Serial Stories

எனை ஆளும் நிரந்தரா-4

4

 சிவனாம்… நடராஜனாம்… எதையாவது ஒன்றை வைத்து தொலைவதுதானே? பள்ளியில் படிக்கும் போதே முழு நீள இந்தப் பெயர் அவளுக்கு எரிச்சலை உண்டாக்கும். நண்பர்களுக்கு அவன் எப்பொழுதும் சிவாதான்.

“வெற்றி, உன் பிரண்ட் சிவாகிட்ட கொஞ்சம் சொல்ல கூடாதா? என்னை ரொம்பவே டார்ச்சர் செய்கிறான்” அவர்கள் பள்ளியில் அந்த வருடம்தான் புதிதாக சேர்ந்திருந்த காதம்பரி இவர்கள் வீடு தேடி வந்து மொட்டை மாடியில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த அண்ணன் தங்கையிடம் வந்து நின்றாள்.

“உன்னைத்தான் அவன் கண்களிலேயே படாதே என்று சொன்னேன். அதை செய்யாமல் விட்டுவிட்டு இப்போது திரும்ப வந்து நின்றால் என்ன அர்த்தம்?” கோபமாக கேட்டான் வெற்றி.

” டேய் தெரியாமல் அவன் பின்னால் போய்விட்டேன். நீ தான் வேறு ஏதாவது ஐடியா சொல்லேன்” கெஞ்சியபடி நின்ற காதம்பரி வெற்றிவேலன், சிவ நடராஜனுடன் பன்னிரெண்டாவது படித்துக் கொண்டிருந்தாள். மானசி எட்டாவது வகுப்பில் இருந்தாள்.

 “இங்கேயெல்லாம் வராதே, அம்மாவிற்கு தெரிந்தால் தோலை உரித்து விடுவார்கள்.நீ போ நாளை நாம் ஸ்கூலில் வைத்து பேசிக்கொள்ளலாம்” வெற்றி காதம்பரியை அவசரமாக அனுப்பினான்.

“இந்த அக்காவிற்கு என்ன பிரச்சனை அண்ணா?”

“ஒன்றுமில்லைம்மா. எல்லாம் சிவாவோட வேலைதான். என்னமோ பெண்கள் பின்னால் வால் பிடித்துக் கொண்டு சுற்றுவதே அவனுக்கு  பிழைப்பாய் போயிட்டு. இதெல்லாம் உனக்கு வேண்டாம், நீ படி”

சிவ நடராஜன் பள்ளியில் கிட்டத்தட்ட பெண்களின் ஹீரோ. எந்நேரமும் அவனுடன் பேச அவன் அருகில் உட்கார அவனுடன் சேர்ந்து சாப்பிட என பெண்கள் கூட்டம் அலைமோதும். அவளுடன் படிக்கும் பிள்ளைகள் கூட சிவா அண்ணா என்று அவனுடன் பேச ஆளாக பறப்பதை அறிவாள்.

 பொண்ணுங்க பெண்கள் கூடவும் ஆண்கள் ஆண் பிள்ளைகளுடனும் தானே பிரண்ட்ஷிப் வச்சுக்கணும்? இந்த சிவா அண்ணா எதற்காக பெண்பிள்ளைகளுடனேயே சுற்றுகிறார்? மானசியின் இரண்டும் கெட்டான் பிள்ளை மனது அப்போது அப்படித்தான் நினைத்தது.

சிவ நடராஜன் அவள் மனதிற்குள் சட்டத்திற்குள் அடங்காத அலங்கோல ஓவியமாகத்தான் விழுந்திருந்தான்.

“பாட்டி அவருடைய பெயரைப் பற்றிய ஆராய்ச்சி இப்போது நமக்கு தேவையில்லை. அவர் அக்காவை நமது அண்ணனுடன் வாழ்வதற்கு அனுப்பி வைப்பாரா மாட்டாரா?”

“சிவாவிடம் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் கேட்கிறாய் நீ? உன் அப்பாவை அவனிடம் போய் பேச சொல்லு”

“அப்பா அங்கே போக மாட்டாரென உங்களுக்கே நன்றாக தெரியும்.அவருக்கு பிடிக்காத குடும்பத்து பெண்ணை திருமணம் செய்த அண்ணனை திரும்ப அவர் வீட்டிற்குள் அனுமதித்திருப்பதே பெரிய விசயம்”

“அப்போது அவன் வாழ்க்கையை உன் அண்ணனேதான் சரி செய்து கொள்ள வேண்டும்”

 “அண்ணன் பலமுறை அண்ணியிடம் பேசியும் பலன் பூஜ்ஜியம்தான். வீட்டிற்கு பெரியவர்களாக இரண்டு பக்கம் உள்ளவர்களின் உறவாக நீங்கள் மட்டும்தான் இருக்கிறீர்கள். நீங்கள் ஒரு முறை பேசிப் பாருங்களேன்”

” என்றைக்கு நான் அவர்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு இங்கே உங்களோடு இருக்க வந்து விட்டேனோ, அன்றே பெண்பிள்ளை வீட்டில் போய் தங்கியிருக்கிறேன் என்ற பழிச் சொல்லோடு என்னை என் பிறந்த வீட்டு சொந்தங்கள் ஒதுக்கிவிட்டனர். ஏதாவது விருந்து விசேஷங்களில் பார்க்கும்போது கடமைக்கு சிரிப்பதோடு சரி. எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவர்களிடம் என்னை பஞ்சாயத்துப் பேச போகச் சொல்கிறாய்?”

 “பாட்டி ப்ளீஸ் உங்கள் பேரனுடைய வாழ்க்கை. கொஞ்சம் யோசிங்கள்”

“இவ்வளவு அக்கறைப்படுகிறாயே? நீயே போய் பேசுவதுதானே? இந்த வீட்டு பெரியவர்களுக்கு வீம்பும், வைராக்யமும்.இளைய தலைமுறைகள் பொறுப்பை கையில் எடுப்பதில் தவறில்லை”

” பாட்டி நான் சிறு பெண். இதெல்லாம் நான் எப்படி பேச முடியும்?”

” 22 முடிந்து 23 வயது ஆரம்பமாக போகிறது. சென்னை வரை போய் படித்து வேலையும் பார்த்துவிட்டு வந்திருக்கிறாய். நீ சிறு பெண்ணா? எல்லாம் பேசலாம். போ போய் பேசிவிட்டு வா” பாட்டி கண்களை இறுக்க மூடிக்கொண்டார்.

 பாட்டி சொன்ன விஷயம் மானசி மண்டைக்குள் வண்டாக நுழைந்து கொண்டது. நானே முயற்சி செய்து பார்த்தால்தான் என்ன?

 மறுநாள் அதிகாலை எழுந்து குளித்து பாந்தமாக ஒரு புடவையை கட்டிக்கொண்டு வந்த மகளை ஆச்சரியமாக பார்த்தாள் சகுந்தலா. “என்னடி அதிசயம்? இவ்வளவு காலையில் குளித்து சேலையெல்லாம் கட்டிக்கொண்டு…?”

 ” கோவிலுக்கு போகப் போகிறேன்மா. நல்ல வேலை கிடைத்தால் நம் ஊர் மாரியம்மன் கோவிலுக்கு வருவதாக நேர்ந்து கொண்டிருந்தேன்”

இன்னமும் வேறு யாரும் கேள்விகள் கேட்கும் முன்பே வேகமாக ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு கோவிலுக்கு செலுத்தினாள்.

சிவகடாட்சம் சிவ நடராஜனின் அப்பா, மாரியம்மன் கோவில் அறங்காவலர். தினமும் காலையில் கோவிலுக்கு வந்து முதல் பூஜையை ஆரம்பித்து வைப்பார் என்பது அவளுக்கு தெரியும்.

“வணக்கம் அங்கிள்”




 சற்றுமுன் பொன் மின்னல் போல் தனக்கு முன்னால் கோவில் பிரகாரத்தை சுற்றிக் கொண்டிருந்த அந்தப் பெண் இப்படி முன்னாலேயே வந்து நிற்பாள் என்பதை

சிவகடாட்சம் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

கோபமாக நெற்றிக்கண்ணை திறக்கும் எண்ணம்தான் அவருக்கு. ஆனால் சொடுக்கிய மின்னலின் பொலிவும் செந்தாமரையின் மென்மையுமாக எதிரே நிற்கும் பெண்ணை கோபமாக பார்க்கவும் முடியாது விழிகளை பக்கத்து தூணுக்கு நகர்த்திக் கொண்டார்.

” யாரம்மா நீ?” அவளை காயப்படுத்தவன்றே கேட்ட கேள்விதான்.

 ஒரே ஊரில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு அதுவும் முக்கியமான இரு தொழில் போட்டி  குடும்பங்களில் ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்ளாமல் இருக்க முடியாது. ஆனாலும் சிவகடாட்சம் அந்த கேள்வியை கேட்டார்.

 ஒரு நிமிடம் வாடிய மானசியின் முகம் வரவழைத்துக் கொண்ட உற்சாகத்துடன் மீண்டும் மலர்ந்தது.

“ராசி ஆயில் மில் மணிவண்ணனின் மகள் மானசி அங்கிள். நன்றாக இருக்கிறீர்களா?”

உங்கள் மருமகன் வெற்றிவேலின் தங்கை என்றோ உங்கள் மகள் சிவஜோதியின் நாத்தனார் என்றோ அறிமுகப்படுத்திக் கொள்வது அவரது கோபத்தை தூண்டக்கூடுமென்றே மணிவண்ணனின் மகள் என்று அறிமுகமாகி கொண்டாள்.

 ஆனால் இந்த அறிமுகத்திலும் சிவ கடாட்சத்திற்கு கோபமே வந்தது.

“ரொம்ப தைரியம் பெண்ணே உனக்கு? என் விரோதியின் மகள் என்று என்னிடமே சொல்கிறாயா?” மீசையை முறிக்கிக் கொண்டார்.

“உங்களுக்கு பிடிக்காது என்பதற்காக என் அப்பா பெயரை மாற்ற முடியாது பாருங்கள் அங்கிள்” கிண்டல் போல் சொன்னாலும் நான் இந்த குடும்பத்து பெண்தான் என்ற அழுத்தம் தெரிந்தது அவள் வார்த்தைகளில்.

” நீ யாராகவும் இருந்து விட்டுப் போ. காலம் கார்த்தாலே எதற்காக என் வழியை மறித்து நிற்கிறாய். ஆயிரம் ஜோளி கிடக்கிறது எனக்கு” வெடுவெடுத்தார்.

“நானும் ஒரு வேலையாகத்தான் வந்தேன் அங்கிள். ஊருக்குள் நிறைய குடும்பப் பஞ்சாயத்துக்கள் நீங்கள் பேசுவது தெரியும். நானும் ஒரு பஞ்சாயத்துதான் கொண்டு வந்திருக்கிறேன். எனது அண்ணனின் மனைவி அவருடன் வாழ முடியாது என்று அம்மா வீட்டிற்கு போய் விட்டார்கள்.அவர்கள் வீட்டினருடன் நீங்கள்தான் சமாதானம் பேசி  கணவன் மனைவியை சேர்த்து வைக்க வேண்டும்”

எவ்வளவோ கட்டுப்படுத்த முயன்றும் சிவகடாட்சத்தின் கண்கள் சிவந்து விட்டன.”எவ்வளவு தைரியம் உனக்கு? அந்த குடும்பத்து திமிர் அப்படியே உன் உடம்பில் ஓடுகிறது. இனி ஒரு நிமிடம் என் முன்னால் நின்றாயானாலும் பிறகு நடக்கும் விளைவுகளுக்கு நான் பொறுப்பேற்க மாட்டேன். ஓடிவிடு” அவருடைய கத்தலில் ஆங்காங்கே கோவிலுக்கு வந்திருந்தவர்கள் திரும்பிப் பார்க்க மானசியின் முகம் சிறுத்துவிட்டது. தலை குனிந்த படி வெளியேறினாள்.

“இதெல்லாம் ஒரு வம்சம், இதெல்லாம் ஒரு வகையறா, என்ன குடும்பம் உன்னுடைய குடும்பம்?” தன்னிலை மறந்து பாட்டியிடம் கத்தினாள் மானசி.

 ரோஜாமணி அலட்டிக் கொள்ளாமல் டிவி பார்த்துக் கொண்டிருந்தார் “ஊருக்கெல்லாம் பஞ்சாயத்து சொல்பவன், அவன் வீட்டு பஞ்சாயத்தையே அவனிடம் கொண்டு போனால் கோபம் வருமா வராதா? மணிவண்ணன் மகள் என்று மட்டும் சொல்லாமல் உன் அப்பாவின் தொழிலையும் சேர்த்துச் சொன்னால்…”

“பிறகு நான் எப்படித்தான் அறிமுகமாகி கொள்வது பாட்டி?”

” எல்லோருக்கும் ஒரு பலவீனமான பக்கம் உண்டு.அது பெரும்பாலும் அவர்களுடைய பிள்ளைகள்தான் .சிவகடாட்சத்தின் பலவீனம் நிச்சயம் அவன் மகள்தான். அவளைச் சொல்லித்தானே நீ அறிமுகமாகி இருக்க வேண்டும். என் அண்ணியை எங்கள் வீட்டிற்கு அனுப்பி வையுங்கள் என்றுதானே கேட்டிருக்க வேண்டும்?”

 மானசி தன் தலையில் தானே நறுக்கென கொட்டிக் கொண்டாள். “ஆமாம் பாட்டி இது ஏன் எனக்கு தோணாமல் போனது?”

“எல்லாவற்றையும் கொட்டி கவிழ்த்து விட்டு இப்போது வருந்தி என்ன பிரயோஜனம்?”

” சரி பாட்டி நாளை காலையில் திரும்பவும் அவரை போய் பார்த்து….”

“நாளை காலை உன்னை கோவிலுக்குள் கால் எடுத்து வைக்கவே விடமாட்டான் அவன்”

அண்ணனின் வாழ்விற்காக இருந்த ஒரே வழியையும் அவளே அடைத்து விட்டாளா? மானசி கவலையுடன் பாட்டியை பார்த்தாள்.

” நான் அண்ணியின் அம்மாவிடம் பேசிப் பார்க்கட்டுமா?”

” சாலாட்சி உன் முகத்தையே ஏறிட்டு பார்க்க மாட்டாள். அப்படி பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறாள்”




“வேறென்ன செய்ய பாட்டி?”

 பாட்டி அலட்சியமாக தோள்களை குலுக்க அந்த தோள்களை அழுத்தி அமுக்கும் வேகம் வந்தது மானசிக்கு.

“உங்க பெர்பார்மன்ஸ் எல்லாம் பிறகு வைத்துக் கொள்ளுங்கள். இப்போ எனக்கு பதில் சொல்லுங்க”

” நேற்று எனக்கு ஒரு ஐடியா சொன்னாயே…அதை நீயே செய்து பாரேன். சிவாவை போய் பார்த்து பேசேன்”

“சீச்சி அந்த ஆளிடமா?”

“உன் அண்ணனின் வாழ்க்கை முக்கியம் என்றால் பேசித்தான் ஆக வேண்டும்.இல்லையென்றால் உன் அப்பாவை,அண்ணனை போல் நடப்பது நடக்கட்டும் என்று இருந்து விடு”

ம்ஹூம் அதெப்படி இருப்பது? ஆனால் அதற்காக…

கோகுலக் கண்ணன் போல் அவனுக்கு ஊர் முழுவதும் ரசிகைகள். அந்தக் கூட்டத்தோடு ஒருத்தியாக, தேவை என்று நானும் போய் நிற்க வேண்டுமா? நினைப்பே கசந்த்து மானசிக்கு.




What’s your Reaction?
+1
39
+1
16
+1
3
+1
0
+1
1
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!