Serial Stories நீ தந்த மாங்கல்யம்

நீ தந்த மாங்கல்யம்-12

( 12 )

” ஆன்ட்டி உங்கள் பொண்ணை நான் அவளுக்காக மட்டுமே திருமணம் முடிக்க ஆசைப்படுகிறேன் .மணம் முடித்து தருவீர்களா ? “, என தயவுடன் கேட்டான் .

பிரமிப்புடன் விழி விரித்தாள் சரஸ்வதி .” சார்…உங்கள் தகுதிக்கு முன் நாங்கள …”, குரல் தழுதழுத்தது அவளுக்கு .

” என்ன ஆன்ட்டி உங்கள் மகளின் தகுதியை நீங்களே குறைத்து மதிப்பிடலாமா ? ” என்றான் .

” ஆமாம் என் மகள் மகாராணியாகும் தகுதி படைத்தவள் பெருமிதமாக உரைத்தாள் சரஸ்வதி .

” இனி அத்தையென்று அழையுங்கள் தம்பி .வாருங்கள் மணமேடையில் அமருங்கள் ” என்றாள் .

அவமானத்தால் தலைகுனிந்தனர் வினோத் குடும்பத்தினர் .வனக்கொடியை முறைத்தாள் கோகிலா .

வனக்கொடி தன் மகன் கதிரவனை நோக்க , அவன் தமிழினியை நோக்கினாள் .தமிழினி தன் அன்னையின் அருகே சென்று நின்று அவள் கைகளுடன் தன் கைகளை கோர்த்துக்கொண்டு தன் இருப்பை கணவனுக்கு உணர்த்தினாள் .

கதிரவன் அப்புக்குட்டியுடன் மனைவியின் அருகே நகர்ந்து நின்று கொண்டான் .மகனை பின்பற்றினாள் வனக்கொடி .

தட்டில் வைத்திருந்த மாங்கல்ய சங்கிலியுடன் இணைந்திருந்த மஞ்சள் கயிறை மட்டும் கைகளில் எடுத்து கொண்டு , ” உங்கள் சங்கிலியை கொண்டு போங்க சார் ” சங்கிலியை வினோத்தின் கைகளில் கொடுத்தான் யதுநந்தன் .

அவனை முறைத்தபடி அதை வாங்கிக்கொண்டு இறங்கினான் வினோத் .அவர்கள் குடும்பத்தினர் அனைவரும் வெளியேறினர் .

மேளம் முழங்க , மந்திரம் ஒலிக்க முகிலினியின் கழுத்தில் மங்கலநாண் பூட்டினான் யதுநந்தன் .

முகிலினியின்  தலையை சுற்றி  நெற்றியில் குங்குமமிடும் இப்போதும் நடப்பதை நம்ப முடியவில்லை முகிலினிக்கு .எனவே மெட்டிக்காக அம்மி மீது வைத்த அவள் பாதங்கள் நடுங்கின .

தன் கைகளுக்குள் நடுங்கிய பாதங்களை உணர்ந்த யதுநந்தன் மெட்டி அணிவித்தபடி ஒரு மெல்லிய அழுத்தத்தில் தன் ஆதரவை முகிலினிக்கு  உணர்த்தினான் .

ஒரு வழக்கமான திருமணத்திற்குரிய அனைத்து சடங்குகளும் நடந்தேறின .ஆரத்தி சுற்றி வீட்டுக்குள் அழைக்க பட்டனர் மணமக்கள் .

” என்னடா அந்த பையன் யாரு ..என்னென்னு ஒரு விபரமும் தெரியாமல் உங்கள் மாமியார் பாட்டுக்கு பொண்ணை பிடிச்சு கொடுத்திட்டாங்க ” வெளியே பின்புற தோட்டத்தில் மகனிடம் கிசுகிசுத்துக்கொண்டிருந்தாள் வனக்கொடி .

” போதும் அத்தை நல்ல வரன்னு நீங்கள் காட்டிய இடத்தோட லட்சணத்தைதான் பார்த்தேனே .கொஞ்ச நேரத்தில் என் தங்கையின் வாழ்வே பாழாக இருந்தது .நல்ல வேளையாக தெய்வமாக இருந்து எங்கள் அப்பா காப்பாற்றி விட்டார் ” தமிழினி ஆச்சரியமாக தன் மாமியாருக்கு எதிராக பேசினாள் .

” தமிழ் …வேண்டாம்மா …உன் அத்தையை எதுவும் சொல்லாதே …” என வந்தவள் சரஸ்வதிதான் .

” அவர்களால்தான் இப்படி ஒரு உயர்ந்த வாழ்க்கை நம் முகிலுக்கு கிடைத்துள்ளது .” என்றவள் திரும்பி வனக்கொடியை பார்த்து …

” அண்ணி நீங்கள் கவலைப்பட வேண்டாம் .நந்தன் தம்பியை பற்றி எனக்கு நன்கு தெரியும் .தமிழினி அப்பா அவர் குடும்பத்தை பற்றியும் நிறைய சொல்லியிருக்கிறார் .மிகவும் நல்ல குடும்பம் .நல்ல வசதி படைத்தவர் .இவர் நம் ஜாதியில் பிறக்காமல் போனாரே என்று தமிழினி அப்பாவே என்னிடம் கூறியிருக்கிறார் .இப்போதும் தான் இருந்து செய்ய முடியாத காரியத்தை தெய்வமாக இருந்து அவர் செய்துவிட்டார் என்றே நான் நினைக்கிறேன்.எனவே இந்த திருமணத்தில் நான் முழு மனதிருப்தியுடன் இருக்கிறேன் .நம் முகிலினியின் வாழ்வு மிக வளமாக அமையப்போகிறது ” இதனை மிகவும்  சந்தோசமாக கூறினாள் சரஸ்வதி .

குடும்பத்தினர் அனைவரும் பின்னால் நின்று பேசிக்கொண்டிருப்பதை பார்த்துவிட்டு ஏதோ பிரச்சினையோ என எண்ணி அங்கே வேகமாக வத்த முகிலினியின் காதுகளில் சரஸ்வதி கூறிய அனைத்து விபரங்களும் விழுந்தது .

சரஸ்வதி உள்ளே வந்ததும் அவளிடம் ,” அம்மா உங்களுக்கு அவரை பற்றி முன்பே எல்லாம் தெரியுமா ? ” ஆச்சரியமாக கேட்டாள் .

” ஆமம்மா உங்கள் அப்பா முன்பே எல்லா விபரங்களும் என்னிடம் கூறிவிட்டார் .” என்றாள் .

” நீங்கள் என்னிடம் ஒன்றுமே சொன்னதில்லையேம்மா ” என்றாள் முகிலினி சிறு குறையுடன் .




” இது அப்பாவின் தொழில் சம்பந்தப்பட்ட ரகசியம்மா .அப்பா அவர் தொழில் ரகசியங்களை வெளியே சொல்ல மாட்டாரென உனக்குத்தான் தெரியுமே .அப்போதும் மாப்பிள்ளையை நம் வீட்டிலேயே தங்க வைக்க வேண்டியிருந்ததால்தான் சில விவரங்கள் என்னிடம் சொன்னார் .மாப்பிள்ளையின் கம்பெனிகளுக்கு அவருடைய அப்பா காலத்திலிருந்தே உங்கள் அப்பாதான் கணக்குகள் பார்த்து கொண்டிருக்கிறார் .எனவே அவர்கள் குடும்ப ஆட்கள் அனைவரும் நல்ல பழக்கம்.மிகவும் நல்ல குடும்பம் என்று சொல்லுவார் ”
என்றாள் சரஸ்வதி .

மகளின் தலையை வருடியபடி ” பாப்பா மாப்பிள்ளை மிகவும் நல்லவர் .அதிக வசதி உள்ளவர் .நம் குடும்ப பழக்க வழக்கங்களும் , அவருடைய குடும்ப பழக்க வழக்கங்களும் வேறாக இருக்கலாம் .அதனால் சில குழப்பங்கள் வரலாம் .நீ அவற்றையெல்லாம் அனுசரித்து நடக்க வேண்டும் பாப்பா “, என்றாள் .

” அது சரிதான் அம்மா .ஆனால் அப்படி அனுசரித்து நடப்பதற்கு எனக்கு அவரை பற்றி , அவரது குடும்பம் பற்றி ஒன்றும் தெரியாதே அம்மா ” என்றாள் முகிலினி .

” இனி தெரிந்து கொண்டால் போயிற்று பாப்பா .அதுதான் உன் கணவர் இருக்கிறாரே .அவரிடமே நீ எல்லா விபரங்களையும் கேட்டு தெரிந்து கொள் ” சிறு கேலி இழையோட  பதிலளித்தாள்  சரஸ்வதி .

அப்போது அங்கே வந்த பூங்காவனம் சரஸ்வதியிடம் ” என்ன சரசு மாப்பிள்ளை என்னவோ உடனே கிளம்பனுங்கிறார் .நாளைக்கு சம்பந்தி சாப்பாடு இருக்கிறது .அதற்கு அவர்கள் வீட்டிலிருந்து யார் வருவார்கள் …என்ன ..ஏதென்று …கேட்டால் வாயே திறக்காமல் சிரித்தே சமாளிக்கிறார் .என்னதான் விசயம் “என்றாள் .

இதனை கேட்டவுடன் யதுநந்தனின் சிரிப்பு ஞாபகம் வந்துவிட்டது முகிலினிக்கு ..ஹப்பா ..சிரிப்பா அது .வெண்பற்கள் ஒளிவிட கருநிற மீசையின் கீழ் அடுக்கி வைத்த முத்துக்கள் ஒளிர்வது போல் …என்ன சிரிப்பு அது .அந்த மாயக்கண்ணனின் மயக்கும் சிரிப்பு .

கண்களை உருட்டி முறைக்கிறேன்
கழுத்தை வெட்டி அலட்சியபடுத்துகிறேன்
மூக்கை தேய்த்து முகம் திருப்புகிறேன்
நகத்தை கடித்து துப்புகிறேன்
முகத்திலடித்தாற் போல் உனை பேச
கடினமான சொல்லொன்றை
தேடுகிறேன் .
உன் மீதான கோபத்திற்காய்
ஆயிரம் விதமாக முயற்சித்துக்கொண்டிருக்க
புல்லாங்குழல் கண்ணனின்
மோகனப்புன்னகை ஒன்றினை
நிதானமாக என் மீது வீசி
கடக்கிறாய் .
அடுக்கி வைத்த அட்டை கோபுரமாய்
எளிதாக சரிகிறேன் நான் .

பொங்கி வந்த கவிதை கண்டு தனக்குள் சிரித்து கொள்கிறாள் முகிலினி .இவன் மாயக்கண்ணன் தான் . மேலும் சித்து விளையாட்டு தெரிந்தவன் போலும் .இல்லையென்றால் எப்படி சரியான நேரத்தில் அங்கு வர முடியும் .

ஆனால் வந்தவன் சிறிது நாட்களுக்கு முன்னால் வந்திருக்கலாமே .அப்போது நான் எவ்வளவு கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தேன் .வாழ்த்துவதற்காக தலை மீது போடப்பட்டிருந்த அட்சதை அரிசிகளில் ஒன்றிரண்டு ஆங்காங்கே தலையில் தென்படுவதை கண்ணாடியில் பார்த்தபடி எண்ணமிட்டாள் முகிலினி .
அம்மாவிற்கு உடல்நலம் சரியில்லாத பொழுது நான் எவ்வளவு …நினைக்கும்போதே அன்றைய துயரமான நாள் நினைவுக்கு வர இப்போதும் கண் கலங்கி தொண்டை அடைத்தது முகிலினிக்கு .

சாத்தி வைக்கப்பட்டிருந்த அறைக்கதவை திறந்தபடி உள்ளே வந்த யதுநந்தன் , மீண்டும் கதவை சாத்தி வைத்து விட்டு அவளருகில் வந்தான் .கண்ணாடியிலேயே தன்னை பார்த்தபடி இருந்த முகிலினியை அப்படியே பின்னிருந்து இறுக அணைத்து ” முகில் உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன்டா ” என்றபடி கழுத்தில் முகம் புதைத்தான் .

ஏன் மிஸ் பண்ண வேண்டும் …என்னை பார்க்க முன்பே வந்திருக்க வேண்டியதுதானே ?.என் துயரத்தில் பங்கெடுக்க வேண்டியது உங்கள் கடமையில்லையா .? இது போல் முகிலினி கேட்க நினைத்த பல கேள்விகளை மறக்கடித்தது கழுத்தோரம் புதைந்த யதுநந்தனின் மீசைக்குறுகுறுப்புடன் கூடிய சூடான இதழ்கள் .

அன்பும், ஆதரவான அந்த இதழ் ஒற்றலில் இறக்கையில்லாமலேயே வானமேறிக்கொண்டிருந்த அந்த நிலையிலும் யாராவது உள்ளே வந்து விடுவார்களோ ? என வெறுமனே  சாத்தியிருந்த கதவு அவளை பயமுறுத்திக்கொண்டிருந்தது .தன் வயிற்றோடு ஒட்டிக்கிடந்த யதுநந்தனின் கரங்களை மெல்ல பிரிக்க முயன்றபடி ” விடுங்க யாராவது வந்து விட போறாங்க ” என்றாள் .

” ம் …”,  …என்று பிடியை சிறிது தளர்த்தியவன் , விலக மனமில்லாதவனாக அவள் கழுத்து வளைவை ஆழ மூச்செடுத்து வாசம் பிடித்தான். பின் அவளை விடுவித்து தன் புறம் திருப்பினான் .மஞ்சள் மணக்கும் தாலிக்கயிறுடன் புதுப்பெண்ணாக நாணத்தால் கன்னங்கள் சிவக்க நின்ற தன்னவளை பார்வையால் தடவினான் .

கணவனின் அணைப்பில் எழுந்த மயக்கம் கண்களில் நிரம்பியிருந்தாலும் , இமையோரம் லேசான சலனம் கண்டு , என்னவென்று புருவம் உயர்த்தினான் .
ஒன்றுமில்லையென தலையசைத்தாள் முகிலினி.




” இல்லையே …ஒரு சிறிய குறை தென்படுகிறதே …இதோ ..இதோ …இங்கே …இந்த கண்ணிமை ஓரத்தில் …லேசாக …மிக மிக லேசாக …”கண்ணிமைகளை காட்டுவதை போன்ற பாவனையில் தன் நெற்றியை அவள் நெற்றி மேல் பதித்து கொண்டு கண்களுக்குள் கண்ணால் துழாவினான் .குறையை கண்டுபிடிக்கிறானாம் .

தன் மேல் பாரமாக சாய்ந்த அவனை தள்ள முயன்ற முகிலினிக்கு சிரிப்புதான் வந்தது .மேலே சாய்வதற்கு இது ஒரு சாக்கு இவனுக்கு .கணவனின் அணைப்பு தந்த சிலிர்ப்பை மறைத்தபடி ” நீங்கள் முதலில் ஒழுங்காக தள்ளி நில்லுங்கள் .அப்புறம் சொல்கிறேன் ” என்றாள் .

” ம் …சரி …” என்று சற்று தள்ளி நின்று பவ்யமாக கைகளையும் கட்டிக்கொண்ட கணவனை பார்த்து மேலும் சிரிப்புதான் வந்தது அவளுக்கு .ஒன்றுமறியா பச்சைப்புள்ளை போல் கை கட்டிக்கொண்டு நிற்பதை பார் என்று மனதிற்குள் கணவனை சீராட்டிக்கொண்டாள் .

” அம்மாவின் நிலைமை அப்போது உங்களுக்கு தெரியுமில்லையா ? …ஏன் அப்போதே வரவில்லை .” குரல் கம்ம கேட்டாள் .

மெல்ல மனைவியின் கைகளை பற்றி அதில் வரைந்திருந்த மருதாணி பூச்சை வருடியபடி ” எனக்கு நிறைய வேலை இருந்ததுடா முகில் .மாமாவின் மறைவு நான் எதிர்பாராத அதிர்ச்சி .அந்நேரத்தில் ஓவ்வொரு வினாடியும் உன்னருகேதான் கழித்திருக்க வேண்டும் .ஆனால் ….என்னால் …அப்படி …இங்கிருக்க முடியவில்லை .”

” மாமா இருக்கும் வரை உண்மையிலேயே எனது வேலைகளில் பாதியை அவரே பார்த்துக்கொண்டிருந்தார்.அவர் போனபின் உங்களுக்கு மேலாக நான்தான் என்னை அனாதையாக உணர்ந்தேன் ” குரல் தழுதழுத்தது .

எனது தந்தையின் மறைவில் தன்னை அனாதையாக உணர்கிறானே .அப்போது இவர்கள் இருவருக்குமிடையே எவ்வளவு பிணைப்பு இருந்திருக்க வேண்டும் .மனம்  நெகிழ்ந்தாள் முகிலினி .

இதற்கு எதிர்மறையான எண்ணமொன்று பின்னாளில் தன் மனதை ஆட்டுவிக்க போவதை அறியாமல் கணவனை ஆறுதல் படுத்தும்விதமாக அவன் தோள்களை வருடியபடி அவன் மேல் சாய்ந்து கொண்டாள் முகிலினி .




What’s your Reaction?
+1
28
+1
10
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!