Serial Stories தீரா…நிலதீரா…!

தீரா…நிலதீரா…! -5

5.திருமணக் கோலம் .

***************************

ஓடாநிலைக்கோட்டை…

சிறியதெனினும் சிறப்பாகவே யிருக்கும்படி வடிவமைத்திருந்தான் தீரன். சொகுசான கோட்டையாக    இல்லாமல் சமர்க்களத்தை எதிர்கொள்ள இன்றியமையா கோட்டையாக்கியிருந்தான்.

வட்டவடிவமான அகலமான அகழி கோட்டைப் புறச் சுவர்களையொட்டியிருந்தது.  அதனுள் பசியோடான முதலைகள் வாயைத்திறந்தபடி நீந்துவது  அதிபயங்கரமாக இருந்தது. 

கோட்டையின் பிரதான கிழக்கு வாசலில் பிரம்மாண்டமான கதவு. அதன்பின்னாலிருந்த திண்ணை மாதிரியான அமைப்பில் வாசல் கதவையொட்டியே மூடிக் கொள்ளும் பெரிய மரக்கதவு சங்கிலியுடன் இணைக்கப்பட்டு அவை திண்ணையிலிருந்த பொறியுடன் சேர்ந்திருந்தது. அதை இயக்கவும் கைப்பிடிகள் நீட்டிக் கொண்டிருந்தன.

அந்தப் பொறிகள் இயக்கப்படும்போது அந்தப் பெரிய மரக்கதவம் அகழி மீது பாதையாய் பாம்பணைப் போல  படுத்துக் கொள்ளும்.யானைகளைத் தாங்கும் அளவு  கனமுடைய அது அடியில் கனமான இரும்பத்தகட்டைக் கொண்டது.கோட்டைக்கதவு அடைக்கப் படும் வேளை பொறிகள் இயங்கும் அதே நேரம் அந்தக் கதவு  உறக்கம் விழித்து சோம்பல் முறிப்பது போல மேலெழும்பி கதவோடு தன்னை  இணைத்துக் கொள்ளும்.

கோட்டைவாயிலைத் தாண்டியதுமே பணியாளர் குடியிருப்பு பெருஞ்சதுரமாய் நேர்த்தியாய்.

அதற்கடுத்த சதுரத்தில் வீரர்கள் குடியிருப்பு

அதன் மற்றொரு சதுரத்தில் பயிற்சி பெறுவோர் தங்குமிடம்

அடுத்த சதுரத்தில் மருத்துவர் வீதி.இங்கே மருத்துவசாலை 

மருத்துவ உதவியாளர்கள் மருத்துவர்களின் குடும்பம் மருந்து தயாரிக்குமிடமென அமைந்திருந்தது.

அடுத்தசதுர அடுக்கு வணிகர்வீதியாகவும் இருப்பிடமாகவுமிருந்தது.

இதன் பிறகான சதுரவடிவு  முக்கிய ப் பிரதானீகள் அரசு அதிகாரிகள் படைத் தளபதிகள்   தங்குமிடமாக இருந்தது.

இதையடுத்தே அரண்மனை போன்ற மாளிகைகள் .தீரன் தங்குமிடத்தில் முன்பாக 

நான்கு தூண்களுடன் சற்றே பெரிய மண்டபம். அரசவையொத்த நீள் கூடம் அழகிய ஆசனங்களுடன்.

அடுத்து சில அறைகள் மீண்டும் ஒரு மண்டபம். அதன்கீழே சுரங்கப்பாதை. அதில் பொக்கிஷ அறை

அடுத்து சயனஅறை உணவருந்துமிடம் உணவுதயாரிக்க …மெய்க்காப்பாளர்கள் தங்குமிடங்கள் என நீண்டது. பாதாளச்சிறைகள் நிலவறைகள்  இவற்றோடு 

இடப்புறம் பின்னால்  யானைக் கொட்டடி குதிரை லாயம் என்றிருக்க அதை மேற்பார்வையிடுவோரும் பழக்குபவர்களுமாக. அனைவருக்கும் இடம் ஒதுக்கப்பட்டு குடும்ப அங்கத்தினர் புழங்க தனித்தனி வாயில்களுமிருந்தன.

வாட்பயிற்சி விற்பயிற்சி என்று வீரக்கலைகளை பயிற்சி எடுக்கவும் தனித் திடல் இருந்தது. 

பொதுவான பொக்கிஷசாலை நாணயசாலை படைக்கலங்கள் சேமிக்கும்கலம்  சிறைச்சாலைகள் பொழுது போக்குக்கான கலையரங்குகளென தனித் தனியேயிருந்தது. 

இதையடுத்து விருந்தினர் மாளிகை தீரனின் உயிர் நண்பனும் நாட்டின் தளபதியுமான கருப்ப சேர்வையின் மாளிகை 

சுபேதார் வேலப்பனின் மாளிகையென முக்கியஸ்தர்களுக்காக வசதியாகக் கட்டித் தரப்பட்டிருந்தது.

மேலப்பாளையத்து வில்வநாதரும் கூட உடனுறை பச்சைநாயகி நாமந்தாங்கிய தேவியோடு அருள் பாலித்தார். ஆங்காங்கே சிறு தெய்வ வழிபாட்டு கோயில்களும் மசூதிகளும் கூட இருந்தன.

தீரனின் மாளிகையின் மேல்மாடிக்கு சுழற் படிக்கட்டுகள் இருந்தன அதன் உச்சிவரை உயரமாக அது தூண் போல் எழும்பி நின்றது. அதில் ஏறிப்பார்த்தால் ஓடாநிலையைச் சுற்றிலும் பலகாததூரம் தெளிவாகத் தெரியும். அதிலேயே தூரதிருஷ்டி கண்ணாடி ஒன்றையும் பொறுத்தியிருந்தான்.




நான்கு கோட்டை வாசலுக்கு பலத்த காவலும் கோட்டைச்சுவர்களில் இயந்திரப் பொறிகளும் அமைக்கப் பட்டிருந்தன.ஒரே சுழற்றில் ஐம்பது விற்கள்  பாயும் சூட்சுமம் பொருந்திய பொறிகள். கூடவே பீரங்கிகளும் தளவாடப் பொருட்களும் எண்ணைய்க் கொப்பரைகளுமாக யுத்த சன்னதத்துடன் இருந்தது ஓடாநிலைக் கோட்டை. பாரா உஷார் என்ற கூச்சலும் பணி மாற்றம் செய்து கொள்ளும் வீரர்களின் பேச்சும் கேட்ட வண்ணமேயிருந்தன.கோட்டைச்சுவரும் முக்கால் பனைமர உயரத்திலிருந்தது.

ஒவ்வொரு சதுர அடுக்கின் நான்கு மூலைகளிலும் கண்காணிப்பு கோபுரங்கள் காவலுடன் அமைக்கப் பட்டு நிர்வகிக்கப்பட்டு வந்தன.

அந்த ஓடாநிலைக் கோட்டை இன்று திருவிழாக் கோலம் கொண்டு தன் தலைவனின் தோழன் கருப்பசேர்வையின் மணவிழாக் கோலத்தைக் காணத் தயாராகிக் கொண்டிருந்தது. 

கருப்பசேர்வை திருமணம் முடித்து தன் மனையாளுடன் கோட்டைக்கு வருகிறான்.அத்துடன் நிலமங்கையும் உடன் வருகிறாள்.

தீரன் தன் மனங்கவர்ந்த பெண் மயிலுக்காக ஆவலுடன் காத்திருந்தான். 

சேர்வையின் தாயாருக்கு பூர்வீகம் மதுரைப்பக்கம். நன்காட்டூர் என்னும் சொந்த கிராமத்தில்  உள்ள பதினெட்டுப்படி கருப்பசாமியே குலதெய்வம். அவர்கள் வழக்கப்படி ஆண்மக்களுக்கு கல்யாணம் கருப்பசாமி கோயிலில் தான் நடத்த வேண்டும் என்பது முறையானதால் மேலப்பாளையத்திலிருந்து பெண்வீடும் மணமகன் வீடும் உற்றார் உறவினரும் திரண்டு நன்காட்டூர் நோக்கி பத்துநாள் முன்பே பயணிக்க ஆரம்பித்து விட்டனர். திருமணச் சடங்கிற்கான அத்தியாவசியப் பொருட்களோடு போய்ச் சேர்ந்தனர். தீரன் மற்றைய நண்பர்களும் வந்தாயிற்று. 

மணமகள் செந்தாழை நிலமங்கை வீட்டினருகிலிருப்பவள்.இருவருமே ஒத்த வயதினர் ஒத்த பருவத்தினர். இருவரின் மனங்கவர்ந்தவர்களுமே நண்பர்கள்.போதாதா காரணங்கள் பெண்களிருவரும் நட்பில் மூழ்கி முத்தெடுக்க.

தீரனின் குடும்பமே நன்காட்டூர் புறப்பட அவர்களுடன் இவளுமே புறப்பட்டு விட்டாள் மணமகளின் உற்ற தோழியாக 

மனது முழுக்க மனங்கவர்தவன் வீர வதனமே நிறைந்திருக்க கனவோடு உறவாடிய வண்ணம் ரெட்டை காளைமாட்டு வண்டியில் பயணமானாள். 

செந்தாழை கருப்பசேர்வையை நினைத்து கதுப்புகளை சிவக்க விட நிலமங்கையோ தீரனை நினைத்து செக்கர் வானமானாள்.

நன்காட்டூர் கருப்பசாமிக் கோயிலில் பூசாரி மாலையெடுத்துத் தர தன்னவளை நிமிர்ந்து பார்த்தான் கருப்ப சேர்வை

கொண்டைத்திருகு* வைத்து சந்திர சூரிய பிரபையுடன்* குச்சம் வைத்து தாழம்பூவால் ஜடை தைத்து பிறைநுதலை உறவாடும் வண்ணம் சுட்டியை* வைத்து சொருகுப்பூ*வைத்துதலைப்பட்டம்*கட்டி

செவிப்பூவில்** லோலாக்கு ஆட விசிறிமுருகு** வில் சின்னப்பூ** கோர்த்து 

கண்டசரமும்*** காரைப்பூ அட்டியலும்***  மாங்காய் மாலையோடு*** காசுமாலையும்*** தோளில் வங்கியும் கைகளில் முத்துவளை பவளவளை சங்கு வளை என்று அடுக்கியிருக்க நீள் பஞ்சு விரல்களில் மோதிரங்களும்

மாம்பிஞ்சு கொலுசும்**** தண்டையும்**** சிலம்புமாக**** மேகம் போலத் தவழ்ந்து வந்தவளைக் கண்டான்.

#குண்டலமும் #கன்னசரமும் #கடகமும் #கணையாழியும் #கங்கணமும் #வீரக்கழலும் #தண்டையும் அணிந்து ஆண்களிறு போல நிமிர்ந்து நின்றவனை கண்டதும் செந்தாழையின் சிரம் நிலத்திலேயே புதைந்து கொண்டு விட்டது. 

பூசாரி பூஜை செய்து மங்கல வாழ்த்துப்பாடி தாலிக்கட்டு என்னும் நிகழ்ச்சியை நடத்த மங்கலநாணைத் தர கருப்பன் செந்தாழை கழுத்திலே முடிச்சிட்டு தன் சரிபாதியாகக் கொண்டான்.மங்கல வாத்தியங்கள் ஓங்கி முழங்க முனைமுறியா மஞ்சள் கலந்த அரிசியுடன் நறுமணப் பூவிதழ்களுமாய் அட்சதைகள் வாழ்த்தொலி முழங்க போடப்பட்டன. 

அடுத்தடுத்த சடங்குகள்  செய்யப்பட்டு மணமகளும் மணமகனும் ஓய்ந்தே போயினர்.




அடுத்து இருவரும் மணமகன் பூர்வீக வீட்டில் பூஜையறையில் விளக்கேற்றி வைத்து வணங்க விருந்து போஜனம் துவங்கியது.

மணமக்களையும் முக்கிய உறவுகளையும் அங்கேயே விட்டுவிட்டு தீரனும் சிலரும் ஓடாநிலைக்கு வந்து நண்பனை வரவேற்கும் வேலையைத் துவங்கினர்.

 வண்டி மாடுகள் ஜல்ஜல்லென்று தாளலயம் தப்பாது மணமக்களை ஏற்றி வருகிறோம் நாங்கள் என்ற பெருமையோடு பீடுநடைபோட்டு வந்தன. 

அமர்ந்திருந்த இளநெஞ்சங்களோ புதிய உறவின் அண்மையில் மனஆழியில் பேரலைகள் ஆடி மேலெழும்ப உணர்வின் உச்சத்தில் இருந்தன. 

பெண்ணை முதன்முதலாய் தீண்டும் தடுமாற்றம் அவனுக்கு.  ஆண்மையை அருகிருந்து முதன்முதலாய் காணும் தவிப்பு அவளுக்கு. 

பெண்ணின் மென்மையை கடந்து போன ஓரிரு இரவுகளில் துய்த்தவனுக்கு பேரின்பத்தோடு மோகமும் கிளர்ந்தது.

பெண்ணவளுக்கோ கட்டியவன் காட்டிய புத்துலகம் போதையோடு நாணத்தைத் தந்தது. 

மயக்கம் தீரா நிலை! தயக்கம் மாறா நிலை

புதுமணத் தம்பதியின் விரல்கள் பிணைந்து கொள்ள வண்டியின் குலுக்களுக்கேற்ப இரு உடல்களும் உரசிக் கொள்ள மோகத்தீ பற்றியது. 

இருக்குமிடம் உணர்ந்து அடங்கவும் செய்தது. தீயாய் தகித்தது. பனியாய்க் குளிர்ந்தது. 

இறுதியாகப் பயணம் ஓடா நிலையை அடைந்து அவர்களின் தவத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. 

அகழிப்பாதை இறக்கப்பட்டு வண்டிகள் வரிசையாக உள்ளே நுழைய மணமக்கள் இல்லத்தின் முன்னே இறங்கி நிற்க ஆரத்தி எடுக்கப்பட்டு நல்ல நிமித்தங்களுடன் மங்கல வாழ்த்தொலிகளோடும் இசைக்கருவிகள் இசைக்கவும் உள்ளே நுழைந்தனர்.

ஊரெங்கும் மாவிலை கமுகு தோரணங்கள் பூச்சரங்கள் வீதிதோறும் அழகிய கோலங்கள். என்று எங்கு பார்த்தாலும் அழகின் முத்திரைகள்!  மகிழ்ச்சியின் சாரல்கள்! உற்சாகத் தீற்றல்கள்! மங்கலக் குலவையொலிகள் 

ஊரே கொண்டாடிக் கொண்டிருந்தது. 

கருப்பசேர்வை நெகிழ்ந்து போய் நண்பனைக் கட்டிக் கொண்டான். 

தீரன் திருமணப்பரிசாக பட்டாடைகளையும் பொன்னாபரணங்களையும் வழங்கினான். 

தம்பதிகள் இல்லம் புக கூட்டம் கலைந்து விருந்துண்ணச் சென்றது.

தீரனின் விழிகள் அவன் பொம்மாயியை தேடின.பொம்மாயி ஒரு பெரிய தூணின் பின்னே நின்று கண்களால் அவனை கைது கொண்டிருந்தாள். 

கள்வனின் விழிகளும் கண்டு கொண்டன. 

ஊரே விருந்துண்டு கொண்டிருக்க இந்த இருவர் மட்டும்  நயனங்களால் விழுங்கிக் கொண்டு  ஒருவருக்கொருவர் விருந்தாகிக் கொண்டிருந்தனர்.

(தீரன் வருவான்)

*பெண்கள் தலையில் அணிகலன்கள்

**  கழுத்தில்  அணிபவை

***கரங்கள் பூணுபவை

****கால்களில் அணியும் ஆபரணங்கள்

#ஆண்கள் அணிந்து கொள்பவை

தீரா..நலத்தீரா…!




What’s your Reaction?
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!