Serial Stories நீ தந்த மாங்கல்யம்

நீ தந்த மாங்கல்யம்-13

(13)

தோள் சாய்ந்த மனைவியை அணைத்தபடி மேலே தொடர்ந்தான் யதுநந்தன் ” அங்கே மூச்சு முட்டும் வேலைகளில் அமிழ்ந்து கிடந்த போதும் உன்னை பற்றிய விபரங்களையும் கண்காணித்துக் கொண்டேதான் இருந்தேன் .

அத்தையின் உடல்நிலை பாதிக்க பட்டபோது உடனடியாக வரமுடியாமல் வெளியூரில் ஒரு வேலையில் மாட்டிக்கொண்டேன் .அதிலிருந்து மீண்டு வேகமாக உன்னை காண வந்த போது உனது திருமண செய்தி என்னை அதிர்ச்சியடைய வைத்தது .மாமாவின் மறைவுக்கு பின் உன் திருமண பேச்சுக்கு ஒரு வருடமாவது ஆகும் என அப்போது நான் எண்ணியிருந்தேன் .இனி வெளியே வரும் தருணமிது இல்லையென பின்னணியில் ஒதுங்கி கொண்டேன் .

நடப்பதை கவனித்தபடி இருந்தேன் .இப்போதும் அத்தையை சந்தித்து பேசினால் நம் திருமணத்தை நடத்தி விடலாமென்ற நம்பிக்கை எனக்கிருந்தது .ஆனால் அப்போது அத்தையின் நிலைமை ….? நம் பிரச்சினைக்கும் தீர்வு வேண்டும் .அத்தையும் தன்னிலை உணர்ந்து நிமிர வேண்டுமென முடிவெடுத்துதான் அன்று அந்த பிரச்சினையை வினோத் குடும்பத்தாரிடம் கிளப்பி விட்டேன் .

எனது எண்ணம் சரியாகி மகளுக்கு ஒன்றென்றதும் அத்தை தனது மயக்கத்திலிருந்து மீண்டு கம்பீரமாகி விட்டார்கள் .இனி அவர்களை பற்றி கவலைப்பட வேண்டியதிருக்காது “,

” என்ன …? அன்று அந்த அவர்களிடம்  தவறான தகவல்களை சொன்னது நீங்களா ? ” அதிர்ச்சி தெரிந்தது முகிலினியின் குரலில் .

” பின்னே …இன்னொருவனுக்கு உன்னை தாரை வார்த்துவிட்டு என்னை கை கட்டிக்கொண்டு பார்த்துக்கொண்டிருக்க சொல்கிறாயா ?” உஷ்ணத்துடன் ஒலித்தது யதுநந்தனின் குரல் .

ஆக்ரோசமான அவனது இக்குரலில் சிறிது மிரண்டு அவனைவிட்டு விலக முயன்ற முகிலினியை மீண்டும் தன் கை வளைவுக்குள் இழுத்துக்கொண்டான் யதுநந்தன் .

” என்னடா …வள்ளுவரே பொய்மையும் புரை தீர்க்கும் வாய்மையிடத்து என கூறவில்லையா ? நமக்கு நன்மையெனில் சிறு பொய்யில் தவறென்ன இருக்கிறது .” என்றபோது குழைய ஆரம்பித்து விட்ட அவன் குரலும் , கூடவே மென்மையாக இடை வருடிய அவன் கரங்களும் முகிலினியை பெருமளவு சமாதானப்படுத்தியது .

“மணமேடை அலங்காரத்திற்கு பேசிய தொகையில் முன் பணத்திற்கு மேலாக முப்பதினாயிரம் வாங்கி விட்டீர்கள்.என்னிடம் அதற்கு கணக்கு இருக்கிறது .இப்பொழுது மீதி பணத்தை சரியாக சொல்லுங்கள்.கணக்கு முடிக்கிறேன்” வீட்டிற்கு வெளியே கறாராகவும் , தெளிவாகவும் பேசிய அன்னையின் குரல் சன்னல் வழியாக முகிலினியின் காதில் விழுந்தது .

எழுந்து சென்று சன்னல் வழியாக எட்டி பார்த்து விட்டு , அன்னைக்கு உதவ வெளியே செல்ல முயன்ற முகிலினியை தடுத்தான் யதுநந்தன் .” உன் அம்மா தள்ளாத வயதுடையவர்கள் அல்ல முகிலினி .இது போன்ற பொறுப்புகள்தான் இனி அவர்களை உயிர்ப்புடன் வைத்திருக்கும் .பாசமென்ற போர்வையில் அவர்கள் இயல்பை கெடுக்காதே “என்றான் கண்டிப்புடன் .
இது முகிலினிக்கு மிக நியாயமாக தெரிந்தது .
யதுநந்தன் செய்த புரட்டுத்தனத்தால் விளைந்த மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று அவள் அன்னையின் புத்துணர்வு .திருமணத்திற்கு முன்தினம் வரை சுவிட்ச் போட்டால் இயங்கும் எந்திரம் போல் நடமாடிக்கொண்டிருந்தவள் .இன்று திருமண கணக்குகளை புரட்டி கறாராக விபரங்கள் பேசுகிறாள் .இது இவனால் விளைந்ததுதானே .நன்றியுடன் கணவனை நோக்கினாள் முகிலினி .

” டாக்டரின் ஆலோசனையுடன் ஒரு அதிர்ச்சி வைத்தியம் போல் இருக்கட்டுமே என்றுதான் அப்படி செய்தேன் ” என்றான் .

கலக்கம் மறைந்து புன்னகை ஒளி வீச தொடங்கியது முகிலினியின் இதழ்களில் .அம்முறுவல் ஒளியொன்றின் சுவடு முந்தைய கண்ணோர கலக்கத்தை தடமின்றி அழிப்பதை கண்ட யதுநந்தன் காதல் மின்னும் கண்களுடன் மனைவியை அணுக , ஓடிச்சென்று கதவோரம் நின்று கொண்டு தலையசைத்து மறுத்தாள் மனைவி .

ஒழுங்காக வந்து விடுமாறு ஒற்றை விரலால் கணவன் மிரட்டிக்கொண்டிருக்க , வர முடியாது ஆனதை பார் என மனைவி ஜாடை காட்டிக்கொண்டிருந்தாள் .கதவை லேசாக தட்டிவிட்டு உள்ளே நுழைந்தாள் தமிழினி.




“நாளை சம்பந்தி சாப்பாடு சடங்கு  இருக்கிறது .அதற்கு உங்கள் உறவுகள் …” என அவள் ஆரம்பிக்கும்போதே

” இல்லை …அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் .நாங்கள் இப்போது எங்கள் வீட்டிற்கு கிளம்புகிறோம் ” என்றான் யதுநந்தன் .

” என்னது …? ” அதிர்ச்சியாக கேட்டாள் .”, அதெப்படி ….?” என ஆட்சேபனை குரல் எழுப்பினாள்.

அதுதான் முடிவென்ற பாவனையில் நிற்கும் தங்கை கணவனை பார்த்ததும் தங்கையின் கைகளை பற்றி இழுத்தபடி அன்னையிடம் விரைந்தாள்.

” அங்கே எல்லாவற்றையும் அப்படி அப்படியே போட்டுவிட்டு வந்திருப்பாரில்லையா ? அதனால் போய் விட்டு வரட்டும் ” என்றாள் சரஸ்வதி இலகுவாக.

ஐயோ அம்மா …நீங்கள் நினைப்பது போல் அவர் எதேச்சையாக வந்த போது இந்த திருமணம் நிற்கவில்லை .திருமணத்தை நிறுத்துவதற்காகவே  திட்டம் போட்டு முன்பே இங்கு வந்து தங்கியிருந்தார் என்று சொல்லிக்கொண்டாள் முகிலினி .தனது மனதிற்குள்ளாகத்தான் .இதனை வெளிப்படையாக சொன்னால் அவள் கணவனின் கௌரவம் என்னாவது ?

” அதெப்படி அத்தை சம்பந்திமார் மரியாதை கூட செய்யாமல் நம் வீட்டு பெண்ணை அனுப்ப முடியும் ? ” எனக்கேட்டான் கதிரவன் .

” அது அவ்வளவு அவசியமில்லை தம்பி .ஏனென்றால் சின்ன மாப்பிள்ளைக்கு அம்மா , அப்பா கிடையாது ” என்றாள் சரஸ்வதி .

” என்னது …” என அதிர்ந்தவர்களில் முகிலினி முதல் ஆளாக இருந்தாள் .தன் கணவன் பெற்றோரை இழந்தவனா ? சிறு பரிதாபத்தோடு கூடிய கவலை எழுந்தது அவளுள் .

” அத்தை எனக்கு கொஞ்சம் வெளியே வேலை இருக்கிறது .
நான் போய்விட்டு வருகிறேன் .நீங்கள் அதற்குள் முகிலினியை கிளப்பி வையுங்கள் “, என்று வந்தான்் யதுநந்தன் .

“சரி தம்பி ..” என தலையசைத்தாள் சரஸ்வதி .

“தயாராக இரு முகில் ” என மனைவியின் தோள்களை தட்டிவிட்டு வெளியே போய்விட்டான் யதுநந்தன் .

சின்ன மாப்பிள்ளை சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என சரஸ்வதி உறுதியாக கூறிவிட , உறவினர்கள் மற்ற சடங்குகளை கைவிட்டு பெண்ணை அனுப்புவதற்குரிய வழிகளை பார்க்க ஆரம்பித்தார்கள் .

இப்போது முகிலினியின் மனம் படபடவென அடித்துக்கொண்டது .புதிய இடம் , புதிய சூழ்நிலைகள் , புதிய சொந்தங்கள் எப்படி அமைய போகிறது அவள் வாழ்வு .? கணவனின் ஊர் கிருஷ்ணகிரி என அன்னையின் மூலம் அறிந்திருந்தாள் .யதுநந்தனுக்கு ஒரு பாட்டி உண்டென்றும் அறிந்தாள் .
ஆனால் கணவனின் பிற சொந்தங்கள் பற்றிய விபரம் அவள் அன்னைக்கே சரிவர தெரியவில்லை .
தனது உடைகளை பேக் பண்ணினாள் .ஏற்கெனவே உடைகள் மட்டும் எடுத்து வந்தால் போதும் .மற்ற சாமான்களை பிறகு பார்த்து கொள்ளலாம் என யதுநந்தன் கூறிவிட்டதால் மூன்று பெட்டி நிறைய முகிலினியின் உடைகள் மட்டுமே அடுக்கப்பட்டன .

தனக்கு வேலையிருப்பதால் , தனது பி.ஏ வையும் , டிரைவரையும் அனுப்புவதாகவும் , அவர்களுடன் காரில் கிளம்பி ஒரு பெரிய ஹோட்டலின் பெயரை சொல்லி அங்கே வந்துவிடுமாறு போனில் கூறினான் யதுநந்தன் .அந்த ஹோட்டலில் அவனுக்கு ஏதோ மீட்டிங் நடந்து கொண்டிருக்கிறதாம் .

இப்போதுதான் கை பிடித்த புத்தம் புது மனைவியை அருகிலிருந்து பார்க்காமல் அப்படி என்ன மீட்டிங் வேண்டிக்கிடக்கிறது .இவரை ….பல்லை கடித்தாள் முகிலினி .இருக்கட்டும் கிருஷ்ணகிரி வரை என்னோடுதானே காரில் வர வேண்டும் .அப்போது பார்த்துக்கொள்கிறேன்.உள்ளுக்குள்
புலம்பிக்கொண்டாள்.

உறவினர்கள் அனைவரும் ஆட்சேபனை பார்வை பார்க்க ” அப்போ நீ கிளம்பு பாப்பா ” என்றாள் சரஸ்வதி எளிதாக .

தான் இத்தனை வருடம் வாழ்ந்த  வீட்டையும் , உறவுகளையும் பிரியும் வேதனை முகிலினிக்கு .இப்போது ஆதரவாக சாய கணவனின் தோள் வேண்டாமா என எண்ணியது அவள் மனம் .

வாசலில் வைத்திருந்த அவளுடைய மூன்று பெரிய பெட்டிகளில் ஆளுக்கொன்றாக கைகளில் தூக்கி அந்த பெரிய காரின் டிக்கியில் ஏற்றிக்கொண்டிருந்தனர் இருவர் .டிரைவரும் , பி.ஏ வும் போலும் .

யூனிபார்மில் இருந்த டிரைவரை தவிர்த்து அநாயசமாக அந்த பெரிய பெட்டியை ஒரு கையால் தூக்கி டிக்கியினுள் ஏற்றிக்கொண்டிருந்த அந்த பி.ஏ விடம் ” அவருக்கு ரொம்ப முக்கியமான மீட்டிங்கா ?” என வினவினாள் முகிலினி .

” ஆமாம் மேடம் …ஜப்பானிலிருந்து  சிலர்  வேறொரு வேலையாக வந்திருந்தாலும் நமது கம்பெனியை பற்றி தற்செயலாக தெரிந்து விசாரிக்க நினைத்ததால் திடீரென இந்த மீட்டிங்கை ஏற்பாடு பண்ணிவிட்டார் பாஸ் ” என்றபடி திரும்பிய அந்த பி.ஏ வை பார்த்தும் லட்சம் வோல்ட் மின்சாரத்தை உடலில் வாங்கினாள் முகிலினி .

இது …இவர் ….இல்லையில்லை …இவள் ….இந்த பி.ஏ ஒரு பெண்ணா ? ஒட்ட வெட்டப்பட்ட முடியுடன் ஜீன்ஸ்சும் , டி ஷர்ட்டுமாக காளை போல் நிமிர்ந்து நின்ற அந்த உருவத்திடம் பெண்மைக்குரிய எந்த அடையாளமும் இல்லை .சற்றே மெலிந்த இந்த குரலை தவிர .




” ஹலோ மேடம் …நான் காருண்யா ” என கைநீட்டினாள் புன்னகையுடன் .
அதிர்ச்சி குறைந்து பிரமிப்பு படர துவங்கியது முகிலினிக்கு .அட உண்மையிலேயே பெண்கள் நிரம்பவும் முன்னேறி விட்டார்களப்பா …சற்று முன் ஒரே வீச்சில் அந்த பெரிய பெட்டியை டிக்கியினுள் தூக்கி வைத்த அந்த பெண்ணின் பலத்தை மனதினுள் வியந்தபடி கை குலுக்கினாள் .

முகிலினிக்கு மென்மையற்ற சிறு கற்பாறையை நினைவூட்டியது இந்த கைகுலுக்கல் .அதே கடினம்தான் அவள் முகத்திலும் .என்னை நீ அணுகவே முடியாது என கூறின அந்த பெண்ணின் முகத்தசைகள் ஒவ்வொன்றும் .வெளியில் சென்று வேலை பாரக்கும் பெண்களுக்கு இந்த இறுக்கமும் , ஒதுக்கமும் அவசியம்தானோ என எண்ணிக்கொண்டிருந்தவளை “போகலாமா மேடம் ? ” என கலைத்தாள் காருண்யா .

தனது குடும்பத்தாரிடம் பிரியாவிடை பெற்று கிளம்பினாள் முகிலினி .மீட்டிங் முடிந்ததால் உடனே வந்து விடுவதாக யதுநந்தன் கூற அந்த ஹோட்டல் வரவேற்பறையில் முகிலினி காத்திருக்க நேர்ந்தது .காருண்யா உள்ளே மீட்டிங்கிற்கு சென்றுவிட்டாள் .அந்த அறையில் இருந்த மீன் தொட்டியில் இருந்த வண்ணமீன்கள் , பூக்கிண்ணங்கள் , கிட்டத்தட்ட பாதி ஆளை விழுங்கும் சோபாக்கள் , அலங்காரமான ஷாண்டிலியர்கள் , அந்த ரிசப்சன் பெண்ணின் சிரிப்பு , டிவியில் கிரிக்கெட் என பலவற்றை கண்கள் மேய்ந்து கொண்டிருந்த போதும் உள்ளே தனது வீட்டினரை பிரிந்த துயர் கொதிகலன் வெந்நீராய் பொங்கிக்கொண்டிருந்தது முகிலினிக்கு .

தனது துயரத்தின் தீயில் நீர் வார்க்க கணவனின் வரவை எதிர்பார்த்தபடி அனல் மூடிய பூவாய் காத்திருந்தாள் அவள் .ஆனால் …ஒரு சிறு கையசைவுடன் வந்த யதுநந்தன் மனைவியின் அருகே கூட வராமல் ” போகலாமா …?” என்ற கேள்வியுடன் சென்று காரில் ஏறினான் .

திருமண மண்டபத்திற்கு வரும்போது , தானே மணமகனாக போவதால் தயாராக பட்டு , வேட்டி சட்டையிலிருந்த அவன் …இப்போது தொழிலுக்காக புல்  சூட்டுக்கு மாறியிருந்தான் .அந்த சாம்பல் வண்ண உடையில் கம்பீரமாக நடந்து வந்த தன் கணவனை கண் நிறைய பார்த்து , அவன் கரங்களுக்குள் தன் துயர் தொலைக்க முகிலினி நினைத்திருக்க அவனோ கிளம்பலாமென்ற ஒரு சொல்லுடன் காரில் ஏறி விட்டான் .

பின்னும் காரினுள் லேப்டாப்பில் ஏதோ நோண்டியபடி இருக்க , சரி அதிக வேலை போல …இதோ இப்போது முடித்துவிடுவான் .தன்புறம் திரும்பி தன் துயர் கேட்க போகிறான் என முகிலினி எண்ணிக்கொண்டிருந்தாள் .

அந்த ஹோட்டல் முன்னிருந்த பவுண்டைனை ஒரு ரவுண்ட் அடித்து கார் திரும்பிய போது , கையில் சிறு பேக் ஒன்றுடன் காரில் ஏறிக்கொண்டாள் காருண்யா .அவர்கள் இருவருக்கும் முன்னிருந்த இருக்கையில் அமர்ந்தவள் முகிலினியை நோக்கி லேசாக புன்னகைத்து விட்டு தனது பேக்கை திறந்து ஒரு லேப்டாப்பை எடுத்தாள் .

அவ்வளவுதான் யதுநந்தனும் , காருண்யாவும் தொழிலில் ஆழ்ந்து விட்டனர் .அந்த கல் …இந்த கல் …அது இப்படி …இது ஆகாது என்ற தொழில் விசயங்கள் முடிவின்றி நீண்டன .கணவனின் குடும்ப தொழில் கிரானைட் என அம்மாவின் மூலமாக அறிந்திருந்தாள் முகிலினி .

ஆனால் வளங்கொழிக்கும் அந்த தொழிலை விடுத்து ஒரு சாதாரண மாத சம்பளத்திற்காக , பிய்ந்த தனது சட்டை பட்ட னை தைத்தபடி எதற்காக யதுநந்தன் தங்கள் வீட்டு மாடியில் தங்கியிருக்க வேண்டும் ? அதற்கு அவனது உறவினர்கள் எப்படி சம்மதித்தனர் ? இந்த விபரங்களையெல்லாம் முகிலினி கணவன் மூலமாகத்தானே அறிய வேண்டும் .

அந்த விபரங்களையெல்லாம் தனது கணவர் வீட்டாரை சந்திக்கும் முன்பாகவே அறிந்து கொள்ள எண்ணினாள் முகிலினி .அதற்கு தனது கணவன் ஊருக்கு போகும் இந்த நான்கு மணிநேர பயண நேரத்தைத்தான் தேர்ந்தெடுத்து வைத்திருந்தாள் .ஆனால் ….இப்படி இந்த காருண்யாவும் உடன் ஏறுவாளென அவள் நினைக்கவில்லை .அத்தோடு அவர்கள் தொழில் பேச்சு வேறு அனுமார் வாலென வளர்ந்து கொண்டே சென்றது .

கிருஷ்ணகிரி வரும் வரையுள்ள நானூறு கிலோ மீட்டர் தூரத்தையும் இவர்களது தொழிலே ஆக்ரமித்து விட்டது .பொறுத்து பொறுத்து பார்த்த முகிலினி இறுதியில் தூங்க துவங்கினாள் .

தனது தோள்கள் மென்மையாக வருடப்பட கண்விழிக்கும் முன்பே கணவனென உணர்ந்து , மென்னகை உதட்டில் நெளிய கணவனின் கைகளுக்காக கையை தூக்கினாள் .அவளது தோள்கள் ஆதரவாக அணைக்கப்பட மெல்ல கண் திறந்தாள் .

கண்ணருகே தெரிந்த கணவனின் முகம் உற்சாகமூட்ட , அப்படியே கணவன் தோள்களில் ஒண்டிக்கொள்ள முயன்ற போது கண்ணில் பட்டாள் காருண்யா .சட்டென சூழ்நிலை நினைவு வர அவசரமாக கணவனை விட்டு விலகினாள் .

” நம்ம வீடு வந்திருச்சுடா முகில் ” கன்னம் வருடி கணவன் கூற , சிறு கூச்சத்துடன் காருண்யாவை பார்த்தபோது அவள் காரை விட்டு இறங்கிக்கொண்டிருந்தாள் .

மனைவியின் கையை பற்றியபடி கீழே இறங்கினான் யதுநந்தன் .முழு வெண்மையில் பிரம்மாண்டமாக முன்னால் விரிந்திருந்த அந்த பங்களாவை பிரமிப்புடன் பார்த்தபடி கீழே இறங்கினாள் முகிலினி .

ஏனோ அவள் வயிற்றினுள் பயப்பூச்சிகள் பறந்தன .




What’s your Reaction?
+1
27
+1
12
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!