஈஸியா என்று, நான் எங்கேயும் போக மாட்டேன். நான்கு மாதங்களாக உடலாலும் உள்ளத்தாலும் இந்த வீட்டிற்காகத்தான் வாழ்ந்து கொண்டிருந்தேன். இனி இங்கே எந்த வேலையும் நான் செய்யப் போவதில்லை. எல்லோரும் என்ன செய்கிறீர்கள் என்று வேடிக்கை மட்டும் பார்க்கப் போகிறேன்”

சூளுரைப்பது போல் சொன்னவள் அடுப்படியை ஒட்டியிருந்த ஸ்டோர் ரூமிற்குள் போய் அமர்ந்து கொண்டாள். “இங்கேதான் தங்கப் போகிறேன்” உயர்ந்த குரலில் அறிவிக்கவும் செய்தாள்.

வீடு ஒரு வகை அமைதியில் இருக்க சாஹித்யாவின் குரல் உப்பு காகிதத்தை உரசிய கற்துண்டாய் க்ரீச்சிட்டது. “தாத்தா அவர்களை வெளியே போக சொல்லுங்க, இங்கு இருக்க கூடாது. எனக்கு அவுங்களை பிடிக்கலை”

“சாஹித்யா” கலியபெருமாள் அதட்டலாய் அழைக்க அவள் திரு திருத்தாள்.




“அஞ்சனா உன் பக்கம் வரப்போவதில்லை.உன்னுடன் படுக்கப் போவதில்லை. பிறகு உனக்கு என்ன கவலை? நீ மாடிக்கு போ.எல்லோரும் கவனிங்க,நம்மை பற்றி இவ்வளவு மோசமாக நேற்று வந்தவள் சொல்லுமளவு இருந்திருக்கிறோம்.ஒரு வகையில் இந்த சவாலை ஏற்றுக் கொண்டு,நம்மை நாம் நிரூபிக்க வேண்டும்”

“சுகுணா நம் இருவருக்குரிய சமையல் நாளை காலையில் இருந்து உன் பொறுப்பு. அதுபோல் அவரவர் குடும்ப சமையலை அவரவர்களே பார்த்துக் கொள்ள வேண்டும். மற்ற வேலைகளுக்கு ஆட்கள் இருப்பதால் சமையல் மட்டும் பெரிய பிரமாதம் இல்லையே! நம் குடும்பத்தை நாமே நடத்திக் காட்டுவோம்” கலியபெருமாளின் ஓரக்கண்பார்வை ஸ்டோர் ரூமை தொட்டு மீண்டது.

சுலேகாவும் கனகாவும் பெருமூச்சுடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

மறுநாள் காலை ஏழு மணிக்கு அந்த வீட்டின் சமையலறை போர்க்களம் போல் மாறியிருந்தது.




What’s your Reaction?
+1
51
+1
35
+1
2
+1
9
+1
5
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!