Serial Stories தீரா…நிலதீரா…!

தீரா…நிலதீரா…!-7

7.நிலமங்கையைக் காணோம்!

****************************************

“பெருமாயி அத்தா! பெருமாயி அத்தா”

“யாரு அது? மருமகனா”

கீரையை ஆய்ந்து பெரிய ஈயச்சட்டியில் போட்டுக் கொண்டிருந்த பெருமாயி அம்மாள் அவற்றை ஒதுக்கி வைத்து விட்டு வெளியே வந்தாள்.

“யாரு…வில்லவனா? உள்ளே வரலாம் தானே? ஏனிப்படி அத்தையை ஏலம் விடுகிறாய்  வாசலில் நின்று.”

“இல்லை அத்தா. வேலையிருக்கிறது. இதோ இவர்”

என்று தன்னருகில் நின்றிருந்தவனைக் காட்டி 

“இவர் குறி சொல்பவர். நம்ம கருப்பு பற்றி அறிந்து கொள்ளலாமே என்று அழைத்து வந்தேன். எனக்கும் குறி சொன்னார். நடந்து முடிந்ததை அப்படியே உள்ளங்கை நெல்லியாய் காட்டி விட்டார். அதுதான் நம்பிக்கையோடு அழைத்து வந்தேன். நீயும் புலம்பிக் கொண்டேயிருக்கிறாயே என்று. உள்ளே அழைத்துப்போ.  பிறகு கருப்புபற்றிக் கேட்டுக் கொள். நான் மாலைநேரம் வருகிறேன். வந்து விவரம் கேட்டுக் கொள்கிறேன்.

அய்யா..உள்ளே செல்லுங்கள். அத்தா வருகிறேன்”

“வாருங்கள் அய்யா “

வாயிலைக் கடந்து நடையைக் கடந்து அவரை உள் கூடத்தில் ஒரு மணையைப் போட்டு அமரும்படிக் கூறிவிட்டு செம்பு நிறைய நீரும் லோட்டாவில் மணக்கும் பசுமோருமாய் கொண்டுவந்து வைத்தாள்.

வந்தவனின் விழியோ  வீடெங்கிலும் துழாவியது.இரண்டாம் கட்டு கூடத்தின் கடைசி அறையில் நின்றது. இங்கிருந்து எதுவும்  புலப்படவில்லை  என்றாலும் அங்கேதான் அவன் சுவாசம் இருப்பதாகத் தோன்றியது. 

பெருமாயி அவனையே குறுகுறுவென்று பார்த்தாள்.கேசக்குழல்களை ஒரு சிவப்புநிறத் துண்டு ஒன்று உருமால் போல கட்டுக்குள் அடக்கியிருந்தது.  நெற்றி பிறைகோடாய் தெரிய புருவங்களுக்கு நடுவே கருப்பு நிறப் பொட்டும்  அதைத் தாங்கும் பிறைச்சந்திரனாய் சந்தனமும் கருப்பு பொட்டுக்கு மேலாகத் திலகம்போல் நீட்டிய அரக்குநிறக் குங்குமமும்  முறுக்குமீசையும் இஸ்லாமியரைபோல கண்ணில் சுர்மாவுமாக  லேசான அச்சத்தையூட்டும்படியாகவே இருந்தது அவன் தோற்றம். விழிகளில் கொடுரமில்லை கனிவு இருந்தது.

மேலே ஒருகாவிநிற அங்கியும் இடையில் கருப்புநிற பருத்தி வேட்டியும் கையில் வெள்ளிப் பூண் போட்ட சிறு தடியிருக்க அதை உருட்டியபடியே 

“தாயே! நீங்கள் கேட்க விரும்பியதைக் கேளுங்கள்”

பெருமாயி அம்மாள் எதுவும் பேசாமல் எழுந்துபோய் இடைக்கழிக் கதவை சார்த்திவிட்டு

“என்ன கேட்க சொல்கிறாய் கருப்பையா? “

என்றாள்.

“அம்மா! “

ஓடிவந்து அவளின் பாதங்களைப் பிடித்துக் கொண்டான் கருப்பசேர்வை

“தாயறியா சூலுண்டா.? பத்துமாதம் சுமந்தவனை எனக்கு அடையாளம் தெரியாதா? எதற்கு இந்த வேஷம். உன் வீட்டிற்கு வருவதற்கு “

“அம்மா… வாசலில் கவனித்தீர்களா யாரேனும் ஓரிருவர் மாற்றி மாற்றி நோட்டமிடுவதை”

“ஆமாம். அது எனக்காகவும் தீர்த்தாவுக்காகவுமான வலை அம்மா. இது எங்களின் சொந்த ஊர் என்று தெரியும். இங்கே நாங்கள் வரக்கூடுமென இரவும் பகலுமாய் மாறிமாறி பணியாற்றுகின்றனர்.”




“ஆனால் அவர்கள் நம்மவர்தானே கருப்பையா”

“ஆமாம். நம்மவர்கள்தாம். கும்பெனியானுக்கு விலைபோன பச்சோந்திகள்.இதோ இப்போது ஏதேனும் சாக்கிட்டு யாரேனும் குரல் கொடுப்பார்கள் சமாளியுங்கள்”

எனும் போதே யாரோ கூப்பிட்டார்கள்

“என்னய்யா …அட நீ ராசுக்கோனார் பையன் நீலன் தானே சொல்லுய்யா “

“ஆமாம் ஆச்சி! கொஞ்சம் தண்ணீ வேனும் “

“வா! இந்தா திண்ணையில் உட்காரு இதோ வாரேன்”

அவன் உள்ளே வந்து திண்ணையிலிருந்து ஆனமட்டும் வீட்டுக்குள்ளே  பார்வையை நாட்டி அப்படியும் இப்படியுமாய் நடைபோட்டு ஆழம் பார்க்க ஒரு சுவடுமே காணோம். வந்தவனின் காலணியைத் தேட அதையுமே காணோம். 

‘யாரோ வந்ததைப் பார்த்தோமே போய் விட்டானா’

அதற்குள்ளாக செம்பு நீரோடு வந்து விட்ட பெருமாயி அம்மாளைக் கண்டு அமைதலாய் திண்ணையில் அமர்ந்தான்.

“நீலா வீட்டில் எல்லோரும் சௌக்யம்தானே! பிள்ளைப்பேறுவுக்கு போனாளே உன் மனைவி வந்து விட்டாளா பிள்ளையும் பிறந்து ஐந்து திங்கள் ஆகி விட்டதே.”

“எல்லோரும் சுகமே ஆச்சி இம்மாதக்கடைசியில் நல்லநாள் இருக்கிறதாம் அப்போது வர இருக்கிறாள்.”

“நல்லதுப்பா. சொல்லிஅனுப்பு. நானும் வீடு வந்து பிள்ளையை பார்க்கிறேன்.”

“ஆச்சி “

“சொல்லுப்பா”

“ஆச்சி! தப்பாக நினைக்காதீர்கள் உங்கள் மருமகன் யாரையோ அழைத்து வந்தாரே! யார் அவர்.? பார்க்கவே பயமாயிருந்தது. “

“ஓ….அவரா?  அவர் ஒரு குறி சொல்லியாம்.எங்கள் கருப்பையா பற்றி ஒரு சேதியுமே காணலையே என்று புலம்பிக் கொண்டிருந்தேன் அல்லவா? அதுதான் அவரை அழைத்துக் கொண்டு வந்திருந்தார் மருமகன்.ஆனால்…..”

“ஆனால் என்னாயிற்று? அவர் இப்போது இருக்கிறாரா? குறி சொன்னாரா? கருப்பன் எங்கேயென்று கூறினாரா? அவர் இருந்தால் கூப்பிடுங்களேன். நானும் என் எதிர்காலம் பற்றிக் கேட்டுக் கொள்கிறேன்”

என்று ஆவல் மீதூர உள்பக்கம் எட்டிப் பார்க்க. பெருமாயி அம்மாள்  பொங்கிய சிரிப்பை மறைத்துக் கொண்டு 

“இல்லை நீலா! அவர் உடனே திரும்பிப் போய்விட்டார்”

“என்னது? நான் இங்கேதானே இருந்தேன். ஏன் குறி சொல்லாமல் போனாராம்? “

நீலனுக்கு கலக்கமாக இருந்தது.  ஒருவேளை கண்காணிக்கப் படுகிறோம் என்று தெரிந்தே தப்பித்து விட்டானா வந்தவன்.? அவன் குறிசொல்லிதானா? இல்லை கருப்பனா? குழப்பமாக பெருமாயி அம்மாளை நோக்கினான்.

“அவரு  பெரிய ஞானிதான் போ! வாசற்படியேறி திண்ணையில் அமர்ந்து கண்களை மூடிக் கொண்டார்”




“ஒன்றுமே பேசவில்லையா “

” சிறிதும் பொறுமையேயின்றி அவசரப்படுகிறாயே!. நடந்ததைக் கேள். கண்ணை மூடிக் கொண்டாரா..?நான் குடிப்பதற்காக இதோ இப்போது உனக்காக கொணர்ந்தாற் போல் செம்பிலே தண்ணீரை எடுத்து வந்தேன். 

கண்ணை மூடி தியானிக்கிறாரே என்று மௌனமாய் நின்றிருந்தேன்.  “

“ம் அப்புறம் என்ன நடந்தது. ஆச்சி”

“அடடா? ஏனிப்படி பால்மடி கண்ட கன்று போலத் துள்ளுகிறாய்.ஒரு குழந்தையுமாயிற்று.  பொறுமை வேண்டும் நீலா. சொல்லிக் கொண்டு தானே இருக்கிறேன். எங்கே நிறுத்தினேன்.?ஹாங்… நான் பேசாமல் நின்றிருந்தேனா கண்ணைத் திறந்தார். அம்மாடீ! நான் பயந்தே போய் விட்டேன். கொவ்வைக்ககனி போல ரத்தச்சிவப்பு.  கோபமாய் எழுந்தார். 

என்னாயிற்று? என்றேன். 

இது தீட்டு கழியாத வீடல்லவா?  என்றார். 

அட! ஆமாம் இவருக்கு எப்படித் தெரிந்தது என்று  யோசித்தபடியே “ஆமாம். என் மருமகளுக்கு ஆண்குழந்தை பிறந்திருக்கிறது. சாஸ்திரத்திற்கு செய்தோமேயன்றி முறைப்படி தீட்டு கழிக்கவில்லை”என்றேன். உடனே அவர் “மன்னியுங்கள் அம்மா இம்மாதிரி இடங்களில் நாங்கள் குறி சொல்வதில்லை அமரக்கூட மாட்டோம்.  எங்களின் தெய்வத்தின் ஆக்கினைக்கு ஆளாகி விடுவோம் “என்று கூறி விட்டு விடுவிடு என்று நடந்து போயே விட்டார். கருப்பையா விஷயம் குறித்து கேட்டறிந்து கொள்ள நினைத்திருந்தேன். ஜோதிடரும் மூன்று மாதம் கழித்து வாருங்கள் என்று கூறிவிட்டார். என்னவோ போ! ஆமாம் நீயேன் இரண்டொரு நாளாய் இங்கேயே சுற்றியபடி இருக்கிறாய்? என்ன அலுவல்? “

என்று விசாரணையைத் துவங்கினார் பெருமாயி சாவகாசமாய்.

நீலனுக்கு பொறுமையில்லை இதை உடனே இன்னொருவனுக்கு சொல்ல வேண்டும் அவன்தான் இவனுக்கு  இந்த வேலையையும் ஒரு வெள்ளிப்பணமும் தந்தவன். 

ஆகவே 

“அப்புறமா வரேன் ஆச்சி! அய்யன் ஒரு வேலை சொன்னார்.  இப்போதுதான் ஞாபகம் வந்தது. பிறகு வரேன் “

என்றபடி நடையைக் கட்டினான். 

அவன் போகும் வரை அங்கேயே நின்றவர் மறக்காது இடைக்கழிக் கதவை சாற்றி விட்டு உள்ளே வர மகனைக் காணாது நிற்க மருமகள் படுத்திருந்த அறையில் சப்தம் கேட்கவே மகனுக்கு உணவு சமைக்க அடுக்களைக்குள் நுழைந்தார்.

செந்தாழை உறங்கிக் கொண்டிருந்தாள். பிரசவித்த உடல் கொடி போல் துவண்டு கிடந்தது. அழகு கூடிவிட்டிருந்தது. அருகிலேயே அவனுடைய உயிரின் துளி கைகால் முளைத்த தாமரையாய் படுத்திருந்தது. அதனுடைய பிஞ்சுப்பாதங்களில் முத்தமிட்டான். இவன் மீசை செய்த குறுகுறுப்பிலோ என்னவோ சிணுங்கி நெளிந்தான் குழந்தை. அவனை  தட்டிக் கொடுத்து விட்டு மனையாளின் நுதலில் இதழ் முத்திரை பதிக்க அவளோ பதறி எழுந்தாள். 

அவளின் தோள் பற்றி “தாழை!  தாழை! நான்தான் “

அவள் நன்றாக உறக்கம் கலைந்து பார்த்தாள். 

“மச்சான்! வந்து விட்டீர்களா “

“படுத்துக் கொள்! படுத்துக் கொள்! ஓய்வெடு.”

“இருக்கட்டும்! பார்த்தீர்களா உங்கள் மகனை அத்தை சொல்கிறார்கள். அப்படியே நீங்கள் தானாம்.”

“தாழை! “என்று அவளை லேசாய் அணைத்து உச்சியில் தன் நாடியை வைத்தவன் “மிகவும் படுத்தி விட்டானோ நம்முடைய செல்வன்”

“இது பெண்களுக்கானது தானே மச்சான். “

“ஆனாலும் அந்த நேரம் நான் உன்னோடிருக்க வேண்டும் என்று நீ விரும்பினாய் அல்லவா…அதைக்கூட என்னால் நிறைவேற்ற முடியாமல் போய் விட்டதே “

“உங்கள் நிலை எனக்குத் தெரியாதா? இதற்கெல்லாமா வருத்தப் படுவது.? இதோ சந்தர்ப்பம் அமைந்ததுமே ஓடோடி வந்து விட்டீர்களே …சரி! நீங்கள் சாப்பிட்டீர்களா? “

“உண்ண வேண்டும் நீ உணவருந்தினாயா? “

“ஆயிற்று மச்சான். அத்தை நேராநேரத்துக்கு கட்டாயப் படுத்தியேனும் உண்ணச் செய்து விடுவார்கள். . இப்போது உங்கள் நிலைமை என்ன? எங்கேயிருக்கிறீர்கள்.? “

அவன் பதிலைக் கூறுமுன்னே 

“கருப்பைய்யா! உணவு உண்டு விட்டு பேசிக் கொண்டிருப்பா. நீ சொன்னது போல் நீலன் தான் விசாரித்து விட்டுப் போனான். “

“அம்மா! எத்தனை சமயோசிதமாய் சமாளித்து விட்டீர்கள்”

என்றவன் விவரம் புரியாமல் விழித்த மனைவி செந்தாழைக்கு நடந்ததை சொன்னான். 

அவள் முகம் சற்றே மலர்ந்தாலும் சிந்தனையில் ஆழ்ந்தது.

‘அப்போது கணவனின் நிலைமை எல்லோராலும் தேடப்படும் விதமாகத்தான் உள்ளதா? ஆங்கிலேயரிடம் அகப்பட்டுக் கொண்டால் என்னாகுமோ என்று நிலைகுலைந்தாள். ஆயினும் உணர்வுகளை மறைத்துக் கொண்டு கணவனை வருத்திவிடக் கூடாதெனும்  எச்சரிக்கையோடு புன்னகையை பூசிக் கொண்டாள். உள்ளூர மனம் அச்சத்தில் மூழ்கித் தவித்தது.

தாயார் பறிமாற உணவருந்தி முடித்தவன் புறப்பட முனைந்தான். தந்தையை காண முடியாது என்று விவரம் கூறிவிடச் சொன்னான். அவன் புறப்படும் சமயம் நிலமங்கை கையில் சிறிய பாத்திரத்துடன் புழக்கடை வழியே உள்ளே வந்தாள்.

“செந்தா…செந்தா! உனக்காக மிளகு அரைத்துவிட்டு  மலைப்பூடு போட்ட குழம்பை கொண்டு வந்துள்ளேன். சாப்பிடு “

வந்தவள் பின் வாங்கினாள். யாரோ அந்நிய ஆடவன் அமர்ந்திருப்பதைக் கண்டு.

“வாம்மா நிலமங்கை “என்ற குரலில் நிமிர்ந்து கூர்ந்து பார்த்தவள் 

“அண்ணா நீங்களா “

குரல் கம்மி தழுதழுத்தது. கோவைக்கோட்டைப் புரட்சி பிசுபிசுத்து போனதில் நடந்தவை ஓரளவு பரவலாக தெரிய வந்திருந்தது. ஓடாநிலைக்கோட்டையை சிதைத்ததும் தீரனையும் கருப்பசேர்வையையும் ஆங்கிலஅரசு தீவிரமாகவும் ரகசியமாகவும் தேடி வருவதாகவும் அரசல் புரசலாகச் செய்திகள் கசிந்த வண்ணமேயிருந்தன.

இல்லை தீரனும் மற்றவர்களும் கொரில்லாப் போர்முறையில் இன்னமும் ஆங்கிலேயரை எதிர்க்கின்றனர் என்றும் சிலர் கூறினர். ஆகமொத்தம்

சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் திரிசங்கு நிலையில் தவித்தபடியிருக்க இப்போது மாறுவேடத்தில் கருப்ப சேர்வையை வீட்டில் கண்டதுமே இதயம் வாய்வழியே குதித்துவிடும் போலிருந்தது நிலமங்கைக்கு. குபுக் கென்று கண்ணீர் பொங்கி கன்னத்தில் இறங்கியது.

“நிலமங்கை! தீரன் நலமாக இருக்கிறான்.அவனோடு நான் வேலப்பன் முத்துச்சேர்வை மயூரன் என்று எங்கள் கூட்டமே இருக்கிறது. நீயெல்லாம் வீரப் பெண்மணியல்லவா. உங்கள் மனத்திடம்தானேயம்மா எங்களை ஊக்குவிக்கும் மந்திரக் கோல். நீங்களெல்லாம் கண்ணீர் சிந்தினால் எங்களால் செயலாற்ற முடியுமா? உங்களால் தான் நாங்கள்  துணிவோடிருக்கிறோம்..அதிலும் தீரன் சின்னமலையின் சரிபாதி நீ.  நீ கண்ணீர் விடலாகுமா “என்றெல்லாம் ஆறுதல் சொன்னவன்  எல்லோரும் பழனிமலை அடிவாரத்தில் முகாமிட்டு தங்கியிருப்பதாகக் கூறிவிட்டு கையெழுத்து மறையும் வேளை  அனைவரிடமும் விடைபெற்று புழக்கடை வழியாகவே வெளியேறி விட்டான்.

நிலமங்கை அவன் வந்து சென்ற நான்காம்நாள் காணாமல் போனாள்.

(தீரன் வருவான்)

தீரா…நிலத்தீரா..!




What’s your Reaction?
+1
4
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!