Serial Stories

எனை ஆளும் நிரந்தரா-3

3

இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது மானசிக்கு ஒன்றுமே புரியவில்லை. அதெப்படி இவன்… இங்கே… அவர்கள் தெருப் பக்கம் வருவான்? கிட்டத்தட்ட அந்த தெருவில் பாதிக்கு மேற்பட்ட வீடுகள் மணிவண்ணனின் பக்கத்து அல்லது தூரத்து சொந்தங்களின் வீடுகள் தான். இதோ இந்த ரூபாவும் ஷாலினியும் கூட இவர்களுக்கு ஒரு வகையில் சொந்தம்தான்.

மணிவண்ணன் குடும்பத்தினரைப் போன்றே இவர்கள் எல்லோருக்குமே அவன் விரோதிதான். தொழிலில் மட்டுமல்ல உறவு வழியிலும் இவர்கள் குடும்பத்தின் விரோதத்தை சம்பாதித்து கொண்டவர்கள் அவன் குடும்பத்தினர். இதையெல்லாம் கணக்கில் வைத்தே சற்றுமுன் பாட்டியிடம் அவ்வாறு பெருமை பேசியிருந்தாள் மானசி. பாட்டியின் பிறந்த வீட்டு சொந்தமான அவனால் இவர்கள் பக்கமே வர முடியாதென மறைமுகமாக மிரட்டியிருந்தாள்.

 ஆனால் சொல்லி வாய் மூடும் முன்பே இதோ இப்படி நகர்வலம் வரும் மன்னன் போல் ஊர்வலம் வந்து கொண்டிருக்கிறானே!

“அப்படியே மகாராஜா மாதிரி இருக்காரு இல்ல?”

” அது என்ன புல்லட்டா இல்லை குதிரையா?” குரல்களுக்கு உரியவர்கள் ரூபாவும், ஷாலினியும். வேகமாக போய் இருவரையும் கன்னம் கன்னமாக அறைய வேண்டும் போலிருந்தது மானசிக்கு.

அவர்களை திரும்பிப் பார்க்க லேசாக பிளந்த வாயுடன் வீதியில் பார்வை பதித்திருந்தனர். அறிவில்லாமல் இவர்கள்தான் பேசுகிறார்களென்றால் நானும் அப்படியேவா? முகத்தை கோபமாக மாற்ற முயன்றபடி மானசி நிற்க “அக்கா வாயை மூடிக்கோங்க” கத்தினாள் எதிர் வரிசையில் நின்றிருந்த ஷாலினி.

திடுக்கிட்டு தன்னை ஆராய்ந்து உண்மையாகவே அவர்களை போல் திறந்திருந்த தன் வாயை அவசரமாக மூடிக்கொண்டாள் மானசி. முகத்தில் கடுகடுப்பை கொண்டு வந்த அவளின் பாவங்களை பார்த்தபடி அவர்கள் வீட்டை கடந்தான் அவன்.

 பிரமிப்பு போல் புருவங்களை உச்சிமேடு வரைக்கும் உயர்த்தியிருந்தான்.மானசியை கடக்கும்போது தளும்பிய ஓடையில் ஊர்ந்து போகும் ஓடமானது அவனது விரைவு வாகனம்.

அப்படியே அந்த கண்ணு ரெண்டையும் நோண்டிடனும், இங்கே என்னடா பார்வை உனக்கு சதிகாரா! கண்டபடி அவனை வைதபடி வீட்டிற்குள் மறைந்து கொண்டாள் மானசி.

“அந்த ஆள் ஏம்பா நம்ம தெரு பக்கம் வருகிறான்?” அன்று இரவு உணவின் போது அப்பாவிடம் கேட்டாள் மானசி.

குழைவாக வடித்திருந்த சாதத்தின் மீது சூடான பசும்பாலை விட்டு பிசைந்து கொண்ட மணிவண்ணன் “யாரும்மா?” என்றார்.

“அதுதான் நம்ம விரோதி அந்த அவன்…”




“ராஜாவையா சொல்கிறாய்?” கேட்டபடி சகுந்தலா ஒரு சிறிய தட்டில் காரமும் மணமுமான கொத்தமல்லி துவையலை கணவர் அருகே எடுத்து வைத்தாள்.

“பெரிய ராசா! இங்க பாரு சக்கு இன்னமும் உன் பிறந்த வீட்டு பாசத்தை நீங்க வந்து காட்டிட்டு இருக்காத” வெடித்தாள் மானசி.

“நடராஜையா கேட்கிறாய்?” பால் சோறுடன் கொத்தமல்லி துவையலையும் சேர்த்து சாப்பிட ஆரம்பித்தார் மணிவண்ணன்.

“மானு என்ன இது அவன் இவன்னு மரியாதை இல்லாமல்… ஒழுங்காக பேசு” சகுந்தலா கண்டித்தாள்.

“அவனுக்கெல்லாம் என்ன மரியாதை?” மானசி ஓரக்கண்ணால் அறைக்குள் அமர்ந்திருந்த பாட்டியை பார்த்தபடி உயர்ந்த குரலில் அபிநயித்தாள்.

இவள் பார்வை பட்டதும் பாட்டி அமர்ந்திருந்த ரெக்லைனர் (recliner) சோபாவை முழுவதுமாக பின்னால் சரித்து வசதியாக படுத்துக்கொண்டு எதிரே ஓடிக் கொண்டிருந்த டிவியில் சீரியல் வால்யூமை அதிகரித்துக் கொண்டார்.

 கிழவிக்கு திமிரைப்பார் இந்த சோபாவை இவருக்காக வாங்கி தந்திருக்கவே கூடாது, என்னுடைய ஆறு மாத சம்பளம் முழுவதும் போட்டு சுளையாக கால் லட்சம் கொடுத்து இதை வாங்கி வந்தேனே என்னை சொல்லணும் பொறுமினாள்.

“என்னது சிவாவா? நம்ம தெருப்பக்கம் வந்தானா? இங்கே அவனுக்கென்ன வேலை?” கோபமாக கேட்டான் வெற்றிவேலன்.

“இந்தத் தெரு ஊருக்கு பொதுதான் வெற்றி” சகுந்தலாவின் குரலில் கிண்டல் இருந்தது.

” என்னப்பா நீங்களும் பேசாமல் இருக்கிறீர்கள்?” வெற்றி தந்தையை துணைக்கழைக்க பால் சோறு துவையலுடன் மொறுமொறுப்பான பக்கோடா துண்டுகளையும் சேர்த்து மென்று கொண்டிருந்த மணிவண்ணன் “என்னை என்னடா செய்ய சொல்கிறாய்? உன் அம்மா சொன்னது போல் இது பொதுவான வீதி.இங்கே யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வரலாம்”

“கிடையாதுப்பா, இந்த தெரு முழக்க கிட்டத்தட்ட நம்முடைய குடும்பத்திற்கு உரிமையானது. இங்கே இருக்கும் நம் சொந்தங்கள் எல்லோரும் நம்முடன் தொழில் தொடர்பில் இருப்பவர்கள் அல்லது தொழிற்சாலையில் வேலை செய்பவர்கள். இது நமது ஏரியா. இங்கே நம்முடைய எதிரி குடும்பத்தைச் சேர்ந்த அவனுக்கு நுழைவதற்கு எவ்வளவு தைரியம்?” மானசியின் கேள்விக்கு தலையாட்டி ஆமோதித்தான் வெற்றி.

“இதுபோன்ற வீம்புகள் எல்லாம் இரண்டு வருடத்திற்கு முன்பே எனக்கு நமுத்து போய்விட்டது”. தட்டிலேயே கை கழுவிய மணிவண்ணன் ஒருவித வெறுப்புடன் தோளில் கிடந்த துண்டை உதறி கையை துடைத்துக் கொண்டு எழுந்து போனார்.

மானசி உதட்டை கடித்துக் கொண்டு அண்ணனைப் பார்க்க அவன் தன் தட்டில் இருந்த பால் சாதத்தை வெறித்து பார்த்தபடி இருந்தான்.

“அண்ணனுடைய வாழ்க்கையை மனதில் வைத்துக் கொண்டு பேசு மானும்மா” குரல் தழுதழுக்க சொல்லிவிட்டு போனாள் சகுந்தலா.

பாதி சாப்பாட்டில் எழுந்து போன அண்ணனை இயலாமையுடன் பார்த்த மானசி டிவிக்குள் ஆழ்ந்து போயிருந்த பாட்டியை கோபத்துடன் பார்த்தாள்.

அவர்கள் வீட்டில் இந்த உணவருந்தும் அறை வீட்டிற்கு நடுநாயகமாக அமைந்திருக்கும். வீட்டின் பின்பக்கம் முன்பக்கம் என வேலை செய்யும் வேலையாட்கள் யார் பார்வையிலும் படாமல் சற்றே உள்ளடக்கமாக அமைந்திருக்கும்.  அவர்கள் வீட்டு விஷயங்களோ அல்லது தொழில் விஷயங்களோ எதுவாயினும் சாப்பாட்டு நேரம் மட்டுமல்லாமல் மற்ற நேரங்களிலும் இங்கே டைனிங் டேபிளில் அமர்ந்து  பேசுவதுதான் வழக்கம். இதற்காகத்தானோ என்னவோ ரோசாமணி அந்த உணவறையை ஒட்டியிருந்த சிறு அறையை தனக்குரியதாக்கி கொண்டார்.




அவருக்கென குளியலறையையும் இணைத்துக் கொடுக்க பெரும்பாலும் பாட்டி இருப்பது அந்த அறைக்குள்தான். கல்லூரி படிப்பை முடித்த பிறகு சென்னையில் ஆறு மாதம் இன்டெர்ன்ஷிப்பில் வேலை பார்த்த மானசி அப்போது சம்பளமாக கிடைத்த தொகையை சேகரித்து பாட்டிக்கென இந்த வசதியான சோபாவை வாங்கித் தந்தாள். முன்பு முன்னும் பின்னும் ஆடும் ஒரு மர நாற்காலியை உபயோகித்துக் கொண்டிருந்த ரோசாமணிக்கு பேத்தியின் இந்த பரிசு மிகவும் பிடித்துப் போக எந்நேரமும் அதிலேயேதான் இருப்பார்.

கோபத்துடன் எதிரே வந்து நின்ற பேத்தியை இடுங்கிய கண்களுடன் பார்த்தார் ரோசாமணி. “என்னடி பால் சோறுக்கு மண்டை வெல்லம் தட்டி போட்டு கொடுத்துட்டாளா உன் அம்மா? மூஞ்சி இப்படி அஷ்ட கோணலா இருக்குது”

” பாட்டி” பற்களை கடித்து கத்தினாள். அவள் சிறுவயதாக இருக்கும் போது பால் சாதம் சாப்பிட அடம் பிடிக்கையில் மகளை சாப்பிட வைப்பதற்காக வெல்லத்தை சாதத்தில் கலந்து ஊட்டி பழக்கி வைத்திருந்தாள் சகுந்தலா. பிறகு வளர வளர அந்த இனிப்பு சேர்க்கும் பழக்கத்தை மாற்றிக்கொண்டாள் மானசி.ஒரு நாள் ஏதோ ஞாபகத்தில் மகளுக்கு வழக்கம் போல் வெல்லத்தை சேர்த்து தட்டில் போட்டு வைத்து விட ஒருவாய் எடுத்து வைத்த மானசியின் முகம் அஷ்ட கோணலானது.

” அம்மா இந்த பாயாசத்தை எவளால் சாப்பிட முடியும்?” கத்தினாள்.

” கொஞ்ச நாள் முன்னாடி வரை இந்த பாயாசத்தைதான் சாப்பாடுன்னு சாப்பிட்டுக் கொண்டிருந்தாய் நீ” ரோசாமணி பேத்தியை கிண்டல் செய்தபடியே வேறு பால் சாதம் பிசைந்து கொடுத்தார்.

 இப்போது பாட்டி நினைவுபடுத்திய தன்னுடைய பால்யத்தில் கோபமான மானசி “எப்பவுமே சீரியஸாகவே இருக்க மாட்டீங்களா பாட்டி?” என்றாள்.

“எனக்கு உடம்பு முடியாமல் போய் படுக்கையில்  கிடக்கும்போது

மட்டும்தான் ரோசாமணி சீரியஸ் என்று நீங்கள் சொல்லிக் கொள்ள முடியும்”

சொன்ன ரோசாமணி எப்பொழுதும் ஜாலியான பேர்வழிதான். வீட்டில் நடக்கும் எந்த பிரச்சனைக்கும் அலட்டிக் கொண்டதே கிடையாது.

வெற்றிவேலனின் திடீர் திருமணத்தை கூட அப்படியா என்ற பாவனையில்தான் கடந்தார்.

“பாட்டி இது உங்கள் வீடுதான். நாங்கள் உங்கள் பேரன் பேத்தி. எங்களுக்கு நடக்கும் பிரச்சனைகளை நீங்களும் கவனிக்கலாம். தீர்வு சொல்லலாம்”

ஓரக்கண்ணால் பார்த்த பாட்டி “சரி சரி அப்புறம் பேசலாம். இந்த நாடகத்தில முக்கியமான கட்டம் ஓடுது, அங்கிட்டு தள்ளிப்போ”

“இங்கே எவ்வளவு பெரிய பிரச்சனை நடக்குது, இப்போ சீரியல்தான் முக்கியமா உங்களுக்கு?” மானசி  டிவியை ஆஃப் பண்ணினாள்.

” என்னடி அழிச்சாட்டியம் பண்ணுகிறாய்? இப்பொழுது உனக்கு என்னதான் வேணும்?”

“அண்ணனுடைய வாழ்க்கையை சரி செய்யணும்”

“அது என் கையிலா இருக்குது? உன் அண்ணனையே போய் பேச சொல்லு. பொண்டாட்டி வேணும்னா கால்ல விழுந்து கூட்டிட்டு வரலாம் தப்பில்லை”

” அப்படிக் கூட அண்ணன் செய்தாயிற்று பாட்டி. ஆனால் அந்தப் பக்கம் இருந்து எந்த ரியாக்க்ஷனும் இல்லை”

“சரிதான்  அப்போ உன் அப்பாவை போய் பேச சொல்லு”

“என்ன என் அப்பாவா? அங்கே… அவர்கள் வீட்டு வாசலை மிதிப்பார் என்றா நினைக்கிறீர்கள்?”

“ஆமாமில்ல கொட்டப்பாக்கம் வகையறா சாதாரணமா என்ன? சரி விடு நடப்பது நடக்கட்டும்” ரிமோட்டை பிடுங்கி டிவியை மீண்டும் ஆன் செய்து பார்க்கத் தொடங்கினார்.

*ஏன் பாட்டி இப்படி படுத்துறீங்க? நீங்கள்தான் ஒரு வார்த்தை சொல்லிப் பாருங்களேன்”

“யாரிடம் என்ன பேசச் சொல்கிறாய்?”

” அதுதான் உங்கள் செல்லப் பேரன் அந்த சீ சீ  சிவாவிடம்” வேண்டுமென்றே சீ சேர்த்தாள்.

” என்னடி இது? சிவ நடராஜன் எவ்வளவு அழகான அந்த தில்லைநாயகனின் பெயர். அதை இப்படி கொலை செய்கிறாயே?” பாட்டி அந்த பெயரை உச்சரித்த விதத்தில் மானசிக்கு எரிச்சல் வந்தது.

விளக்குமாற்றுக்கு பட்டுக் குஞ்சலம் போல் இவனுக்கு இப்படி ஒரு பொருத்தமற்ற பெயர்.




What’s your Reaction?
+1
35
+1
15
+1
1
+1
2
+1
5
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!