gowri panchangam Sprituality Uncategorized

சிவத்தொண்டர்கள்-60 (மூர்த்தி நாயனார்)

பாண்டி நாட்டின் தலைநகரான மதுரையில், வணிகர் குலத்தில் பிறந்தவர் மூர்த்தி நாயனார் ஆவார். சிவபெருமான் மீது அரும்பக்தி கொண்டிருந்தார். அவர், மதுரை சொக்கநாதப் பெருமானுக்கு சந்தனக் காப்பணிவதைத் தன் பெரும் பேறாகக் கருதி, அத்திருத் தொண்டை தவறாது புரிந்து வந்தார்.




மூர்த்தி நாயனார்

இவ்வாறிருக்கையில் கர்நாடகத்து மன்னன் ஒருவன் பாண்டியனை போரில் வென்று மதுரையின் அரசனானான். அவன் சமண மதத்தைத் தழுவியவன். சைவர்களை வெறுத்தான். சிவனை வழிபடுவோரை பல்வகையில் துன்புறுத்தினான்.

மூர்த்தியார் சிவனுக்குச் சந்தனக்காப்பு அணிவிப்பதை அறிந்து, அவருக்குச் சந்தனம் அளிக்கத் தடை விதித்தான். இதனால் மூர்த்தியார் மிகுந்த வேதனையடைந்தார்.

சொக்கநாதப் பெருமானுக்குச் சந்தனக் காப்பிட, எங்கெல்லமோ சந்தனத்தைத் தேடி அலைந்தார். மன்னனின் கட்டளை என்பதால் அவருக்கு யாரும் சந்தனம் அளிக்கவில்லை. மூர்த்தியார், ‘இக்கொடிய மன்னன் எப்போது இறப்பான், நமக்கு எப்போது சந்தனம் கிடைக்கும்?’ என்று தவித்தார்.




நேராகக் கோயிலுக்குச் சென்றார் நாயனார். அங்கு சந்தனம் அரைக்கும் கல்லை அடைந்தார். சந்தனம்தான் கிடைக்கவில்லை! என் முழங்கையையே சந்தனக் கட்டையாகத் தேய்த்து பெருமானுக்குக் காப்பிடுவேன் என்று கூறி தன் முழங்கையைக் கல்லில் தேய்க்கலானார். அவரது கைமூட்டின் தோல் பிய்ந்தது. சதை தெறித்தது. பின்பு எலும்பும் தேய்ந்து, எலும்பினுள் இருக்கும் தசையும் வெளிவந்தது. இருந்தும் அவர் தன் கையைக் கல்லில் தேய்ப்பதை மட்டும் நிறுத்தவில்லை.

அக்காட்சியைக் கண்ட பெருமான், “மூர்த்தியாரே! உன் துயரெல்லாம் நாளையே மாறும். இத்தேசம் உனக்குச் சொந்தமாகப் போகிறது. நீர் உம் கையைக் கல்லில் அரைப்பதை நிறுத்து வீராக!” என்று வாக்கருளினார்.  நாயனாரும் கையைத் தேய்ப்பதை நிறுத்தினார். மறுகணமே அவரது கை பழைய நிலைக்குத் திரும்பியது.

அன்றிரவே அச்சமண மன்னன் இறந்தான். மறுநாள் அரண்மனையிலிருந்தோர் அவனது உடலுக்கு ஈமக் கடன்கள் செய்தார்கள். இறந்த மன்னனுக்கு மனைவியோ, மகனோ இல்லை . அதனால் அடுத்த மன்னன் யார்? என்ற கேள்வி எழுந்தது.




அமைச்சர்கள் ஆலோசித்தார்கள். ‘பட்டத்து யானையின் கண்ணைக் கட்டி நடக்கச் செய்வோம். அது யாரைத் தூக்கி தன் முதுகில் வைத்துக் கொள்கிறதோ அவரே இந்நாட்டின் அடுத்த மன்னர்!’ என்று முடிவெடுத்தனர்.

அதன்படி யானையின் கண்ணைக் கட்டி அனுப்பப்பட்டது. வீதியெங்கும் திரிந்த யானை, மூர்த்தியாரின் முன் வந்து அவரை வணங்கியது. அவரைத் தூக்கித் தன் முதுகில் வைத்தது. அமைச்சர்களும் மூர்த்தியாரை அந்நாட்டின் மன்னராக்கினார்கள். மூர்த்தியாரும், “சமண மதத்தை ஒழித்து, எல்லோரும் சைவ மதத்தைப் பின்பற்றுவீர்களானால் நான் மன்னர் பொறுப்பை ஏற்பேன்!” என்று கூறினார்.

அமைச்சர்கள் அதற்குச் சம்மதித்தனர். நான் மன்னனாக முடிசூட்டிக் கொண்டாலும், சிவனடியார் கோலத்தில்தான் இருப்பேன் என்றும் கூறினார். அதற்கும் அமைச்சர்கள் சம்மதித்தனர்.

மூர்த்தியார் உடனே மதுரை சொக்கநாதப் பெருமான் ஆலயம் சென்று வணங்கினார். மன்னர் பொறுப்பேற்றார். இறுதிவரை திருமணம் செய்து கொள்ளாமல், அடியவராகவே இருந்தார். அவரது ஆட்சியில் சமணம் ஒழிந்து சைவம் தழைத்தது.

இவ்வாறு நெடுநாட்கள் சிறப்புற மதுரையை ஆண்ட மூர்த்தி நாயனார் இறுதியில் சிவனடி நிழலில் அமர்ந்தார்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!