Serial Stories ஜில்லுன்னு ஒரு நெருப்பு

ஜில்லுன்னு ஒரு நெருப்பு-7

 7


டாக்டர் கடத்தப்பட்டு விட்டார் என்பதை சட்டென யூகித்து விட்ட வாட்ச்மேன், டாக்டரின் பி.ஏ. வாசுகியை போனில் தொடர்பு கொண்டு படபடப்பாய் விஷயத்தை சொன்னான்.   வார்த்தைகள் குளிர் ஜுரம் பாதித்தவன் பேசுவது போலவே வந்திறங்கின.


“அடப்பாவி… இப்படிக் கோட்டை விட்டுட்டியே?… சமீபத்தில் அவரைக் கொல்ல முயற்சி நடந்த விஷயம் தெரிஞ்சும் எப்படிய்யா இவ்வளவு கேர்லஸ்ஸா இருந்தே?” அவனிடமிருந்த படபடப்பு இப்போது வாசுகிக்கும் தொற்றிக் கொள்ள, அவள் போலீஸ் கமிஷனருக்கு போன் செய்தாள்.

“இஸிட்?… ஓ.கே.. ஓ.கே… நாங்க உடனே அங்கே வர்றோம்!… அதுவரைக்கும் யாரையும் கேட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம்ன்னு அந்த வாட்ச்மேன் கிட்டே சொல்லிடுங்க!… அவனையும் அங்கேயே இருக்கச் சொல்லுங்க” என்றார் கமிஷனர்.

போலீஸ் டிபார்ட்மெண்ட் சுறுசுறுப்பாகி உடனடியாக, டாக்டரைக் கண்டுபிடிக்க,  வியூகம் வகுக்கத் துவங்கியது.

****

வாளையாறு செக் போஸ்ட் தாண்டி,  இரண்டாவது கிலோமீட்டரில் சரக்கு லாரி ஒன்று கவிழ்ந்து, ரோடு பிளாக் ஆகி இருக்க, டாக்டரைக் கடத்தி வந்த வேன் தர்மசங்கடமாய் நின்றது.




“முத்து!… நிலைமையை பார்த்தா இப்போதைக்கு டிராபிக் கிளியர் ஆகாது போலிருக்கு… என்ன பண்றது?” தாடியைச் சொறிந்தான் அவன்.

“அதைத்தான் பாண்டியா… நானும் யோசிச்சிட்டிருக்கேன்!… மாற்று ரூட் வேற இல்ல!” கண்ணுக்கு மேல் இருந்த கருப்பு மச்சத்தை தேய்த்தவாறே சொன்னான் அவன்.

வாகன நெரிசல் அதிகமாக அதிகமாக இரைச்சலும் ஹார்ன் சப்தங்களும் கூடிக் கொண்டே போயின.  சில லாரிக்காரர்கள் லாரிக்குப் பக்கத்திலேயே அமர்ந்து ஸ்டவ் பற்ற வைத்து, சப்பாத்தி போட ஆரம்பித்தார்கள்.

“வெள்ளரிக்காய்… வெள்ளரிக்காய்”

“கொய்யாப் பழம்!… கொய்யாப் பழம்”

வியாபாரிகள் அந்தக் கூட்டத்தில் தங்கள் மார்க்கெட்டிங் திரமையைக் காட்டிக் கொண்டிருந்தார்.


வாகனங்கள் தந்த கூடுதல் இரைச்சலால் டாக்டர் மயக்கம் தெளிந்து லேசாகக் கண் விழித்தார்.  பக்கத்தில் அமர்ந்திருந்த பாண்டியன் சட்டென்று உஷாராகி, தன் பாக்கெட்டிலிருந்த சின்ன பிஸ்டலை எடுத்து அவரது இடுப்புப் பகுதியில் வைத்து அழுத்தினான்.

“அடேய்க் கிழவா!… புத்திசாலித்தனமா செய்யறதா நினைச்சு ஏதாவது ஹீரோயிஸம் பண்ணுனே…? இடுப்பெலும்பு செதறிடும்!” பற்களைக் கடித்துக் கொண்டு சின்னக் குரலில் மிரட்டலாய்ச் சொன்னான்.

டாக்டர் சூழ்நிலையை புரிந்து கொண்டு அமைதியானார்.  ஆனால்,  மூளை மட்டும் சுறுசுறுப்பாக இயங்கியது. “இவனுக யாரு?… எங்கே என்னைக் கடத்திட்டுப் போறானுக?… இவனுக கிட்டேயிருந்து எப்படித் தப்பிக்கிறது?… கொஞ்சம் அசைஞ்சாலே ஷூட் பண்ணிடுவான் போலிருக்கு!… என்ன பண்ணலாம்?”

அப்போது. “ஹலோ… நீங்க… டாக்டர் கிருபாகரன்தானே?” வேனின் ஜன்னல் வழியே உள்ளே எட்டிப் பார்த்த இளைஞன் ஆர்வமாய் கேட்க,




“ஆமாம்” என்று தலையை மட்டும் ஆட்டினார்.

அந்தப் பாண்டியன் பிஸ்டலை அந்த இளைஞன் கண்ணுக்குத் தெரியாதபடி மறைத்து பிடித்துக் கொண்டான்.

“டாக்டர்… என் பேர் விஜயசந்திரன்!… நான் உங்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கேன்!… பத்திரிக்கைகளிலேயும் நிறையப் படிச்சிருக்கேன்!… நானும் ஒரு மெடிக்கல் ஸ்டூடண்ட் தான்!… எனக்கும் உங்களை மாதிரிதான் சோஷியல் சர்வீஸ்ல ரொம்ப ஈடுபாடு!… ஆனா நீங்க  போர் முனைகளிலேயே போய் சர்வீஸ் பண்ணியிருக்கீங்க!… டாக்டர்  ரியலி  யு ஆர்  வெரி கிரேட் டாக்டர்” பாராட்டுக்களை அள்ளி வீசினான்.


டாக்டர் கிருபாகரன் மெலிதாய்ச் சிரித்தபடி அந்தப் பாண்டியனைப் பார்க்க பாண்டியனோ அந்த இளைஞனைப் பார்த்து,  “மிஸ்டர் கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணாம உன்னோட வேலையைப் பார்த்திட்டுப் போறியா?” என்றான் அதட்டலாய்.

“ஓகே!… ஓகே!… கோவிச்சுக்காதீங்க!… நான் இப்பப் போயிடறேன்!… ஒரு சின்ன ஆட்டோகிராப் மட்டும் போட்டு குடுங்க டாக்டர் அது போதும்!… ப்ளீஸ்” கையில் இருந்த சிறிய பாக்கெட் டைரியை  பேனாவுடன் அவன் உள்ளே நீட்டினான்.

டாக்டர் தயங்க,  “சீக்கிரமா வாங்கி ஏதோ ஒண்ணைக் கிறுக்கிக் கொடுத்தனுப்புங்க” என்றான் பாண்டியன்.

சரியாக அந்த நேரத்தில் டிராபிக் கலைய ஆரம்பித்தது.

முன்னால் நின்று கொண்டிருந்த வண்டிகள் மெதுவாக நகரத் துவங்க, பின்னாலிருந்த வாகனங்கள் தங்கள் ஹார்னை முரட்டுத்தனமாய் அழுத்த, கிறுக்கலாய் எதையோ எழுதி… கிறுக்கலாய் ஒரு கையெழுத்தும் போட்டு அந்த சின்ன டைரியை ஜன்னலுக்கு வெளியே வீசி எறிந்தார் டாக்டர்.

அதை விஜயசந்திரன் “லபக்”கென்று கேட்ச் பிடித்துக் கொள்ள, வேன் நகர ஆரம்பித்தது.  பத்து நிமிடம் மிதமான வேகத்தில் ஊர்ந்த வேன், பிறகு வேகம் பிடித்துப் பறந்தது.

அந்த பாக்கெட் டைரியைத் திரும்பத் திரும்ப பார்த்த இளைஞன்,  “டாக்டர்ங்கறது சரியா இருக்கு!… எழுத்து ஒரு எழவும் புரியல!…” அதைப் பாக்கெட்டில் திணித்துக் கொண்டு, ரோட்டோரத்தில் நிறுத்தி இருந்த தன் யமஹா நெருங்கி ஏறி அமர்ந்தான்.




 “ஆமாம்… இந்த நேரத்துல எண்பது… எண்பத்திஐந்து வயசான டாக்டர் எங்கே போறார்?… அவர் கூட இருந்த ஆசாமிகளைப் பார்த்தா அவ்வளவு டீஸண்டாத் தெரியலையே!… சம் திங் ராங்!” உள் மனதில் எதுவோ உறுத்த, மீண்டுமொரு முறை  அந்த சிறிய டைரியை எடுத்து படித்தான்.  “கீழே கையெழுத்துப் போட்டிருக்கார்!… தெரியுது… அதுக்கு மேல என்னமோ எழுதி இருக்கார்…  ஆனால் என்ன?ன்னு புரிய மாட்டேங்குது”

திரும்பத் திரும்பப் படித்தான்.

“இன்டர்வெல்…. ஹவர்?… ம்ஹும்..  “இன்டர்நேஷனல்… ஹால்?”… அதுவும் இல்லை… வேறென்ன எழுதியிருக்கார்?…  ‘பளிச்’சென்று மூளைக்குள் ஒரு ஃப்ளாஷ் அடித்தது.

“கரெக்ட்!… அதேதான்!…  “இன் டிரபிள்… ஹெல்ப்” ன்னுதான் எழுதி இருக்கார்!… ஆமாம்… எதுக்கு அப்படி எழுதினார்?… ஒருவேளை…. நான் நினைத்த மாதிரி… டாக்டர் ஏதாவது ஆபத்தில் மாட்டியிருக்கிறாரோ?… கூட இருந்தவனுகளைப் பார்த்தா ஒரு மாதிரியாய்த்தான் இருந்தானுக!…  என்ன பண்றது இப்ப?” 

நீண்ட குழப்பத்திற்கு பின் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று தகவல்  தருவது என முடிவு செய்த விஜயசந்திரன் தன் யமஹாவை ஓங்கி உதைக்க, அது வலி தாங்காமல் “விர்”ரெனக் கத்திக் கொண்டு கிளம்பியது.


வாளையார் போலீஸ் ஸ்டேஷன்.

ஒரேயொரு தொந்தி இன்ஸ்பெக்டரும், மேஜையில் அமர்ந்தவாறே தூங்கி வடியும் கான்ஸ்டபிளும் மட்டுமே இருந்தனர்.

“யோவ்!… நீ மெடிக்கல் ஸ்டுடண்ட் தானே?… போய் மருந்து மாத்திரைகளோட பெயரை ஒழுங்காப் படிச்சு… டாக்டர் ஆகற வழியைப் பார்ப்பியா?… அதை விட்டுட்டு… சும்மா எதையோ கற்பனை பண்ணிக்கிட்டு வந்து… எங்களை ஏன்யா உயிர் எடுக்கறே?” தொந்திப் பிள்ளையார் போலிருந்த இன்ஸ்பெக்டர் எரிந்து விழுந்தார்.


“சார்…. என்ன சார் இப்படி பேசுறீங்க?…. டாக்டர் கிருபாகரன் நம்ம நாட்டுக்கு கிடைத்த ஒரு அரிய பொக்கிஷம் சார்!…. அவருக்கு ஒரு ஆபத்துன்னு பதறிப் போய் வந்து சொல்றேன். நீங்க இவ்வளவு அசால்ட்டா பதில் பேசுறீங்களே?…” அவன் சற்று உரக்கப் பேச,

“இன்ஸ்பெக்டர் டென்ஷனானார்.  “டேய் போடா வெளியே!… இன்னும் கொஞ்ச நேரம் இங்கு நின்னே?… உம்மேலே ஏதாச்சும் ஒரு கேஸ் போட்டு… உள்ளார தள்ளி… முட்டிக்கு முட்டி தட்டிடுவேன்!… அப்புறம் நீ டாக்டராகவும் முடியாது… ஆக்டராகவும் முடியாது”

“என்ன சார் ஒரு பொறுப்பான போஸ்டிங்ல இருந்துக்கிட்டு…. இப்படிப் பொறுப்பில்லாமல் பேசுறீங்க!… இது உங்களுக்கே நல்லா இருக்கா சார்?”




அவன் கேட்டு முடிக்கவில்லை,  “பளார்”… இன்ஸ்பெக்டரின் வலுவான கரம் அவன் கன்னத்திற்கு சீதனம் வழங்கியது.

அந்த விஜயசந்திரனின் உதட்டோரம் ரத்தக் கோடு.  காதுகளுக்குள் “ஙொய்ய்ய்ய்ய்”.

“யோவ்…. கான்ஸ்டபிள் இந்த நாயை இழுத்துட்டு போய் வெளியே தள்ளுய்யா” இன்ஸ்பெக்டர் கத்த,

கான்ஸ்டபிள் அவனைக் கழுத்தை பிடித்து  “தர… தர” வெனக் கதவு வரை  இழுத்து வந்து,  பின்புறமாய் எட்டி உதைக்க,  குப்பலாய் மண்ணில் போய் விழுந்தான் தனபாலன்.

குப்புற விழுந்தவன் தோள்களைப் பற்றித் தூக்கியது ஒரு கரம்.

நிமிர்ந்து பார்த்தான். தோளில் பையுடன் ஒரு ஒல்லி இளைஞன்.  முகத்தில் தாடி…. கண்களில் தீர்க்கம்.  

“என்ன விஷயம்?” ஸ்டேஷனைப் பார்த்து முறைத்தபடி அவன்.  கேட்க,

சொன்னான்.

“ஓகே!… என் கூட வா” என்றவாறே அந்த இளைஞன் ஸ்டேஷனை நோக்கிச் செல்ல,  இளைஞன் தயங்கினான். “பயப்படாம வாப்பா!… நான் பத்திரிகைக்காரன்தான் நீ என்னைத் தீவிரவாதின்னு நினைச்சிட்டியா?” ஓரச் சிரிப்புடன் அவன் கேட்க,  பதில் பேசாமல் அவனுடன் நடந்தான் அந்த இளைஞன்.




What’s your Reaction?
+1
6
+1
7
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!