Serial Stories

ஊரெங்கும் பூ வாசனை-2

(2)

மஞ்சளழகி மீன் ஆய்ந்துக் கொண்டிருந்தாள். கோலா மீன். தேங்காய் அரைத்து ஊற்றிக் குழம்பு வைத்தால்….

ஊரே மணக்கும். அந்த மணம் இன்னும் சற்று நேரத்தில் அந்த குடிசைப் பகுதி முழுவதும் தூக்கியடிக்கும்.

மீனை அரிந்து அவள் தூக்கியெறியும் தலையையும், வாலையும் பறித்துக் கொள்ள பூனையும், கோழியும் நாயும் போட்டிப் போட்டுக் கொண்டிருந்தன.

இதில் பேட்டை ரவுடியைப் போல் உட்கார்ந்திருந்த நாய் பூனையையும் கோழியையும் அருகே வரவிடாமல் செய்தது.

அதன் அலட்சியமான ஒரு பார்வையிலேயும், இருமுவதைப் போன்ற லோசான குரைப்பிற்குமே பயந்த பூனையும், கோழிகளும் பதுங்கி பதுங்கி நெருங்கிப் பார்த்தன.

“என்ன…மஞ்சளு…மீன் குழம்பா?”குரல் கேட்டவள் திடுக்கிட்டாள்.

‘எவன் அவன்? மீனை கழுவறதுக்குள்ளயே மீன் குழம்பான்னு கேட்கறவன். ஒரு மீனு வாங்கிட முடியாது. எப்படித்தான் இவனுங்களுக்கு மூக்குல வேர்க்குதோ? “

சுற்றும் முற்றும் தலையை திருப்பிப் பார்த்தாள்.

மாலை வெளிச்சம் இருளைத் தெளித்து நட்சத்திர கோலங்களைப் போட முயற்சி செய்துக் கொண்டிருந்த மங்கிய பொழுதானதால் சரியாகத் தெரியவில்லை.

“எவன்னு பார்ப்போம். வேர்த்த மூக்கை மீனை அரியறமாதிரி அருவா மனையில வச்சி அரிஞ்சுப் புடறேன்” என முணுமுணுத்தவளாய் மறபடியும் மீன் சட்டியில் கையை விட்டவள் அதிர்ந்தாள்.

கடைசியாக இருந்த ஒரு மீனை காணவில்லை. ஆத்திரமாக நிமிர்ந்தவள் தூரத்தே அவளுடைய செல்ல பிராணியான நாய் தரையில் போட்டு காலால் மிதித்தபடி மீனைத்தின்றுக் கொண்டிருந்தது.

“அட…தட்டுக் கெட்ட நாயே…உன்னை” என ஆத்திரமாக அருகே கிடந்த கல்லொன்றை எடுத்து அதன் மேல் எரிய பாவம் திருடாத பூனையும், கோழியும்தான் அலறியடித்து ஓடியதே தவிர…நாய் இதெல்லாம் எனக்கு சகஜமப்பா..’ என்ற ரீதியில் தோள்களைக் குலுக்கிக் கொண்டு ருசிப்பார்த்துக் கொண்டிருந்தது.

“என்னா மஞ்சளு…தடபுடலான விருந்து போலிருக்கு”

குரல் கேட்டு மறுபடியும் சட்டென்று தலை திருப்பிய போது வரப்பு வழியாக மண் மேட்டின் மீது ஏறி வேலிப்படலை திறந்துக் கொண்டு சுப்பையா வந்துக் கொண்டிருந்தான்.

அவனைக் கண்டதுமே சட்டென எழுந்து நின்று சுருட்டி மடக்கி தொடை தெரிய சொருகியிருந்த பாவாடையை அவிழ்த்து விட்டு சேலையையும் சரி செய்துக் கொண்டாள் மஞ்சளழகி.

“அட…மருவாதியெல்லாம் பலமாயிருக்கு” என்றபடியே சிரித்தபடி சுப்பைய்யா உள்ளே வந்தான்.

“மருவாதியெல்லாம் ஒண்ணுமில்ல. எசகு பிசகா ஒக்காந்திருந்தேனா? அதான்…” என நெளிந்தாள் மஞ்சளழகி.

“அப்ப நீ எனக்கெல்லாம் மருவாதி கொடுக்க மாட்டே. அப்படித்தானே?”

“அதெப்படி? உங்களுக்கு மருவாதி கொடுக்காம? வயித்துக்கு கஞ்சி ஊத்தற எசமான்.”

“என்ன நீ என்னை உன் வூட்டு சமையக்காரனா ஆக்கிப்புட்டே? இதான் நீ எனக்கு குடுக்கற மருவாதியா?”

“ஐய்யோ…நான் எங்ககங்க அப்படி சொன்னேன்?”

“பின்னே…இப்ப சொன்னியே கஞ்சி ஊத்தறவன்னு. தெனம் உன் வூட்டுக்கு வந்து சட்டிப்பானையெல்லாம் கழுவி அடுப்ப மூட்டி அரிசியைக் கொட்டி கஞ்சி காச்சி உனக்கு தட்டுல ஊத்தி கையில கொடுக்கற மாதிரியில்ல சொல்றே? ஊருக்குள்ள அப்படி சொல்லிக்கிட்டுத் திரியாத. அப்பறம் எல்லா பயலுவலும் மஞ்சளு வூட்டு சமையக்காரனாடா நீன்னு கேலி பேசுவானுக.”




“ அக்கன்னா அரியன்னா உனக்கு வந்த கேடு என்னாங்கற மாதிரியில்ல இருக்கு நீங்க சொல்றது? ஊருக்கே நாட்டாம்மையாம். ஓக்காந்திருக்கறது ஒடைஞ்ச திண்ணையாம்” என கலகலவென சிரித்தாள் மஞ்சளழகி.

“உன் பழமொழியெல்லாம் எனக்கு ஒண்ணும் பரியலை.”

“படிச்சவனுக்கு பஞ்சாங்க ஏடு புரியாதாம். குடிச்சவனுக்கு கூத்தியா வீடு தெரியாதாம்” என்று அவள் சிரித்தாள்.

“அடிப்பாவி…நான் தேடிவந்தது உன் வீடு. நீ இப்படியெல்லாம் பழமொழி சொன்னா எவனாவது கேட்டா என்னைப் பத்தி என்ன நினைப்பான்?”

“அது சரி…என் வூடு தேடி இப்ப எதுக்கு வந்தீங்க?” என்றவாறே கீழே இருந்த மீன்சட்டியை எடுக்கப் போனவள் நிமிடத்தில் சட்டியிலிருந்த மீனை கொத்திப் போக இருந்த கோழியைத் திட்டித் துரத்தினாள்.

“ச்சை…கொஞ்சம் அசந்தா…திருட்டு சனியன்கள் எல்லாத்தையும் கொத்திக்கிட்டுப் போயிடும்”

“கண்ணுக்கு அழகாயிருந்தா கொத்திக்கிட்டுப் போகனும்னுதான் தோணும்” என அவளுடைய முக அழகை கண்களால் பருகினான்.

“ஆமா…அறுத்து கழுவி தேய்ச்சு வச்ச மீனை அதோட அழகுக்குத்தான் தூக்கிட்டுப் போகுதா நாயும் பூனையும்…இவரு ஒருத்தரு

ஆமா…நீங்க எதுக்கு இங்க வந்தீங்க?” என்றாள் ஏதோ புரிந்தும் புரியாததைப் போல.

“நீ ஏன் இன்னைக்கு நாத்து நட வரலைன்னு கேட்டுக்கிட்டு போவத்தான் வந்தேன். வரலைன்னதும் உடம்புக்கு என்னவோ ஏதோன்னு நினைச்சுட்டேன்.”

“ஆனைய அடிச்சுத் தின்னாலும், முதலையை முழுங்கி வச்சாலும்  செரிக்கிற உடம்பு இது. இந்த கட்டைக்கு ஒண்ணும் வந்துடாது. சொரம் சளி காய்ச்சலெல்லாம் உங்களை மாதிரி ஆளுகளுக்குத்தான் வரும்.”

“அதுசரி!. அதான்…வீரய்யன் ஏரியல எல்லாரும் தகிரியமா குளிக்கிறாங்களா? கரும்புக் காட்டுக் குள்ள தகிரியமா கரும்பு வெட்ட போறாங்களா? எல்லாம் உன் தயவுதானா?”

“வீரய்யன் ஏரிக்கும், கரும்புக்காட்டுக்கும் எனக்கும் என்னய்யா சம்பந்தம்?”

“கரும்புக் காட்டுக்கு வந்துக்கிட்டிருந்த ஆனையையும், வீரய்யன் ஏரியில கிடந்த முதலையையும் இப்ப காணும்னு சொல்லிக்கிறாங்களே அதான் கேட்டேன்.”

“அதுசரி.”

“வேலைக்கு வரலைன்னா சொல்லியனுப்ப மாட்டியா?”

“ஆமா…பெரிய டீச்சரம்மா உத்யோகம். வரலைன்னா இவருக்கு லீவு லட்டரு அனுப்பனுமாக்கும்”

“நாத்து நடறதும் டீச்சரம்மா உத்யோகம்தான் புள்ள.”

“அதெப்படி?”

“பச்சப் புள்ளையை பள்ளிக் கொடத்துல விடறது கூட வயல்ல நாத்து நடறது மாதிரிதாம் புள்ள. டீச்சரம்மா புள்ளைகளை கண்ணும் கருத்துமா கவனிக்கிற மாதிரிதானே புள்ளே நீயும் கவனிப்பே. புள்ளைகளுக்கு சத்துணவு கொடுக்கறமாதிரி தண்ணீ விடறே. கெட்ட பழக்கம் நெருங்காத  மாதிரி களையெடுக்கறே. நாத்து நடும்போது நீ பாடற பாட்டுத்தான் அதுகளுக்கு நீ கத்துக் கொடுக்கற பாடம்.”

இதைக் கேட்டு மஞ்சளழகி கொஞ்சும் சலங்கையாய் குலுங்கினாள். இருண்டு வந்த திசைகளின் மஞ்சளழகு உருண்டு திரண்டிருந்த மஞ்சளழகியை பெயர்காரணம் உடையவளாக மாற்றிக் கொண்டிருக்க அந்த அழகில் கரண்ட் ஷாக் அடித்தவனாக மாறிக் கொண்டிருந்தான் சுப்பைய்யா.




“ஆனையை அடிச்சு தின்னாலும், முதலையை புடிச்சு முழுங்கினாலும் செரிச்சுடும்…..உடம்புக்கு ஒண்ணும் வராதுன்னு சொல்றவளுக்கு அப்பறம் என்ன வந்துச்சு வேலைக்கு வராமயிருக்க? திடீர்னு கூரையை பிச்சுக்கிட்டு கொட்டிடுச்சா? கூலி காசெல்லாம் ஒரு காசான்னு நினைக்க?”

“ஆமாம் சாமி. கூரையைப் பிச்சுக்கிட்டுத்தான் கொட்டுச்சு. அள்ளி வைக்கத்தான் எதுவுமில்ல. உங்க வீட்லதான் பத்து பதினைஞ்சு பத்தாயம் இருக்குல்ல ஒன்னை இங்க கொண்டாந்து எறக்குங்க. நாங்க கொட்டி வச்சுக்கறோம்”

முகத்தில் கோபத்தைக் காட்டி சீறினாள் மஞ்சளழகி.

“உனக்கு மஞ்சளழகின்னு பேரு வச்சதுக்கு பதிலு குங்கும அழகின்னு பேரு வச்சிருக்கலாம். பாரு…மொகமெல்லாம் எப்படி செவந்துப்புட்டு. இப்ப என்னா நான் சொல்லிப்புட்டேன்னு நீ இப்படி கோவப் படறே? ஏன் வய வேலைக்கு வரலைன்னு கேட்டேன் அது தப்பா?”

“கேட்டது ஒண்ணும் தப்பு இல்லை. கெக்கரே பிக்கரேன்னு கேக்கறதுதான் தப்பு. நாங்க ஏழைங்க…கூரையைப் பிச்சுக்கிட்டு கொட்டினதையெல்லாம் ஞாபகப்படுத்திப்புட்டிங்க. போனவாட்டி கூரையைப் பிச்சிக்கிட்டு கொட்டினப்ப…பேச்சியம்மன் கோவில்ல போயிதானே ஊதக்காத்திலேயும், சாரல்லேயும் படுத்துக் கிடந்தோம். நல்ல வேளை ஞாபகப்படுத்திட்டிங்க. அப்பன் வந்தா பனைமட்டையை  போட்டு கூரையை சரிப்பண்ண சொல்லனும். இப்ப பேச்சாயி கோவிலுக்குக் கூடப் போவ முடியாது. அவளுக்கே எடமில்லாம இடிஞ்சு உடைஞ்சு போயி கெடக்கா.”

“இந்தா…ஏன் வரலைன்னு கேட்டா சும்மா உன் பிலாக்கணத்தைப் பாடிக்கிட்டிருக்கே?”

“ஆமா…ஆமா…சாமிக்கு என்ன பொங்க வச்சா போதும். பூசாரி வலியைப் பத்தி அதுக்கென்ன வந்துச்சு?”

“சரி…நான் கௌம்பறேன். சும்மா பழமொழி சொல்லிக்கிட்டு…” அவன் சற்றே கோபம் காட்டி நகர,,,

“இருய்யா…லீவுப் போட்ட காரணத்தை தெரிஞ்சுக்கிட்டுப் போவத்தானே வந்தே? தெரிஞ்சுக்கிட்டே. போ அப்பறம் நாளை பின்னே வேற ஆளைப் போட்டு நடவு நட்டுக்காதே. என்னை இன்னிக்கு பொண்ணு பார்க்க வர்றாக. அதேன்….நான் வயலுக்கு வரலை.”

சற்றே வெட்கமாக சொன்ன மஞ்சளழகியின் முகம் இப்பொழுது சிவப்பழகி என சொல்லும்படி நிறம் மாறியது.

சுப்பையயவின் முகமும் மாறியது. ஆனால் அவனுடைய முகம் கருமை நிறமானது.




What’s your Reaction?
+1
16
+1
10
+1
1
+1
2
+1
0
+1
3
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!