Serial Stories நீ தந்த மாங்கல்யம்

நீ தந்த மாங்கல்யம்-11

( 11 )

” இந்த சேலையை பொண்ணுகிட்ட குடுத்து சீக்கிரமா மாற்றிக்கொண்டு  வர சொல்லுங்க ” ஐயரின் குரல் கேட்டது .எதிரில் எரியும் அக்னியை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் முகிலினி .

அவள் கையில் முகூர்த்த புடவை இருந்த தட்டு திணிக்கப்பட்டது .இதோ இன்னும் சிறிது நேரத்தில் அவள் சேலை மாற்றி வந்த உடனேயே அவள் கழுத்தில் தாலி கட்டப்பட்டுவிடும் .பொம்மை போல் தட்டுடன் எழுந்து உள்ளே நடந்தாள் .

மண்டபம் முழுவதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தனர் தமிழினியும் , கதிரவனும் .இருவர் முகங்களிலும் கொத்துப்பூவாய் மலர்ந்திருந்தது மகிழ்ச்சி .

” வருத்தப்படுவதற்கு என்ன இருக்கிறது ? அப்படி ஒன்றும் உனக்கு தரமற்ற வரனை அத்தை பார்த்து விடவில்லையே .பின் என்ன ? “,

வனக்கொடி கிட்டத்தட்ட ப்ளாக்மெயில் செய்வது போல் தன்னை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்ததை , லேசாக தமிழினிக்கு சுட்டினாள் முகிலினி .அதற்கு அவள் அளித்த பதில்தான் இது .

உன்னைப்பற்றி நன்கு தெரிந்தும் உன்னிடம் நியாயம் கேட்க வந்தேன் பார் .என்னை சொல்லனும் .என தன்னையே நொந்து கொண்டாள் .

அவளை பொறுத்த வரை தகப்பனை இழந்து , தாயும் ஒரு இரண்டு கெட்டான் நிலையில் இருக்கும் தன் தங்கைக்கு இப்போது தனது மாமியாரும் , கணவரும் சேர்ந்து ஏற்பாடு செய்த  திருமணம் கும்பாபிஷேக திருப்பணிக்கு ஒப்பானது .அவளே மனதிற்குள் தனது மாமியாருக்கு கோவில் ஒன்று கட்டலாமா ? என யோசித்துக்கொண்டிருக்கிறாள் .

சொத்துக்களை கேட்பதை கூட அதிலென்ன தவறு ? அவர்களுக்கு உரிமை இருக்கிறது கேட்கிறார்கள் .என்றாள் .மேலும் அந்த மாப்பிள்ளை வினோத் பற்றி அவன் அர்ஜூனனின் அடுத்த வாரிசு , அவன் தந்தை தர்மராஜனின் மறுபிறவி , தாய் பூமாதேவியின் குணக்காரி என்ற ரீதியில் பேச துவங்க , காதில் திராவகம் விட்டுக்கொள்ளலாமா ? என முகிலினிக்கு தோன்ற துவங்கிவிட்டது .

ஆளைவிடு தாயே என ஓடி வந்துவிட்டாள்.இதோ முகூர்த்த புடவையை அவன் கையால் வாங்கிய அந்த கடந்த நிமிடம் வரை அந்த மாப்பிள்ளையின் முகம் தெரியாது முகிலினிக்கு .அவன் கட்டியிருந்த கை கடிகாரம் தாண்டி அவள் பார்வைதான்  உயரவே இல்லையே .

மாப்பிள்ளைக்கு விடுமுறை குறைவாக இருந்ததால் , போர்க்கால விரைவுடனேயே இந்த திருமண ஏற்பாடுகள் நடந்தன .ஒரே மாதத்தில் திருமணம் என்பது கொஞ்சம் குறுகிய காலம்தான் .ஆனால் அது வனக்கொடிக்கு சாத்தியப்பட்டது .அவள் நினைத்தது நடக்கும்போது விரைவுக்கு பஞ்சமேது .

வீட்டிற்கு பெரியாளாக நின்று அனைவரையும் ஏவி திருமணத்தை பரபரப்பாக நடத்திக்கொண்டிருக்கிறாள் .தட்டுடன் மேடையிறங்கும்போது ஒரு ஓரமாக நின்று வனக்கொடியும் , அந்த மாப்பிள்ளையின் அம்மாவும் ஏதோ தீவிர விவாதத்தில் இருந்தது கண்ணில் பட்டது .என்ன பெரிய விவாதம் இரவு டிபனில் இனிப்புக்கு பாதாம்அல்வாவா ? பால் அல்வாவா ? என விவாதித்து கொண்டிருப்பார்கள் அக்காவும் தங்கையும் .அலுப்புடன் எண்ணிக்கொண்டாள் முகிலினி .

மணப்பெண்ணின் அறைக்குள் சட்டையை தானே மாற்றி விட்டு வருவதாக பாத்ரூமுக்குள் நுழைந்து கொண்டாள் முகிலினி .இவ்வளவு வேதனையிலும் அவளுக்கு கிடைத்த ஒரே ஆறுதல் சரஸ்வதியின் மனநிலை முன்னேற்றம் .

கதிரவனும் , தமிழினியும் வீட்டோடு வந்து தங்கிவிட , சரஸ்வதியின் உலகம் மாற துவங்கியது .மருமகனுக்கு , மகளுக்கு என ஒவ்வொரு வேலையையும் பார்த்து பார்த்து செய்ய துவங்கினாள் அவள் .இடையில் அப்பு குட்டி வேறு அவளை இருபத்திநான்கு மணி நேரமும் பிசியாக வைத்துக்கொண்டாள்.

தந்தையின் இழப்பிலிருந்து தாய் மெல்ல மெல்ல வெளியே வருவதை முகிலினி உணர்ந்து கொண்டாள் .இது போதுமே .இந்த ஒரு விசயத்திற்காகத்தானே அவள் இந்த கண்றாவிகளுக்கெல்லாம் சம்மதித்தாள் .

வெளியே கதவை தட்டும் சத்தம் கேட்டது .சீக்கிரம் வாம்மா எனும் குரல்கள் .உடனே வருவதாக பதிலளித்து விட்டு கண்ணாடியில் தன் உருவம் பார்த்து நின்றாள் முகிலினி .இப்போது மனம் முழுவதும் யதுநந்தன் வியாபித்து நின்றான் .

எப்படிடா ?அது எப்படி நீ என்னை விட்டு விடுவாயா ? தன் மன தேவனிடம் வினா எழுப்பினாள் முகிலினி .

தொடர்ந்து தலையாட்டிக்கொண்டாள் .இல்லை உன்னால் என்னை விட முடியாது .என்னாலும் உன்னை விட முடியாது .நீ இங்கேதான் …எங்கேயோ …என் பக்கத்தில்தான் இருக்கிறாய் .அதனை நான் உணர்கிறேன் .கண்ணில்தான் பட மாட்டேனென்கிறாய் .ஒன்று நிச்சயம் கண்டிப்பாக இந்த திருமணத்தை நடக்க விடமாட்டாய் .




உறுதியாக இப்படி மனதிற்குள் எண்ணினாலும் , ஆனால் ஏன் இன்னும் வராமல் இருக்கிறாய் ? என்னை சோதிக்காதே .விரைவாக வந்து விடு .முகிலினியின்  எண்ணங்களின் முடிவு மனக்கலக்கமாகவே இருந்தது .

“முகிலினி …சீக்கிரம் வா ” வெளியே பல குரல்கள் கேட்டன .

” இதோ வந்து விட்டேன் ” பதிலளித்து விட்டு தன் கையில் இருந்த முகூர்த்த சேலைக்குரிய சட்டையை பார்த்தாள் .இதை அணிய வேண்டுமா ? தீச்சுடர் போல் விரல்களை சுட்டது அது .பட்டென அதனை பாத்ரூம் அலமாரியில் வீசினாள் .பார்க்கவும் பிடிக்காமல் முகத்தை திருப்பிக்கொண்டாள் .

மீண்டும் கதவை தட்டும் சத்தம் .ஆனால் இம்முறை சிறிது வித்தியாசமாக .கசகசவென பல குரல்கள் இல்லை .தமிழினியின் குரல் மட்டும் .அதுவும் நிறைய சங்கடங்களை சுமந்து கொண்டு ஒலித்தது .என்னவாயிற்று?  வேகமாக கதவை திறந்து கொண்டு வந்தாள் .

இப்போது மணமகள் அறைக்குள் கசகசவென நிறைந்திருந்த உறவுப்பெண்கள் கூட்டமில்லை .தமிழினி ,, கதிரவன் ,அவனுடைய அம்மா ,அப்பா  சரஸ்வதி  , அந்த மாப்பிள்ளையின் தாய் , தகப்பன் .அனைவரும் ஒரு வித பதட்ட சூழ்நிலையில் இருந்தனர் .
முகிலினி புரியாமல் அனைவரையும் பார்த்தாள் .அந்த பெண் …மாப்பிள்ளையின் அம்மா ” அக்கா நீங்கள் இப்படி செய்வீங்கன்னு நான் நினைக்கவில்லை ” என்றாள் .

வனக்கொடி திணறினாள் .

” நீங்களெல்லாம் கதிரவன் கல்யாணத்திற்கு

முன்னாடியே கணக்கு பார்த்துட்டு தானே கல்யாணத்தையே முடிவு பண்ணுனீங்க .ஆளுக்கு பாதி என்றாலும் ஒரு கோடியாவது தேறும்னு கணக்கு போட்டீங்களே .நானும் இப்போ அதே கணக்குதான் போட்டேன் “

” நீ…நீதான் ..நன்றாக வசதியாக இருக்கிறாயே ? இதெல்லாம் எதிர்பார்க்க மாட்டாயென்று ….” வனக்கொடி மென்று முழுங்கினாள் .

” நீங்க எப்போ வசதியில் குறைவாக போனீர்கள் வனக்கொடிம்மா ? ” நக்கலாக கேட்டது மாப்பிள்ளையின் தந்தை .

அடடா …இது அந்த சொத்து பிரச்சினை போலவே .நம் அத்தையம்மாவின் திட்டம் சறுக்கிவிட்டது போலவே . …என்று கணித்த முகிலினிக்கு ஏனோ இந்த சண்டை சுவாரஸ்யமாக இருந்தது .

மெதுவாக ஒரு நாற்காலியில் ஒரு சுவாரஸ்யமான திரைப்படம் பார்க்கும் பாவனையில் அமர்ந்து கொண்டாள் .அவளது குற்றம் சாட்டும் விழிகளை எதிர்கொள்ள முடியாமல் திரும்பின வனக்கொடி தன் மருமகளின் அனல் பார்வையை சந்தித்தாள் .

ஆண்டான் , அரசன் , அம்மையப்பன் என அந்த மாப்பிள்ளையையும் , அந்த குடும்பத்தையும் தமிழினியிடம் புகழ்ந்து வைத்திருந்தாளே .அதெல்லாமே இப்போது பஞ்சாக பறப்பதை கையாலாகாமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

முகிலினி வேறு ..தன் அக்காவை நோக்கி …பார்த்தாயா …உன் குடும்பம் எனக்கு கொண்டு வந்த வரனை …என பார்வைக்கேள்வி கேட்டுக்கொண்டிருந்தாள் .

ஏற்கெனவே இனி தன் தங்கையின் வாழ்வு …? என்ற கேள்விக்குறியுடன் இருந்த தமிழினி …மாமியாரிடம் பேச முடியாமல் தன் கணவனிடம் திரும்பி ” இப்போ என்ன செய்ய போறீங்க ?”என்றாள் அனல் பார்வை வீசி .

“என்னதான் நடக்கிறது இங்கே ? “, புரியாமல் கேள்வி எழுப்பினாள் சரஸ்வதி .

” என்னம்மா ..உங்கள் முதல்  பொண்ணுக்கு மட்டும்  உங்கள் சொத்தில் பாதியை எழுதி வச்சிட்டு இரண்டாவது பொண்ணோட சொத்தையெல்லாம் தொலைச்சிட்டீங்களாமே ?” வேகமாக கேள்வி எழுப்பினாள் அந்த மாப்பிள்ளையின் அம்மா .

புரியாமல் நின்றாள் சரஸ்வதி .

” சித்தி அதெல்லாம் பொய்யான தகவல் சித்தி .யாரோ உங்களை நல்லா குழப்பி விட்டிருக்காங்க .நாங்கதான் அப்போ இருந்து சொல்லிக்கிட்டு இருக்கோமே “,அந்த அம்மாவை  சமாளிக்க முயன்றான் கதிரவன் .

” பொய்யின்னா அதை நிரூபிங்க …” உறுதியாக நின்றாள் அந்த அம்மா .

” முதல்ல கல்யாணம் முடியட்டும் கோகிலா .அப்புறமா எல்லாத்தையும் பேசுவோம் ” வனக்கொடி .

” முடிந்த பிறகு எங்கேயிருந்து பேச ? எங்களுக்கு இப்போவே விவரம் தெரிந்தாகனும் ” இது மாப்பிள்ளையின் அப்பா .

” நான் போய் வினோத்கிட்ட பேசுறேன் …” வெளியேற போனான் கதிரவன் .

” ஓஹோ ..கல்யாணத்திற்கு முன்னாலேயே உங்கள் குடும்பத்தில் மாப்பிள்ளையை கரெக்ட் பண்ணுவீங்களோ …? ” கோகிலா .

” சித்தி வார்த்தைகளை சிதற விடாதீர்கள் ” விரலை ஆட்டி எச்சரித்தான் .

அட இப்போதுதான் நம்ம அக்கா புருசனுக்கு இந்த குடும்பத்தை சொன்னா அது தனக்கும் சேர்த்துதான்னு தெரியுது போல .கேலியாக நினைத்தபடி வனக்கொடியை நோக்கினாள் முகிலினி .

தங்கையின் முறையற்ற பேச்சில் முகம் கன்றி அவமானத்துடன் நின்றாள் அவள் .

தலையை அழுந்த பிடித்தபடி கண்களை மூடி தடுமாறினாள் சரஸ்வதி .பதறியபடி தங்கள் தாயை தாங்கினர் தமிழினியும் , முகிலினியும் .

ஆனால் இதனையெல்லாம் கண்டு கொள்ளாமல் ” போடா …போய் வினோத்தையே கேளு ..இந்த விசயத்தை என்கிட்ட சொல்லி விசாரிம்மான்னு சொன்னவனே அவன்தான் .அவன்கிட்டயே போய் கேளு …” லேசான பெருமை தொனிக்க சொன்னாள் கோகிலா .

செய்வதறியாது விழித்தனர் வனக்கொடி குடும்பத்தினர் .

” நான் கேட்கிறேன் …” என திடீரென வேகமாக கிளம்பியவள் சரஸ்வதி .ஆம் …சரஸ்வதியேதான் .அறையை விட்டு வெளியே நடந்தவள் மணமேடையில் வேகமாக ஏறி வினோத்தின் எதிரே நின்றாள் .

” என்ன தெரியனும் உங்களுக்கு ? “, என்றாள் .

மண்டபமே அமைதியானது .நாதஸ்வரம் , மந்திரம் எல்லாம் நிறுத்தப்பட்டன. எழுந்து நின்ற வினோத் தனது அம்மாவை பார்த்தான் .அவள் மகனுக்கு ஜாடை காட்டினாள் .

” உங்கள் இரண்டாவது பொண்ணுக்கு சேர வேண்டிய சொத்துக்களை பேங்க்கில் அடமானம் வைத்து , அது முழுகி  விட்டதாமே .உண்மையா ? ” தயக்கமின்றி கேட்டான் அவன் .

” யாருடா உனக்கு இப்படி தப்பா சொன்னது ? ” வினோத்திடம் கோபமாக பாய்ந்தான் கதிரவன் .




“நீங்க இருங்க தம்பி நான் பேசிக்கிறேன் “என  அவனை கையமர்த்தினாள் சரஸ்வதி .” அப்படியெல்லாம் ஒன்றுமில்லை .எங்கள் வீடும் , அசோக்நகர் காம்ப்ளெக்சும் தமிழினிக்கு .அண்ணாநகர் காம்ப்ளெக்சும் , மடிப்பாக்கம் வீடும் முகிலினிக்கு .கிராமத்திலுள்ள நிலங்களும் , வீடும் என்னுடைய மேற்பார்வையில் இருக்கின்றன .பாங்க்கில் பணம் இருக்கிறது .என் நகைகள் , என் பொண்ணுங்க நகைகள் இருக்கின்றது .இந்த சொத்துக்களில் இருந்து வரும் வருமானம் இப்போதைக்கு என் கைவசம்தான் சேரும் .என் காலத்திற்கு பிறகு என் பொண்ணுங்களை சேரும் .போதுமா விபரங்கள் ? ” என்றாள் .

முகம் பூரித்து பொங்கியது வினோத்திற்கு .” இது போதும் .இந்த சொத்துக்களில் ஒன்றும் வில்லங்கம் கிடையாதே ? ” இறுதிக்கேள்வி ஒன்றை வீசினான் .

“, இல்லை , எல்லா சொத்துக்களும் முறையாக பராமரிக்கப்பட்டு ஒழுங்காக வருமானம் வரும் சொத்துக்கள் .பத்திரங்கள் எல்லாம் பேங்க் லாக்கரில் பாதுகாக்கப்பட்டு வருகிறது .” பொறுமையாக பதிலளித்தாள் சரஸ்வதி .

திருப்தியான வினோத் ” இது போதும் .இந்த விபரங்களையெல்லாம் முதலிலேயே சொல்லியிருந்தால் இவ்வளவு பிரச்சினை வந்திருக்காது .இப்போ உங்கள் பொண்ணை வரச்சொல்லுங்க ” என்றபடி மணமேடையில் அமர ஆயத்தமானான்.

” எதற்கு ..? ” நிதானமாக கேட்டாள் சரஸ்வதி .

“எ..எதற்குன்னா …கல்யாணம் பண்ணத்தான் ” திணறினான் வினோத் .

” என்னம்மா …என்ன பேசிறீங்க ? ” வேகமாக இடை புகுந்தாள் கோகிலா .
அவர்கள் அனைவரையும் நோக்கி கை கூப்பினாள் சரஸ்வதி .
” மன்னிக்கனும் என் பொண்ணுக்கு மணம் முடிக்க உங்கள் வீடு எனக்கு அவ்வளவு திருப்தியாக இல்லை .நீங்கள் வேறு இடம் பார்த்துக்கொள்ளுங்கள் ” என்றாள் .

” ஏம்மா ..என்ன பேசுறோம்னு தெரிஞ்சுதான் பேசுறீங்களா ? ” எகிறிக்கொண்டு வந்தார் வினோத்தின் தந்தை .

” இந்த திருமணம் நடக்காது என்ற தகவலை பேசிக்கொண்டிருக்கிறேன் ” அயராமல் பதிலளித்தாள் சரஸ்வதி .
” நீங்கள் நிதானமாகத்தானே இருக்கிறீர்கள் ? ” சந்தேகமாக சரஸ்வதியை கேட்டாள் கோகிலா .

புன்னகைத்து சரஸ்வதி மேடையின் முன்புறம் வந்தாள் .திருமணத்திற்கு வந்திருந்தவர்களை நோக்கி ” எல்லோரும் என்னை மன்னிக்கனும் .என் மகளுக்கு நான் திருமணத்திற்கு பார்த்திருக்கும் இந்த மாப்பிள்ளை வீட்டார் எனக்கு திருப்தியில்லாத காரணத்தால் இந்த திருமணத்தை நிறுத்துகிறேன் .உங்கள் அனைவருக்கும் தொல்லை தந்ததற்கு என்னை மன்னித்து விடுங்கள் ” என்று கை கூப்பினாள் .

” என்னம்மா விளையாடுறியா ? இப்போ கல்யாணத்தை நிறுத்தினா உன் பொண்ணோட வாழ்க்கை என்னவாகும் தெரியுமா ?” ஆங்காரமாக கேட்டாள் கோகிலா .

” ஒண்ணும் ஆகாது .என் பொண்ணுக்காக மட்டுமே அவளை கல்யாணம் முடிக்க தயாராக இருக்கிற ஒரு நல்ல ஆம்பளைக்கு அவளை கல்யாணம் பண்ணிக்கொடுப்பேன் ” புன்னகையோடு தெளிவாக கூறினாள் சரஸ்வதி .

” அப்படி சொல்லுங்கள் ஆன்ட்டி ” மெலிதான கைதட்டலுடன் ஒரு குரல் மேடையின் பின்புறமிருந்து வந்தது .

மின்னல் ஒன்று உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை ஊடுறுவியதாக உணர்ந்தாள் முகிலினி அந்த குரலை கேட்டு .

மெலிதான கைதட்டலுடன் மேடையேறிய தன்னவனை மறைக்கும் கண்ணீர் திரையை சபித்தபடி விழிகளை விரித்து தன்னுயிரை விழுங்க முயற்சித்தாள் அவள் .பார்வையாலேயே தன்னவளை அணைத்து ஆறுதலளித்தபடி வந்த யதுநந்தன்  சரஸ்வதியின் முன் வந்து நின்றான் .




What’s your Reaction?
+1
28
+1
16
+1
2
+1
2
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!