Serial Stories தேவதை வம்சம் நீயோ

தேவதை வம்சம் நீயோ-1

1

 

உருளை வறுவலை வாயில் அடைத்துக் கொண்ட சிவக்குமார் ஏதோ சொல்ல அருகில் அமர்ந்திருந்த சுலேகா பற்கள் பெரிய சிரிக்கிறாள். உடன் கை நிறைய வறுவலை அள்ளி அவள் வாயில் திணிக்கிறான் சிவக்குமார். பதிலுக்கு முட்டைகோஸ் கறி அவனது வாய்க்குள் திணிக்கப்படுகிறது.

ஹால் சோபாவில் அமர்ந்த நிலையில் டைனிங் டேபிள் நன்றாக தெரிய, சுவரில் பதிந்திருந்த டிவியில் மனம் படியாமல் நிமிடத்தில் ஒரு முறை அவர்களை பார்த்தபடி இருந்தாள் அஞ்சனா.

சாப்பிட்டு முடிக்கும் வரை ஓயாத பேச்சும் சிரிப்பும். திருமணம் முடிந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்ட போதும், இருவருக்குமிடையே பேச அப்படி என்னதான் இருக்கும்! இதோ திருமணமாகி இரண்டே மாதங்களான அவளுக்கெல்லாம் கணவனிடம் பேச எதுவுமே இல்லையே!

இருவரும் உண்டு முடித்து ஒரு மணி நேர ஓய்வென்று அவர்கள் அறைக்குள் நுழைந்து கொண்டனர். “டேபிள் ஒதுக்கி வை” மதிய நேர தூக்க சொக்குடன் அரைகுறையாக டிவியில் கண்களை பதித்திருந்த மாமியார் சுகுணா சொல்ல எழுந்து போய் அவர்கள் சாப்பிட்ட இடத்தை சுத்தம் செய்தாள் அஞ்சனா.

சிவக்குமாரும், சுலேகாவும் மருத்துவர்கள். நகரின் பெரிய மருத்துவமனையில் வேலையில் இருந்தார்கள். மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்துவிடுவார்கள். இவர்களுக்கு மூத்த சுரேந்தரும், கனகாவும் ஹைகோர்ட் வக்கீல்கள். இருவரும் ஒரே நேரத்தில் வர முடியாமல் தனித்தனியாக வந்து மதிய உணவை சாப்பிட்டு சென்றாயிற்று.

மாமனார் கலியபெருமாள் ஹை கோர்ட்டில் ஜட்ஜ் ரிட்டையிடை நெருங்கிக் கொண்டிருக்கிறார். சுகுணா மிகச்சிறந்த இல்லத்தரசி மூன்று மகன்கள் ஒரு மகள் என்ற பெரிய குடும்பத்தை 38 ஆண்டுகளாக நிர்வகித்து குறைவில்லாமல் மிக நிறைவாக கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறாள்.

கடைசி மகன் சத்யநாதனுக்கு அஞ்சனாவை மணம் முடித்து வைத்த கையோடு தனது வீட்டுப் பொறுப்பு முடிந்தது என்று நினைத்து பொறுப்புகளை கடைசி மருமகள் அஞ்சனாவின் கையில் கொடுத்துவிட்டு ஓய்வு மனநிலைக்கு சென்று விட்டாள்.

சிவகுமாரும்,சுலேகாவும் சாப்பிட்டதில் கலைந்து கிடந்த டைனிங் டேபிளை சுத்தம் செய்தாள் அஞ்சனா. திறந்து கிடந்த உணவு பாத்திரங்களை மூடி, சிந்தியிருந்த குழம்பு ,சோறு வகைகளை துடைத்தெடுத்து அடுத்தவர் உண்பதற்கு வசதியாக்கிவிட்டு மணியை பார்த்தாள். மதியம் 2:30 யை தொட்டுக் கொண்டிருந்தது.

இவரை எங்கே காணோம்… ஒரு போன் போடலாமா? நினைத்து விட்டு உடனே அழித்தாள். ஒன்று போனை எடுக்க மாட்டான் அல்லது எடுத்துவிட்டு “வர்றேன்” ஒற்றை வார்த்தையோடு கட் பண்ணி விடுவான். இதற்கு எதற்கு ஒரு அழைப்பு?

அதிகாலை 5 மணியிலிருந்து பம்பரமாய் சுற்றி வேலை செய்த உடலில் பன்னிரண்டு மணிக்கே பசி என்று கேட்ட வயிறு, இப்போது தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டு அமைதியாக இருந்தது. ஒரு டம்ளர் தண்ணீரை பருகி விட்டு மீண்டும் சோபாவில் வந்து அமர்ந்தாள்.

சுகுணா அறைக்குள் போய் படுத்திருந்தாள். அஞ்சனாவிற்கு தனது தாய்வீடு ஞாபகம் வந்தது. அப்பா அருஞ்சுனைநாதர் அம்மா மரகதவல்லி தம்பி மாதவனை நினைத்ததும் மனம் நெகிழ்ந்தது. வீட்டின் கடைசி பிள்ளை என்ற சலுகையோடு இவளுடன் போட்டி போட்டுக்கொண்டு அம்மாவிடம் எந்நேரமும் கொஞ்சிக் கொண்டிருப்பவன்.

இவள் திருமண பேச்சு வீட்டில் ஆரம்பம் ஆனதும் எப்படி மாறிப் போனான்!

“அப்போ நீ வீட்டை விட்டு போயிடுவியா அக்கா?” அப்போதுதான் அவனுக்கு அக்காவிற்கு இந்த வீடு நிரந்தரமல்ல என்று உரைத்தது போலும். அதன் பிறகு அவளுடனான வாயாடல்களை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டவன், அமைதியாகிப் போனான். பொறுப்பான பெரிய மனிதனாக மாறிவிட்ட தம்பியை ஆச்சரியமாகப் பார்த்தாள் அஞ்சனா.

பெற்றோர் தம்பியின் ஞாபகங்களில் விரைத்திருந்த உடலும் உள்ளமும் நெகிழ அப்படியே கண்கள் சொருக கண்ணயர்ந்து விட்டாள் போலும். சற்று உரத்த கேட்ட குரலில் திடுக்கிட்டு இமை திறந்தவள் மலங்க விழித்தாள்.

“இதென்ன உட்கார்ந்தபடி தூக்கம்? சாப்பிட்ட சொக்கு இருந்தால் உள்ளே போய் படுத்து நன்றாக தூங்க வேண்டியதுதானே?” சொன்னபடி உள்ளே நடந்தவன் அடுப்படியின் பின்னால் இருந்த குளியலறைக்கு போய் கை கால்கள் கழுவி சுத்தம் செய்து கொண்டு சாப்பிட அமர்ந்தான்.




அவன் குறிப்பிட்ட சாப்பிட்ட சொக்கு மனதை உறுத்த மௌனமாக அவனுக்கு தட்டு எடுத்து வைத்தாள். பரிமாற முயன்றவளை தடுத்தவன் தானே வேண்டியதை போட்டுக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தான்.

சாப்பிட்டு விட்டாள் என்று முடிவு செய்தவனிடம் என்ன எதிர்பார்க்க? விரக்தியாய் பார்த்து நின்றிருந்தவளை “எதற்காக வெட்டியாய் நின்று கொண்டிருக்கிறாய்? ஏதாவது வேலை இருந்தால் பார்ப்பதுதானே? அல்லது கொஞ்சம் முன்பு செய்து கொண்டிருந்தாயே அந்த

வேலையையாவது உருப்படியாக ரூமுக்குள் போய் பார்” ரசத்திற்கு சோற்றை அள்ளி வைத்துக்கொண்டு “எலுமிச்சங்காய் ஊறுகாய் வேண்டும்” கேட்டுவிட்டு அவளை எதிர்பார்க்காமல் தானே எழுந்து ஊறுகாய் ஜாடியை எடுத்து தட்டில் வைத்துக் கொண்டான்.

அஞ்சனா பின் வாசலுக்கு வந்து நின்று கொண்டாள். கொல்லைப்புற துளசி அவள் கண்களின் நீர் படலத்தில் மச மசத்து தெரிந்தது.

சாப்பிட்ட தட்டை கொண்டு வந்து சிங்கில் போட்டவன் “நைட் வர லேட் ஆகும். சாப்பிட்டுட்டு தூங்கு”கழுவிய கையை உதறியபடி போய் விட்டான்.

சிறிது நேரம் பின் வாசலிலேயே நின்றிருந்தவள் பெருமூச்சு ஒன்றுடன் உள்ளே வந்து மீண்டும் டேபிளை ஒதுக்கி குழம்பு காய் வகைகளை பாத்திரம் மாற்றி வைத்துவிட்டு கழுவ போட்டாள்.

சிவக்குமார்,சுரேந்தரின் குழந்தைகள் மாலை 4 மணிக்கு பள்ளியிலிருந்து வந்து விடுவார்கள். பசி பசி என்று குதிப்பார்கள். அன்றைய மாலை டிபனாக பனீர் போண்டாவும் உருளைக்கிழங்கு அல்வாவும் என முடிவெடுத்து அதற்கான வேலைகளில் இறங்கினாள்.

திருமணம் முடிந்து இரண்டே மாதங்கள் ஆன புது தம்பதியர் என்று சத்யநாதன் அஞ்சனாவை யாரும் சொல்ல மாட்டார்கள். அந்த அளவு அவன் வழக்கம்போல தொழிலிலும் வருடங்களாக பார்த்து பழகியவள் போல் அஞ்சனா அந்த வீட்டு வேலைகளிலும் மூழ்கி போயிருந்தனர்.

நன்றாக படித்து தங்கள் படிப்பிற்கேற்ற வேலையில் இருந்த அந்த குடும்பத்தினர்களிடமிருந்து சத்தியநாதன் வேறுபட்டான். அவனது விருப்பம் மாத சம்பள வேலை அல்லாது தொழிலில் இருந்தது. அப்பாவின் விருப்பத்திற்காக மெக்கானிக்கல் படித்தாலும் கம்பெனிகள் தேடி வந்து வேலையை தூக்கிக் கொடுக்கும் அளவு மதிப்பெண்கள் பெறாததால் கேம்பஸில் அவன் செலக்ட் ஆகவில்லை. இதனையே பெரிய கௌரவ குறைவாக எண்ணிய கலியபெருமாள் எப்போதும் சத்யநாதனிடம் கடுகடுப்பையே காட்டுவார். அவனுக்கு சென்ட்ரல் கவர்மெண்டில் வேலை ஒன்றுக்கான முயற்சியில் இறங்கி அதற்குரிய தேர்வை எழுத சொல்லிக் கொண்டிருக்கும்போதே, தனது சர்டிபிகேட் பேங்கில் வைத்து கடன் வாங்கி தொழிலை ஆரம்பிக்கப் போவதாக வந்து நின்றான்.

முன்பே மகனின் மேலிருந்த அதிருப்தி எண்ணம் அதிகமாகி ஒருவகை வெறுப்பே வந்துவிட கலியபெருமாள் இனி உன் வாழ்க்கை முடிவுகளில் எனக்கு சம்பந்தம் இல்லை என்று விட்டு ஒதுங்கிக் கொண்டார். பிறகும் அவனது தொழில் சம்பந்தமான எதிலும் பட்டுக் கொள்வதில்லை. அப்பாவை பின்பற்றியே இருந்து கொண்டனர் சிவக்குமாரும் சுரேந்தரும்.

சுகுணாவும் கணவரை மகன்களை தாண்டி எதுவும் செய்வதில்லை.அக்கா பார்வதி அத்தான் சங்கரலிங்கம் மட்டுமே அவ்வப்போது சத்யநாதனின் தொழிலை பற்றி கேட்டுக் கொள்பவர்கள் .ஓரளவு அக்கறை காட்டி பேசுபவர்கள்.

கணவன் வீட்டின் இந்த நிலைமைகளை அஞ்சனா இந்த இரண்டு மாதங்களில் அவளாகவே தான் தெரிந்து கொண்டாள். தன்னைப் பற்றியோ தன் குடும்பத்து பழக்க வழக்கங்கள் பற்றியோ சத்யநாதன் இதுவரை அவளிடம் வாய் திறந்து எதுவும் பேசியதில்லை.




“சித்தி என்ன டிபன்?” பனீர் போண்டாவின் மணம் அடுப்படியை நிறைத்திருக்க கேட்டபடி உள்ளே வந்தான் சுரேந்தரின் மகன் அனிருத்.

இரண்டாவது படிக்கும் பையன் தோளிலிருந்து பேக்கை இறக்காமல் ஆவல் மின்னும் கண்களோடு அண்ணார்ந்து பார்த்தபடி கேட்க, அடுப்பை சிம்மில் போட்டுவிட்டு அவனை அள்ளி கன்னத்தில் முத்தமிட்டாள் அஞ்சனா.

“பனீர் போண்டா” விளம்பர பாணியில அவள் அறிவிக்க, “எனக்கு …எனக்கு” கை நீட்டினான்.

” போய் யூனிபார்ம் மாத்தி கைகால் கழுவிட்டு வரணும்” அவள் சொல்ல பேக்கை,ஷூவை அங்கேயே போட்டுவிட்டு பாத்ரூமுக்கு ஓடினான்.அவற்றை ஒழுங்குபடுத்தி விட்டு போண்டாவை தொடர்ந்தாள்.

சூடாக இருந்த போண்டாவை தொட முடியாமல் அனிருத் தடுமாற ஸ்பூனை எடுத்து அதனை இரண்டாக கட் செய்து உள்ளிருந்த பணீரை காட்டினாள். கண்கள் மின்ன அவன் பனீரை எடுக்க முயல “இரு” என்றபடி சிறுசிறு துண்டுகளாக ஸ்பூனால் கட் செய்து அவன் கையில் கொடுத்தாள்.

பொன்னிறமான போண்டாவிற்குள் வெளேரென்று உருகி தெரிந்த பனீர் துண்டு மதியமே சாப்பிடாத அவள் வயிற்றின் பசியை தூண்ட ஒரு போண்டா துண்டை தன் வாயில் இட்டுக் கொண்டு நிமிர்ந்தவள் அடுப்படி வாசலில் நின்றிருந்த

சத்யநாதனை பார்த்தாள்.

வாய்க்குள் இருந்த போண்டாவை மெல்லவா? துப்பவா ?என்று தடுமாறியவளை பார்த்தபடி இருந்தவன் “பீரோ சாவியை எங்கே வைத்தாய்?” என்றான்.

“அங்கே டிராவில்… இல்லை பெட்டுக்கடியில்…” குழம்பியவளை “வந்து எடுத்துக் கொடு” என்றான்.

அங்கிங்கு தேடி கடைசியாக கீ ஸ்டேண்டில் இருந்த சாவியை அவள் எடுத்துக் கொடுத்த போது, “சாப்பிடவும் தூங்கவும் மட்டுமே இல்லாமல் முக்கியமான வேலைகளிலும் பொறுப்பு இருக்க வேண்டும்” என்றான் முணுமுணுப்பாக.

போண்டா உருட்டி போட்ட போது புறங்கையில் தெறித்த ஒரு துளி எண்ணெய் இப்போது அதிகமாக காந்தியது அஞ்சனாவிற்கு.




What’s your Reaction?
+1
51
+1
33
+1
5
+1
1
+1
1
+1
0
+1
12
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!