Serial Stories தீரா…நிலதீரா…!

தீரா…நிலதீரா…! -4

4.மைசூர்ப்புலியின் மரணம்!

**************************************

கர்னல்பெய்லி   கையிலிருந்த கோப்பையில் உள்ள  செந்நிறதிரவத்தைப் போலவே அவன் முகமும் கண்களும் சிவந்து கிடந்தன. பழுப்புநிற கண்மணிகளைச் சுற்றி தன் வண்ணத்தைத் தொலைத்து சிவந்து போயிருந்த வெண்விழிப்படலம் காண்பதற்கு அமானுஷ்யமான அச்சத்தைத் தந்தது.

“அந்த சின்னமலையை வெட்டனும்.பீஸ்பீஸா கட் பண்ணி நாய்க்கு போடனும். “

உறுமிக் கொண்டிருந்தான்.

மழவல்லி போரில் திப்புசுல்தானுடன் கைகோர்த்த சின்னமலை ஆங்கிலேய பட்டாலியனுக்கு தலைவலியானான்.  

மழவல்லி

சித்தேஸ்வரம் மற்றும் சீரங்கப்பட்டினம் என்று மும்முனைத்தாக்குதல் செய்து திப்புவை பாக்குவெட்டியில் வைத்த  பாக்கைப் போல நறுக்க விரும்பி கொக்கரிப்புடன் புறப்பட்ட படை தொடர்பு துண்டிக்கப்பட்ட தீவு போலாகி தத்தளித்தது. 

சேலத்திலிருந்து வரவேண்டிய படைகளோ கேரளப்பகுதியினின்றும் புறப்பட்ட மற்றொரு பிரிவோ வந்து இணையவேயில்லை. 

ஆங்கிலேயப்படைக்கு முழு பிதுங்கிப் போக பின் வாங்கியது படு தோல்வியுடன்.

அந்தப்படை உதவியை மிகச் சாதுரியமாகத் தடுத்திருந்தான் தீரன். 

அவனுடைய பயிற்சி பெற்ற கொங்குபடையின் ஒரு பிரிவு ஆங்கிலேயர் படையை  மழவல்லிக்கு வர விடாமல் ஆட்டம் காட்டி தளையிட்டது.

தீரனின் மற்ற படைவீரர் பிரிவு திப்புவுக்கு தோள் கொடுத்தது. சீரங்கப்பட்டினத்தில் திப்பு சுல்தான் கிழக்கிந்திய கம்பெனியினரை மிகக் கடுமையாக எதிர்த்துக் கொண்டிருந்தார்.

  தீரன்  தன் கொங்கு படைகளுடன் கிழக்கிந்தியப்படையை எதிர் கொண்டான்.

கர்னல்பெய்லி படு தோல்வியுற மிக மோசமானதொரு நிலையில் தன் பிரிட்டிஷ் உயர் அதிகாரிகளுக்கு விசாரணைக்குட்பட வேண்டிய நிலைமை. பிரிட்டிஷ் அரசு பலத்த எச்சரிக்கையுடன் அவனை விடுவித்திருந்தாலும் கடுங்கோபத்தின் உச்சத்திலிருந்தான்.

கொங்கு படையின் உதவி திப்புவுக்கு வெற்றியை ஈட்டித்தந்தது. 

ஆங்கிலேய நரிகள் தக்க தருணம் பார்த்து பின் வாங்கி காத்திருக்க மைசூர் மெதுவாக தன் சுயத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தது.

தீரன் மிக அவசரமாக சொந்த ஊருக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தான். 

மொரப்பக்கவுண்டர் அவன் பொம்மாயியின் தந்தையும் அவனுடைய மாமனுமான அவர் தன்னுடைய கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதாகத் தகவல் வர. மைசூரிலிருந்து புறப்பட்டு இருந்தான். செம்பாவும் எஜமானின் குறிப்புணர்ந்து காற்றைக் கிழித்துக் கொண்டு பறந்தது.

ஒரு பெரும் வெற்றிக்குப் பின்னே சொந்த மண்ணை தரிசிக்கும் நேரம் பேரிழப்பு நேர்ந்திடக்கூடாதென வில்வ வவனநாதரிடம் கோரிக்கை 

வைத்தான்.

தாயில்லாத அந்தப் பேதைக்கு தாயுமானவரும் மொரப்ப கவுண்டர் தாம். இப்போது நோய்ப் படுக்கையிலிருக்கிறாராம். 

பெற்ற மகளுக்காக மறுமணம் செய்து கொள்ளாமலே வாழ்க்கையை ஓட்டிவிட்டவர். மகளின் திருமணம் மட்டுமே அவர் லட்சியமாயிருக்க எல்லாம் கூடி வந்து பேசி முடித்த நேரம் தீரன் மைசூர் போய் விட்டான். நாடெங்கும் போரின் வேகம் காய்ச்சலாய் பரவிக் கிடந்தது. என்னாகுமோ என்ற பயத்தில் கல்யாணம் கூட கிடப்பில் போயிற்று. நாடு  …அதன் நிலைமை ஒன்றே எல்லோருடைய மனதிலும். அதிலும் தீரனின் கொங்கு படை என்ற இளைஞர்கூட்டம் முழு வேகத்தோடு முதன்முறையாக களமிறங்கியது. வெற்றி மட்டுமே இலக்காகி முன்னுக்கு நிற்க மற்றவை தன்னாலேயே பின்னுக்கு போயிற்று. 

ஆயிற்று.

மொரப்பக் கவுண்டர் உயிரைக் கண்ணில் வைத்துக் கொண்டு புதல்வியை தீரனின் கையில் வைத்தார். அவரின் உயிர்ப்பறவை அடுத்த கணமே பறந்து விட்டது.

அவனும் மைசூருக்குத் திரும்ப வேண்டும். நெப்போலியன் போனபார்ட் என்னும் பிரெஞ்சு பேரரசனைச் சந்திக்கச் சென்ற தூதுக் குழுவில் இடம் பெற்ற இவன் தோழன் கருப்பச்சேர்வையும் வெற்றியோடு நாடு திரும்புகிறான். திப்புவின் வேண்டுகோளுக்கிணங்க அந்த தேசத்தவரும் சிலர் வருகை தர உள்ளனர். 

வெடிமருந்து தயாரிப்பிலும் பீரங்கி  இயக்குவதிலும் வல்லுனர்கள்.  அவர்கள் மூலம் படைகளை மேலும் நவினமயமாக்க முயலும் முன்னெடுப்புத் திட்டம். 




ஏற்கெனவே திப்பு சுல்தானின் வானவெடி எனும்        @ஏவுகணையை  உருவாக்கியிருந்தார். அது அவரின் சொந்த முயற்சியில் வடிவமைந்த படைக்கலன். அதி பயங்கரமானது.

உருளையையொத்த வடிவமும் இருபக்கம் கத்தி போன்ற குழல்களும் இதைத் தாங்கும் நீளக் கம்பியும் அதை இயக்கத் தனித்தனி வல்லுனர்களுமாய் ஒரு பிரிவேயிருந்தது.

இது பூர்ண வேகத்தோடு மேலேறி விசையுடன் வெடிமருந்துகளை நெருப்புப்பூக்களாய் சிதறவிடுகையில்  கீழே போரில் ஈடுபட்டிருக்கும் படை  நெருப்புக்குண்டுகளால் சிதறும். குதிரைப்படையும் யானைப்படையும் பயங்கொண்டு தங்கள் ஆட்களையே சின்னபின்னப் படுத்தும். பெரும் நாசத்தை எதிராளி சந்திப்பான்.இது திப்புசுல்தானின் பிரத்யேகக் கண்டுபிடிப்பு. 

இது வெளியிடும் புகை சமர்க்களத்தையே மேகம் போல மூடிக் கொள்ளும் . 

இதிலும் தீரன் தன்னை மேம்படுத்தி தன் படைவீரர்கள் சிலரை தெரிவு செய்து பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தான். 

எனவே மைசூருக்குப் போய்விட்டு தலைநகர் சீரங்கப்பட்டினம் செல்ல வேண்டிய அவசியத்திலிருந்தான் தீரன் சின்னமலை.

 அவன் பொம்மாயியையும் தேற்றவேண்டிய நிலை. பெற்றோரை இழந்த பேதைப் பெண்ணுக்குத் துணையாக. அவளின் தூரத்து சொந்தத்தில் ஒரு பெண்மணி துணையாக வீட்டோடு இருந்தார். ஒரு வருடம் கழிந்து திதி கொடுத்தபின்பு நல்லநாளைக் குறிக்க குடும்பப் பெரியோரும் ஊர் நல்லோரும் தீர்மானித்தனர்.

வில்வ வனநாதரின் ஆலயத்தில் தனிமையில் சந்தித்து  தன் பொம்மாயியிடம் விடை பெற்றுக் கொண்டான். நீள் விழிகளில் காதலும் நேசமும் ததும்ப விடை கொடுத்தாள் பாவை 

காளையவனை கடமையழைக்க தன்னுடைய செம்பாவின் இடுப்பில் லேசாய் கால்களை உரச செம்பா கனைத்துக் கொண்டு வேகமெடுத்தது.

புழுதி மேலெழும்பி பார்வையை மறைத்தது. கொஞ்சம்நஞ்சமிருந்ததை கண்ணீர் தளும்பி மறைத்தது. 

நிலமங்கை சோர்ந்து போனாள். 

தந்தையின் தோளுக்கும் விரல்களின் வருடலுக்கும் ஏங்கிப் போனாள்.

1799

ஆங்கிலேய நரிகள் சலசலப்புக்காட்டாது ஹைதராபாத் நிஜாமிடம் ஒப்பந்தம் செய்து கொண்டன. அடுத்து மராத்திய பேஷ்வாக்களுடனும் உடன்படிக்கை செய்து கொண்டு திப்பு சுல்தானின் சீரங்கப் பட்டினத்தை முற்றுகையிட்டன.

இது வரலாற்றின் நான்காவது ஆங்கிலோ மைசூர் போர்.

‘மைசூர்ப்புலியை’ தூய்மையான வீரத்தால் முறியடிக்க இயலாத கிழக்கிந்தியப் படைகள் குள்ளநரித்தனத்தோடு சதிகளை ஆரம்பித்தன.

தொடர்ச்சியான மோதல்கள் .இரண்டாம் மூன்றாம் மைசூர் போர்கள் மட்டுமல்லாது ஆங்காங்கே அவ்வபோது மோதல்களையும் தவிர்த்து தன்னுடைய பகுதிகளையும் காப்பாற்றிக் கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம். 

சித்தூர்க் கோட்டையை தஞ்சைப் பகுதிகளை காப்பாற்ற  என்று அதனாலும் தேக்கம் கவிழ்ந்தது. 

மிகமிக மோசமான போராக திப்புவுக்கு அமைந்தது நான்காம் மைசூர்ப் போர். விதியோடு சதியும் இணைந்ததுதான்  கொடுமை.மராட்டிய பேரரசின் பேஷ்வாக்கள் படை ஒருபுறமும் சென்னை மாகாணப்படைகளும் இணைந்து சீரங்கப் பட்டினத்தின் கோட்டைச் சுவர்களை பீரங்கிகளால் பிளந்தன.

திப்புவுக்கு உதவிய ஆற்காடு நவாப்  உம்தத் உல்உம்ரா வுக்கு நஞ்சு வைத்துக் கொன்றுவிட்டு திப்புவின் இளைய மகனை கடத்தினர்.




போர்முனையில் தன்னுயிரை இழந்தார் திப்பு சுல்தான்.  “ஆட்டுமந்தையாக வருடக்கணக்கில் உயிர் வாழ்வதை விட ஒரு வருடமே வாழ்ந்தாலும் வீரப்புலியாய் வாழ்ந்து மடிவேன் “என்று கர்ஜித்து உயிரை விட்டது கன்னடத்தின் போர்வாள்.ஒரு பெரும் வீரனை இழந்தது நாடு.

இதற்கிடையில் திப்புவின் ஆணைப்படி தீரன் கொங்குநாடு தப்பி வந்து விட்டான். அவனுடைய படைகளும் நகர்ந்தன.

மைசூர்ராஜ்யம் உடையார் வம்சத்திடம் தங்களுக்கு அடங்கியிருக்க வேண்டுமென்ற ஒப்பந்தத்தோடு ஒப்படைக்கப்பட்டது. பேஷ்வாக்களும் நிஜாமும் பரிசாகக் கிடைத்த  பகுதியை துண்டுபோட்டு தங்கள் ராஜ்யத்துடன் சேர்த்துக் கொண்டு ஆங்கிலேயரின் அடிவருடிகளாயினர்.

சிவன்மலையின் பட்டாலி அடவிக்கு  வந்து சேர்ந்தனர் தீரனின் கூட்டத்தினர். 

திப்புவோடு அணைந்து போகாமல் சுதந்திரத் தீ சின்னமலையின் மனதில் ஜ்வாலையுடன் எரிந்தது. 

கொங்குபடையினரை இணைத்து வைத்து மேலும் பயிற்சியை அதிகப்படுத்தினான். 

ஆங்கிலேயர் எதிர்ப்பே இலட்சியமாகக் கொண்டு பல்வேறு திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருந்தான் தீரன் சின்னமலை. 

திப்புவின் மரணத்திற்கு பழி வாங்க திப்புவின் விசுவாசிகள் மராத்திய வீரர் தூண்டாஜி வாக்  பரமத்தி அப்பாச்சியையும் மற்றும்   விருப்பாச்சி கோபால நாயக்கரையும் தன்னோடு இணைத்துக் கொண்டு வலு சேர்த்தான்.

தீர்த்தகிரிச் சர்க்கரை உத்தம காமிண்ட  மன்றாடியார் என்ற பட்டப் பேரோடு பாளையக்காரனாகத் தன்னை முன்னிறுத்திக் கொண்டு சுற்றிலுமிருந்த மதுரை, திண்டுக்கல்,ராமனாதபுரம், சிவகங்கை,  காங்கேயம், மைசூர் பகுதியைச் சார்ந்த பாளையக்காரர்களையும் ஒருங்கிணைத்து வெற்றியும் கண்டான்.

எந்தவிதமான வேறுபாடுமின்றி கொங்குபடையில் எல்லாவிதமான வகுப்புப்பிரிவினருமே பங்கு கொண்டனர்.மிகச் சிறந்த பலம் வாய்ந்த படையாக வளர்ந்து கொண்டிருந்த இந்த இளைஞர் படை ஆங்கிலேயர்க்கு கண்ணில் விழுந்த மணலாகி உறுத்திக் கொண்டிருந்தது.

அந்த உறுத்தல் கோவைக்கோட்டையில் எதிரொலித்தது.

கர்னல்ஹாரிஸ் தீரனின் சிலம்பாட்டத்தில் திகைத்து விழி பிதுங்கி நின்றார். 

காவிரிக்கரையிலும் சிவன் மலையிலும் கொங்குபடை பெற்ற வெற்றி கோவைக் கோட்டைப் புரட்சியில் சதியை விதைத்தது .

(தீரன் வருவான்)

#அந்த காலத்திலேயே திப்புசுல்தானின் கண்டுபிடிப்பு இது.  குழாய் வடிவ உலோகம் அதிவேகத்தோடு வானத்திலேறி  நெருப்புக்கங்குகளைச் அம்புமழையாய்ச் சிதறவிடுமாம்.

தீரா…நிலதீரா…!




What’s your Reaction?
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!